Published:Updated:

காத்தவராயன்..! - சிறுகதை #MyVikatan

“ ஐயோ மவனே.. என்னடா ஆச்சு??” என்று பதறி ஓடிய பார்த்தசாரதி, தன் மகனைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு, வீட்டுத் திண்ணையை நோக்கி ஓடினார்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

“மா…..மா……” என்று லக்ஷ்மி சத்தம் கொடுக்க, உறக்கத்திலிருந்து முழித்தார் விசாலாட்சி.

“என்னங்க... எந்திரிங்க, லட்சுமியோட சத்தம் கேட்குது” என்று தன் கணவன் பார்த்தசாரதியை எழுப்பினார்.

பார்த்தசாரதி எழுந்து மாட்டுக் கொட்டிலை நோக்கிச் சென்றார். அங்கே அவரது மகன் ராஜகோபால் மாட்டுக்குத் தீவனம் கலக்கிக் கொண்டிருந்தார்.

“என்னப்பா, இன்னைக்கு லேட் ஆயிடுச்சா?” என்று கேட்டார் பார்த்தசாரதி.

“ ஆமாப்பா.. இதோ கலக்கிட்டேன். எல்லா மாடுகளுக்கும் கொடுத்துறலாம்.” என்றார் ராஜகோபால். இருவரும் சேர்ந்து தீவனத்தை மாடுகளுக்கு ஊற்றினர்.

“நாளைக்கு எத்தன மணிக்கு என் பேராண்டிக வராங்க?” என்று கேட்டார் பார்த்தசாரதி.

“ இன்னைக்கு மெட்ராசுக்கு வந்தாச்சு. நாளைக்கு மத்தியானம் நம்ம வீட்டுக்கு வந்திடுவாங்க.” என்றார் ராஜகோபால்.

“ அப்போ இன்னைக்கே போயி கறிக்கடை மாரிமுத்து கிட்ட ஆர்டர் கொடுத்துட்டு வந்துடு. மூனு ஆடும், அஞ்சு நாட்டுக்கோழியும் வெட்டி வைக்க சொல்லிடு. நான் போய் காலையில வாங்கிட்டு வந்துடுறேன்.” என்றார் பார்த்தசாரதி.

“சரிதான் பா.. உங்க பேரப் பசங்களுக்கு ஆட்டுக்கறி. எம் பேரப் பசங்களுக்கு கோழிக்கறி.” என்று கூறி சிரித்தார் ராஜகோபால்.

“அடி ராஸ்கோலு. எம் பேரப் பசங்களும், கொள்ளுப்பேரப் பசங்களும்னு சொல்லுடா.” என்று தன் தோளில் இருந்த துண்டை எடுத்து செல்லமாக அடித்தார்.

“ சரி சரி பா” என்று கூறி ஓடிய ராஜகோபால் கால் தடுக்கிக் கீழே விழுந்தார்.

“ ஐயோ மவனே.. என்னடா ஆச்சு??” என்று பதறி ஓடிய பார்த்தசாரதி, தன் மகனைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு, வீட்டுத் திண்ணையை நோக்கி ஓடினார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த மீனாட்சி,

“ அத்த.. இங்க வந்து பாருங்க இந்தக் கூத்த” என்று குரல் கொடுக்க, வெளியே வந்த விசாலாக்ஷி ,

“ இதுங்களுக்கு வேற வேலயே இல்ல” என்று கேலி செய்தார் .

“என்ன புள்ள, பாத்துட்டு இருக்குற? முட்டி செராய்ச்சிருக்குப் பாரு. எண்ணெய்யக் கொண்டா” என்றார் பார்த்தசாரதி.

“மீனா குரல் கொடுக்கும் போதே நான் எண்ணெய்யக் கொண்டு வந்துட்டேன். இது என்ன புதுசா?” என்று எண்ணெய்யை நீட்டினார்.

Representational Image
Representational Image
Pexels

“ பொறாம பா ரெண்டு பேருக்கும்” என்றார் ராஜகோபால்.

“ஆமாப்பா…” என்று தாளம் போட்டார் பார்த்தசாரதி.

“என்ன ஓமாப்பா.. எழுபது வயசுக் கெழவன் மாதிரியா நடந்துக்கறீங்க. ஏன்டா அம்பது வயசு ஆச்சு உனக்கு, இன்னும் அப்பாவ தூக்க விடுற. அறிவே இல்லையா?” என்று இருவரையும் ஒரு இடி இடித்தார் விசாலாட்சி.

“ அத்த... ஏன் வையுறீங்க . வீட்ல பேரப்பிள்ளைங்க இருந்தா அதுகள தூக்கி விளையாடுவாங்க, சொல்ல சொல்ல கேக்காம மூனு பசங்களையும் என்ஜினீயரிங் படிக்க வச்சு, எல்லாம் வெளிநாட்டுல இருக்குதுங்க. அப்புறம் என்ன பண்றது. அப்பா மகனையும் , மகன் அப்பாவையும் தூக்கி கொஞ்சிக்க வேண்டியதுதான்.” என்றார் மீனாட்சி.

“ சரி சரி.. ரெண்டு பேரும் ஆரம்பிச்சுட்டாங்க. வாங்கப்பா, நாம வய காட்டுக்கு ஓடிடலாம்.” என்று இருவரும் கிளம்பினர்.

பச்சை சட்டையும் பளார் அறையும்..! - கோவா டைரீஸ் #MyVikatan

“ அம்மா மீனா... அந்த காத்தவராயன் இடத்த சுத்தம் செய்யணும். பசங்க புள்ளைங்க எல்லாம் வர்றதுக்குள்ள.”என்றார் விசாலாட்சி.

“ நல்லவேள ஞாபகப்படுத்துனீங்க. அந்த இடத்துக்கு வரப்போற சண்டைய நெனச்சா தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்றார் மீனாட்சி

“ஒன்னும் கவலப்படாத. அதெல்லாம் சமமாக பிரிச்சுக்குவாங்க” என்றார் விசாலாட்சி.

அன்றைய பொழுது வீட்டை சுத்தம் செய்தும், சமையலுக்குத் தேவையானதை தயார் செய்தும் ஓடியது.

விசாலாட்சி-பார்த்தசாரதி தம்பதியினருக்கு ஒரே மகன் ராஜகோபால். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு மூன்று மகன்கள் அர்ஜூன்-அஸ்வின்-ஆனந்த். மூவரும் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.

நான்கு வருடங்கள் கழித்து ஊர் திருவிழாவிற்கு குடும்பத்தோடு வருகிறார்கள்.

விடிந்தது…

வீடே பரபரப்பாக இருந்தது…

ஆட்டுக் கறிக்குழம்பு ஊரே மணம் வீச, வீசிய மணத்தின் வழி பிடித்து வந்து சேர்ந்தது மூன்று பிள்ளைகளின் கார்களும். மூன்று பிள்ளைகளும், மூன்று மருமகள்களும், அவர்களது வாரிசுகளும் வரிசை கட்டி நிற்க, ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்கப்பட்டனர்.

அவிழ்த்துவிட்டக் காளை போல துள்ளி குதித்து விளையாடச் சென்றனர் பேரக்குழந்தைகள். தன் பேரன்களை ஆரத் தழுவி முத்தமிட்டனர் பார்த்தசாரதியும் விசாலாட்சியும். மகன்களை கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார் மீனாக்ஷி.

Village
Village

“என்ன அத்த, எங்களக் கட்டிப் பிடிச்சு அழ மாட்டீங்களா?” என்று கிச்சுக்கிச்சு மூட்டி வம்பிழுத்தனர் மருமகள்கள் மூவரும்.

“ ஹா ஹா ஹா” என்று சிரித்தபடி, “சரி தாயீ, போய் எல்லாரும் குளிச்சுட்டு தயாராகி வாங்க, இட்லியும் கறிக் குழம்பும் சூடா இருக்குது” என்றார் மீனாட்சி.

“நாங்க கம்மாய்க்குப் போறோம் குளிக்க” என்று பிள்ளைகளை கூட்டிச் சென்றனர் தந்தைமார்கள். மருமகள்கள் குளித்துத் தயாராகி ஊர்க்கதை குடும்பக்கதை பேச அமர்ந்தனர் மீனாட்சி-விசாலாட்சியுடன்.

ஒரு மணி நேரம் கழிந்தது…

குளித்து முடித்துக் கம்மாயில் இருந்து திரும்பினர் அனைவரும். மூன்று மகன்களில் முகத்திலும் கோபமும் எரிச்சலும். பார்த்தசாரதி-ராஜகோபாலின் முகம் வாட்டாமாக தெரிந்தது. பேரக்குழந்தைகள் துள்ளி ஓடி வந்தனர் ‘பசி பசி’ என்று.

அனைவரும் சாப்பிட, நடுவீட்டில் வாழை இலை போடப்பட்டது. பச்சை வாழை இலையில் ஆவி பறக்க இட்லியும், கொதிக்கக் கொதிக்க மண் சட்டியில் இருந்து ஆட்டுக்கறி குழம்பும் பரிமாறப்பட்டன. அனைவரும் வயிறார சாப்பிட்டனர்.

அர்ஜுன்-அஷ்வின்-ஆனந்த் மட்டும் அமைதியாக சாப்பிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“என்ன ஆச்சு?” என்று முணுமுணுத்துக் கேட்டார் மீனாட்சி ராஜகோபாலிடம்.

“எல்லாம் காத்தவராயன் எடப் பிரச்சனைதான்” என்று உரக்கக் கத்தினான் மூத்தவன் அர்ஜுன்.

“நான் தானமா இளையவன், எனக்கு ரெண்டு அண்ணன்களும் விட்டுக் கொடுக்கலாம் இல்ல” என்று கேட்டான் ஆனந்த்.

“ஒத்துமையா இருங்கடா” என்றார் விசாலாட்சி.

“அதெல்லாம் முடியாது பாட்டி. எப்படி சமமாக பிடிக்கிறது? மூணு பேர்ல நான் தான் குண்டா இருக்கேன். எனக்கு தான் பங்கு அதிகமாக வேணும்” என்றார் நடுவிலயான்.

“ இந்த ஊர்ல உடல் சைஸ்ஸ வச்சா இடம் பங்கு பிரிப்பீங்க??!!” என்று வியந்தாள் அர்ஜுனின் மனைவி.

“முதல்ல எல்லாரும் கெளம்பி நம்ம தோப்பு தோட்டம் எல்லாம் சுத்திப் பாத்துட்டு வருவோம். ராத்திரி பேசி முடிவு பண்ணிக்கலாம்.” என்றார் விசாலாட்சி.

Representational Image
Representational Image
pexels

ஐந்தாரு மாட்டு வண்டியில் காளைகள் சலங்கை ஒலிக்க கிளம்பினர். ஊரெல்லாம் சுற்றி அடித்துவிட்டு, குளம்-குட்டை-தோப்பு என அனைத்தையும் கண்டுவிட்டு, துரை அண்ணன் கடையில் பரோட்டா சால்னா சாப்பிட்டு விட்டு ஓய்ந்து வந்தனர் அனைவரும். வந்த கலைப்பில் குழந்தைகள் உறங்கச் சென்றனர். மீதி அனைவரும் வெளித் திண்ணையில் சிறிது நேரம் உரையாடினார்கள்.

இரவு 10 மணி அடித்ததும் அர்ஜுன்-ஆனந்த்-அஷ்வின் மூவரும் விழுந்தடித்து ஓடினார்கள், “ காத்தவராயன் எனக்குத்தான் எனக்குத்தான்” என்று கத்திக்கொண்டே.

“எங்க இப்படி ஓடுறாங்க மூணு பேரும்?” என்று அதிர்ச்சியாக கேட்டனர் அவர்களது மனைவிமார்கள்.

“வாங்க பாக்கலாம்” என்று கூறி வழிநடத்தினார் பாட்டி விஷாலாட்சி.

ஓடிய மூவரும் ஒரு அறையின் வாசலில் அதிர்ச்சியாய் நின்று, ஒருவரைஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்னங்க ஆச்சு?” என்று அர்ஜுனின் மனைவி கேட்க, வருத்தத்தோடு கையை நீட்டி,

“கா... கா...காத்தவராயன்…..” என்று காட்டினான்.

அவன் கை நீட்டிய திசையை எட்டிப் பார்த்த மனைவியர் மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“ஆ….இதுதான் காத்தவராயனா???” என்று அர்ஜுனின் மனைவி கேட்க,

“ஆமா …” என்று தலை அசைத்தான்.

“இந்த டேபிள் ஃபேனுக்குத் தான் மூணு பேரும் சண்டை போட்டிங்களா?” என்று முகத்தில் இடித்தாள் ஆனந்தை அவன் மனைவி.

“டேபிள் ஃபேன்னு சொல்லாத. அவன் பேரு காத்தவராயன். நாங்க சின்ன வயசா இருந்தப்ப, எங்க வீட்ல ஃபேனே இல்ல. வெயில் காலத்துல புழுக்கத்தில தூங்குவோம்.” என்று ஆரம்பித்தான் ஆனந்த்.

“அப்போ துபாய்ல இருந்து வந்த எங்க மாமா இந்த ஃபேன வாங்கிட்டு வந்தாரு.” என்று தொடர்ந்தான் அஷ்வின்.

“அது காத்து குளுகுளுன்னு கொடுத்ததால காத்தவராயன்னு பேரு வச்சோம்” என்று முடித்தான் அர்ஜுன்.

“இவனுங்க சின்ன வயசா இருந்தப்ப எடம் பத்துச்சு. வளர வளர டேபிள் ஃபேன் எடத்துக்கு ஒரே சண்ட தான் “ என்றார் மீனாட்சி.

“ஏன் எல்லாரும் வாசல்லயே நின்னுட்டீங்க?” என்று கேட்டார் பார்த்தசாரதி.

“உள்ள எட்டிப் பாருங்க” என்று அனைவரும் நகர்ந்து வழி விட்டனர்.

உள்ளே அர்ஜுன்-அஷ்வின்-ஆனந்தின் வாரிசுகள் காத்தவராயன் இடத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

சர்ர்ர்…...சர்ர்ர்…... என்று காற்று வீசிக் கொண்டிருந்தான் காத்தவராயன்.

தன் பேரக்குழந்தைகளுக்கு போர்வை போர்த்தி விட்டு வெளியே வந்த ராஜகோபால்,

“ம் ...நடங்க நடங்க...இனி காத்தவராயன் அடுத்த தலைமுறைக்கு” என்று கூறி சிரித்தார்.

-மலர்விழி மணியம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு