Published:Updated:

மன்னன் நிலம்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

ஒரே சலசலப்பு. கோமாளி வேடமணிந்த மனிதன் கூடியிருந்த மக்களை சேட்டைகள் செய்து சிரிப்பு காட்டிக் கொண்டிருந்தான்.

லேசான குளிர்.... விடியலுக்கு நேரமிருந்தது. கடலலையின் சத்தம் சிலநேரங்களில் உறங்க விடுவதில்லை. கடற்கரையை யொட்டிய பெருநிலம்.போன மழைக்கு சுற்று சுவர் இடிந்து விழுந்து முள் கம்பி நட்டு வைத்திருந்தார்கள். கடலை, உட்கார்ந்த இடத்திலேயே பார்த்துக்கொள்ளலாம். கடலின் பிரமாண்டத்தை நிலத்திலிருந்து காண்பதே பேரழகு. அய்யாவு அந்த இடத்திற்கு வாட்ச்மேனாக வந்து மூன்று மாதங்களே ஆகின்றன.

Representational Image
Representational Image

கடற்கரையை யொட்டிய ஒரு பெரிய தொழிலதிபரின் காலி மனை. கருங்கல் சுற்று சுவர் போடப்பட்டிருந்தது. போன மழை என்பது இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்தது. கிழக்கு பக்கம் கடலுக்குச் செல்வது போல் ஒரு கேட். அந்தப் பக்கம்தான் அந்த மழைக்கு இடிந்து விழுந்தது. ஆளரவமற்ற அந்த நிலத்திற்கு ஒரே ஒரு செக்யூரிட்டி. பேசுவதற்கும் ஆளில்லாத மௌன நிலம். அதிகம் அந்த மண் பார்த்தது ஆதரவற்றவர்களையே. செக்யூரிட்டி ஏஜென்சிகளும் அதுபோன்ற ஆட்களையே அந்த இடத்திற்கு அனுப்பும். அதுபோன்ற ஒரு மனிதன்தான் அய்யாவு. அய்யாவு... அடிக்கும் குளிருக்கு வாய் பிளக்க உறங்கியும் உறங்காத நிலை. நினைவுகள் மனதிலிருந்து தப்புவதும் திரும்புவதுமாய் இருந்தது.

கூட்டம் அந்த இரவிலும் நிரம்பியிருந்தது. ஒரே சலசலப்பு. கோமாளி வேடமணிந்த மனிதன் கூடியிருந்த மக்களை சேட்டைகள் செய்து சிரிப்பு காட்டிக் கொண்டிருந்தான். சாமி ஊர்வலம் புறப்பட நேரமிருந்தது. அமர்ந்திருந்த இசைக்கலைஞர்கள் கருவிகளை ஒருமுறை இசைத்துப் பார்த்தார்கள். ஹார்மோனியம், மத்தளம், மோர்சிங், ஜால்ரா, என அந்த இடமே அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. பின்பாட்டுக்காரர்கள் அந்த இசைக்கேற்ப ஒத்திகைப் பார்த்துக் கொண்டார்கள். பெரிய பெட்ரோமாக்ஸ் லைட்கள் நின்றவண்ணம் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன.

திருவிழாவின் கொண்டாட்ட மனநிலை. தெருக்கூத்து எப்பொழுது ஆரம்பிப்பார்கள் என்கிற ஆர்வமும் வியப்பும். கட்டியங்காரன் வரவும் கூட்டம் ஆர்ப்பரித்தது. தெருக்கூத்து ஆரம்பமாவதற்கான சமிக்ஞை. அவன் சில பகடிகள் செய்து கோமாளியை விரட்டவும் கோமாளி அலறி அடித்து ஓடினான். பின்பாட்டுக்காரர்கள் விநாயகர் துதி பாடவும் யானைமுகத்தான் உருவம் கொண்ட ஆட்டக்காரர் ஆடி முடிக்கக் கூத்து தொடங்கியது.

Representational Image
Representational Image

அரிச்சந்திர நாடகத்தின் கதைப்போக்கை கட்டியங்காரன் சொல்ல அரிச்சந்திரன் அறிமுகமானான். புடவைகள், புஜக்கட்டைகள், மார்பு ஆரம், கழுத்து மணி, இடுப்புக் கச்சை, நெற்றிச் சரடு, காதுக் கட்டை, கீரிடம், அரையாடை, மேல் சட்டை, வாக்கு மாலை என்ற நீண்ட அங்க வஸ்திரம் போன்ற துணி மாலை, வாகு வலயம் என்னும் கயிறு போலச் சுருட்டப்பட்ட துணி மாலை, கணுக்காலில் கட்டப்படும் துணிப்பட்டை, கால் சலங்கை முதலான அணிமணிகள் அணிந்த ஒப்பனை, கையில் மரக்கத்தி, வில், கதாயுதம், நாகாஸ்திரம் முதலான ஆயுதங்கள் கொண்ட பரிவாரங்களோடு அரிச்சந்திரன் அரிதாரம் பூசி பெருங்குரலெடுத்து பாடி வந்தான். வந்தவன் அய்யாவு என்பது யாருக்கும் தெரியாது.

நிஜ அரிச்சந்திரனே வந்ததாக மக்கள் உணர்ந்தார்கள். அப்படித்தான் அந்த அரிச்சந்திரன் இருந்தான். கூத்தின் அந்த இரவு முழுவதும் அவனின் முகபாவனைகளுக்கும் அபிநயங்களுக்கும் ஆர்ப்பரித்தது. கூக்குரலிட்டது. அவன் நிலைகண்டு அழுதது. எப்படியெல்லாம் மக்களின் உணர்வுகளை வெளிக்கொணர முடியுமோ அப்படியெல்லாம் அய்யாவு...இல்லை அரிச்சந்திரன் மக்களை மயக்கத்தில் கட்டிப் போட்டான். அவன் கம்பீரக் குரல் கலந்த ஆட்டத்தின் மூலம். அய்யாவுவை சுற்று வட்டாரம் முழுக்க அறியாதவர்கள் யாருமில்லை. கூத்தென்றால் அது அய்யாவுதான். அய்யாவுவின் ஆசானுக்கு அது மிகுந்த பெருமையாக இருந்தது. அய்யாவு ஒருபோதும் தன் ஆசான் சொல்லைத் தட்டியதோ மீறியதோ இல்லை.

கர்ண மோட்சம் என்றால் கர்ணனாக, அர்ச்சுனன் தபசு என்றால் அர்ச்சுனனாக, துரியோதனன் படுகளம் என்றால் பீமனாக எனப் பல வேடங்கள் புனைந்து மக்களை மகிழ்வித்தான். ஆனால், ஒவ்வொன்றிற்கும் அதற்கான உரிய மரியாதையோடு கூத்து ஆரம்பிக்கும் பதினைந்து நாள்களுக்கு முன்பாகவே விரதமிருந்து கட்டுக்கோப்போடு நிகழ்த்திக் கொடுப்பான். அவன் குணம் கண்ட பெண்ணொருத்தி அவனில் மயங்கி காதலித்தாள்.

Representational Image
Representational Image

நிறைய பேர் காதலித்தாலும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அதுவும் அந்தக் கூத்தன்று மட்டும் வயது பெண்களிடம் அவன் மீது ஒரு கிறக்கம் இருக்கும். அவன் அது எதற்கும் மசிபவனாக இல்லை. அவன் அந்த கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்பவனாக இருந்தான். காதலித்த பெண்ணொருத்திதான் தேன்மொழி. ஆசானின் அனுமதியோடு தேன்மொழியைக் கரம்பிடித்தான். அவரே அவனுக்கு வீடு பிடித்து தனிக்குடித்தனம் வைத்தார். அவனுக்கென்று சொந்தங்கள் ஏதுமில்லை. அவனுக்கு மண் சிலைகள் வடிப்பதில் மிகுந்த ஆர்வம். கூத்தில்லாத காலங்களில் சிலைகள் செய்ய பழகிக் கொண்டான். ஆண்டுகள் ஓடத்துவங்கியிருந்தன. அவன் கூத்தே கதியென்று இருந்தான். பிள்ளைப்பேறு அற்றுப் போயிருந்த வருத்தம் தேன்மொழிக்கு இருந்தது. அவனுக்கும் அந்த வருத்தம் இருந்தது. இருவருமே வெளிக்காட்டிக் கொண்டதில்லை. இருவருக்குள்ளும் இணைபிரியாத பந்தம் கொட்டிக் கிடந்தது. ஆசான் சொல்லி ஒரு இளைஞன் கூத்து கற்க அய்யாவுவிடம் வந்தான். அய்யாவும் தேன்மொழியும் அவனை அன்போடு கவனித்துக் கொண்டார்கள். கூத்தின் நுணுக்கத்தை அவனுக்கு சொல்லிக் கொடுத்தான் அய்யாவு. அய்யாவுக்கும் தனக்கென்று ஒரு சீடன் கிடைத்து விட்ட மகிழ்ச்சி.

கூத்துகளுக்குச் செல்வதும் சுதை செய்வதும் என நாள்கள் கடந்து போக ஒரு சுபயோக சுப தினத்தில் ஒருநாள் தேன்மொழி கருவுற்றாள். இருவருக்குமே அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அது மழைக்காலம். பண்டிகைகள் ஏதுமில்லை. ஏழு மாதங்கள் ஆகிவிட்டிருந்தது. நிறைய கனவுகளோடு காத்திருக்க துவங்கினார்கள்.

Representational Image
Representational Image

ஊரார் மத்தியில் அரசல் புரசலாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது. ஆம்,தேன்மொழி கருவுற்றதற்கு காரணம் அந்த இளைஞன்தான் என. இருவருக்குமே அது மிகுந்த மன உளைச்சலை தந்தது . ஊர் சாடை மாடையாகப் பேசிக் கொண்டிருந்தது. அய்யாவும் அந்த இளைஞனும் இல்லாத நேரத்தில் குடிக்க தண்ணி எடுக்க போன இடத்தில் ஒரு பெண் குத்தலாகப் பேசி குத்திக் காட்ட வெடுக்கென விலகி வீடு வந்தாள். அந்த அவமானம் தேன்மொழியைப் பிடுங்கித் தின்றது. ஒரு மூர்க்கம் மனித மனத்தை அசைத்துப் போடுமல்லவா அவளையும் அசைத்துப் பார்த்தது. அவளுக்கு நன்கு தெரியும் அது போல் இல்லையென்று. வாழ்ந்துகாட்ட வேண்டும் என்கிற வைராக்கியத்தை விட வீழ்ந்து போகிற வேதனை கொடியதல்லவா. அவளால் மனதால் எழவே முடியவில்லை. வலி...காத்திருப்பின் வலி...அவமானத்தின் வலி. வேதனையின் வலி....எத்தனை அன்பானவனாக இருந்தாலும் ஒரு கணத்தில் உள்ளூர எண்ணியிருப்பானோ நினைக்கவே தேன்மொழிக்கு உடல் நடுங்கியது.

என்ன செய்வதென தெரியாமல் மூன்றாவது வீட்டுக் கிணற்றடியில் மதிய வேளையில் குதித்தாள். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. ஊருக்குப் போனவர்களும் வரவில்லை. மறுநாள் கிணற்றில் உடல் மிதந்த போதுதான் ஊர் அறிந்தது அவள் மரணத்தை. ``வவுத்துக்காரி இப்பிடி பண்ணிட்டாளே"...எள்ளி நகையாடி குத்திக் கிழித்த ஊரே வருந்தி அழுதது. அய்யாவு வந்த போது உப்பிப் போன முகத்தோடு அலங்கோலமாய்க் கிடந்த தேன்மொழியைக் கண்டு அழுது அரற்றினான். ``எந்தச் சிறுக்கி சொன்னா எனக்கு தெரியாதா உன்னப்பத்தி...ஏன்டி, இப்டி பண்ண" அய்யாவு அவளைக் கட்டிப்பிடித்து அழுதான். அழுது அழுது மனதால் ஊமையாகிப் போனான். ஊரும் அமைதியாகிப் போனது. ஆறுதல் இல்லாமல் வவுத்துக்காரிய நாம கொன்னுட்டமே எனத் தனக்குள் மருகினான். ஆறுமாதங்கள் எந்தக் கூத்திற்கும் செல்லவில்லை. ஆசானும் அவன் மீளட்டும் என அமைதிகாத்தார்.

Representational Image
Representational Image

ஒருநாள் அய்யாவுவை வரச்சொல்லி ஆளனுப்பினார். அய்யாவு போனபோது அனுசரணையாகப் பேசினார். "அய்யாவு, இன்னும் அதையே நெனச்சிக்கிட்டிருக்காத...நீயா, மீண்டு வா. உன்னோட கலைய மீட்டெடு. அதுதான் உனக்கு பெரிய ஆறுதல். பொழப்பும் முன்ன மாதிரி இல்ல. இப்டியே போனா எல்லோரும் பட்னிதான் கெடக்கணும்.. இல்லேன்னா கூத்த விட்டுட்டு வேற பொழப்பதான் பாக்கணும்"... ஆசான் சொல்லச் சொல்ல அதைக் கேட்டு மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டிவிட்டு வந்தான். கூத்திற்குப் பதினைந்து நாளிருக்கும் போது விரதமிருக்க முயன்றான். மனம் நிலையில் இல்லை. வெறுமையாக இருந்தது. மீட்டெடுக்க முயன்று தோற்றான். கூத்திற்கான நாள்... எல்லாம் நல்லபடியாக நடப்பதாக இருந்தது.

பாரதப் போர்....சன்னதம் கொண்டவன் போல் மிகுந்த மூர்க்கத்தோடு ஆடினான். கூட்டம் ஆர்ப்பரித்தது. மூன்றாம் நாள் கூத்தில் அவனை மகாகலைஞனாகக் கொண்டாடியது. அவ்வப்போது தேன்மொழி நினைவு வந்தபோதெல்லாம் அவன் கலையின் உச்சத்தை கொண்டாடித் தீர்த்தான். ஆனால், அது நீடிக்கவில்லை என்பதுதான் வாழ்வியல் துயரம்.

Representational Image
Representational Image

ஊராருக்கிடையே தகராறு. டிவியும் டெக்கும் அறிமுகமாகியிருந்த காலம். ஊராரில் ஒரு பகுதியினர் ஆரம்பத்திலிருந்தே டெக்கு போட வேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தனர். அதுவும் சரஸ்வதி சபதம், வசந்த மாளிகை, ரத்தக்கண்ணீர் எனத் திரைப்படங்கள் உச்சத்திலிருந்த காலம். நிறைய புதுமுக நடிகர்கள் வேறு அறிமுகமான வண்ணம் இருந்தனர். அய்யாவு ஆடிக்கொண்டிருந்த போது சாராயம் குடித்து போதை தலைக்கேறிய ஒருவன் கூத்து நடந்து கொண்டிருக்கும் போதே அய்யாவுவைக் கீழே தள்ளி அடிக்கத் துவங்கினான். அன்று அய்யாவு போரில் மிகுந்த ஆவேசம் கொண்டிருந்தான். அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து கொண்டிருந்தான். கௌரவர்களை பழி தீர்க்க எண்ணுகையில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியது. ஆவேசங்கொண்ட அய்யாவு போதையானவனை அடித்து துவம்சம் செய்ய அது சாதிப்பிரச்னையாக மாறி கூத்து தடைபட்டுப் போனது. இனி அவர்கள் எக்காலத்திலும் கூத்து நடத்த ஊருக்குள் வரக்கூடாது எனத் தீர்மானம் போட்டார்கள். இந்தச் சம்பவம் சுத்துப்பட்டு கிராமத்திலும் எதிரொலிக்க யாரும் பிறகு வாய்ப்பு தரவில்லை. வெளியூர்க்காரர்கள் வந்தாலும் விஷயம் கேள்விப்பட்டு விலகிப் போனார்கள்.

மக்களின் மனநிலையும் மாறி டிவிக்குத் திரும்பியிருந்தனர். வெள்ளியன்று ஒளியும் ஒலியும், ஞாயிறுகளில் திரைப்படம் என மாறிப்போயிருந்தனர். வீட்டுக்கு வீடு டிவி வரத்து துவங்கியிருந்தது. தெருக்கூத்து ஆதரவற்று தெருவிலேயே நின்றது. அரசாங்கத்தில் நலிந்த கலைஞர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதாகக் கேள்விப்பட்டு அதற்கு விண்ணப்பித்தார்கள். அவர்கள் அன்று கலெக்டர் அலுவலகத்துக்குப் போன போது கலைஞர்கள் உண்மையில் நலிந்துதான் போயிருந்தார்கள். அய்யாவு அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தான். சிலருக்கு மட்டும் அதிகாரி கையொப்பமிட்டு அய்யாவு முறை வந்த போது அவனைக் கூத்துப் பாடல்கள் பாடச் சொல்லிக் கேட்டார். அதுவும் அரிச்சந்திரன் பாடலைப் பாடச் சொல்ல அவனுக்குள் அரிச்சந்திரன் நுழைந்தான். அண்டிப் பிழைப்பதைவிட இந்த வாழ்வு அத்தனை கேவலமானதா என மனம் அரிச்சந்திரனாய் யோசிக்க பாடாமல் திரும்பி நடந்தான் அரிச்சந்திரன் கம்பீரமாய். "இப்டிதான் சார், ஆட்டக்காரங்கன்னு இப்பல்லாம் பிச்சக்காரங்க கூட கிளம்பிட்டாங்க. இவனுங்களலாம் உள்ள பிடிச்சி போடணும்....பிச்சக்காரப் பசங்க"...அவன் காதுபட சொன்னார்.

Representational Image
Representational Image

எந்த எதிர்ப்பும் காட்டாமல் அந்த மகாகலைஞன் நடந்து போனான். அதிகாரம் அவமானப்படுத்தி அனுப்பியது. அம்மன் திருவிழா...சுதை செய்யும் வேலையில் இருந்தான் அய்யாவு. யாரிடமும் முன்பு போல் பேசுவதில்லை. வயதும் ஏறிக் கொண்டேயிருந்தது. சரியாகச் சாப்பிடாமல் உடல் நலிந்து போயிருந்தது. தேன்மொழி நினைவில் இருந்து கொண்டேயிருந்தாள். சிறுகுழந்தைகளைப் பார்த்தால் மனம் குதூகலம் கொள்ளும். ஒரு வவுத்துக்காரி தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள். தேன்மொழி நடந்து வருவது போலிருந்தது. அவன் எழுந்து போய் அருகாமையிலிருந்த வளையல் கடையில் வளையல் வாங்கினான். அந்த வவுத்துக்காரியிடம் கொண்டு போய் கொடுத்தான். அவள் வாங்க மறுக்க அதை அவள் கையில் வலுக்கட்டாயமாய் திணித்து திரும்பி நடக்கையில் முதுகில் அடி பலமாய் விழ நிலைதடுமாறி கீழே விழுந்தவனை சிலர் சூழ்ந்து அடித்தார்கள்.

என்ன ஏதுவென அறியும் முன் சிலர் தடுத்து நிறுத்தி நடந்ததை விசாரித்தார்கள். அய்யாவு பேசாமல் அமைதியாக தலைகவிழ்த்து நின்று கொண்டிருந்தான். அவனைத் தெரிந்த ஒருத்தர் நிலைமையை ஊகித்துச் சொன்னார். அவம்பொண்டாட்டி ஏழு மாச கர்ப்பத்துல கெணத்துல வுழுந்து செத்துட்டா... பாவம் அவளுக்கு வளைகாப்பு கூட செய்யல. அந்த நெனப்புல வவுத்துக்காரிக்கு வாங்கிக் குடுத்துருப்பான்யா. அட விடுங்கய்யா... அவன் எவ்ளோ பெரிய ஆட்டக்காரன் தெரியுமா...எவனதான்யா இந்த ஊரு மதிச்சி இருக்குது. திருடறவனும் கொள்ளையடிக்கிறவனும் பெரிய மனுஷனா சுத்துற ஊருல வேற என்னதான் நடக்கும். கூட்டம் கலைய விறு விறுவென நடந்து போன அய்யாவு அந்த வவுத்துக்காரியின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினான்.

Representational Image
Representational Image

சூரியன் மேலெழத் துவங்கியிருந்தது. நேற்று செய்த துரி யோதனன் சுதை பாதி முடிந்த நிலையில் இருந்தது. உறக்கம் கலைந்த அய்யாவு சுதையைச் சுற்றி வந்தான். மடமடவென சுதையை முடிக்கும் வேலையைத் துவங்கினான். துரியோதனன் சிரித்த முகமாய் இருந்தான். கடல் மண்ணுக்கு துரியன் நன்கு உப்பிய கன்னங்களோடு தன் புஜ பராக்கிரமங்களை காட்டிய வண்ணம் படுத்திருந்தான். கீரிடம் வேலை முடிந்தால் சுதை வேலை முடிந்து விடும். கேட்டில் டீக்காரன் வந்து பெல் அடிக்க எழுந்து போய் டீ குடித்தான். டீக்காரன் உள்ளே நுழைந்து சுதையை ஒரு சுற்றுச் சுற்றி வந்தான்.``யோவ், ஒரு ஆள் படுத்திருக்காப்ல எவ்ளோ பெரிய உருவம்... பெரிய ஆள்தான்யா நீ..." அய்யாவு எதுவும் சொல்லவில்லை. அவன் அந்தச் சுதை முன் விழுந்து வணங்கி மண் எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு கிளம்பிப் போனான். அய்யாவு ஆசைதீரக் குளித்தான். தேன்மொழி நினைவில் வந்து போனாள். குழந்தை இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இன்று பௌர்ணமி வேறு. மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருமுறை சுதையைப் பார்த்தான்.

துரியோதன் முகம் வசீகரித்தது. முன்னெப்போதை விடவும் அவன் முகத்தில் புன்னகை நிரம்பி வழிந்தது. வாங்கி வந்திருந்த வாழை இலையை சுதை முன் விரித்துப் போட்டு வெற்றிலைப்பாக்கு வைத்து வாழைப்பழத்தில் ஊதுபத்தி சொருகி ஏற்றி வைத்த விளக்கில் சூடம் பற்றவைத்து காட்டினான். சுதை முன் விழுந்து வணங்கி எழுந்தான். முகத்தில் அரிதாரம் பூசிக் கொண்டான். கடலிலிருந்து நிலா மேலெழுந்து நிலவொளி சுதையின் முகத்தில் பட்டு பிரதிபலித்தது. கடலும் தங்கமாய் அந்த ஒளியில் மின்னியது. அய்யாவு பீமனாக மாறியிருந்தான். அந்த இரவில் அந்த நிலப்பரப்பில் துரியோதனன் படுகளம் நிகழத்துவங்கியிருந்தது. பெருங்குரலெடுத்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாடத்துவங்கினான். வான், மண், காற்று, நெருப்பு, நீர் பார்க்க பூமி அதிர அதிர சுதையைச் சுற்றி ஆவேசங்கொண்டு பாடினான். அவனுள் பீமனின் மூர்க்கம் ஏறியிருந்தது. பாஞ்சாலியின் அவமானமாக தேன்மொழி தோன்றினாள்.

Representational Image
Representational Image

ஏதும் செய்யமுடியாத சூதாட்ட சபையின் பீமனாக அவமானத்தில் மருகி நின்றவனுக்குள் ஆவேசம் நிறைந்திருந்தது. அது சமூக ஆவேசம். நிராகரிக்கப்பட்டதன் வலி. வாழ்வின் ஏமாற்றம். பெருந்துயரம். எல்லாம் எல்லாம் அவனை வேறு மனிதனாக மாற்றியிருந்தது. தன் கையில் வைத்திருந்த கதையால் துரியோதனன் தொடையில் ஓங்கி அடிக்க அடிக்க துரியோதனன் வலியால் துடித்தான். நீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த அஸ்வத்தாமன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். பீமன் துரியோதனனை கொன்றொழிக்க மனம் ஆசுவாசப்பட்டு சுதையின் மீது சரிந்தான். அந்த மன்னன் நிலத்தில் போர் அதோடு முடிவுற்றது. அய்யாவு வாய் பிளந்து திறந்திருந்தது. எந்தச் சலனமுமின்றி கடலலைகள் கரைக்கு வர முயன்று கொண்டேயிருந்தன.

- மகேஷ்குமார் செல்வராஜ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு