Published:Updated:

மரத்தை கட்டித் தழுவினாள்... மண்டியிட்டு அமர்ந்தாள்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Image credits : Unsplash )

கழனியில் அப்பா கட்டிய வீடு வெகுகாலத்துக்கு அவள் நினைவில் இருந்து விலகவே இல்லை. காலம் அவளை பல‌ ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றது.

அது பங்குனி மாதத்தின் ஒருநாள். நந்தினிக்கு வளர்பிறையில் கத்தரிக்கு முன்பாக சென்னையில் புதிதாகக் கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழாவை நடத்திவிட வேண்டும் என்கிற பதற்றம் நாளாக நாளாகக் கூடிக்கொண்டே போனது. தலைக்கு மேல் வேலை கிடந்தது. எதை விடுவது, எதை முடிப்பது என்கிற பதற்றமே பாதி வேலையைச் செய்து முடிக்க முடியாமல் மலையாக இருந்தது. இதில், அப்பா வேறு ஊருக்குப் போய் எல்லோருக்கும் நேரில் பத்திரிகை வைத்து அழைத்துவிட்டு வா என்று சொல்லிவிட்டார். இந்த நேரம் பார்த்து கணவர் செந்திலுக்கு வேலை நிமித்தமாக வட இந்தியாவுக்கு ஒருவாரம் போக வேண்டிய கட்டாயம். தனக்கும் அத்தனை எளிதில் விடுமுறை கிடைக்காதே என்கிற தனி கவலை வேறு. நினைக்க நினைக்க தனி மனுஷியாக அத்தனையும் எப்படிச் செய்து முடிக்கப்போகிறோம் என்பதை நினைத்தாலே மலைப்பாக இருந்தது. மறுநாள் போளூருக்கு அருகில் இருக்கும் பொத்தரைக்குப் போக வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டாள். காலையில் 6 மணிக்கு கிளம்பினால் மாலை வீடு திரும்பிவிடலாம். ஒரே நாளில் அனைவருக்கும் பத்திரிகை வைத்துவிட்டு திரும்பி விட வேண்டும். நல்லபடியாக எல்லாம் நடக்கும் வரை இந்தக் கவலை இருந்துகொண்டுதானிருக்கும். அதற்கென்ன பண்ண முடியும். மனதைத் திடமாக தேற்றிக்கொண்டாள். அவரவராக இந்த மனதுக்கு சமாதானம் சொல்லிக்கொள்வதுதானே இந்த வாழ்வை பேரழகாக மாற்றிவிடுகிறது.

Representational Image
Representational Image

நந்தினி, சீக்கிரமே உறங்கிவிட்டாள். உடல் அசதி வேறு அவளை ஆழ்ந்த நித்திரைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. ஊரைப் பற்றிய சிந்தனையிலேயே உறங்கிப்போனவ பால்யத்தின் நினைவுகளில் கரைந்துபோனாள். அவள் வீடு ஊருக்குள் இருந்தாலும் கழனியில் அப்பா கட்டிய வீடு வெகுகாலத்துக்கு அவள் நினைவில் இருந்து விலகவே இல்லை.

காலம் அவளை பல‌ ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றது. அப்போது நந்தினிக்கு 5 வயதிருக்கும். ஒருநாள் கழனியிலிருந்து வீடு திரும்பிய அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

"கழனியில வீடு கட்டலாம்னு இருக்கேன்."

"என்ன திடீர்னு கழனியில... ஏன், ஆத்திர அவசரத்துக்கு ரெண்டு புள்ளைங்கள வச்சிக்கிட்டு ஒதுக்குபுறமா கஷ்டப்படணுமா"... அம்மா கேட்டாள்.

"அதெல்லாம் இல்லம்மா... இது எங்கப்பா கட்டுன வீடு. நமக்குன்னு ஒரு வீடு கட்டிப் பாக்கணும்னு ஆசை. செலவே இல்லாம கட்ட ஒரு யோசனை. அதான் உங்கிட்ட சொல்லலாம்னு"...

அப்பொழுது நந்தினி அப்பாவின் மடியில் வந்து உட்கார்ந்துகொண்டாள். ஒரே தம்பி வெங்கட்டும் அம்மாவின் மடியில் வந்து உட்கார்ந்துகொண்டான். இருவருக்கும் 2 வயதுதான் வித்தியாசம். அம்மா சிரித்தாள்.

"செலவே இல்லாம துரைக்கு யாரு சும்மா வீடு கட்டித் தர்றாங்களாம். நெனப்பு பொழப்ப கெடுத்துடப் போவுதுய்யா.... செலவே இல்லாமன்னா எப்புடி..."

அப்பா, தன் திட்டத்தைச் சொன்னார். சொல்லி முடிக்கும்போது அம்மாவின் முகம் ஆச்சர்யத்தில் பிரகாசமாய் மாறிப் போயிருந்தது. நந்தினியும் வெங்கட்டும் விளையாட்டுவாக்கில் அவர்கள் பேசி முடிக்க கைதட்டி மகிழ்ந்தார்கள். ஏதோ, ஓர் மூலையில் பல்லியும் ஓசையெழுப்ப நல்ல சகுனமாக உணர்ந்தார்கள். வீடு கட்டுவதற்குத் தேவையான முன் தயாரிப்புகள் தொடங்கின. அப்பாவின் திட்டமெல்லாம் ஒவ்வொன்றாகப் புரியத்தொடங்கின. அப்பா, பக்கத்து ஓடையிலிருந்து களிமண்ணையும் மணலையும் இன்ன பிற பொருள்களையும் மாட்டு வண்டியில் கொண்டு வந்து கழனியில் போட்டார்கள்.

ஆட்களை வரச்சொல்லி செங்கல் அறுப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. கழனியில் ஒரு பக்கமாகக் களம் அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்தார். அங்கேயே செங்கல் அறுக்கப்பட்டு காய வைக்கப்பட்டது. தான் வீடு கட்ட தன் மேற்பார்வையிலேயே செங்கல் அறுப்பதற்கு ஆட்கள் கிடைத்தது. அப்பாவுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நல்ல நாளில் அறுக்கப்பட்ட செங்கல்களை அடுக்கி கழனியில் கிடைத்த காய்ந்த மரங்கள் கொண்டு சூளை அமைத்து கற்கள் அனைத்தும் நன்றாக எரியூட்டப்பட்டன. ஒருவாரம் அது எரிந்துகொண்டிருந்ததாக ஊரே பேசியது. அதுவே, அப்பாவுக்கு மிகுந்த உற்சாகத்தையும் பெருமையாகவும் இருந்தது. அப்பாவிடம் வேலை செய்தவர்கள் அத்தனை விசுவாசமிக்கவர்களாக உழைப்புக்கு மரியாதை தருபவர்களாக இருந்தனர். கழனியில் பெரிய கிணறு இருந்தது.

Representational Image
Representational Image

கிணற்றிலிருந்து நீர் இறைக்க ஏற்றமும் கமளையும் இருந்தது. அப்போதெல்லாம் மோட்டார் செட்டுகள் வரவில்லை. அதிகப்படியாக ஒவ்வொரு வீட்டிலும் ஏறத்தாழ ஐந்தாறு மாடுகள், ஆடுகள், கோழிகள் என எல்லாம் நிறைந்திருக்கும். நாய்களும் பாதுகாப்புக்கு இருக்கும். மாடுகளைக் கட்டிவைக்க கீத்துக் கொட்டாய் போடப்பட்டிருக்கும். பெரிய வாய் நீண்ட மண் தொட்டியில் கஞ்சித் தண்ணியை ஊற்றி தவிட்டைப் போட்டு முழங்கையைவிட்டு நன்றாகக் கலக்கி மாடு குடிக்க காட்டும்போது மாட்டின் முகம் முழுக்க தவிட்டாக இருக்கும். அது குடிப்பதைப் பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும்.

ஐய்யனாரப்பனை வணங்கி ஜவ்வாது மலையைப் பார்த்த வண்ணம் கிழக்கு நோக்கி வாசல் வைத்து வீடுகட்டுவதற்கான பூஜை போடப்பட்டது. அப்போது நந்தினியும் வெங்கட்டும் சிறுவர்கள் என்பதால் கழனியே கதியாக அம்மாவோடும் அப்பாவோடும் அவர்களுடனேயே இருந்தார்கள். வீடு கட்டுவதற்கு அப்போதெல்லாம் சிமென்ட்டெல்லாம் கிடையாது. எல்லாம் செம்மண் சுவர்தான். நான்கடி ஆழத்துக்கு இரண்டடி அகலத்துக்கு பள்ளம் தோண்டி கருங்கற்களைப் பரப்பி மண் நிரப்பி நன்றாகக் கிணற்றிலிருந்து இறைத்த‌ நீரை விட்டு அது இறுகும் வரை காய வைத்து, நன்கு பொன்னிறமாக சுட்ட செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாகப் பக்குவமாக அடுக்கி செம்மண் சாந்தடைத்து அடித்தளம் அமைத்ததையே அப்பா அத்தனை அழகாக ரசித்துக் கொண்டிருந்தார். கனவு இல்லம் கொஞ்சம் கொஞ்சமாக மெய்ப்படத் தொடங்கியிருந்தது. அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியபோதே அறைகளின் உள்சுவர்களுக்கும் சேர்த்தே அடித்தளம் அமைக்கப்பட்டது.

வீட்டின் நான்கு புறமும் தாழ்வாரம் அமைத்து, நான்கு மூலைகளிலும் பெரிய அறைகள் விசாலமாக அமைத்து நடுவில் முற்றம் வைத்து வீடு கொஞ்சம் கொஞ்சமாகத் தயாராகிக் கொண்டிருந்தது. செம்மண்ணைக் குழைத்து ஆட்கள் வேலை செய்வதைப் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். ஊர்ல கட்டாம, கிறுக்குப் பய முத்துசாமி நடுகாட்ல கட்டறான்யா ஊர்ப்பெரியவர்கள் அப்பாவை ஏளனம் செய்தனர். அப்பா, அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. தன் வாழ்நாளின் பெரிய கனவு வீட்டை மனதில் கட்டியதைப்போல் மண்ணிலும் கட்டிக்கொண்டிருந்தார். கதவுகளுக்கு மேலாக உத்திரத்துக்கு பாறைகளைப் பலகையாக வெட்டி வைத்தார்கள். கூரைக்கு பட்டுப் போன பனைமரத்தை வெட்டி தேவையான அளவு அறுத்து வரிசையாக இடைவெளி விட்டு நன்றாகக் கட்டினார்கள். கூரை வேய்வதற்குத் தேவையான விழல்களை எங்கிருந்தோ மாட்டு வண்டியில் கொண்டு வந்து சேர்த்தார் அப்பா. அத்தனையும் இளம்பச்சை நிறத்தில் காய்ந்திருந்தது. அதைப் பிரில் பிரிலாக கத்தை கட்டி அடுக்கி வைத்தார்கள். வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை எடுத்து ஒரு சிறு குச்சிக்கு இடையில் நுழைத்து கயிறு தயாரிக்கும் பணி நடந்தது. கதவுகளுக்கும் சாளரத்துக்கும் நன்கு காய்ந்த பூவரசன் மரத்தை அறுத்துக்கொண்டார்கள். ஆசாரிகள் வந்து கதவுகளைக் கழனியிலேயே செய்து கொடுத்தார்கள்.

செங்கல் கட்டு வேலை முடித்த பின் சுவர்கள் அனைத்தும் செம்மண் கொண்டு சாந்தாகக் குழைத்து மெழுகிப் பூசினார்கள். அதன் மேல் மாட்டுச் சாணம் கொண்டு நன்கு பூசி மெழுகினார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்துவிட்டால் வீடு ஏறக்குறைய தயாராகிவிடும். இன்னும் படி அமைக்கும் வேலைகள் மட்டுமே பாக்கியிருந்தது. விளையாடிக்கொண்டிருந்த வெங்கட்டையும் நந்தினியையும் அழைத்து குழைத்த செம்மண்ணை அவர்களின் பிஞ்சுக் கால்களால் மெரிக்க வைத்து வீட்டின் படி அமைத்த அழகைப் பார்த்தபோது அப்பாவுக்கு கண்கள் கலங்கிப்போயின. அம்மா, அழுதே விட்டாள். "அவங்க வாழப் போற வீடில்லன்னு'' அந்தக் கொத்தனார் வாய்விட்டுச் சொன்னார். வீட்டின் எதிரிலேயே பெரிய களம் நெற்பயிர்களைக் காய வைக்க அமைத்துவிட்டார் அப்பா. மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, காய்ந்த இலைகள் மட்கும் அனைத்தும் எருவாக ஆக எருக்குழியும் அமைத்து விட்டார்கள். இயற்கை சார்ந்த அத்தனை வசதிகளும் நிரம்பிய வீடாக இருந்தது அது. வீடு ஜவ்வாது மலையைப் பார்த்த வண்ணம் இருந்ததா... இல்லை, ஜவ்வாது மலை வீட்டைப் பார்த்த வண்ணம் இருந்ததா.... தெரியாது. ஆனால், காற்று எந்தக் கேள்விகளும் இன்றி நாலாபுறமும் உள்நுழைந்து குதூகலித்தது.

Representational Image
Representational Image

வீட்டுக்கு முன்பாக மாடுகள் கட்டும் இடத்துக்கு அருகில் நந்தினி பிறந்தபோது முதல்முறையாக கழனிக்கு தூக்கி வந்தபோது அதன் நினைவாகக் கிடைத்த வேப்பமரத்தை நந்தினி கையால் அப்பா நட்டு வைத்திருந்தார். அது இன்று பெரிய மரமாகிவிட்டிருந்தது. அவர்கள் குடி வந்த அந்த ஆண்டு மகசூல் அமோகமாக இருந்தது. நல்ல விளைச்சல்... நல்ல லாபம்... அப்பா புதியதாக சைக்கிள் வாங்கிக்கொண்டார். அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் புதுத்துணியும் நகையும் வாங்கிக் கொடுத்தார். வீட்டில் வேலையாட்கள் நிரம்பி வழிந்தார்கள். மாடு மேய்ப்பதற்கு, பால் கறப்பதற்கு, ஆடு மேய்க்க, களை எடுக்க, ஏர் ஓட்ட, பயிரிட, நீர்ப்பாய்ச்ச என விதவிதமான ஆட்கள் இருந்துகொண்டே இருந்தார்கள். அம்மாவுக்கு இவர்கள் அனைவருக்கும் சமைப்பதே பெரும் வேலையாக இருந்தது.

வேப்பமரத்தில் பூத்த வேப்பம் பூக்களை அம்மா பொறுக்கி எடுத்து காய வைத்து சுத்தம் செய்து பானையில் பாடம் செய்து வைத்துக் கொண்டார்கள். அந்த வேப்பம் பூக்கள் கொண்டு குழம்பு வைப்பதே அத்தனை சுவையாக இருக்கும். அப்பாவுக்கு அந்தக் குழம்பின் மேல் அலாதி பிரியம். மண் சட்டியில் எண்ணெய் விட்டு காய வைத்து கடுகையும் கறிவேப்பிலையும், மலைப்பூண்டையும், நறுக்கிய வெங்காயத்தையும், தக்காளியையும் நன்கு வதக்கி பின் உள்ளங்கையளவு சுத்தம் செய்த வேப்பம் பூவை போட்டு நன்கு கிளறி பதத்துக்கு உப்பைப் போட்டு மிளகாய் தூளோடு கரைத்து வைத்த புளிக் கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கும்போது வேப்பம் பூவின் கசப்புத் தெரியாமல் இருக்க‌ கொஞ்சமாய் வெல்லம் போட்டு இறக்கினால் அப்பப்பா அதன் சுவைக்கு தேவாமிர்தமும் தோற்றுப்போகும்.

புதிதாக வருபவர்களிடம் அப்பா சொல்லி சிலாகிப்பார். அவர்கள் சாப்பிடும்போது அதை எதிர்பார்த்தால் இருக்காது. நீங்க மொத மொறை வந்திருக்கீங்கல்ல கசப்பு போடக்கூடாது... அதான். அதற்காகவே ஏதேனும் காரியம் வைத்து வந்து அம்மா கையால் சாப்பிட்டுவிட்டு போனவர்கள் ஏராளம். நந்தினிக்கும் அந்த வாசம் ரொம்பப் பிடிக்கும். காலங்கள் மாறத் தொடங்கியிருந்தன. டீசல் மோட்டார் இன்ஜின் வந்தபோது கமளையும் ஏற்றமும் காணாமல் போயின. மாடுகளுக்கு வேலை குறைந்துபோனது. தேவையற்ற மாடுகள் விற்கப்பட்டன. கழனிகள் வழியாகக் கம்பங்கள் நடப்பட்டு மின்சாரக் கம்பிகள் இழுக்கப்பட்டன. பொத்தானை அழுத்திய கணத்தில் குபு குபுவென நீர் வந்து விழுவதைப் பார்த்து ஊரே ஆச்சர்யத்தில் மிதந்தது. இனி, கஷ்டப்பட்டு நீரிறைக்கும் சிரமம் இல்லை என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், பக்கத்து கழனி மன்னன் தாத்தா ஒரு மதிய வேளையில் மின் கம்பி அறுந்து விழுந்து உடலெல்லாம் சுற்றி கரிக்கட்டையாய் கிடந்தவரைப் பார்த்த பின்பு எல்லோருக்கும் பயம் தொற்றிக்கொண்டது.

Representational Image
Representational Image

மன்னன் தாத்தா இறந்த பின்பு, அப்பா ரொம்பவும் இடிந்துபோனார். அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருந்தார், "இனிமே, இந்த பொழப்பை நம்பி புள்ளைங்களைப் பலி கொடுக்க முடியாது" வேற ஏதாச்சும்தான் செய்யணும். இதையே நம்பிக் கிடந்தா வெஷம் குடிச்சிட்டுதான் சாகணும். இதோ, இந்த மோட்டார் வந்தப்புறம் வெளைச்சல் அதிகமால்ல ஆயிருக்கணும்... முன்னவிட இப்ப கம்மியால்ல வரத்து இருக்கு. உடலுழைப்பு போய்டுச்சி... ஆளுங்க முன்ன மாதிரி வெவசாயம் செய்ய கெடைக்க மாட்டேங்கறாங்க... இவங்களையும் இதுல இழுத்து விட விருப்பமில்லே... பின்னாடி இவங்க வாழ்க்கைய நானே கெடுத்துட்டதா ஏசுங்க. மத்த புள்ளைங்கள பாத்து ஏக்கத்துல மனசுக்குள்ள மருகுங்க.... வேண்டாந்தாயி, இந்தப் பொழப்பு... அதுகளுக்கு நல்ல வழி காட்டி கண்ண மூடிட்டா போதும். இது, என்னோட போகட்டும். அப்பா வலியில் அழுதார்... அது வாழ்க்கைக்கான வலி. அப்பாவின் வலி நியாயமானது... அப்போதெல்லாம் நீரிறைக்க ஏற்றமோ கமளையோ இருந்தது... இப்பொழுது மின்சாரம் வந்த பின் இரவெல்லாம் எப்போது கரன்ட் வரும் என்று பார்த்துக்கொண்டே இருப்பார். சொந்த பந்த நிகழ்ச்சிக்கெல்லாம் அம்மா மட்டுமே சென்று வருவதாக இருந்தது. ஒரு நடை தண்ணி பாயுறதுக்குள்ள கரன்டை அமுத்திபுடுறான். பயிரெல்லாம் தண்ணியில்லாம செத்து போவுது.

அம்மாவுக்கும் எண்ணெய் விளக்கில் இருந்த வாசம் மின்சார விளக்கில் இல்லை என்கிற ஆதங்கம். திடுக்கிட்டு எழுந்த நந்தினிக்கு எல்லாம் உள்ளுணர்வின் உண்மையான வலி என்பதை உணர்ந்தாள். கிராமத்து வாழ்வில் மனசோடு பேசியது, மனம் சொன்னதைக் கேட்டது என எல்லாமே ஏதோ ஓர் சம‌நிலையில் நிதானமாக ஓடியதாகப்பட்டது. மனசுக்குள் கட்டாயம் பழைய வீட்டுக்குப் போய் வர வேண்டும் என எண்ணிக்கொண்டாள்.

ஊர்விட்டு வந்த பிறகு, ஒருநாள் அப்பா, அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார், "பெருமழைக்கு பேய்க்காத்துல கூரையெல்லாம் பிச்சிக்கிட்டு போய்டுச்சாம்டா நம்ம கழனி வீடு. ஊர் வீட்டை இவர்களின் பங்காளி ஒருவர்தான் பராமரித்து வருகிறார். தெரிந்த பங்காளிகள் அனைவருக்கும் பத்திரிகை வைத்தாகிவிட்டது. உடன் படித்த தோழி வாணி உள்ளூரிலேயே படித்து படித்த பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணி புரிகிறாள். அவள் வீட்டுக்குச் சென்றபோது கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள் அவள்... `ஒரு வாயாச்சும் சாப்பிட்டு போடி, இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கே ஏதாச்சும் சாப்பிட்டு போடி' என்றாள்.. மறுப்பு எதுவும் சொல்லாமல், சாப்பிட அமர்ந்தபோது வாணி சொன்னாள்... `மொத மொதல்ல வந்திருக்க... என்னடா இவ கசப்ப பரிமாறாள்ன்னு கோச்சுக்காத... எங்க வீட்டுக்காரருக்கு வேப்பம்பூ குழம்புன்னா அவ்ளோ புடிக்கும்.' அவள் முதல் கவளம் சாப்பிடும்போது அம்மாவின் குழம்பை சாப்பிடுவதுபோல் உணர்ந்தாள். ரொம்ப நல்லா செஞ்சிருக்கேடி எனப் பாராட்டினாள். கண்களில் நீர் முட்டுவதை முந்தானை நுனியால் துடைத்துக்கொண்டாள்.

Representational Image
Representational Image

அப்பா கட்டிய வீட்டின் முற்றமும் அம்மாவின் நினைவும் நெஞ்சில் நிழலாடியது. நிறைய மாறியிருந்தது... எப்படியோ வழி கண்டு பிடித்து கழனி மேட்டுக்கு வந்தாள் நந்தினி... நாகரிக மனிதர்களின் மனம்போல் அந்த வீடு சிதிலமடைந்திருந்தது. வீட்டைப் பார்க்க பார்க்க அழுகையாக வந்தது. வீட்டின் மேற்கூரை இல்லை. சுவர்கள் செம்மண் பெயர்ந்து உடைந்திருந்தது. கிணறு வறண்டிருந்தது. மனசுக்குள் கேவி அழணும்போல் இருந்தது. வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். அமர்ந்து படியின் தரையைத் தாங்கள் கால் மிதித்து வைத்த மண்ணை விரல்களால் வருடினாள். வெங்கட்டும் அவளும் விளையாடிய நாள்கள் பால்யத்தின் நினைவுகளாய் வந்து போயின. காற்றின் அசைவற்று இருந்தது வெட்ட வெளி. மாடுகள் கட்டிய இடத்தை நோக்கினாள். வேப்பமரம் இன்னும் வெட்டப்படாமல் அப்படியேதான் இருந்தது. வேப்பமரத்தின் அருகில் நடந்து போனாள்... சூரியன் மேற்கில் விழுந்துகொண்டிருந்தான். நந்தினியைப் பார்த்த கணத்தில் வேப்ப மரம் "வந்துட்டியா நந்தினி" என்பதுபோல் இருந்தது. மரத்தைக் கட்டித் தழுவினாள். பெருங்குரலெடுத்து அழணும்போல் இருந்தது.. அப்படியே கட்டித் தழுவியவள் மரத்தின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தாள். மரம் நன்றாகப் பூத்திருந்தது. எங்கிருந்தோ பெரும் காற்று படை திரட்டி வந்ததைப்போல் தன் பலங்கொண்ட மட்டும் வீசியது... வேப்பம் பூக்கள் மழையாக உதிரத் தொடங்கின... காற்றில் வேப்பம் பூவின் வாசம் வீசத் தொடங்கியிருந்தது... வேப்பம் பூ கசப்பாக இருந்தாலும் உள்ளுக்குள் தேன் இருப்பதை போன்று நல்ல நினைவுகளும் நம் வாழ்க்கையிலும் இருக்கத்தானே செய்கின்றன.

- மகேஷ்குமார் செல்வராஜ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க...

https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு