Published:Updated:

மூத்த மரமும் தந்திரப் பாம்புகளும்! - சிறுகதை #MyVikatan

விகடன் வாசகர்

சைவம் மட்டுமே சாப்பிடும் கிளியும் இருந்தது. அசைவம் விரும்பும் கழுகும் இருந்தது! அனைத்தையும் உண்ணும் காக்கைக்கும் கூடு இருந்தது.

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

பரந்து விரிந்த அந்தக் காட்டில் பல ஆயிரம் ஆண்டுகளை கடந்த ஆலமரம் ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் எந்த மரத்திற்கும் இல்லாத பெருமை ஒன்றும் அந்த மரத்திற்கு இருந்தது. விழுதுகளே மரத்தைத் தாங்கும் வழக்கமான பெருமையில்லை. அது, அந்தக் காட்டில் இருந்த மற்ற மரங்களில் எல்லாம் ஒவ்வொரு பறவையினமும் மட்டும்தான் கூடு கட்டியிருந்தது. இந்த மரத்தில் மட்டும்தான் எல்லா இனப்பறவைகளும் கூடு கட்டியிருந்தன.

Representational Image
Representational Image

சைவம் மட்டுமே சாப்பிடும் கிளியும் இருந்தது. அசைவம் விரும்பும் கழுகும் இருந்தது! அனைத்தையும் உண்ணும் காக்கைக்கும் கூடு இருந்தது. மைனாவும், மயிலும், திருட்டு முட்டையிடும் குயிலும் இருந்தது. தன்னைக் குடையும் மரம் கொத்திக்கும், இன்னும் பல நூறு பறவையினங்களுக்கும் இடம் கொடுத்திருந்ததும் பெருமையில்லை. இவ்வளவு பறவைகளும் சண்டை, சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாய் இருந்ததுதான் அந்த ஆலமரத்தின் தனிப்பெருமை! ஒவ்வொரு நாள் காலையும் இருள் பிரிந்து, சூரியன் வரும் வேளையில், அம்மரத்தில் வசிக்கும் பல வித பறவைக் குஞ்சுகளின் கீச்கீச் சத்தத்தில் கண் விழிப்பதுதான் அம்மரத்தின் உச்சபட்ச மகிழ்ச்சியும், கர்வமும்!

அவரவர் குஞ்சுகளுக்கு இரை தேடி எல்லாப் பறவைகளும் உள்காட்டுக்குச் சென்று இரையோடு வரும்வரை ஆலமரமே ஒன்றுமறியா குஞ்சுகளுக்குப் பாதுகாப்பு. தென்றல் கொடுத்து உறங்க வைக்கும். புயலடித்தால் அசையாது பலம் காட்டும். கடும் வெயிலை அண்டவே விடாது. மாலை கூடு திரும்பும் பறவைகளும் தமக்குக் கிடைத்ததை தன் குஞ்சுகளுக்கு மாத்திரமே கொடுக்காமல் எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தன! தினமும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லையே! மற்ற மரங்களுக்கும், பறவைகளுக்கும் இவர்கள் மீது எப்பொழுதும் ஒரு பொறாமை கண் இருந்தது. அது ஒரு கடுமையான பனிக்காலம். அந்தக் காட்டின் வடக்கேயிருந்த பனிமலையிலிருந்து கடும்பசியுடன், அரை மயக்கத்தில் இருந்த ஒரு செந்நிறப் பாம்பு ஊர்ந்து வந்து அந்த ஆலமரத்தின் அடியில் சுருண்டு விழுந்தது.

Representational Image
Representational Image

இதைக் கண்ட பறவைகள் எல்லாம் தம்மிடம் மிச்சம், மீதமிருந்த உணவைக் கொடுத்து பிழைக்க வைத்ததுமில்லாமல், பனிமலையில் உணவு கிடைக்காமல் வதங்கிய பாம்பின் பரிதாப கதையைக் கேட்டு இரக்கப்பட்டு, இனிமேல் நீ எங்களுடனேயே தங்கிக்கொள், உனக்கான உணவையும் நாங்களே தருகிறோம், நீ என்ன ஒற்றை ஆள்தானே எங்களுக்கு என்ன கஷ்டம் என்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டன.

ஆலமரம் பறவைகளையும், செந்நிறப் பாம்பையும் எச்சரித்தது. இதோ பார் பாம்பே, நீ இந்தக் காட்டிற்குச் சம்பந்தமில்லாதவன், மேலும் பறவைகளைத் தின்று வாழ்பவன். ஆகவே, என் மரத்தில் உனக்கு இடமில்லை, நீ கிளம்பலாம் என்றது. இதைக்கேட்டு மிகவும் பரிதாபப்பட்ட பறவைகள் மரத்தைச் சமாதானப்படுத்தி பாம்பிற்கு அடைக்கலம் வாங்கிக் கொடுத்தன. இப்பொழுது ஆலமரம் சொன்னது, இதற்காக நீங்கள் வருத்தப்படும் நாள் வரும், ஜாக்கிரதை! நீங்கள் இருக்கும்போது எங்களுக்கு என்ன பிரச்னை வரப்போகிறது, அநாவசியமாக கவலைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டன எல்லாப் பறவைகளும்!

Representational Image
Representational Image

தினமும் தாங்கள் கொண்டு வந்த உணவை பாம்பிற்கும் கொடுத்ததாலும், பல வகையான உணவு கிடைத்தாலும், செந்நிறப் பாம்பு நன்றாக கொழுத்தது. ஒரு நாள் உணவு கிடைக்காவிட்டாலும், யாருமறியாமல் பறவைகளின் கூட்டிற்குப் போய் முட்டைகளை தின்ன ஆரம்பித்தது. மாலை கூடடைந்த பறவைகள் முட்டைகளைக் காணாமல் அழும்பொழுது, இதுதான் விதி, கடவுளின் செயல், அவன் கொடுத்ததை அவனே எடுத்துக்கொண்டான் என உபதேசித்து, மந்திர வார்த்தைகளில் ஆறுதல் கூறி, மீண்டும் மீண்டும் ஆறுதல் தேடி தன்னிடமே வரக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டது அந்தத் தந்திரக்காரப் பாம்பு! அப்பாவி பறவைகளும் கடவுள், விதி என்று இரண்டு வார்த்தைகளை புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் மதி மயங்கினர். இப்பொழுது கடுமையான வெயில் காலம். அந்தப் பனிமலையின் பின் இருந்த பாலைவனத்திலிருந்து ஒரு பச்சை பாம்பு உணவு தேடி இந்த மரத்தடிக்கு வந்தது. இது ஒரு முரட்டுப் பாம்பு, வந்தவுடன் செந்நிறப் பாம்பை வம்பிக்கிழுத்து உணவைப் பிடுங்க முயற்சிக்க, தந்திரக்கார செந்நிறப் பாம்பு கழுகிடம் முறையிட்டு பச்சைப் பாம்பை கொல்ல முயன்றது.

கழுகும், மற்ற பறவைகளும் இருவரையும் கடிந்து கொண்டு, உங்களிருவருக்கும் நாங்களே உணவு தருகிறோம், நீங்கள் ஒற்றுமையாக இருந்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று சொல்லிவிட்டன. ஆபத்தே இவர்கள் தானே, இவர்கள் என்ன பாதுகாப்பு கொடுப்பதென ஆலமரம் மெளனமாய் கண்ணீர் விட்டது. இதன் பின், இந்த இரண்டு பாம்புகளும் அவ்வப்போது சண்டையிட்டாலும், முட்டைகள் உனக்கு, ஏதுமறியா குஞ்சுகள் எனக்கு என்று தெளிவாய்ப் பிரித்துக்கொண்டு கொழுத்தன!இம்முறை குஞ்சுகளும் காணாமல் போனதால் பறவைகள் மிகவும் பயந்து போயின. பெண் பறவைகளும் இரை தேடப் போவதால்தான் இந்தப் பிரச்னையெல்லாம், இனிமேல் பெண் கூட்டை விட்டு வெளியேறாமல் இருக்கட்டும், ஆண் பறவைகள் மட்டும் இரை தேடட்டும் என ஒரு தீர்ப்பை ஓதியது பச்சை பாம்பு. இதுதான் சரியென்று எல்லாப் பறவைகளும் ஏற்றுக்கொண்டன.

Representational Image
Representational Image

மீண்டும் கண்ணீர் விட்டது ஆலமரம்! இம்முறை பாம்புகளுக்கு வீட்டிலிருந்த பெண் பறவைகளும் கிடைத்தன! நன்றாக கொழுத்தன பாம்புகள்! இந்த ஆலமரத்தின் கதை, இதன் செழுமை, இந்தப் பறவைகளின் அறியாமை கடல் கடந்தும் பரவியது. இம்முறை ஒரு கொழுத்த வெள்ளைப் பாம்பு கப்பலேறி வந்தடைந்தது இம் மரத்திற்கு! நல்ல அழகாகவும், வாசனையாகவும், வக்கனையாகவும் பேச தெரிந்த அந்தப் பாம்பை இப்பறவைகளே வரவேற்று, உபசரித்து அடைக்கலம் தந்தன. ஆரம்பத்தில் வெள்ளைப் பாம்பை மூர்க்கமாக எதிர்த்த செம்பாம்பும், பச்சை பாம்பும், வெள்ளை பாம்பின் புத்திசாலிதனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பணிந்து போயின.

புதிய பாம்பின் வருகைக்குப் பிறகும் இழப்பு குறையாததால், வெள்ளை பாம்பிடமே யோசனை கேட்டது பறவைகள். இம்முறை, வலிமையான பறவைகள் கூட்டிலேயே இருக்கட்டும், எளிய பறவைகள் எல்லோரும் இரை தேடிக்கொண்டு வந்து நம்மிடம் சேர்க்கட்டும், அதை நான் சமமாக எல்லோருக்கும் பகிர்ந்து தருகிறேன் எனப் புதிய ஏற்பாட்டைச் சொன்னது. இதுதான் சரி எனக் குழம்பிய பறவைகளும் ஏற்றுக்கொண்டன. இதன்பின், வலிய பறவைகள் கொழுத்துக் கொண்டே போவதும், எளிய பறவைகள். மேலும் நலிவடைந்ததும், இருப்பதைக் கொண்டு சந்தோசமாக வாழ்ந்த பறவைகள் இரையைப் பதுக்கி வைப்பதும், பேராசையால் தன் இனத்தையே கொல்லுவதும் அம்மரத்தில் சர்வ சாதாரணமாக நடந்தன.

Representational Image
Representational Image

இது மட்டுமல்லாமல் பெரிய, பெரிய கூடுகள் வேண்டுமென்பதற்காக வலிமையான கழுகு போன்ற பறவைகள் அடிமரத்தை துளையிடுவதும் நடந்தது. ஆனால், கடைசி வரை பறவைகள், பாம்புகள் வந்ததற்காக வருத்தப்படவேயில்லை. மரம் மட்டும் மெளனமாய் அழுதுகொண்டிருக்கிறது. இப்பொழுது முதலில் வந்த அந்தச் செந்நிறப் பாம்பு, நான் பிறந்ததே இந்த மரத்தில்தான். ஆகவே, இந்த மரமே எனக்குத்தான் சொந்தம் எனக் கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

- திருப்பதி வாசகன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/