Published:Updated:

``சாமின்னு கும்புடவும் செய்றாங்க; செவுள்ளேயும் அடிக்கிறாங்க!'' - அனுமர் வேஷமிடும் சிவா

அனுமர் சிவா
அனுமர் சிவா

அனுமர் வேஷமிட்டு, வீடுகளுக்குச் சென்று ராமர் பாடல்களைப் பாடும் ஒருவரின் பகிர்வு

"சார், இந்த அட்ரஸ் எங்கிருக்கு?"

மொபைலில் இருந்த முகவரியைக் காட்டி, அந்தப் பெரியவரிடம் நான் கேட்ட இடம் சென்னை, நங்கநல்லூரில் ஒரு சின்னத் தெரு. அவர் பதில்சொல்லி முடிக்கும்போது, ராமர் பாடல் ஒன்று மிக அருகில் கேட்க, திரும்பிப் பார்த்தேன். நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தள்ளியுள்ள ஒரு வீட்டில், `அனுமன்' வேஷம் போட்டு பாடிக்கொண்டிருந்தார் அந்த இளைஞர். ஐந்து நிமிடம் அந்த வீட்டு கேட் அருகில் நின்று பாடியும், உள்ளிருந்து யாரும் வர வில்லை. இனிமேலும் அங்கு நிற்பது வீண் என்று, அடுத்த வீட்டை நோக்கிச் சென்றார்.

அனுமர் சிவா
அனுமர் சிவா

கதைகளில், திரைப்படங்களில் காட்டப்பட்ட ஆஜானுபாகுவான தோற்றத்தில் இந்த அனுமன் இல்லை. சராசரிக்கும் சற்று குறைவான உயரத்தோடும், மெலிந்த தேகத்தோடும் இருந்தார். இலைகளை வைத்து கட்டியதைப் போன்ற உடையையும், தலையில் தங்க நிறத்தில் கிரீடத்தையும் சூடியிருந்தார். நெற்றியில் நாமமும், கண்களைச் சுற்றி, அடர் சிவப்பு நிறத்தில் வட்டமும், அதில் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும் வைத்திருந்தார். அனுமனைப் போல வாய் இருக்க வேண்டும் என்பதால், எலாஸ்ட்டிக் கலந்த கறுப்பு துணியை ஒரு காதிலிருந்து மற்றொரு காதிற்குக் கட்டியிருந்தார். வாய்ப்பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தை அழகாக இழைத்திருந்தார். விழாக்களில் கெளரவிக்க அணிவிக்கும் ஜிகினா சால்வையைத் தோளில் சுற்றியிருந்தார். கால்களில் செருப்பு இல்லை. சூரியன் உச்சியை நோக்கி விரைந்துகொண்டிருந்தது.

குடும்பத்தை நடத்த காசு வேணும் இல்லையா... அதான் நான் வேஷம் போட வந்துட்டேன்.
அனுமர் சிவா

சென்னையில், இப்படி வேஷம் போட்டிருந்தவரைப் பார்த்தது ஆச்சர்யமாக இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் கிராமத்தில் புரட்டாசி அல்லது மார்கழியில் இவரைப்போல சிலர் வேஷமிட்டு வருவார்கள். அவர்களை 'பகல் வேஷக்காரர்கள்' என்று அழைப்பார்கள். வாரம் ஒருமுறை வந்து, ராமாயணக் கதைகளைச் சொல்வார்கள். சிறுவர்களாகிய நாங்கள் அவர்களின் பின்னாலேயே ஓடுவோம். மார்கழி முடிந்ததும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அரிசி, பழம், காய்கறிகள், பணம் என்று கொடுப்பதை வாங்கிச்செல்வார்கள். சமீபத்தில், ஊருக்குச் சென்றபோது விசாரித்தேன்... 'இப்போதெல்லாம் பகல் வேஷக்காரர்கள் வருவதேயில்லை' என்றார்கள். இந்த மாநகரத்தில் அப்படி ஒருவரைப் பார்த்தால் ஆச்சர்யமாகத்தானே இருக்கும்..!

"பிள்ளையார் உங்களுக்கு சாமி,எங்களுக்கு வாழ்க்கை...    
பேரம் பேசாதீங்க மக்கா"! - சிலை செய்யும் ரேகா

என்னருகில் வந்த அனுமனிடம் பேச்சுக்கொடுத்தேன். ஆனால், ரொம்பவும் தயங்கிக்கொண்டே பேசினார். ஆனால், கொஞ்ச நேரம் பேசப் பேச, தெலுங்கு கலந்த தமிழில் இயல்பான மொழியில் பேசத் தொடங்கினார்.

"எம் பேரு சிவா. ஆந்திராவுல ஒரு சின்ன கிராமம். எங்க அப்பா, ராமர் வேஷம் போட்டுட்டு ஊர் ஊராகப் போனார். அம்மாவும் அவர்கூடவே போவாங்க. இப்போ அப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சு. நடக்கக் கஷ்டப்படுறார். குடும்பத்தை நடத்த காசு வேணும் இல்லையா... அதான் நான் வேஷம் போட வந்துட்டேன். ஊரப்பாக்கம் பக்கத்துல எங்கள மாதிரி வேஷம்போடுறவங்க தங்கியிருக்கோம். காலையில வேஷம் போட்டுட்டு ஏதாவது ஒரு ஏரியாவுக்குப் போவோம். ராத்திரிக்குள்ள திரும்பவும் வந்துடுவோம்" என்று கூறிய 'அனுமன்' சிவா, அந்தத் தெருவின் முகப்பில் ஒரு வீட்டின் முகப்பில் நின்று பாடிக்கொண்டிருந்த ராமரைக் கைகாட்டுகிறார். "அதோ அவரும் எங்களோட இருக்கிறவர்தான்".

அனுமர் சிவா
அனுமர் சிவா

"நீங்க என்ன படிச்சிருக்கீங்க... வேற வேலைக்குப் போக முயற்சி செய்தீர்களா?" என்றேன். ``டென்த் வரைக்கும் படிச்சிருக்கேன். எங்க மாமா டூவீலர் சீட் ரெடி பண்ற கம்பெனி நடத்துறார். அங்கதான் வேலை செஞ்சிட்டு இருந்தேன். ஆனா, ஊர்க்காரங்க எல்லாம், வேஷம் போடாம அந்த வேலைக்குப் போறதைப் பார்த்துத் திட்டுனாங்க. பரம்பரை பரம்பரையாச் செய்யற தொழிலை விட்டுட்டானேனு குறைசொல்லிட்டே இருந்தாங்க. அதுவும் எங்க அப்பா வேஷம் போட முடியாத நிலை வந்ததும், `இது சாமி வேலை... இதை விட்டுடாதடா...'னு சொல்லிட்டே இருந்தாங்க. சரினு நானும் வேஷம் போட வந்துட்டேன். எனக்கு இரண்டு தம்பிங்க. ரெண்டு பேரும் ஆந்திராவுல சொந்தக்காரங்க வீட்டுலதான் இருங்காங்க. ஒரு தம்பிக்கு உடம்பும் மனசும் சரியில்ல. அவன் சிகிச்சைக்காக ஆந்திராவுல ஒருத்தர்கிட்ட கடன் வாங்கினோம். அதுக்கு வட்டிகட்டறதுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கு. மாசமாசம் தவறாம அனுப்பிடணும். எப்போ கடனை முடிக்கப் போறேன்னு தெரியல" என்றவர் சில நிமிடங்கள் மெளனமாக இருந்துவிட்டுத் தொடர்ந்தார்.

"எனக்கு அனுமார் சாமியை ரொம்பப் பிடிக்கும். அதனால, இந்த வேஷம் போட்டுக்கறதும் பிடிக்குது. சில வீடுகள்ல, கடவுளே நேரில் வந்தமாதிரி எங்களைப் பார்ப்பாங்க. காசு, பழம்னு கொடுப்பாங்க. சில பேரு கால்ல கூட விழுவாங்க. சாயந்தரம் ஆயிட்டா ஒரு பிரச்னை வந்துடும். சில பேரு குடிச்சிட்டு வர்றவங்க, எங்களைப் பார்த்தவுடனே திட்டுவாங்க. சாமி வேஷம் போட்டுருக்கோம்னுகூடப் பார்க்காம அடிக்ககூடச் செய்வாங்க. என்கூட இருந்த ஒருத்தரை செவுள்ளேயே அடிச்சிட்டாங்க. அப்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனாலும் இதை விட முடியாது" என்றவரை ராமர் கூப்பிட, "வாறேன் அண்ணா..." எனச் சொல்லிவிட்டு நடந்தார்.

ஜல்பா காலனி, அனுமன் மந்திர்..! தீர்ப்புக்குப் பின் அயோத்தி #VikatanInAyodhya

தலையிலுள்ள கிரீடத்தைச் சரிசெய்துகொண்டே செல்லும் `அனுமன்' சிவாவின் வெறுங்கால்களை நோக்கி, சுடும் வெயில் விரைந்து வந்துகொண்டிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு