Published:Updated:

`சீன அதிபர் வருகை முதல் அம்பானி வீட்டு விசேஷம் வரை...!' -மணக்கும் தோவாளை மாணிக்க மாலை

பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பில் இடம்பெற்ற மாணிக்கமாலை
பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பில் இடம்பெற்ற மாணிக்கமாலை

சீன அதிபர் மாமல்லபுரம் வந்த போது பிரதமர் நரேந்திரமோடி விவரித்துக் கூறிய தமிழர் பண்பாடு கலைகளில் மாணிக்கமாலை இடம் பிடித்தது. இந்திய கோடீஸ்வரர் அம்பானி வீட்டில் திருமண நிகழ்ச்சியின்போது அலங்காரத்திற்காக மாணிக்க மாலை பயன்படுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூக்களுக்குப் பெயர்பெற்றது ஊர் தோவாளை. இங்கு ஏராளமான குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக பூ கட்டும் தொழிலைச் செய்து வருகிறார்கள். பலவகை பூமாலைகள் தொடுத்தாலும் மாணிக்கமாலை என்கிற பூமாலை மிகவும் பிரசித்திபெற்றது.

மாணிக்க மாலை பூ தொடுப்பதன் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றவர் வனிதா ஸ்ரீ. பட்டதாரியான இவரது கைவண்ணத்தில் உருவாகும் மாணிக்கமாலை தெய்வங்களுக்கு மட்டுமல்லாமல் வி.வி.ஐ.பி களின் திருமண வீடுகளிலும் அலங்கரித்து வருகிறது. சீன அதிபர் மாமல்லபுரம் வந்த போது பிரதமர் நரேந்திரமோடி விவரித்துக் கூறிய தமிழர் பண்பாடு கலைகளில் மாணிக்கமாலை இடம் பிடித்தது. இந்திய கோடீஸ்வரர் அம்பானி வீட்டில் திருமண நிகழ்ச்சியின்போது அலங்காரத்திற்காக மாணிக்க மாலை பயன்படுத்தப்பட்டது. அதற்காக தோவாளையைச் சேர்ந்த பூமாலை தொடுக்கும் பெண்கள் நான்கு நாள்கள் மும்பையில் தங்கியிருந்து அம்பானி வீட்டின் பெரிய பூஜை அறையை மாணிக்க மாலையால் அலங்காரம் செய்தனர்.

மாணிக்க மாலை
மாணிக்க மாலை

தோவாளையில் ஐந்தாவது தலைமுறையாக மாணிக்கமாலை தொடுக்கும் தொழில் செய்துகொண்டிருக்கும் வனிதா ஸ்ரீ பி.டெக்., எம்.பி.ஏ படித்திருக்கிறார். உயர் படிப்பு படித்திருந்தாலும் பூக்களில் உருவாகும் கலை வாசத்தை வளர்த்தெடுக்கவே தன் வாழ்வை அர்ப்பணத்துவிட்டார். இதுகுறித்து வனிதா ஸ்ரீ கூறுகையில், ``மாணிக்கக் கற்களைப் போன்று மின்னுவதால் இதற்கு மாணிக்கமாலை என்று பெயர் வந்தது. திருவிதாங்கூர் மகாராஜா, தோவாளைக்கு வந்தபோது இந்தப் பூக்களின் வடிவமைப்பைப் பார்த்து வியந்துள்ளார். மாணிக்கக் கற்களைப் போன்று ஜொலிக்கிறதே என்று மன்னர் கூறியதால், அந்தப் பெயரே இந்த மாலைக்கு நிலைபெற்றுவிட்டது.

அரளி பூ, ரோஜா பூ, நொச்சி இலையைக் கொண்டு கைகளால் மாணிக்க மாலையை உருவாக்குவோம். அரளியில் வெள்ளை, சிவப்பு மலர்களும், ரோஜாவில் வெள்ளை, சிவப்பு மலர்களும் அதில் இடம் பெற்றிருக்கும். இந்தப் பூக்கள்தான் முத்துக்களைப் பதித்த நகை அலங்காரம்போன்ற மாணிக்க மாலையாக மாறும். இயற்கை பூக்களாலே இதை உருவாக்கினாலும் மூன்று, நான்கு நாள்களுக்கு வாடாமல் இருக்கும். சுவாமி அலங்காரம், சப்பர அலங்காரத்தில் மாணிக்கமாலை முக்கிய இடம் வகிக்கிறது.

மற்ற மாலைகளை உருவாக்குவதைவிட, மாணிக்க மாலையைக் கோப்பது சிரமம். மனதை ஒருநிலைப்படுத்தி கலை நுட்பமாக இதைத் தயார்செய்யவேண்டும்.

மாணிக்கமாலை தயாரிக்கும் வனிதாஸ்ரீ
மாணிக்கமாலை தயாரிக்கும் வனிதாஸ்ரீ

மாணிக்க மாலை தயார்செய்வது கைவினைக் கலையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நான் சில மாதங்களுக்கு முன்புதான் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்துள்ளேன். மாலை நேரங்களில் மாணிக்கமாலை தயார் செய்கிறேன். மாணிக்க மாலை தொடுக்கும் முறையைக் கற்க ஆர்வமுடன் பலர் வருகிறார்கள். ஒரு சிறிய மாணிக்கமாலை தயார் செய்ய நான்கு மணி நேரம் வரை ஆகும். சிரமம் பார்க்காமல் இந்தக் கலையை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். மாணிக்க மாலைக்குப் புவிசார்குறியீடு வழங்க அரசு முன் வர வேண்டும். கல்லூரிகளிலும் இதைப் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு