Published:Updated:

ரவுடிகளுக்கு டிமிக்கி, ரகசிய பூஜை, மரண பயம்... அனுபவம் பகிரும் விகடன் புகைப்படக்காரர்கள்!

world photography day
Photo Story
world photography day

"அப்போது என்னை யாரோ கண்காணிப்பதுபோல் தோன்றியது. அங்கிருந்து தப்பி ஒடிவிட்டேன். உயிர்பயம் என்றால் என்ன என்று அப்போது தெரிந்தது." #WorldPhotographyDay


ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்!

இன்று, சர்வதேச புகைப்பட தினம். அதைக் கொண்டாடும் விதமாக, விகடன் புகைப்பட நிபுணர்கள், பணியின்போது தங்களுக்கு நேர்ந்த சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

ஆர்.எம்.முத்துராஜ், விருதுநகர்

Jallikattu
Jallikattu
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள முத்துராமலிங்க புரத்தில், குடிநீர் சம்பந்தப்பட்ட புகைப்படம் எடுப்பதற்காகச் சென்றிருந்தேன். ஆற்றுப் பகுதிக்குச் சென்று, அங்கு ஊற்று தோண்டி நீர் எடுக்கும் காட்சியைப் படமாக்க எண்ணியபோது, என்னிடம் 50 mm லென்ஸ் மட்டுமே இருந்தது. அங்கு வந்த மற்றொரு நண்பர், இதைப் படமாக்க வைடு லென்ஸ் கொடுத்ததால் இந்தப் படம் உருவானது.

பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்தபோது, ஊடகவியலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கேலரியை விட்டு கீழே இறங்கி, வேலிக் கம்பிகளின் இடையில் கேமராவை நுழைத்து எடுத்த படம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏ.கே.தனம், புதுச்சேரி

புதுச்சேரி அரிக்கன்மேடு
புதுச்சேரி அரிக்கன்மேடு

புதுச்சேரி அரிக்கன்மேடு பகுதியே மணலில் புதைந்துள்ளது. இந்தப் பகுதி, தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, மணல் கொள்ளையர்கள் அதிகம். நாளொன்றுக்கு மணல் கொள்ளையில் மட்டும் 30 முதல் 40 லட்சம் வரை கொள்ளையடித்துவந்தனர். மணல் அள்ளுவதோடு, பூமிக்குள் புதைந்துள்ள பழங்கால பொருள்களைக் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு விற்பனைசெய்தனர்.

இங்கு, மணல் கொள்ளையர்கள் இரண்டு பிரிவாக மோதிக்கொள்வர். இதுவரை 7 கொலைகள் நடந்துள்ளன. பத்திரிகையாளர்கள் அங்கு செல்வது கடினம். இருப்பினும், நாங்கள் அங்கு செல்ல முடிவுசெய்தோம். சதுப்புநிலக் காடுகள் வழியாகத்தான் அங்கு செல்ல முடியும்.

நானும் நிருபரும் லுங்கி அணிந்துகொண்டு மாறுவேடத்தில் கேமரா இல்லாமல் செல்போனை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றோம். நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கே மது அருந்திக்கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, `யார் நீங்கள்... எதற்காக இங்கே வந்தீர்கள்’ என விசாரணை நடத்தினர். எங்களை சோதனையிட்டனர்.

`சதுப்பு நிலக் காடுகளில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த நண்டுகள் வாங்குவதற்காக வந்திருக்கிறோம்’ என்றோம். `சரி, போயிட்டு உடனே வந்துருங்க’ என அனுப்பினர். அவர்களுக்குத் தெரியாமல் எங்கள் செருப்பில் பதுக்கி வைத்திருந்த செல்போன் மூலம், அங்கிருந்த படங்களை ரகசியமாகப் பதிவுசெய்துகொண்டு திரும்பினோம்.

இந்தச் செய்தி மற்றும் புகைப்படங்கள் ஜூனியர் விகடன், விகடன்.காமில் வெளிவந்தன. செய்தி வெளிவந்தபின், அரசு அந்தப் பகுதிக்கு சீல் வைத்தது. இப்போது, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த நிகழ்வு வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று.

புதுச்சேரி மக்களின் தாகம் தணிக்கும் ஊசுட்டேரி ஏரி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றி வறண்டு காணப்பட்டது. நண்பருடன் ஏரியைப் புகைப்படம் எடுக்கச் சென்றோம். ஏரியின் வறண்ட பகுதியைப் படம்பிடிக்க வேண்டுமெனில், 80 அடி நீளம், 30 அடி ஆழமுள்ள சேறும் சகதியும் நிறைந்த நீர்நிலையைக் கடக்க வேண்டும். கேமராவை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். 15 அடி தூரம் சென்றதும், நான்கு அடிகளுக்கு கால்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன. நண்பர் கொடுத்த துடுப்பின் உதவியுடன் வெளியே வந்தேன்.

ஊசுட்டேரி ஏரி
ஊசுட்டேரி ஏரி

எப்படியாவது இந்தப் புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில், பெரிய கயிற்றை மரத்தில் கட்டி, இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, அந்த நீர்நிலையைக் கடந்து, ஏரியின் வறண்ட பகுதியைப் படம்பிடித்தேன்.


ரா.ராம்குமார், நாகர்கோவில்

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சசிகலா, நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பூஜை செய்ய இருப்பதாகத் தகவல் வந்தது. ஆனால், சசிகலாவின் வருகை ரகசியமாக இருந்தது. அவர் தங்கியிருப்பதாகச் சொன்ன ஹோட்டலில், இரவு 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை காத்திருந்தேன். கோயில்கள் அதிகாலைதான் திறப்பார்கள் என்பதால், சசிகலா வர வாய்ப்பு உள்ளது என்று எண்ணி காத்திருந்தேன்.

அதிகாலை 2.45 மணிக்கு சசிகலா வருவதற்கான சூழல் தெரிந்தது. ஹோட்டல் வரவேற்பு அறைகளில் விளக்குகள் எரியத் தொடங்கின. நானும் கேமராவுடன் தயாரானேன். உயர் ரக கார் ஒன்று ஹோட்டல் முன்பு வந்து நின்றது. டிரைவர் பெரிய பூ மாலையை காரில் மாட்டினார். சசிகலா, உள்ளே இருந்து பட்டுச் சேலையில் வெளியே வந்தார். நான் தூரத்தில் நின்றதால் அவரை சரியாகப் பார்க்க முடியவில்லை. அவர் எந்தக் கோயிலுக்கு செல்கின்றார் என்ற தகவலும் இல்லை. அந்தக் காரை என்னால் பைக்கில் பின் தொடர முடியாது என்பதால், ஒரு அனுமானத்தில் நாகராஜா கோயிலுக்குச் சென்றேன்.

Sasikala
Sasikala

குறுக்குச் சாலையில் சென்று, அந்தக் கோயில் முன்பு கேமராவுடன் தயாராக நின்றுகொண்டேன். அதிகாலை 3.45 மணி அளவில் சசிகலாவின் கார் கோயில் முன்பு வந்து நின்றது. காரின் முன் இருக்கையில் இருந்து இறங்கிய நபர், விரைவாக வந்து `நீ யாரு, ஏன் படம் எடுக்கிற’ என்று என்னை அடிக்காத குறையாக இழுத்துத் தள்ளிவிட்டு, சசிகலாவை கோயிலுக்குள் அழைத்துச் சென்றுவிட்டார். சசிகலாவை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே வந்து, அவர் என்னிடம் வாக்குவாதம்செய்தார்.

`எப்படியாவது சசிகலாவை படம் எடுத்தே தீர வேண்டும்’ என்று கேமராவில் ஃபிளாஷ் மாட்டி தயாராக நின்றேன். சசிகலா தரிசனம் முடிந்து வெளியே வந்தார். ஃபிளாஷ் அவர் முகத்தில் பட 4, 5 படங்கள் எடுத்தேன். அவரின் பாதுகாவலர், கேமேராவை கை கொண்டு தடுத்தார். இருந்தாலும் அந்தத் தள்ளுமுல்லுக்கு இடையே படங்களை எடுத்தேன்.

அடுத்து, அவரின் கார் கிருஷ்ணன் கோயிலுக்குப் பறந்தது. அங்கேயும் அதே பாதுகாவலர், அதே சண்டை. இருந்தும், சில படங்கள் எடுத்தேன். எந்த மீடியாவும் இல்லை. அதிகாலை நேரத்தில், ஜூனியர் விகடனுக்கான எக்ஸ்க்ளூசிவ் படங்கள் கிடைத்தன.


ஈ.ஜெ.நந்தகுமார், மதுரை

Sagayam IAS
Sagayam IAS

சகாயம் IAS கிரானைட் வழக்கை விசாரிக்க மதுரைக்கு வந்தார். அவருடன் ஒன்றரை ஆண்டுகளாக காடு, மலை, சுடுகாடு என சுற்றித்திரிந்தேன். சுடுகாட்டில் பிரியாணி சாப்பிட்டு என் பிறந்தநாளைக் கொண்டாடினேன். அது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

அழகிரியின் வலதுகையான அட்டாக் பாண்டி, பல வருடங்கள் தலைமறைவாக இருந்து, பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, முதல்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின், ஓராண்டுக்கு மேலாக அவரைப் பின் தொடர்ந்தோம். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் ஜூனியர் விகடனில் அட்டைப் படமாக வந்தது மகிழ்ச்சியான தருணங்கள். இந்த வழக்கை பிரத்யேகமாகப் பதிவுசெய்ததை அடுத்து, காவல்துறையினர் எங்களைப் பின் தொடர்ந்தனர்.

மதுரையின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் திருவிழாவை ஐந்து ஆண்டுகளாக கவர்செய்துவருகிறேன். முக்கிய நிகழ்ச்சியான, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு, இரவு 1:30 மணி அளவில் ஆற்றுக்குள் சென்றுவிடுவோம். சிலிர்ப்பான அனுபவம் அது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி கிராமத்தில் தொடர்ந்து மணல் கடத்துவதாகத் தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில், நானும் ஒரு மாணவ பத்திரிகையாளரும் அந்தக் கிராமத்திற்குச் சென்றோம். அங்கு ஒரு கோயில் இருந்தது. நானும் மாணவ பத்திரிகையாளரும் அந்த கோயிலைப் பற்றி சக்தி விகடனிற்காக தகவல் சேகரிப்பதுபோல் விசாரித்து, அந்தக் கோயிலின் அருகில் மணல் கொள்ளை நடப்பதை உறுதிசெய்துகொண்டோம்.

அந்த மாணவ பத்திரிகையாளரை பாதுகாப்பாக அந்த கோயிலில் அமரச் சொல்லிவிட்டு, நான் மட்டும் அந்த கண்மாய்க்குள் இறங்கி மணல் கொள்ளை நடக்கும் இடத்திற்குச் சென்று, அங்கு இருக்கும் முட்புதரில் ஒளிந்துகொண்டு படம் எடுத்தேன். அப்போது, என்னை யாரோ கண்காணிப்பதுபோல் தோன்றியது. அங்கிருந்து தப்பி ஒடிவிட்டேன். உயிர்பயம் என்றால் என்ன என்று அப்போது தெரிந்தது.


உ.பாண்டி, ராமநாதபுரம்

ரவுடிகளுக்கு டிமிக்கி, ரகசிய பூஜை, மரண பயம்... அனுபவம் பகிரும் விகடன் புகைப்படக்காரர்கள்!

புகைப்படத்துறை என் வாழ்வில் நிறைய அனுபவங்களை கற்றுத் தந்துள்ளது...

வேதனையும் கண்ணீரும் மட்டுமே அதிகம் சூழ்ந்துள்ள மக்களின் வாழ்க்கையைப் பல கோணங்களில் படம் எடுத்தாலும், பாவப்பட்ட இந்த சமூகத்தை நினைத்து பல முறை மனத்தால் அழுதுள்ளேன்.


எல்.ராஜேந்திரன், திருநெல்வேலி

சண்முகவேலு- செந்தாமரை
சண்முகவேலு- செந்தாமரை

பசுமை விகடனில் வந்த அட்டைப் படம், சண்முகவேலு- செந்தாமரை குடும்பத்துக்கு மகிழ்ச்சி அளித்தது. அதன்பின் நடந்த கொள்ளைச் சம்பவம் மனதை கஷ்டப்படுத்தியது. இரு நிகழ்வுகளிலும் அந்தப் படம்தான் பிரதானம். தமிழகமெங்கும் டிரெண்டானது. சந்தோஷம் கலந்த, மனத்தை பாதித்த நெகிழ்ச்சியான படம் அது.

பல கி.மீட்டர்கள் நடந்துவந்து, உடைந்த குழாயில் குடிநீர் பிடிக்கும் குடும்பம். இதுவும் என்னைப் பாதித்த படம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியான கந்தையாவின் குடும்பத்தினர் கதறி அழுததைப் படம்பிடித்த நிமிடங்கள், காலத்துக்கும் என்னைக் கலங்கடிக்கும்.

அதேபோல, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடலைப் பார்த்து, அவரது மனைவியும் குடும்பத்தினரும் கதறி அழுத காட்சி, அவ்வளவு எளிதில் நினைவிலிருந்து நீங்காது.


எம்.விஜயகுமார், சேலம்

ரவுடிகளுக்கு டிமிக்கி, ரகசிய பூஜை, மரண பயம்... அனுபவம் பகிரும் விகடன் புகைப்படக்காரர்கள்!

விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ ஃபைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட, துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தைப் பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது. அந்த மனிதர்களின் பாசாங்கில்லாத வாழ்க்கை, எதிர்பாராத அழகியலைத் தன்னுள் புதைத்துவைத்திருக்கிறது. அதை ஆழ்ந்து சுவாசித்துப் பதிவுசெய்கிறேன்.

காலத்தை தன் மேனியில் உயிரோட்டமாகச் சுமந்துகொண்டிருக்கிற ஒரு பழங்குடி, ஒரு புகைப்படத்தின் வாயிலாக வரலாற்றாவணம் ஆகிறார். தன் குழந்தையை மருத்துவமனை அலட்சியத்துக்குத் தின்னக் கொடுத்த ஒரு தாயின் கதறல், ஒரு புகைப்படத்தில் பட்டுத்தெரித்து, காண்போர் இதயத்தை ஊடறுக்கிறது. துயரம், மனித மனங்களை சுழற்றியடிக்கிறது. மனசாட்சியை உலுக்குகிறது. அம்பலப்படுத்துகிறது.

சேலம் அரசு மருத்துவமனையில், டெங்குவால் இறந்துபோன தன் குழந்தையின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச்செல்ல வாகனம் இல்லாமல் காத்திருந்த ஏழைத்தாய், தன் குழந்தையின் சடலத்தை தோளில் போட்டிருக்கும் புகைப்படம், அட்டைப்படமாக வந்து பலரின் கவனத்தைப்பெற்றது. யார் யாரோ என்னை அழைத்து பாராட்டினார்கள். இப்படியான பாராட்டுகளை எதிர்கொள்ளும்போது, எனக்கு இன்னும் வலி அதிகமாகிறது. அந்தப் பெண்ணின் துயரத்தையும், அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாத மோசமான சூழலையும் ஆவணப்படுத்துவதே அந்தப் புகைப்படம் நிகழ்த்தும் விளைவு. வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெறுவதென்பது குற்ற உணர்வையே உருவாக்குகிறது.

ஓர் எளிய மனிதனின் வலியை ஆவணப்படுத்திவிட்டு ஆனந்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? அப்படியான கணங்கள்தான் என் புகைப்பட அனுபவத்தில் அழிக்க முடியாத படிமங்களாகத் தங்கிவிடுகின்றன. இப்படியான எளிய கதைகள் என்னிடம் நிறைய இருக்கின்றன. சாகசங்களாகச் சொல்ல எதுவும் இல்லை!


கே.அருண், நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தின் உள்ளே இறங்கி படம் எடுத்தது, பயமும் ஆச்சர்யமும் கலந்த அனுபவம். இந்தப் படம் எடுக்க 20 கி.மீ வனப்பகுதிக்குள் நடந்துசென்றோம். இரவு முழுக்க வனப்பகுதிக்குள் தங்கியது தனி அனுபவம்.

கரக்கையூர் பாறை ஓவியம் குறித்த செய்தியை முதலில் பதிவு செய்தது நாம்தான். அதைத் தொடர்ந்து மற்ற ஊடகங்கள் பதிவு செய்தன. நமது செய்தியின் எதிரொலியாக தொல்லியல்துறை மற்றும் வனத்துறை அந்தப் பகுதியை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பொதுமக்கள் செல்ல தடை விதித்தது.

கரக்கையூர் பாறை ஓவியம்
கரக்கையூர் பாறை ஓவியம்
கரக்கையூர் பாறை ஓவியம்
கரக்கையூர் பாறை ஓவியம்
ரவுடிகளுக்கு டிமிக்கி, ரகசிய பூஜை, மரண பயம்... அனுபவம் பகிரும் விகடன் புகைப்படக்காரர்கள்!
ரவுடிகளுக்கு டிமிக்கி, ரகசிய பூஜை, மரண பயம்... அனுபவம் பகிரும் விகடன் புகைப்படக்காரர்கள்!
ரவுடிகளுக்கு டிமிக்கி, ரகசிய பூஜை, மரண பயம்... அனுபவம் பகிரும் விகடன் புகைப்படக்காரர்கள்!
ரவுடிகளுக்கு டிமிக்கி, ரகசிய பூஜை, மரண பயம்... அனுபவம் பகிரும் விகடன் புகைப்படக்காரர்கள்!
ரவுடிகளுக்கு டிமிக்கி, ரகசிய பூஜை, மரண பயம்... அனுபவம் பகிரும் விகடன் புகைப்படக்காரர்கள்!

இந்தப் படத்தை முதலில் நாம்தான் பதிவுசெய்தோம் என நினைத்தபோது, 40 ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்தவிகடன் இதழில் அட்டைப் படமாக வெளிவந்த விவரம் ஆச்சர்யம் அளித்தது.