Published:Updated:

காலம் கிறுக்கியது! #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Unsplash )

சிவப்புச் சட்டை அணிந்த ஒருவன் சாலையோரம் இருந்த நடைபாதையில் அவசர அவசரமா நடந்து போய்க்கொண்டிருந்தான்... அங்கே ஒரு குழந்தை பசியில் அழுக...

புதிய சிந்தனையுடன்... புதிய விவாதங்களை நோக்கி... உங்கள் காலம் பேசுகிறேன்... அனைத்தையும் அறிந்தவனா எனத் தெரியாது. ஆனால், அனைத்தையும் பார்த்தவன். காலம் பல வரலாறுகளை, நிகழ்வுகளைப் பார்த்திருக்கு... மனித உணர்வுகளை உணர்ந்திருக்கு... இயற்கையை இயற்கை கண்கொண்டே பார்த்தது போல செயற்கையையும் அப்படியே பார்த்திருக்கு...

Representational Image
Representational Image

காட்சி.1 - சிவப்புச் சட்டை அணிந்த ஒருவன் சாலையோரம் இருந்த நடைபாதையில் அவசர அவசரமாக நடந்து போய்க்கொண்டிருந்தான்... அங்கே ஒரு குழந்தை பசியில் அழுக... அதைப் பார்த்த அந்தத் தாயும் அழுதுகொண்டே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். பள்ளி செல்ல வேண்டிய வயதில் ஒரு சிறுமி ஊதிபத்தி விற்றுக்கொண்டிருந்தாள். அவ்வயதிலேயே கண்களில் கவலை ரேகை படர்ந்திருந்தது. குடிபோதையில் ஒருவன் சாலையோரத்தில் மயங்கிக்கிடந்தான். அவனின் ஆடைகளும் அலங்கோலமாகக் கிடந்தது அழகாக ஆடையணிந்து ஒருவன் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தான். அவன் கழுத்தில் தொங்கிய டை காற்றில் பறக்க... அதைப் பிடித்து சரி செய்துகொண்டிருந்தான். ஒரு பணக்கார பெரியவர் தன் செல்லப்பிரானியுடன் நடைப்பயிற்சியில் இருந்தார். அது அவரை இழுத்துக்கொண்டிருந்தது... இவரும் தடுமாறி அதை இழுத்துக்கொண்டிருந்தார். கூடையில் காய்கறிகள் சுமந்தபடி வயதான பாட்டி ஒருவர் உரக்கக் கூவி விற்பனை செய்து கொண்டிருந்தார். ஆனால், அது யார் காதுகளிலும் கேட்கவில்லை... யாரும் கண்டுகொள்ளவுமில்லை. போக்குவரத்துக் காவலர் சாலையின் நடுவில் நின்று போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார். அவர் சட்டைக்குள் அலைபேசி அதிர்ந்துகொண்டிருந்தது.

பள்ளிச் சீருடையில் சிறுவர் சிறுமியர்கள் தங்களின் எடைக்கு ஒத்த புத்தகமூட்டையைச் சுமந்தபடி சாலையைக் கடந்துகொண்டிருந்தனர். ராமர் படங்களை மாட்டிக்கொண்டு ரதம் போல அலங்கரிக்கப்பட்ட தள்ளுவண்டியை ஒருவர் இழுத்துவர இருவர் அதன் பின்னே உண்டியலுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் ராமர்போல வேடமணிந்திருந்தார். வடநாட்டு இளஞிகள் மூவர் பொம்மைகளை சிக்னலில் நிற்கும் வண்டிகளின் கண்ணாடி வழியே காட்டி வாங்கிச் செல்லுமாரு வேண்டுகோள் வைத்தனர். வாகனத்துக்குள் இருப்பவர்கள் தலையைத் திருப்பிக்கொண்டனர். காகம் ஒன்று தன் அலகில் ஏதோ ஒன்றை கவிக்கொண்டு அந்த சிக்னல் விளக்குக் கம்பத்தில் அமர்ந்திருந்தது. அதைப்பார்த்த அடுத்த காகம் அருகில் அமர்ந்து யாரையோ அழைப்பதுபோல கரைந்துகொண்டிருந்தது.

Representational Image
Representational Image

கதிரவன் அந்தக் காலையிலேயே சற்று உக்கிரமாகக் கனலை கக்கிக்கொண்டிருந்தான். தார்ச்சாலை இளகியதால் வண்டிச்சக்கரங்களின் அச்சு சாலையில் பதிந்தது. கரைவேட்டி கூட்டம் ஒன்று அமர்களமாகக் கொடிகளுடன் கடைக்குக் கடை ஏறி வசூலில் இருந்தது. அவர்களில் கடைசியில் இருந்த இருவர் சத்தமாகக் கத்தி யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். தலைக்கவசம் அணிந்த தம்பதிகள் மொபட்டில் சிக்னலுக்காகக் காத்திருந்தனர். இரு முறை தன் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்துக்கொண்டு அவசரத்தில் இருந்தார். அந்த நேரத்தில் மெல்லிய வெப்பக்காற்று ஒன்று வீசியது... அந்தக் காற்றில் ஒரு ஐந்நூறு ரூபாய் காகிதம் உருண்டு பறந்து வந்தது... எதையும் கவனிக்காமல் நடந்து சென்றுகொண்டிருந்த அந்தச் சிவப்பு சட்டைகாரன் அதைக் கவனித்தான். அந்தக் காகிதம் கண்ணில் பட்ட அடுத்தகணம் அனைத்தையும் கவனிக்க ஆரம்பித்தான்... செருப்பு அணிந்த காலால் அந்த ரூபாய்த்தாளை மிதித்து மறைத்தான்... அந்த நேரம் அவனுக்குள் ஓர் குற்ற உணர்ச்சியோ, கள்ளத்தனமோ ஒட்டிக்கொண்டது.

யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என நோட்டமிட்டான். யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு குனிந்து அந்த காகிதத்தை எடுத்து தன் சட்டைப்பையில் பத்திரப்படுத்திக்கொண்டான். ஒருவேளை அந்தச் சிவப்பு சட்டைகாரன் குற்ற உணர்வை போக்கிக்கொள்ள... யாருடையது இந்த ஐந்நூறு எனக் கேட்டால்... பாவப்பட்ட அந்தத் தாயோ... கவலை கொண்ட சிறுமியோ... மயங்கிக்கிடந்த குடிகாரனோ.... வேலை தேடும் இளைஞனோ... பணம்படைத்தவனோ... காய்கறி விற்கும் கிழவியோ... காவலனோ... உண்டியல் குலுக்கும் ராமரோ... கல்விகற்கும் சிறார்களோ... வடநாட்டு இளஞிகளோ... கரைவேட்டி கூட்டமோ... அலுவலகத்துக்குப் பறக்கும் தம்பதிகளோ... அவனிடமிருந்து அத்தாளுடன் அவன் குற்ற உணர்ச்சியையும் வங்கிக்கொள்ள தயாராகும். மேலும், அவனை அனைவரும் முட்டாளாகத்தான் பார்ப்பார்கள். அந்த ரூபாயை இழந்தவனை பற்றிய சிந்தனை எவருக்கு இருக்கும்? ஆனால், காகமும் கதிரவனும் எதையும் கண்டுகொள்ளாது..!

Representational Image
Representational Image

காட்சி.2

பணபரிவர்த்தனையில் அதிகம் ஈடுபடும் அலுவலகம் ஒன்று இருந்தது. அதில் சிலர் வேலைபார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் நடத்தையை... நாணயத்தை அறிந்துகொள்ள... யாருக்கும் தெரியாமல் தேர்வு ஒன்றை நடத்தினான் அதன் உரிமையாளர். தினமும் ஒரு வேலையாளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கண்களில் படும்படி ஒரு ஐந்நூறு ரூபாய் தாளை வைத்தான்... தினமும் ஒரு வேலைக்காரன் வேலையிழந்தான்.. ஆனால், தினமும் வேலைக்காரர்களால் கிடைக்கும் லாபத்தை உரிமையாளன் யாருக்கும் தெரியாமல் தன் சட்டைப்பையில் வைத்துக்கொள்கிறான். நடத்தை வேறு... நாணயம் வேறு... நம்பிக்கை வேறு... உழைப்பு வேறு... ஊதியம் வேறு... லாபமும் வேறு..! ஆனால், குற்றம் செய்பவனைவிட குற்றம் செய்யத் தூண்டுபவனே குற்றவாளி என்பதை உரிமையாளர் உணரவில்லை...

Representational Image
Representational Image

காட்சி.3

(சுட்டது) ஒரு ஐந்நூறு ரூபாய் தாள் ஒன்றை தான் ஆசையாக வளர்க்கும் கழுதையிடம் கொடுத்தால் அதையும் ஒரு சாதாரண தாள் என நினைத்து மென்றுதின்றுவிடும்... அதற்குத் தெரியாது அந்த ஐந்நூறு ரூபாய் தாளுக்கு எத்தனை கிலோ காகிதம் வாங்கி உண்ணலாம் என்று... பசித்தவன் எவனும் பொருளாதார போராட்டத்தில் ஜெயிப்பதில்லை... ருசிப்பவனுக்கே கிடைக்கும் அந்த வெற்றி..! மீண்டும் சொல்கிறேன் நான் அனைத்தையும் அறிந்தவனா எனத் தெரியாது. ஆனால், அனைத்தையும் பார்த்தவன்... காட்சி.1-ல் இருக்கும் குறியீடு புரிந்தால் காட்சி 2, 3-ல் இருக்கும் குறியீடுகளும் புரியும். ஆனால், அந்த ஐந்நூறு ரூபாய்தாளைப் பற்றிய புரிதல் யாருக்கும் மாறப்போவதில்லை... காலம் தொடர்ந்து கேள்விகள் கேட்கும்...

- சே. அருள்குமரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு