Published:Updated:

நட்பே துணை! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

தருணுக்கு அப்பொழுதும் எவ்வித உணர்ச்சிகளும் இல்லை. மொத்தத்தில் கழுத்துக்குக் கீழாக உணர்ச்சிகள் மரத்துப் போய் பத்தாண்டுகள் ஆகின்றன. நிகழ்ந்த விபத்து அப்படி.

வம்சி அப்பொழுதுதான் வந்திருந்தான். வந்தவன் நேராக தருணின் அறையில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவனருகில் அமர்ந்தான். நெற்றியில் கைவைத்துப் பார்த்தவன் "ஜுரம் குறைஞ்சிடுச்சி போல" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். பாத்ரூமைத் திறந்து மூத்திர டப்பாவை காலி செய்து ஒருமுறைக்கு இருமுறை கழுவி ஊற்றினான். பின் கைகளை சுத்தம் செய்து கொண்டு அறையை நோட்டமிட்டான். "ஒரு அஞ்சி நிமிஷம் ரூமை சுத்தம் பண்ணிடுறேன்" எனச் சொல்லிக் கொண்டே வேகமாக சுத்தம் செய்தான். "போனவாரம் வந்தப்ப ஜுரம் இல்லையே, ஏன் திடீர்னு அப்படி ஆச்சு எனக் கேட்டுக் கொண்டே வேலைகளை முடித்தான்.

Representational Image
Representational Image

தருணின் அம்மா சுடுநீரை கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனாள். நல்ல சூட்டுடன் இருந்தது. கைவைத்துப் பார்த்தான். "கொஞ்சம் ஆறட்டும்" எனச் சொல்லிக் கொண்டே போர்வை விரிப்புகளை உதறி மடித்தான். உணர்ச்சியே இல்லாமல் இருந்தான் தருண். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சுடுநீரில் துணி கொண்டு நனைத்து பிழிந்து உடம்பெல்லாம் சுத்தம் செய்தான். கொஞ்சம் அவனை புரட்டி சுத்தம் செய்வதற்குத்தான் சிரமப்பட்டான். ஒரு தாய் தன் குழந்தைக்கு சேவகம் செய்வது போல் செய்தான். அந்த இடத்திலும் நன்கு முகம் சுளிக்காமல் சுத்தம் செய்தான். தருணுக்கு அப்பொழுதும் எவ்வித உணர்ச்சிகளும் இல்லை. மொத்தத்தில் கழுத்துக்குக் கீழாக உணர்ச்சிகள் மரத்துப் போய் பத்தாண்டுகள் ஆகின்றன. நிகழ்ந்த விபத்து அப்படி.

வம்சி, தருண், கிஷோர், வேணு, சேஷூ என எல்லோரும் நண்பர்கள். எதைச் செய்தாலும், எங்கு சென்றாலும் ஐவகை நிலத்தைப் போல அத்தனை ஒற்றுமை அவர்களுக்குள். எப்பொழுது வந்தாலும் வம்சி ஒரு கதை சொல்லுவான். அதில் முக்கியமானது டெர்ரி பாக்ஸ் கதை. டெர்ரி பாக்ஸின் செயற்கை கால் பொருத்திய கறுப்பு வெள்ளை புகைப்படத்தை அவன் படுத்திருக்கும் கட்டிலுக்கு நேராக எப்போதோ ஒட்டி வைத்திருந்தான். அவனுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகவே அதை அவன் ஒட்டி வைத்திருந்தான். அந்தக் கதை தருணுக்கு நன்றாக மனனம் ஆகியிருந்தது. குரல் வம்சியினுடையதாக இருந்தாலும் அவன் சொல்லத் துவங்கும் போதே அது தருண் மனதுக்குள் வம்சியின் குரலாக மாறி எதிரொலிக்கும். டெர்ரி பாக்ஸ் ஒரு கனடாக்கார பையன். கூடைப்பந்தாட்ட இளைஞன். அத்தனை துறுதுறுப்பு. பெரிய கனவு. இடைவிடாம பயிற்சி எடுத்துக்கிட்டே இருப்பான். ஒருநாள் சாயந்திரம் விளையாடி பயிற்சி எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு தன்னோட கார்ல திரும்பிக்கிட்டிருக்கப்போ எதிர்பாராதவிதமா ஒரு விபத்து. மருத்துவமனையில கொண்டு போய் சேர்த்தாங்க. அங்க அவனோட வாழ்க்கையே திசைமாறிப் போறா மாதிரி அதிர்ச்சி காத்துக்கிட்டிருந்துச்சி. ஆமாம், அவனோட அடிபட்ட வலது கால்ல கேன்சர் வந்திருந்துச்சி. அவன் மனசு தளரலையே. விளையாட்டு மேல விளையாட்டான ஆர்வமா இருந்தா பரவால்லையே, வெறித்தனமான ஆர்வம்.

Representational Image
Representational Image

உடைஞ்சிலாம் போவல. அதனால என்னன்னு... வீல்சேர்ல உக்காந்து பயிற்சி எடுக்க ஆரம்பிச்சான். அதுல நெறய பரிசும் வாங்கினான். ஒருநா, நம்மள மாதிரி இந்த கேன்சர் வந்து எவ்ளோ பேர் கஷ்டப்படுவாங்கன்னு மனசுக்குள்ள அவனுக்கும் கவலை வந்து போச்சு. என்ன பண்ணலாம்னு யோசிச்சான். செயற்கை கால் அப்பதான் அறிமுகப்படுத்தியிருந்தாங்க. அத தன்னோட வலது கால்ல பொருத்திக்கிட்டான். இப்பவும் தன்னோட பயிற்சிய விடலயே. கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை வந்தது. அப்ப சொன்னான், நான் அட்லாண்டிக் கடல்லேர்ந்து ரெண்டு பாட்டில் தண்ணிய கொண்டு போய் அதை பசிபிக் கடல்ல கலக்கப் போறேன். அதுவும் எப்படி ஓடியே. கேக்கறவனுக்கெல்லாம் எப்படி இருந்திருக்கும். இல்ல, நா ஓடுறேன்.

நீங்க எல்லாரும் ஆளுக்கு ஒரு டாலர் கொடுங்க போதும்னு சொல்லிட்டு யார் பேச்சையும் கேக்காம ஓட ஆரம்பிச்சான். ஓடுன அன்னிக்கே சரியான மழை. அவன் மனச தளரவிடல. ஒருநாள் ரெண்டு நாள் இல்ல...மொத்தமா நாலு மாசம் ஓடினான். 143 நாள் ஓடி 5373 கிலோமீட்டரை அடைஞ்சான். அப்ப அவன் ஓடினப்ப வயசு வெறும் இருபத்திமூணுதான்.

Representational Image
Representational Image

இதுதான் வாழ்க்கை. எப்பவும் மனச விட்றக்கூடாது. எல்லா நேரமும் அதிசயம் நிகழ்ந்துடாது. ஆனா, அந்த அதிசயம் எந்த நேரமும் நிகழலாம்னு சொல்லி தருணின் கண்களையே பார்த்தான் வம்சி. தருண் வாய்விட்டு பெருஞ்சிரிப்பு சிரித்தான். அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் கேட்டான் வம்சி,

"ஏன்டா சிரிக்கிறே, இந்தக் கதை கேட்டு உனக்கு போரடிச்சிடுச்சின்னு நெனைக்கிறேன். அதானே".

இல்ல, எப்ப நீ இந்தக் கதைய சொன்னாலும் அதுல ஒரு துள்ளல் இருக்கும். அந்தத் துள்ளல் உன்னோட மனச காட்டிக் கொடுத்துடும். இன்னைக்கு என்னமோ மிஸ்ஸிங் .ஏதோ ஒண்ணு நீ கவலையா இருக்கணும் இல்ல எங்கிட்ட சொல்ல தயக்கப்படணும். டேய், வம்சி பத்து வருசமா படுத்த படுக்கையா உன்ன பாக்குறேன்டா. மனச படிக்கிறேன்டா. எங்கம்மாவே எப்ப பாசமா இருக்காங்க இல்ல கோவமா இருக்காங்கன்னு அவங்க பேச்சில இருந்தே கண்டு பிடிச்சிடுவேன். வாரத்துக்கு ஒருமுறை எந்த வேல எப்படி இருந்தாலும் என்ன பாக்கற வர்ற ஆளு நீ. அதுவும் வந்து எனக்காக எல்லா வேலையும் செஞ்சி நா துவண்டு போய்டக்கூடாதுன்னு நெனச்சி எங்கூட பேசற உயிர்டா நீ. உம்மனசு எனக்கு தெரியாதாடா. என்ன ஏதும் பிரச்னையா சொல்லு.

அனுசரனையாக கேட்டான் தருண்.

அக அழகு ஒரு கணம் மாறிப் போனது வம்சிக்கு. "அப்டிலாம் இல்லையே, நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத" சமாளித்தான் வம்சி. பசங்க யாராவது போன் பண்ணாங்களாடா சட்டென பேச்சை மாற்றினான். அதற்குள் தருண் அம்மா காபி கொண்டு வர பேச்சு வேறு திசை மாறிப்போனது.

Representational Image
Representational Image

அது ஒரு திருவிழா ஞாயிற்றுக்கிழமை. அதுவும் ஊரின் மலைக்கோயிலில் படித்திருவிழா. இளவட்டங்கள் வேட்டியில் திரிந்து கொண்டிருந்தார்கள். பஞ்ச பூத நண்பர்களுக்கு ஒரே கொண்டாட்டம். அப்பொழுது தான் அனைவருக்கும் கல்லூரி முடித்து வேலை கிடைத்திருந்தது. வேலை கிடைத்து வந்த முதல் படித்திருவிழா வேறு. மனம் எல்லோருக்கும் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது. காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையும் அவரவர் வசதிக்கேற்ப விளக்கு ஏற்றுவார்கள். சிலர் எரிந்து கொண்டிருக்கும் அகலில் எண்ணெய் மட்டுமாவது ஊற்றுவார்கள். அதுவும் மாலையில் ஏற்றும் விளக்குகள் இரவு வரைகூட காற்றில் அணையாமல் எரியும். இரவில் படிமுழுக்க விளக்கெரியும் அழகை காண கண் கோடி வேண்டும். அந்த மாலையில்தான் படியில் விளக்கேற்றும் ஒரு தாவணி தேவதையைப் பார்த்தான். பார்த்த கணத்தில் படியில் அங்கப்பிரதட்சணம் செய்தான்.

பலமுறை படி ஏறி இறங்கியதில் தாவணி தேவதை கடைக்கண் பார்வை கிட்டியது தருணுக்கு. தன் வாழ்நாளின் தேவதையைக் கண்டு பிடித்து விட்டான். யாரேனும் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வந்திருக்க வேண்டும் என எண்ணி எப்படி விசாரிப்பதுன்னு நினைக்கையிலேயே அவளின் மொத்த ஜாதகத்தையும் அள்ளிக் கொண்டு சேஷூ வந்திருந்தான். "டேய் பொண்ணு பேரு சஞ்சனா, பக்கத்து ஊருதான். வேணுவுக்குச் சொந்தக்காரங்க. பொறந்தது இங்கயா இருந்தாலும் வளர்ந்ததெல்லாம் சென்னை. அதுவும் அவங்க அத்தை வீட்ல இருந்துதான் படிக்குதாம். வேணு மூலம் அத்தனை தகவல்களும் திரட்டப்பட்டு தருண் தன் காதலைச் சொன்னான். அவள் எந்த பதிலும் சொல்லாமல் கிளம்பிப் போனாள். ஊரிலிருந்து மாமா ஒருவர் பத்திரிகை வைக்க வர வேணு அவரை அழைத்துச் செல்லும் போது சஞ்சனாவின் அத்தை வீட்டு முகவரி கிடைக்க சஞ்சனாவும் கிடைத்தாள் தருணுக்கு. சிலபல காத்திருப்புகள், பின் தொடர்தல்கள் கொஞ்சமாய் சாகசங்கள், சோக பாவனைகள் சஞ்சனா படகு கவிழ்ந்து போனது தருணிடம். அவனுக்கு காதல் கைகூடியது எல்லோருக்கும் உள்ளுக்குள் மனவருத்தம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனுக்கு துணையாகவே இருந்தார்கள்.

Representational Image
Representational Image

கிஷோர் அப்பொழுது தான் புதிதாக பைக் வாங்கியிருந்தான். தருணும் கிஷோரும் ஒரே அறை. வெவ்வேறு அலுவலகம். வம்சி மாமா வீட்டில் தங்கிக் கொண்டான். சேஷூ அலுவலகத்தின் விருந்தினர் அறையிலேயே தங்கிக் கொண்டான். வேணு வேறு நண்பர்களோடு தங்கிக் கொண்டான். வார இறுதியில் ஒன்று கூடிவிடுவார்கள். வாழ்க்கை அத்தனை எளிமையான மகிழ்ச்சியுடன் பகிர்தல்களோடு சென்று கொண்டிருந்தது. சஞ்சனா காதல் தருணுக்கு உத்வேகத்தை அளித்திருந்தது. அன்று இரவு கிஷோரும் தருணும் இரவுக் காட்சிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத திருப்பத்தில் லாரி ஒன்று குறுக்கிட தூக்கி எறியப்பட்டார்கள் இருவரும். பின்னால் அமர்ந்திருந்த தருணுக்குத்தான் பலத்த அடி. கிஷோருக்கு கையிலும் காலிலும் மட்டுமே அடிபட்டிருந்தது. ஒருவாரத்திற்குப் பின் தருண் மருத்துவமனையிலிருந்து அறைக்குத் திரும்பியிருந்தான். கொஞ்சம் ஓய்வெடுத்தால் போதும் என்று சொல்லி மருத்துவர்கள் அனுப்பிவிட்டார்கள். சஞ்சனா ஒரே ஒருமுறை வந்து பார்த்து கண்கலங்கி விட்டுப் போனாள்.

அறைக்கு வந்த மூன்றாம் நாள் இரவில் தருணுக்கு காய்ச்சல் கண்டது. சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையில் இருந்தவனுக்கு நேரமாக நேரமாக காய்ச்சல் அதிகப்படியானது. கிஷோரால் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான் தருண். ஜன்னி கண்டிருந்தது. சில மருத்துவ கவனக்குறைவுகள். முற்றாக கழுத்திற்குக் கீழ் செயலிழந்து போயிருந்தது. தருண் மொத்தமாக நொறுங்கிப் போனான். நண்பர்கள் அவர்களுக்குள் அழுதார்கள். இனி, வாழ்நாள் முழுக்க எழுந்து நடமாட முடியாத மரண அவஸ்தையை எண்ணி மனதுக்குள் அழுதான் தருண். கருணைக் கொலைகூட செய்துவிடும்படி அந்த நேர வலிக்கு அரற்றினான். கிஷோர் தன்னால்தான் அவன் வாழ்வு இப்படியாகிப் போனது என்கிற வருத்தம் மேலோங்க ஆறா வடுவுடன் வாழ்வை எதிர்நோக்கினான். அவன் மருத்துவத்திற்காக குடும்பம் கிராமத்தை விட்டு புலம்பெயர்ந்தது.

Representational Image
Representational Image

பிறிதொரு நாளில் மருத்துவமனையில் சஞ்சனா தருணைச் சந்தித்தாள். அவனுடன் சில மணி நேரங்கள் இருந்தாள். அழுதாள். தேற்றினான். அவள் வாழ்வு நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளச் சொன்னான். அன்பு பரிமாறினாள். நேசக்கரம் நீட்டினாள். எல்லாவற்றிற்கும் பின்பாக அவன் நெற்றியில் முத்தமிட்டு கிளம்பிப்போனாள். முதலும் கடைசியுமான முத்தமது. இனி, சஞ்சனாவை ஒருபோதும் பார்க்க முடியாது. அந்த முத்த ஸ்பரிசம் வாழ்நாள் முழுமைக்குமான பொக்கிஷம். வேரைப் பிடுங்கிய மரமாக ஆனான். அழுதான். வலி மறைத்தான். வருடங்கள் ஓடத்துவங்கின. வம்சி உணர்வுகளுக்கு உயிரானான். வம்சிக்கு திருமணமான மூன்றாம் நாளில் அவன் மனைவியோடு வந்து பார்த்து போனான். வாரம் ஒருமுறையேனும் வந்து அவனோடு நேரம் செலவிட்டான்.

சில சச்சரவுகள் இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் அவனுக்கு எல்லாமுமாகிப் போனான். வம்சிக்கு பெண் குழந்தை பிறந்த முதல் வாரத்தில் வலுக்கட்டாயமாக அவன் மனைவியை அழைத்துக்கொண்டு வந்திருந்தான். குழந்தையைப் பார்த்த கணத்தில் தருண் அழுதான். என்னடா பேர் வச்சிருக்க என்ற போது "பேரெழில்" என்றான் வம்சி. தருணுக்கு குழந்தையைத் தூக்கி கொஞ்ச முடியவில்லை என்கிற வருத்தமே அதிகமாக இருந்தது. சேஷூ விசாகப்பட்டினத்திலும், கிஷோர் லண்டனிலும், வேணு புனேவிலும் என ஆளுக்கு ஒரு பக்கமாக கலைந்து போனார்கள். வம்சிக்கும் நல்ல வாய்ப்புகள் வந்தன. எல்லாம் தருணுக்காக வேண்டாமென்று மறுத்து விட்டான். அவ்வப்போது நண்பர்கள் வீடியோ அழைப்பிலும் சென்னை வரும்போது நேரிலும் எனத் தொடர்புகள் தொலை தூரத்திலேயே இருந்தன. ஆளாளுக்கு குடும்பமாயிடுச்சி அவனவன் பொழப்ப பாக்கணுமில்ல என சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.

பேச்சு வேறெங்கோ சென்று சமீபத்தில் சஞ்சனாவை வம்சி சந்தித்தில் வந்து நின்றது. தன் அலைபேசியில் எடுத்த புகைப்படத்தைக் காட்டினான். சஞ்சனா குண்டாகி இடதும் வலதுமாக இரு குழந்தைகளோடு நின்றிருந்தாள். கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்த தருண் "டேய், இது நம்ம சஞ்சனா மாதிரியே இல்லடா, ரொம்ப மாறிப்போய்ட்டா இல்ல" ஆனா, குழந்தைங்க ரொம்ப அழகா இருக்காங்க என்று ஏக்கத்தை வெளிப்படுத்தினான். "உங்கிட்ட ஒண்ணு சொல்லுவேன், என்னால எப்படி சொல்றதுன்னு தெரியல, "மென்னு முழுங்கினான் வம்சி. "நாந்தான் அப்பவே சொன்னேன் இல்ல, ஏதோ ஒரு படபடப்பு வந்ததிலேர்ந்து உங்கிட்ட இருக்குன்னு அப்பவே சொன்னேன் இல்ல, எதா இருந்தாலும் சொல்லு" என்றான் தருண். "இல்ல,ஒரு பெரிய பிராஜக்ட் கம்பெனிக்கு யு.எஸ்ல கெடைச்சிருக்கு. கட்டாயம் போயே ஆகணும்னு சொல்லிட்டாங்க. மூணுலேர்ந்து அஞ்சி வருஷம் அதான் முடியாதுன்னு சொல்லிப் பார்த்தேன். பிராஜக்ட் ஹெட்டா போட்ருக்காங்க. எனக்கும் ஒரு யோசனை, நா அங்க போனா உனக்கும் எதாவது ட்ரீட்மென்ட் பண்ணலாமில்லையா... அதான் போலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். உங்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு ஒரு தயக்கம். ஏற்கெனவே எனக்கு கிடைச்ச வாய்ப்புகள வேண்டாம்னு உனக்காக ஏத்துக்கல. இது கம்பெனிக்கு பெரிய ஆர்டர்.

Representational Image
Representational Image

புரமோஷன் வேற. ஏத்துக்கிட்டேன். வாரமானா உன்ன நேர்ல இனிமே பாக்க முடியாதுன்னு நெனைக்கறப்பதான் மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கு" கண் கலங்கி தன் வருத்தத்தை சொன்னான் வம்சி. "இதுல என்ன இருக்கு,உன்னோட வாழ்க்கடா அது. பத்திரமா போய்ட்டு வா, கேக்கவே சந்தோசமா இருக்கு. எனக்கொண்ணும் கஷ்டம்லாம் இல்லை. என்னைக்குக் கெளம்பற" தருண் வார்த்தைகள் வரும்போது ஒருவித தவிப்பை அவனால் தவிர்க்க முடியவில்லை. வம்சி தருண் கரம்பற்றி ஆறுதல் சொல்லி எழ முற்பட்டான். அப்படியே கலைந்து கிடந்த நெற்றி முடியை நேர் செய்தான். டெர்ரி பாக்ஸ் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தான். "இனிமே இந்தக் கதைய நான் போன்ல சொல்றேன்" என்று சொல்லி வம்சி புறப்பட எத்தனிக்கையில் தருணின் ஒற்றை விரல் முதல் முறையாக எம்பி வம்சியின் கையைத் தொட்டது. வம்சி உடல் சிலிர்த்தது.

"டேய், நீ தொட்டடா, அம்மா ஓடியாங்க தருணுக்கு உணர்ச்சி வந்துடுச்சி... சீக்கிரம் ஓடியாங்க.."

அவனறியாமல் கத்தினான் வம்சி. தருண் பெருங்குரலெடுத்து அழுதான்.

"டேய், அழாதடா உனக்கு நல்லாயிடுச்சி.. மனச விட்றாதடா...

அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான். தருணுக்கு இத்தனை நாள்தான் உயிருக்கு உயிராய் நேசித்த உறவொன்று பிரிந்து போவதன் வலி பெரும்பாரத்தை கொடுத்தது. சில பிரிவின் வலிகள் தானே வாழ்வை அர்த்தமுள்ள நேசமாக்கிவிடுகின்றன.

- மகேஷ்குமார் செல்வராஜ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு