Published:Updated:

தீபகார்த்திகையும்... தீர்ந்த பகையும்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

தீபகார்த்திகையன்று 6.30 மணிக்கே ஆரம்பித்துவிடும் அவர்களின் கார்த்திகைப் பொறிப் போட்டி.

35 வருடங்களுக்குப் பிறகு இதுதான் முதல்கார்த்திகை. ஆமாம். அசோக்குமார் தீயணைப்புத்துறை பணியில் சேர்ந்து, அங்கு இங்கென்று தமிழகத்தின் பல ஊர்களையும் பார்த்துவிட்டு இறுதியாகச் சென்னைக்கு வந்து சேர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டார்.

தீபாவளி, கார்த்திகை போன்ற தீப ஒளித் திருநாள்கள் வரும்போதுதான் அவர் துறைக்கு அதிகமாக வேலைப்பளு இருக்கும். எனவே, விடுப்பு எடுத்து வீட்டில் உட்கார்ந்து ஆற அமரப் பண்டிகைகளைக் கொண்டாட முடியாது. இவ்வாண்டு ஓய்வாக இருப்பதால் அவருக்கு மகிழ்ச்சி அதிகம். தனது நாட்குறிப்பைப் புரட்டியவர், தீபக் கார்த்திகை இந்த ஆண்டு டிசம்பர் 10 என்பதைப் பார்த்ததும் அவருடைய எண்ணங்கள் 45 ஆண்டுகள் பின்னோக்கி ஓடின.

Representational Image
Representational Image

அந்த வேலியிலுள்ள கிளுவைப் போத்தை மெல்ல அசைத்துக் கொண்டிருந்தபோதே, பண்ணையின் மணியக்காரர் சற்று தூரத்தில் வருவதைக்கண்ட அசோக் உஷாராகி, சிறுநீர் கழிப்பதைப்போல வேலியின் ஓரத்தில் உட்கார்ந்துவிட்டான். அவர் ஏதோ அவசரத்தில், அவனைக் கண்டுகொள்ளாமலே கடந்துபோனதும், அவன் எழுந்து அந்தக் கிளுவைப்போத்தை மீண்டும் அசைத்து, அதன் வேரை அறுந்துபோகச் செய்துவிட்டுக் கிளம்பினான். முள்ளு முருங்கை அவர்கள் வீட்டு வேலியிலேயே இருக்கிறது. அதனையும் நன்கு அசைத்துப் பட்டுப் போகச் செய்ய வேண்டும். இன்னும் ஒரு மாதந்தான் இருக்கிறது தீபக்கார்த்திகைக்கு. அதற்குள் அனைத்தையும் தயார் செய்தாக வேண்டும்.

தீபக்கார்த்திகையன்று 6.30 மணிக்கே ஆரம்பித்துவிடும் அவர்களின் கார்த்திகைப் பொறிப் போட்டி. அசோக்கின் அண்ணன் ஆனந்த், இந்தப் போட்டிக்கு பொறியைத் தயார் செய்வதில் வல்லவன். பொறிப் பொறியாய் தீக்கந்துகள் வெளியேறி, அழகாய் இருளில் ஒளி வெள்ளம் ஏற்படுத்திச் சிறுவர்களின் உள்ளத்துக்கு உற்சாகத்தைத் தருவதால், ஒவ்வொரு கார்த்திகையிலும் இந்தப் போட்டி சிறப்பிடம் பெறும். பொறி செய்வதற்குத் தொடர்ந்த உழைப்புதேவை. முதலில் மூலப்பொருள்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அவற்றை நன்கு காய வைக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் சூரியன் ஒத்துழைக்காது.

மழையும் அவர்கள் முற்றத்தில் அவற்றைக் காய வைத்த பிறகுதான் மெல்லத் தூற ஆரம்பித்து அழிச்சாட்டியம் செய்யும். ஓ... உங்களுக்கு மூலப்பொருள்களும் செய்முறையும் தெரியாதல்லவா. இப்போதே சொல்லிவிடுகிறேன். தேவையான பொருள்கள் இவைதான். கிளுவைக் குச்சிகள், முள்ளு முருங்கைக் குச்சிகள் (இதைக் கல்யாண முருங்கை என்றும் அழைப்பர்), பனம் பூ, துணிப்பைகள் அரளிச் செடியின் முக்கோணக் கிளைகள், குழி தோண்ட மண்வெட்டி, குழியை மூட, பலகை, வரட்டி, கீற்று போன்றவை கரியை அரைத்து மாவாக்கப் பழைய அம்மி, நெல் உமி, இவற்றைச் செய்ய போதிய ஆள்பலம், சணல் கயிறு.

Representational Image
Representational Image

கிளுவை, முள்ளு முருங்கை, பனம் பூ இவற்றை நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மைதானத்தின் ஒதுக்குப் புறத்தில், இரண்டடி விட்டத்தில், இரண்டடி ஆழத்தில் குழி தோண்டிக்கொள்ள வேண்டும். வைக்கோல் மூலம் தீ ஏற்படுத்தி மேற்கூறிய மூன்றையும் தீயிலிட வேண்டும். ஓரளவுக்கு அவை வெந்து வரும்போது, குழியின் உள்ளே மண் புகாதவாறு மூட்டத்தை மூடிவிட வேண்டும். தகரம், பலகை போன்றவற்றை முதலில் வைத்துப் பின்னர் வரட்டி, கீற்று கொண்டு மூடலாம். ’மூட்டம்’ என்பதன்பொருள் மெல்ல வேக வைப்பது என்று சொல்வார்கள். முழுதாக உடனடியாக வெந்து விட்டால் நல்ல கரி கிடைக்காதாம். எனவே அவை பாதி வெந்ததும் மூட்டத்தை மூடி மீதிப் பாதியை மெல்ல வேக வைக்க வேண்டும். மூட்டம் அமையுமிடத்தில் மழை வாரி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சரியான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். கனமழை பெய்தாலும், பாதிக்கப்படாத அளவுக்கு மூட்டத்தை மூட வேண்டும். மூன்று நாள்களுக்குப் பிறகு மூட்டத்தைப் பிரித்து, நன்றாக வெந்த கரிகளை எடுத்துக்கொண்டு, மீதியை நீக்கிவிட வேண்டும். அந்தக்கரித் துண்டுகளை அம்மியில் வைத்துக் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். ரொம்பவும் நைஸ் மாவாக அரைத்துவிட்டால் சரியாகப் பொறியாது. அந்தத் தூள் மாவுடன் உமியைக் கலந்துகொள்ள வேண்டும். அந்த மாவை செவ்வகப் பைகளில் நிரப்ப வேண்டும். (பெரும்பாலும் பழைய கால்சட்டைப் பைகளையே இதற்குப் பயன்படுத்துவர்.) ரொம்பவும் திணித்து, அழுத்தி நிரப்பக்கூடாது. அழுத்தாமல் நிரப்ப வேண்டும். பின்னர், அப்பையை முக்கவை கொண்ட அரளிக் கிளையினுள் வைத்துச் சணலால் லாகவமாகக் கட்டிட வேண்டும். சணலின் நீளம் அவரவர் உயரத்துக்கேற்ப மாறுபடும். அவ்வாறு கட்டப்பட்ட பையின் மேல் ஓரத்தில் தேங்காய் நார் வைத்துத் தீயிட வேண்டும். அது மெல்லக் கசிந்து கரியுடன் இணைந்து பொறிப் பொறியாகப் பறக்கும். அதைத் தலைக்கு மேலாகச் சுற்றிக்கொண்டு ஓடுவர் சிறுவர்கள். அவர்களின் திறமைக்கேற்ப பொறிகள் அழகு காட்டும்.

ஏக்கம்! - சிறுகதை #MyVikatan

யார் அதிக நேரம் அழகாகச் சுற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். சிலர் கரியுடன் குங்கிலியத்தைக் கலந்துவிடுவர். குங்கிலியம் விரைவில் நீர்க்காமல், யார் மேலெல்லாம் பொறி படுகிறதோ அவர்கள் தோலில் காயமேற்படுத்திவிடும். பக்கத்து வீட்டு ரவிதான் எப்போதுமே அசோக், ஆனந்த்துக்குப் போட்டி. ஊரில் சில பனை மரங்களே இருந்தன. பனம் பூ பறிக்க இவர்கள் போனால், ரவி முன்னதாகவே அம்மரங்களை மொட்டையடித்து விடுவான். இவர்கள் 4 மைல் தாண்டி இடும்பவனம் சென்று பனம்பூ கொண்டு வருவார்கள். கிளுவைப் போத்தைப் பிடுங்கச் சென்ற அன்று, ரவி, அசோக்கை மணியக்காரரிடம் போட்டுக் கொடுத்துவிட்டான். ஏதோ அவன் மட்டும் ரொம்பவும் நல்லவன் போல. ஆனால், மணியக்காரரோ அதைப் பெரிதுபடுத்தவில்லை.

Representational Image
Representational Image

எல்லாவற்றையும் சேகரித்து மூட்டம் போட ஆரம்பித்தபோது நல்ல மழை பிடித்துக்கொண்டது. குடையை அசோக் பிடித்துக்கொள்ள, குடலையைத் தலையில் போட்டுக்கொண்டு ஆனந்த் காரியமே கண்ணாயினான். மூட்டத்தை மூட, படாத பாடு பட வேண்டியதாயிற்று. ஒரு வழியாக மூடிவிட்டு வந்தார்கள். மூன்றாம் நாள் மூட்டத்தைப் பிரிக்கும் வரை பயந்து கொண்டேயிருந்தார்கள். ஆனால், கரி நன்றாகவே வந்திருந்தது. அம்மியை நெருங்கியபோதுதான், ரவியின் கைங்கர்யத்தை உணர்ந்தார்கள். பக்கத்து வீடு என்பதால், அந்த அம்மியில் தண்ணியை ஊற்றி வைத்திருந்தான். பழைய துணியைக் கொண்டு நன்றாக அம்மியைத் துடைத்த பிறகு அரைக்க, குளவியைத் தேடினால், அதைக் காணவில்லை. அதை ஓர் ஓரமாக ஒளித்து வைத்துவிட்டான். நீண்ட தேடலுக்குப் பிறகு, வைக்கோலின் அடியில் அதைக் கண்டு பிடித்து வேலையை முடித்தார்கள். கார்த்திகை நாளும் வந்தது.

திருக்குளத்தில், வாழைப்பட்டையில் செய்த விளக்கில் தீபமேற்றி மிதக்க விட்டிருந்தார் நடராசன். அதன் பிம்பம், குளத்து நீரில் பிரதிபலிக்கும் அழகே தனிதான். அதைப் பார்த்தபடியே சிவன் கோயிலின் அருகேயுள்ள மைதானத்துக்குச் சென்ற அனைவரும் தங்கள் பொறிப் பைகளுடன் போட்டிக்குத் தயாராய் நின்றனர். திரௌபதியம்மன் கோயிலின் எதிரில்தான் மைதானம். அக்கோயிலின் சொக்கப் பனை தயாராகிக்கொண்டிருந்தது. பொறிப் போட்டிக்குப் பிறகு, சடு குடு ஆட்டம் களைகட்டும். அந்த ஆட்டத்தில் ராஜமாணிக்கம் எந்தக் குழுவில் இருக்கிறானோ அந்தக் குழுவே ஜெயிக்கும். ரவி எப்படியாவது ராஜமாணிக்கத்தைத் தன் குழுவில் சேர்த்துக்கொள்வான். அதோடு மட்டுமல்லாமல் அழுவுணி ஆட்டம் ஆடவும் தயங்க மாட்டான்.

