Published:Updated:

பனை ஓலையில் கருணாநிதியின் முழு உருவச்சிலை - அசத்தும் தூத்துக்குடி பனைத்தொழிலாளி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பனை ஓலையில் கருணாநிதியின் சிலை
பனை ஓலையில் கருணாநிதியின் சிலை

"7 அடி உயரத்துல முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியோட உருவத்தைச் செய்திருக்கேன். இதைச் செய்து முடிக்க, ரெண்டு மாசமாச்சு. இதுல எனக்கு வருமானம்னு எதுவுமே இல்ல. ஆர்வம் மட்டும்தான்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பனை ஒலைகளினால் பெட்டிகள், விளையாட்டுப் பொருள்களைச் செய்பவர்கள் மத்தியில் மனித உருவங்களைச் செய்து அசத்தி வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த பனைத்தொழிலாளி பால்பாண்டி. தற்போது அவர், 7 அடி உயரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவத்தை பனையோலையில் வடிவமைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. பனையோலையில் கலைப்பொருள்கள் செய்ய ஆர்வம் பிறந்தது எப்படி என அவரிடமே கேட்டோம்.

“பனைத்தொழில்தான் எங்களோட பூர்வீகம். அஞ்சாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்கப்புறம் அப்பாவுடன் பனைத் தொழிலுக்கே போக ஆரம்பிச்சேன். வெட்டிப் போடும் பனை ஓலை, நுங்கு குலைகளைச் சேகரிக்கிறது, பதனீர் காய்ச்சுறது, கருப்பட்டி ஊத்துறது, சிப்பம் கட்டுறதுன்னு சின்னச்சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன்.

பனையோலை கலைப்பொருள் செய்யும் பால்பாண்டி
பனையோலை கலைப்பொருள் செய்யும் பால்பாண்டி

அப்படியே, கொஞ்சம் கொஞ்சமா பனை ஏறவும் கத்துக்கிட்டு, 13 வயசுல நானே தனியா பனை ஏறி கலசம் கட்டி, பதனீர் இறக்க ஆரம்பிச்சுட்டேன். தொழில் இல்லாத காலத்துல வயக்காட்டு வேலைக்கும் போவேன். நிலக்கடலைத் தோட்டத்துக்குக் காவலுக்கு இருந்த ராத்திரி நேரத்துல பனை ஓலையில பெட்டி முடையக் கத்துக்கிட்டேன். அப்படியே பாய், கட்டில், சேர்னு பின்ன ஆரம்பிச்சேன்.

எனக்கு இப்போ வயசு 66. இதுவரைக்கும் முப்பதாயிரம் பனை வரை ஏறி, இறங்கியிருக்கேன். மரத்து உச்சியில இருந்து மூணு தடவ கீழே விழுந்தும் எந்த அடியுமில்லாம தப்பிச்சுட்டேன். அஞ்சு வருசத்துக்கு முன்னால வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குறதுக்காக பைக்குல கடைக்குப் போயிருந்தப்போ எதிரே வந்த கார் மோதி இடுப்பு, கால்பகுதியில பலமா அடிபட்டுச்சு. 'இனிமேல் சைக்கிள், பைக் ஓட்டக்கூடாது. ரொம்ப தூரம் நடக்க கூடாது. பனைமரம் ஏறவேக் கூடாது'ன்னு டாக்டர் சொல்லிட்டார். ரெண்டு வருசம் சும்மா இருந்து பார்த்தேன். ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்குமா? பனைக்குப் பனை ஏறி இறங்கிட்டு இருந்தவனை ஒத்த ரூமுக்குள்ள உட்கார்ந்து ஓய்வெடுங்கன்னு சொன்னா எப்படிய்யா இருக்க முடியும்?

பனையோலையில் கருணாநிதி சிலையுடன் பால்பாண்டி
பனையோலையில் கருணாநிதி சிலையுடன் பால்பாண்டி

ஒரு வருசம் வரைக்கும் பெட்டி முடைஞ்சேன். பெட்டிக்குப் பதிலா ஏதாவது உருவங்களைச் செய்து பார்க்கலாமான்னு எனக்குத் தோணுச்சு. பேரன், பேத்திகளுக்கு விளையாட முதல்ல பொம்மை செய்தேன். அதுக்கே ஒரு நாள் முழுவதும் ஆயிடுச்சு. தொடர்ந்து, வில்லு வண்டி, விமானம், ஒட்டகம், யானை, குதிரை, திருச்செந்தூர் கோயில் கோபுரம், தேவாலய கோபுரம், தாஜ்மஹால், கலப்பை ஏந்திய விவசாயி, உழவு விவசாயி, ஓலைச் செருப்புன்னு என் மனசுல நெனச்சதை எல்லாம் செய்ய ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பதான் மனித உருவங்களைச் செய்தா என்னன்னு தோணுச்சு. மறைந்த தலைவர்கள்ல எனக்கு காமராஜர் ரொம்பப் பிடிக்கும். அதனால, காமராஜரையே டெஸ்டுக்கு எடுத்துக்கிட்டேன். முதலில் கால்பகுதியை செஞ்சு முடிச்சேன். தொடர்ந்து இடுப்புப்பகுதி, உடல்பகுதி, கை, மணிக்கட்டு, தலைப்பகுதி என ஒவ்வொரு பாகமாகச் செய்து, கடைசியா எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்தேன். ஜவுளிக்கடையில வேட்டி, சட்டை வாங்கிப் போடலாம்னு நினைச்சேன். அப்பறம்தான் அதையும் ஏன் ஓலையில செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. அதுக்கு ஏத்ததுபோல ஓலையைப் பக்குவமா கிழிச்சு செய்தேன். அவரோட பிறந்தநாளில் வீட்டுலயே காட்சிப்படுத்தினேன்.

பனையோலையில் செய்த கலைப்பொருள்கள்
பனையோலையில் செய்த கலைப்பொருள்கள்
தூத்துக்குடி: பனை ஓலையில் 7 அடி உயர ஜெயலலிதா சிலை... அசத்தும் பனைத்தொழிலாளி!

அதுக்குப்பிறகு அப்துல் கலாம் ஐயா உருவம் செய்தேன். இப்போ 7 அடி உயரத்துல முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியோட உருவத்தைச் செய்திருக்கேன். இதைச் செய்து முடிக்க, ரெண்டு மாசமாச்சு. இதுல எனக்கு வருமானம்னு எதுவுமே இல்ல. ஆர்வம் மட்டும்தான். இதுவரைக்கும் 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் செய்திருக்கேன். சின்ன வயசுல பனைத்தொழிலுடன் சேர்ந்து கத்துக்கிட்ட வைத்தியத் தொழிலையும் செய்துட்டு வர்றேன். பாம்புக்கடி, தேள்கடி, விஷக்கடிக்கு பார்வை பார்க்க வருபவர்கள் தரும் பணத்தை வச்சுதான் ஓலை வெட்டுதல், பெயிண்ட், கலைப்பொருள்களை வாங்கிக்குறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு