Published:Updated:

`யார் பைத்தியம்?' - சிறுகதை #MyVikatan

அந்தச் சிறுமி, குறுக்கும் நெடுக்கும் ஓடி குப்பையைப் பொறுக்குவதும், கடந்து செல்லும் நபர் அந்த சிறுமியைப் 'பைத்தியம்…' என்று வைவதும் அந்தச் சாலையில் வாடிக்கையாகிப்போனது.

Representational Image
Representational Image

போக்குவரத்து சிக்னல் பச்சை நிறத்தைக் காட்ட, அனைத்து வண்டிகளும் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தன. சில நொடிகளில், பச்சை நிறம் சிவப்பு நிறமாக மாற, அனைத்து வண்டிகளும் சரேல் என்று நின்றன.

சமிக்ஞை நிறம் மாறிய அந்த நொடியில், பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி வேகமாக வண்டிகளுக்கு இடையே குறுக்கும் நெடுக்குமாக ஓடி, அங்கிருந்த குப்பைகளைப் பொறுக்கினாள். அவள் ஆடை ஆங்காங்கே கிழிந்து தொங்கியது. அவள் தலை முடி வளமில்லாமல் காய்ந்து, செம்பட்டை நிறத்தில் காட்சியளித்தது. அவள் தேகம் வெயிலில் அலைந்ததன் அடையாளமாக, ஆங்காங்கே கரிய நிறத்தில் காணப்பட்டது. சிறுமி கடந்து சென்ற வேகத்தில், அந்த போக்குவரத்து சிக்னலின் முன்நின்ற ஆட்டோ ஓட்டுநர், "சாவு கிராக்கி! எப்படி ஓடுது பாருங்க... இதுகளுக்கெல்லாம் சொன்னாலும் புத்தி வராது" என்று காட்டமாகக் கத்தினார். சிறுமி தலையைச் சொரிந்து கொண்டு, அவர் பேசும் மொழி புரியாதவளாய், 'பே…' எனப் பார்த்தாள். போக்குவரத்து சிக்னல் மீண்டும் நிறம் மாற, 'பைத்தியம்...' என்று அந்த ஆட்டோ ஓட்டுநர் முணுமுணுத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினார்.

Representational Image
Representational Image

போக்குவரத்து சிக்னல் நிறம் மாறுவதும், அந்தச் சிறுமி குறுக்கும் நெடுக்கும் ஓடி குப்பையைப் பொறுக்குவதும், கடந்துசெல்லும் நபர் அந்த சிறுமியை, 'பைத்தியம்…' என்பதும் அந்தச் சாலையில் வாடிக்கையாகிப்போனது. அப்போது அங்கு வந்த போக்குவரத்துக் காவல் துறையினர். "ஏய்! பாப்பா... உன்னை இங்க வரக் கூடாதுனு சொன்னேன்ல..? வண்டியில் அடிபட்டு சாவப் போறியா? எத்தனை தடவை சொல்றது உனக்கு?" என்று கடுமையாகக் கேட்டு, தன் தலையில் அடித்துக்கொண்டு போக்குவரத்து சிக்னலின் அருகே நின்றார். அப்போது பேருந்தில் சென்றுகொண்டிருந்த நபர், ஜன்னல் வழியாக வாட்டர் பாட்டிலைத் தூக்கி எறிந்தார். போக்குவரத்து சிக்னலின் நிறத்தையும் பொருட்படுத்தாமல், சிறுமி குறுக்கே ஓடி அந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தன் கையில் உள்ள பையில் போட்டுக்கொண்டு திரும்ப, அங்கு வந்த இரு சக்கர வாகனம் அந்த சிறுமியைச் சிராய்த்துச் சென்றது. 'பைத்தியம்... ரோட்டில் அலையுது' என்று அந்த இரு சக்கர வாகன ஒட்டி அவளைத் திட்ட, அவளோ, பெற்றோரோடு அந்த இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தையை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வண்டி சிராய்த்ததில் ரத்தம் வழிய, ''பைத்தியம்... குப்பையை பொறுக்குறேன்னு என் உசுர வாங்க இங்கயே அலையுது'' என்று திட்டிக்கொண்டே அந்தச் சிறுமியிடம் கோபமாக நெருங்கினார் போக்குவரத்துக் காவலர். அப்போது அந்த இடத்தைக் கடந்து சென்ற பலரும், '"பைத்தியம்... பைத்தியம்... பைத்தியம்...' என்று அந்த சிறுமியை விளிக்க, அந்த போக்குவரத்து சமிக்கையைப் பைத்தியம் என்ற சொல் சுற்றிச்சுற்றி வந்தது. போக்குவரத்து சிக்னல், கடந்த வருடம் நடந்த நிகழ்வை நினைவுகூர்ந்தது. இந்தச் சாலையில், இதே போக்குவரத்து சிக்னலை ஒரு பேருந்து கடந்து செல்லுகையில், பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர், குப்பையைத் தூக்கி ஜன்னல் வழியாக எறிந்தார். அப்பொழுது இன்முகத்தோடு இருசக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு அந்த பேருந்தை நெருங்கினான் ஓர் இளைஞன். அவன் பின்னே, அவன் மகளும் மனைவியும் அமர்ந்திருந்தனர். அந்தச் சிறுமி, தன் தாயோடு பேசிக்கொண்டிருந்தாள், அவர்கள் வாழ்வு திசை மாறப் போவது அறியாமல். பேருந்திலிருந்து பறந்து வந்த குப்பை, அந்த இளைஞன் முகத்தில் மோத, அவன் வண்டி தடுமாறியது.

Representational Image
Representational Image

அந்த இளைஞன் தன் தடுமாற்றத்தைச் சரிசெய்வதற்குள், கீழே கிடந்த வாட்டர் பாட்டில்மீது அந்த இருசக்கர வாகனத்தின் சக்கரம் ஏறி, மூவரும் சரிந்து விழுந்தனர். பச்சை நிறம் மாறுவதற்குள் அவர்கள் பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி அவர்களை நெருங்க, அந்தத் தாய் தன் மகளைக் காப்பாற்ற அவளை அலேக்காக வேறு பக்கம் தள்ளினாள்.

இளைஞனும் அவன் மனைவியும் சுதாரித்து, எழுவதற்குள், லாரி இருவர் மீதும் ஏற, அவர்கள் இருவரின் உயிரும் குப்பையோடு அந்த நொடியே பறந்துசென்றது. விழுந்த வேகத்தில், அந்த சிறுமியின் தலையில் மரண அடி விழ, மரண வாயில் வரை சென்று திரும்பிய கண்களில், அவள் தாய், தந்தையின் உயிரும், யாரோ வீசிச் சென்ற குப்பை மட்டுமே தெரிந்தன. சிகிச்சை முடிந்து, பலமுறை பலர் சிறுமியை அந்த போக்குவரத்து சிக்னல் அருகே இருக்கும் சாலையிலிருந்து அழைத்துச் சென்றாலும், யார் பைத்தியம் என்று அழைத்தாலும் அந்தச் சிறுமி மீண்டும் இங்கு வந்து குப்பை பொறுக்குவதை விடுவதில்லை.

Representational Image
Representational Image

“பைத்தியம்… பைத்தியம்… பைத்தியம்…” என்ற சொல் அந்த போக்குவரத்து சிக்னலைச் சுற்றி ஒலிப்பதும் நிற்கவில்லை. `யார் பைத்தியம்... பொறுப்பில்லாமல் குப்பையை எரியும் குடிமக்கள் பைத்தியமா.. அதைப் பார்த்துக் கண்டிக்காத அரசாங்கம் பைத்தியமா? இல்லை, தன் உயிரைப் பொருட்படுத்தாமல் குப்பையைப் பொறுக்கும் இந்தச் சிறுமி பைத்தியமா?’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல், போக்குவரத்து சிக்னல், அதன் நிறத்தை சிவப்பு, மஞ்சள், பச்சை என்று மாற்றிக் கொண்டிருந்தது.

- அகிலா கண்ணன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/