Representational Image
Representational Image

போட்டி சரியாக 6.30 மணிக்கு ஆரம்பமாயிற்று. புலவர் உத்திராபதிதான் நடுவராக இருந்து போட்டியைத் தொடங்கி வைத்தார். ரவி, ஆனந்த், அசோக், காத்தமுத்து, ராஜமாணிக்கம் என்று பல பேர் போட்டியில் பங்கேற்றனர். மைதானத்தில் தொடங்கி, திருக்குளக்கரை வழியாக மடத்தடி சென்று, பிடாரி கோயிலைச் சுற்றி வந்து, திரும்பி செங்கலண்ணி மதகு வழியாகச் சுடுகாடு வரை சென்று, மேலப்பெருமழை சாலையில் மீண்டும் திரும்பி, தாமரைக்குளக்கரை வழியாக அன்ன மடத்தைக் கடந்து,பெரியசாமி வாத்தியார் வீட்டு வழியாகப் பள்ளிக்கூடம் வந்து, மணியண்ணன் கடையடியில் திரும்பி மைதானத்தை அடைய வேண்டும். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சோமசுந்தரம் கூடவே இருந்து கண்காணிக்க ஏற்பாடு. எல்லோரும் பொறியைச் சுற்றியபடி ஓடினர். நடு நடுவே ஒவ்வொருவராகப் பொறி தீர்ந்து அவுட்டாகிவிட, மேலப்பெருமழை சாலை வரை தாக்குப் பிடித்தவர்கள் ரவி, அசோக், ஆனந்த் மற்றும் ஓரிருவர் மட்டுமே.

திரும்பும்போதுதான் அது நடந்தது. ஆனந்த் அருகில் ரவி வர, ரகசியமாகக் குங்கிலியம் கலந்த கரி மாவை அருகில் சுற்றி, ஆனந்த் கையில் காயத்தை ஏற்படுத்தினான். கையில் நெருப்புப் பொறி பட்டு ஆனந்த் கையை உதறிய வேகத்தில் பொறிக் கயிறு கழன்று விழ, ஆனால் பொறி மட்டும் அணையவில்லை. உடனடியாக ஆனந்த் சுதாரித்துக்கொண்டு பொறிக் கயிற்றைப் பற்றிக்கொண்டு தொடர, சோமசுந்தரம் எல்லாவற்றையும் கவனித்தபடியே இருக்க, ரவியின் வன்மத்தை அந்தக் கூட்டமே உணர்ந்தது. பெரியசாமி வாத்தியார் வீட்டைத் தாண்டி பத்தர் வீட்டை நெருங்கியபோது, ரவியின் பொறி அடங்கிப்போக, அருகில் நின்றுகொண்டிருந்த வேறு ஒருவனின் கையிலிருந்த பொறியைப் பிடுங்கி, அவன் கையிலிருந்ததை வேலிக்குள் கண நேரத்தில் வீசி விட்டு, அவன் தொடர்ந்தான்.

Representational Image
Representational Image

மைதானத்தின் உள்ளே நுழைந்தபோது, ரவி மற்றும் ஆனந்த் கைகளில் இருந்த பொறிகள் மட்டும் ஒளிர்ந்துகொண்டிருந்தன. புலவர் உத்திராபதி இரண்டு பேரையும் பாராட்டி இருவரும் என்று ஆரம்பித்தபோது,சோமசுந்தரம் இடையில் புகுந்து, ரவி கையில் இருப்பது அவன் எடுத்துச் சென்ற பொறியல்ல என்பதை விளக்க, அவர் வெற்றி பெற்றது ஆனந்தே என்று அறிவித்தார். ஆனால், ஆனந்தோ, தன் கையிலிருந்து பொறி தவறி விழுந்துவிட்டதால் தான் வெற்றியாளன் இல்லையென்றும், ரவி பொறியை மாற்றியிருந்தாலும், தான் பொறியைத் தவறவிட்ட இடத்துக்கும் நேரத்துக்கும் பிறகும் ரவி பொறியைச் சுற்றிக்கொண்டே வந்ததால் அவனே ஜெயித்ததாக அறிவிக்க வேண்டினான். அத்தோடு கூட, வலியச் சென்று ரவியின் கைகளைப் பிடித்துக் குலுக்கினான். அந்தக் கை குலுக்கலில், ரவிக்கு என்னவோ ஆயிற்று. ‘ஆனந்த் எவ்வளவு உயர்ந்தவன். தான் எவ்வளவு கீழ்த்தரமானவன்’ என்ற எண்ணம் அவனைச் சுட்டது.

புலவரும் ரவியே வெற்றி பெற்றதாக அறிவிக்க, ரவி அப்படியே கரைந்துபோனான். தன்னுடைய தப்பான நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக்கொண்டு, ஆனந்த்-அசோக்கோட நட்பு பாராட்டித் தானும் உயர வேண்டுமென்பதை உணர்ந்தான். அதைத் தொடர்ந்த கபடி ஆட்டத்தில், வழக்கத்துக்கு மாறாக, ரவி ஆனந்த் பக்கம் போக, அனைவருக்குமே அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. ரவியும் ஆனந்தும் ஒன்றாகச் சேர்ந்து, ’சடுகுடு கிங்க்’ ஆன ராஜமாணிக்கத்தையே பிடித்துப் போட்டு அவுட்டாக்கியது பல நாள் அந்த ஊரில் அந்தச் சிறுவர்கள் மத்தியில் பேசப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தப்படும்போது, அதனுள்ளே ஊன்றப்பட்ட உயிர்க்கம்புகளைப் பிடுங்கி, வீட்டுத் தோட்ட காய்கறிச் செடிகளுக்குப் பந்தலாகப் போட்டால், அவை பூச்சிகள் பிடிக்காது நன்றாக வளர்ந்து, நிறைய காய்க்குமென்பது நம்பிக்கை. அசோக்கும் ஆனந்த்தும் ஓரிரண்டு கம்புகளையாவது பிடுங்கி வருவர்.

Representational Image
Representational Image

கடந்த வருடங்களில், அவர்கள் கம்பைப் பிடுங்கும்போது, அருகில் வெடியைப் போட்டு அலம்பல் செய்வான் ரவி. இந்த வருடமோ, அவர்களுடன் சேர்ந்து இவனும் கம்பு பிடுங்கினான். எளிதில் வராத ஒரு கம்புடன் ஆனந்த் போராடியபோது ரவி ஓடி வந்து உதவினான்.

பல ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த அந்த நிகழ்ச்சிகளை அசை போட்ட அசோக்குமாருக்கு, ரவி இறந்த செய்தி மிகத் தாமதமாகத்தான் தெரிந்தது. சிறு வயதில் வில்லனாக இருந்த ரவி, வளர்ந்ததும் மிக நல்லவனாக மாறிப்போனான். ஊர், ஊராக அசோக்குமார் பணி நிமித்தம் அலைந்தபோது, அவரின் நிலங்களையெல்லாம் அந்த ரவிதான் பார்த்துக்கொண்டார். ஆனால், 55 வயதிலேயே மாரடைப்பில் காலமானார். அசோக் குமாரின் கண்கள் பனித்தன. வெளியே ஓடி வந்த பேத்தி ஆரத்யா, ’ஏன் தாத்தா அழறீங்க?’ என்று கேட்டதும்தான் அவர் பழசிலிருந்து மீண்டார்.

- ரெ.ஆத்மநாதன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு