Published:Updated:

Trump card (டிரம்ப் கார்டு) - சிறுகதை #MyVikatan

மாணவர்கள் - சிறுகதை
மாணவர்கள் - சிறுகதை ( Represent Image )

கலவரத்தைத் தீர்ப்பதற்கான ஐடியாவை, உதவிப் பேராசிரியர் சிரித்துக்கொண்டே ``சார், இது ரொம்ப சுலபம். இதை மட்டும் செய்யுங்க போதும்" என்று ஒரு துண்டுச்சீட்டில் ஒரு வரி மட்டும் எழுதிக் கொடுத்து விட்டு புன்னகையுடன் விடைபெற்றார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அந்தக் கல்லூரியின் முதல்வர் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டார். அடுத்த வாரத்தில் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. பேராசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பை பிரித்துக்கொடுத்ததன் மூலம் திருப்திகரமான முறையில் விழா ஏற்பாடுகள் நடந்துவந்தன. ஆயினும், விழா எதிர்பார்த்தபடி நடக்குமா என்பதேது முதல்வரின் பதற்றத்திற்குக் காரணமாக இருந்தது.

கல்லூரியில், மாணவர்களிடையே உள்ள ஒரு பிரச்னை, அவர் மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. கல்லூரியின் இரு பிரிவு மாணவர்களிடையே சிறிதாக ஏற்பட்ட சண்டை, பெரிய அளவில் கலவரமாக வெடிக்கும் சூழ்நிலை காணப்பட்டது. பட்டமளிப்பு விழா சமயத்தில் அத்தகைய ஒரு கலவரம் நிகழுமானால், தன் பெயரும் கல்லூரியின் பெயரும் கெட்டுவிடும் என்பது அவருக்கு மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிப்பதாக இருந்தது.

கல்லூரியின் அனைத்து சீனியர் பேராசிரியர்களையும் கூட்டி, ``இதற்கு என்ன செய்வது?" என அவர் ஆலோசனை கேட்டார்.

`காவல்துறையிடம் புகார் செய்யலாம்.'

`குறிப்பிட்ட மாணவர்களைக் கல்லூரிக்குள் வரவிடாமல் தடுக்கலாம்.'

`மாணவர்களின் பெற்றோர்களை அழைத்துப் பேசலாம்' என பல்வேறு யோசனைகள் பேராசிரியர்களால் வழங்கப்பட்டன.

ஆலோசனையில் கல்லூரி முதல்வர்
ஆலோசனையில் கல்லூரி முதல்வர்
Represent Image

காவல்துறையில் புகார் செய்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும். குறிப்பிட்ட மாணவர்களை உள்ளே வரவிடாமல் செய்தால் அதையே பெரிய பிரச்னை ஆக்கிவிடுவர். இறுதியாக, மாணவர்களின் பெற்றோர்களை அழைத்துப் பேசியும் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் காண முடியவில்லை. என்னுடைய மகன் கலவரத்தில் ஈடுபட மாட்டான் என அவர்கள் எழுத்து வடிவில் உறுதியளித்துவிட்டு சென்றிருந்தனர்.

இவையெல்லாம் பிரச்னைக்குத் தீர்வு காணக்கூடிய நடவடிக்கைகள் இல்லை என்பது முதல்வரின் எண்ணமாக இருந்தது.

அதற்கேற்றாற்போல், இரண்டாமாண்டு மாணவர்கள் பட்டமளிப்பு விழா அன்று கலவரம் செய்ய திட்டமிடுவதாக, பியூன் மூலமாக தகவல் கிடைத்தது. முதல்வர் மிகவும் சோர்ந்துபோனார். பிரச்னைக்குத் தீர்வு காண முடியாமல் தவித்தார்.

அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன்னுடைய உதவியாளரை அழைத்து, "இந்தப் பிரச்னைக்கு என்ன செய்யலாம்... உனக்கு ஏதாவது ஐடியா தோன்றுகிறதா?" என்று கேட்டார்.

உடனே உதவியாளர், ``நமது கல்லூரியின் இயற்பியல் துறையில் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள உதவிப் பேராசிரியர் மிகவும் புத்திசாலி. அவர், இதற்கு சிறந்த தீர்வை வழங்குவார். அவரை அழைத்து பேசிப்பார்க்கலாம்" என்றார்.

கல்லூரியின் இயற்பியல் துறையின் இளம் உதவிப் பேராசிரியர், இன்டலெக்சுவல் என மாணவர்களிடம் பெயரெடுத்தவர். பியூனை அனுப்பி அவரை அழைத்துவரச் சொன்னார் முதல்வர்.

அவர் வந்தததும், "இந்தப் பிரச்னைக்கு சிறந்த தீர்வை நீங்கள் கூறுவீர்கள் என்று எதிர்பார்த்துதான் உங்களைத் தனியாக அழைத்து வரச் சொன்னேன். நம்முடைய கல்லூரியின் பட்டமளிப்பு விழா எந்தவித கலவரமோ, பிரச்னையோ இன்றி நடந்து முடிய வேண்டும். அதற்கு, உங்களின் ஆலோசனை தேவை. மாணவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. பல ஆண்டு அனுபவம் எனக்கு இருந்தாலும்கூட, தற்போதைய மாணவர்களின் மனநிலை உங்களைப் போன்ற இளைஞர்களுக்குத் தான் தெரியும். ஆகவே, தான் உங்களை அழைத்தேன்."

``அதுமட்டுமில்லாமல் நீங்கள் எதையுமே புதுமையாகச் சிந்திப்பதாக அனைவருமே கூறுகின்றனர். நான் இந்த வருடத்துடன் ஓய்வுபெற்றுவிடுவேன். என்னுடைய ஓய்வுக்காலம் இனிமையானதாக அமைய வேண்டுமென்றால், இந்த விழா சிறப்பானதாக நடக்க வேண்டும். நீங்கள்தான் சிறந்த ஆலோசனையை வழங்க வேண்டும்" என்றார்.

கல்லூரி வளாகம்
கல்லூரி வளாகம்
Represent Image

உதவிப் பேராசிரியர் சிரித்துக்கொண்டே "சார், இது ரொம்ப சுலபம். இதை மட்டும் செய்யுங்க போதும்" என்று ஒரு துண்டுச்சீட்டில் ஒரு வரி மட்டும் எழுதிக்கொடுத்து விட்டு புன்னகையுடன் விடைபெற்றார்.

அந்த துண்டுச் சீட்டைப் படித்த முதல்வரின் முகத்தில் இத்தனை நாள் இருந்த வேதனை நீங்கி புன்னகை அரும்ப ஆரம்பித்தது. பிரமாண்டமாக விழா ஏற்பாடுகள் தொடர்ந்தன. மாணவர்களின் கலவரத்தை ஒடுக்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தி ருக்கிறார் என்று மற்ற பேராசிரியர்களுக்கு ஒரே குழப்பம்.

அவரிடம் சென்று கேட்க, "எல்லாம் ரெடி பண்ணியாச்சு, ஒரு கலவரமும் நடக்காது. எல்லாம் நான் பார்த்துக்குறேன். நீங்க உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சிறப்பாகச் செய்யுங்கள்" என்று உற்சாகத்துடன் பதிலளித்தார். பலருடனும் மகிழ்வுடன் செல்போனில் உரையாடியவாறு கல்லூரி வளாகத்தினுள் புத்துணர்வுடன் வளையவந்தார்.

பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் உரிய நேரத்திற்கு வருகை புரிய, ஒரு சிறு தவறுகூட இல்லாமல் விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

கல்லூரி முதல்வர் என்ன மந்திரம் போட்டு மாணவர்களின் கலவரத்தை நடக்கவிடாமல் செய்தார் என்று பேராசிரியர்களுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

அடுத்த நாள், விழாவிற்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர், அவர்களின் பார்வைகளைக் கொண்டே அவர்களின் கேள்வியை ஊகித்துக்கொண்டார்.

``உங்களுக்கெல்லாம் கலவரம் எப்படி தடுக்கப்பட்டது என்ற சந்தேகம் மனதுக்குள் இருக்கும். அதற்கான விடைதான் இதோ இந்த துண்டுச் சீட்டு" என்றபடி உதவிப் பேராசிரியர் எழுதிக்கொடுத்த துண்டுச் சீட்டை அனைவருக்கும் காண்பித்தார்.

அதில் ஒரே ஒரு வரி மட்டுமே எழுதப்பட்டிருந்தது.

``ஜாமரை ஆஃப் செய்யவும்."

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மாணவர்கள்
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மாணவர்கள்
Represent Image

இந்த துண்டுச்சீட்டில் எழுதப்பட்டிருப்பதற்கும், கலவரம் தடுக்கப்பட்டதற்கும் என்ன சம்பந்தம் என்று ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

முதல்வர் உதவிப் பேராசிரியரை அருகில் அழைத்து நிற்க வைத்துக்கொண்டு விளக்க ஆரம்பித்தார். "கலவரம் நடந்தாலும் நடந்திடும் என்று நான் ரொம்பப் பயந்தேன். ஆனால், இவர் ஜாமரை ஆஃப் செய்யச் சொன்னது ஸ்மார்ட்டான யோசனை. இது, கலவரத்துக்கான அறிகுறியே இல்லாமல் பண்ணிடுச்சு."

``நம்ம கல்லூரி வளாகத்தில் உள்ள கணினிகளின் இணையதள வசதி கேபிள் மூலமாகவே இயக்கப்படுகிறது. இது, எப்போதுமே பயன்பாட்டில்தான் இருக்கும். ஆனால் அதேநேரம், மொபைல் போன் ஜாமர் எப்பவுமே செயல்பாட்டில்தான் இருக்கும்."

``மாணவர்களும் ஆசிரியர்களும் கல்லூரி வளாகத்தின் உள்ளே செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது. கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகள் மட்டுமே இங்கு நடக்க வேண்டும் என்பதற்காகாகச் செய்யப்பட்ட ஒரு சிறந்த ஏற்பாடு இது."

``இந்தச் சூழ்நிலையில், நமது கல்லூரிக்குள் வந்தாலே மொபைல் போன்கள், ஜாமர் காரணமாக நெட்வொர்க் சிக்னல்கள் முடங்கிவிடுவதால், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட யாருமே செல்போனில் பேசவோ, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தவோ முடியாத சூழ்நிலை இருந்தது. கல்லூரி வளாகத்தினுள் லேண்ட்லைன் போன் மட்டுமே பயன்பாட்டில் இருந்துவந்தது"

``பட்டமளிப்பு விழா சமயத்தில், மாணவர்களுக்கிடையே கலவரம் ஏற்படும் சூழ்நிலை என்றவுடன், கடந்த ஒரு வாரமாக ஜாமரை ஆஃப் செய்து வைத்துவிட்டோம்!"

``எனவே, இந்த ஒரு வாரமாக மாணவர்கள் கல்லூரிக்குள் வந்தாலும், வெளியில் இருப்பதுபோன்றே தங்களின் செல்போன்களை உபயோகப்படுத்த முடிந்தது. அவரவர்களுடைய செல்போனில் தனித்த உலகத்தில் இயங்கினர். அவ்வப்போது விழா ஏற்பாடுகளையும் கவனித்தனர்."

``கல்லூரி வளாகத்தினுள் செல்போன் பயன்படுத்த முடிந்ததால், அதிலேயே மணிக்கணக்கில் மூழ்கியதால், தங்களுக்குள் நிலவிய சிறு சிறு கருத்து வேறுபாடுகளைக்கூட மாணவர்கள் மறந்தே போயினர்."

``கலவரம் செய்யும் திட்டம் குறித்து அவ்வப்போது மாணவர்களுக்கு நினைவில் வந்தாலும், மெய்நிகர் உலகில் சமூக வலைதளங்களிலேயே ஒருவரையொருவர் சொற்களாலும், மீம்ஸ்களாலும் தாக்கிக்கொண்டனர்."

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்
Represent Image

``பலர் கூட்டாகச் சேர்ந்துகொண்டு, கலவரம் என்பதற்கெல்லாம் மாணவர்களுக்கு நேரமே இல்லாமல் போய்விட்டது. ஆனால் ஒன்று! மாணவர்கள் இவ்வாறு போனுக்கு அடிமையாக இருப்பதை நாம் எவ்வாறு மாற்றுவது? என்பதை மட்டும் உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்."

``காவல் துறையினர் தீவிரவாதிகளின் தொடர்பை முடக்கவும், கலவரங்களை அடக்கவும் வேண்டி, குறிப்பிட்ட இடத்தில் தகவல் பரிமாற்றத்தைத் தடைசெய்ய ஜாமரைப் பொருத்தி ஆன் செய்வார்களாம்."

``நாங்கள் கலவரத்தை அடக்க ஜாமரை ஆஃப் செய்தோம் அவ்வளவுதான்" என்று புன்னகைத்தபடி உதவிப் பேராசிரியரைக் கட்டியணைத்துக்கொண்டார், கல்லூரியின் முதல்வர்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு