ஒத்தவீடு! - ஒரு சுவாரஸ்ய குடும்ப வரலாறு #MyVikatan
``வரலாறு என்பது மனிதன் நினைவுகளின் அடிப்படையில் காலத்தால் எழுதப்பட்ட ஒரு சுழற்சி கவிதை" என்றார் மாபெரும் கவிஞர் ஷெல்லி.

நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலிருந்தே நம்மில் பலபேருக்கு வரலாறு என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் வரலாறு படிப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும். நாம் எத்தனையோ வரலாறுகளைப் படித்திருப்போம். என்றாவது ஒரு நாள், நம் குடும்பவரலாற்றைப் பற்றி நம் முன்னோர்களிடம் கேட்டதுண்டா? ஒவ்வொருவருக்கும் தம் குடும்பத்தைப் பற்றிய வரலாறு உண்டு. நம் முன்னோர்களின் கடந்தகால நிகழ்வுகளை வைத்து கட்டமைக்கப்படுவதுதான் நம் குடும்ப வரலாறு.
குடும்ப வரலாற்றை தெரிந்துகொள்வதன் மூலமாகவே நாம் நம் தனித்துவத்தை உணர முடியும். கூடிவாழ்தல், விட்டுக்கொடுத்தல், பகிர்தல், துன்பத்தில் தோள்கொடுத்தல், ஒழுக்கம் பிறழாமை, கடின உழைப்பு, நல்வழிகாட்டுதல் என எத்தனையோ நல்ல பண்புகளை நம் குடும்ப வரலாறு நமக்கு உணர்த்தும்.

இன்று கூட்டுக்குடும்பங்கள் அருகிவருகின்றன. அன்று நமக்கு குடும்பக்கதை சொல்ல நம் தாத்தா பாட்டி இருந்தனர். ஆனால், இன்று தனிக்குடும்பமாக வாழும் நாம்தான், நம் குழந்தைகளுக்கு, நம் குடும்ப பாரம்பர்யத்தையும் குடும்ப வரலாற்றையும் கதைகளாய் எடுத்துக்குக் கூற வேண்டும். சிங்கம் புலி கதைகளை மட்டுமே குழந்தைகளுக்குக் கூறாமல் நம் குடும்ப வேர்களாக இருக்கும் நம் பூட்டன் பூட்டி, பாட்டன் பாட்டி, தாத்தா அப்பத்தாவைப் பற்றியும், அவர்கள் வாழ்ந்த அந்த அழகான வாழ்க்கையைப் பற்றியும் நம் குழந்தைகளுக்கு கதைகளாய் கூறுவோம்.
எங்கிருந்தோ நன்னெறிக்கதைகளைப் பதிவிறக்கம் செய்து குழந்தைகளுக்கு கூறும் நம்மில் எத்தனைபேர் நம் குடும்பக்கதைகளை நம் குழந்தைகளுக்கு கூறுகின்றோம் என்று தெரியவில்லை. நம் நாட்டின் கலாசாரம் பண்பாடுகளைப் பார்த்து வியக்கும் வெளிநாட்டவர்கள்கூட தங்கள் குடும்ப வரலாற்றை அறிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். காலத்தில் முற்பட்ட, மிக உயர்ந்த கலாசாரத்தல் கட்டமைக்கப்பட்ட இந்திய நாட்டில் வாழும் நாம், நம் குடும்ப வரலாற்றை நம் குழந்தைகளுக்குக் கூறுவோம். வேர்களை அறிந்தால்தான் விருட்சம் விருத்தியடையும் என்பதை உணர்த்துவோம்.
எங்கள் அம்மா எங்களுக்கு சிறுவயதிலிருந்தே அவர்கள் குடும்பத்தைப்பற்றி நிறைய சொல்வார். ஊரில் எங்கள் குடும்பத்தைக் கடகார் (கடைக்காரர்) குடும்பம் என்று சொல்வார்கள். என் தாய்வழிப்பாட்டனார் நல்ல உழைப்பாளியாம். எந்தவொரு காரியமென்றாலும் வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படுவாராம். எங்கள் ஊரில் காய்கறிகள், பலசரக்கு வாங்க வேண்டுமென்றால் ஆற்றைக் கடந்து வந்து மெயின் ரோட்டில் உள்ள அடுத்த ஊரில்தான் வாங்க வேண்டுமாம். மக்கள் படும் அவதியைப் பார்த்து, விவசாயியான அவர் வயக்காட்டு வேலைகளுக்கு நடுவிலேயே பலசரக்கு கடையையும் ஆரம்பித்திருக்கிறார். மக்களிடையே அவர் கடை நல்ல வரவேற்பைப் பெற்று வியாபாரம் அமோகமாக நடந்ததாம். அப்போதெல்லாம் (1930-க்கு முன்) மக்கள் பண்டமாற்று முறையின் மூலம், வாங்கும் பொருள்களுக்கு ஈடாகத் தங்கள் வயலில் விளையும் நெல்லைக் கொடுத்துள்ளனர்.

வியாபாரம் பெருகியதால் வீடெங்கும் நெற்குவியலாக இருக்குமாம். நெல்லைக் கொட்ட வீட்டில் இடப்பற்றாக்குறை இருந்ததால் ஊருக்கு சற்று தள்ளி இடம் வாங்கி மாடிவீடு கட்டினாராம். அந்த வீட்டைச்சுற்றி எந்த வீடும் அப்போது இல்லையாம். அதனால் அதற்கு பேரே ஒத்தவீடு என்று வந்து விட்டது. பிறகு எத்தனையோ வசதியில்லாதவர்கள் அவர் வீட்டுக்கு அருகில் வசித்துக்கொள்ள இடமளித்து, அவர் வயலில் வேலையும் கொடுத்தார் என்பார் என் அம்மா. அல்லும் பகலும் ஓய்வின்றி நன்முறையில் கடுமையாக உழைத்து, ஊரில் அவருக்கென்று தனி மரியாதையைப் பெற்று, பலதலைமுறைக்கு சொத்து வைத்து வாழ்வில் வெற்றிபெற்றாராம் என் பாட்டனார். இதவற்றையெல்லாம் நாங்கள் சிறுவயதில் சுவாரஸ்யமாகக் கேட்போம். எங்கள் பாட்டன் வாழ்விலிருந்து, வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு `மாத்தி யோசி' எனும் நுட்பத்தை எப்படிக் கையாண்டார் என்ற திறனை தெரிந்துகொண்டோம். தான் முன்னேறியதோடு மட்டுமல்லாமல் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் உதவிய அவரது உயர்ந்த பண்பை நாங்கள் எம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துகிறோம்.
எங்கள் ஊர் மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வைகையாற்றின் அக்கரையில் உள்ளது. அந்தக் காலத்தில் எல்லாம் போக்குவரத்து வசதி மிகவும் குறைவு. சிலபேர் மட்டும்தான் மாட்டுவண்டி, கூட்டு வண்டி வைத்திருப்பார்கள். எங்கள் தாத்தா வீட்டுக்கு அருகில் வசித்த பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். நெடுந்தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
என்ன செய்வது என்று மக்கள் தயங்கிக்கொண்டிருந்த வேளையில் எங்கள் தாய்மாமாதான் அந்த அவசரவேளையில் வண்டிக்கட்டிக்கொண்டு அந்தப் பெண்ணை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். போகும் வழியிலேயே அந்தப் பெண் இறந்துவிட்டார். (அந்தப் பெண் பேயாக அலைந்து ஆற்றைக் கடக்கும் பலபேரை பிடிப்பதாகவும், அப்படி பேய்பிடித்தவர்கள் பேயை விரட்ட கோடங்கியிடம் போகும்போது பேய் இறங்கிவந்து என் உயிரைக் காப்பாற்ற நினைச்ச ஒத்தவீட்டுக்காரர்களை நான் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன், நன்றியோடும் இருப்பேன் என்றும் அந்தப் பெண் கூறியதாகச் சொல்வார்கள். அவையெல்லாம் ஒரு தனிக்கதை.)

இவற்றையெல்லாம் சிறுவயதில் கேட்க கதைபோல் இருக்கும். ஆனால், இந்தச் சம்பவத்திலிருந்து என் குடும்பத்தின் முன்னோர்கள் பிற உயிரைத் தன்னுயிராய் நினைத்து உதவிய பண்பு வெளிப்படுகிறது. இன்றைக்கு நடுரோட்டில் யார் அடிபட்டுக் கிடந்தாலும் கண்டும்காணாமல் கடந்து செல்கின்ற மனிதர்கள் வாழும் இந்தச் சமுதாயத்தில் வளரும் எங்கள் குழந்தைகள், என் குடும்பக்கதையின் மூலமாக அச்சமின்றி துணிந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சக உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்ற நன்னெறியைத் தெரிந்து கொள்கின்றனர்.
மேலும் ஐப்பசி, கார்த்திகை அடைமழை பொழியும் மாதங்களில் ஊரைச்சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமென்பதால் காய்கறிகளின் தேவையை சமாளிக்க கோடையிலேயே கொத்தவரங்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல் போன்றவற்றை முன்னேற்பாட்டுடன் தயாரித்து தம் குடும்பத்தின் உணவுத்தேவையை நிறைவேற்றுவர் எம் குடும்பப் பெண்கள். வீட்டைச்சுற்றி ஆளை மூழ்கடிக்கும் அளவுக்குத் தண்ணீர் ஓடுமாம் அந்த நேரங்களில் அருகில் உள்ள குடிசைவீடெல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டதாம்.
அரசாங்கம் ஹெலிகாப்டரில் உணவுப்பொட்டலங்களை எப்போது போடும் என்று பல மக்கள் இயலாமையில் தவித்தபோது அவர்களுக்குத் தங்க இடமளித்து, உணவளித்து காப்பாற்றினார்களாம் எம் முன்னோர். மேலும், தம் குழந்தைகளைப் போன்று வளர்த்த ஆடுமாடுகளின் நலத்தையும் கருத்தில் கொண்டு வெள்ளம் குறைவாக வரும் நேரத்திலேயே கால்நடைகளை மேடான இடத்தில் கட்டிவிட்டு அதன் பசியைப்போக்க முன்கூட்டியே அங்கு விளைவித்து வைத்திருக்கும் தீவனங்களைப் போட்டுவிட்டு அதன் நினைப்புகளை சுமந்துகொண்டு, வெள்ளம் எப்போது வடியும், தன் ஆடுமாடுகள் எப்படி இருக்கும் என்ற கவலையோடு இருப்பார்களாம். இதையெல்லாம் கேட்கும்போது அவர்கள் ஜீவகாருண்யம் தெரிகின்றது.

இந்த நிகழ்வுகளின் மூலமாக எம் முன்னோர்கள் இக்கட்டான காலகட்டங்களில் எப்படி சமயோசிதமாக நடந்துகொண்டனர் என்று தெரிந்துகொள்ளலாம். மேலும், வைகை ஆற்றில் வெள்ளம் வரும்போது எம்மக்கள் அந்த வெள்ளப் பெருக்கில் தம்மைக் காத்துக்கொள்வதற்காக மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இயற்கையோடு இயைந்தும், காலத்தை உணர்ந்தும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் எமக்குத் தெரிகிறது. இன்று கிராமத்தில் வாழ்பவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், நகரத்தில் வாழும் எங்கள் குழந்தைகள் இந்நிகழ்வுகளிலிருந்து, இயற்கை பேரிடர் காலங்களில் எம்மக்கள் யாரையும் நம்பாமல், தம்மைத் தாமே எப்படி தற்காத்துக்கொண்டனர் என்ற திறனை கற்றுக் கொள்கின்றனர் .
நம் முன்னோர்கள் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதை நம் குழந்தைகளிடம் கூறுவது முக்கியமல்ல. எவ்வளவு நல்ல பழக்க வழக்கங்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர் என்று நம் குழந்தைகளுக்குக் கூற வேண்டும். பாலியல் குற்றங்கள் பெருகிவரும் இந்தக் காலங்களில் நாம் நம் ஆண்குழந்தைகளுக்குப் பெண்களை, நம் குடும்பங்களில் எப்படி மதித்து நடத்தினர் என்று கூற வேண்டும். எங்கள் வீட்டில் பெண்களை வாடி போடி என்றெல்லாம் அழைக்க மாட்டார்கள். வா ஆத்தா, போ ஆத்தா என்றுதான் தன் தாயை (ஆத்தா) அழைப்பதுபோல அன்போடு அழைப்பார்கள். அனைத்து பெண்களையும் தன் தாயைப்போல மதிக்க வேண்டும் என்பர்.
எங்கள் வீட்டில் எங்கள் தாத்தா எந்தவொரு முடிவும், எங்கள் அம்மாச்சியைக் கேட்காமல் எடுத்ததில்லை என்பார் என் அம்மா. பெண்களை அடுக்களையில் அடக்கிவைத்திருந்த அந்தக் காலத்திலேயே பெண்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தர வேண்டும் என்று நினைத்தவர்கள் என் முன்னோர்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெறுவதற்கான சட்டம் வருவதற்கு முன்னரே தன் தங்கைக்கு சொத்தில் சமபங்கு கொடுத்தனர். பெண்பிள்ளைகள் கண்ணீர் சிந்தினால் பரம்பரைக்கு ஆகாது என்று அவர்களைக் கண்ணும்கருத்துமாகப் பாதுகாத்து வளர்த்தனர்.

இப்போதெல்லாம் குடும்பத்தில் ஏற்படும் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட விட்டுக்கொடுக்க முடியாமல் இருக்கும் நாம், நம் அம்மா, பாட்டிகள், எப்படி குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மனஸ்தாபங்களின்போது விட்டுக்கொடுத்து நடந்தனர் என்று கேட்டுத் தெரிந்துகொண்டால் எந்தச் சண்டை சச்சரவும் நம் குடும்பங்களுக்குள் வராது.
மேலும், குடும்ப வரலாற்றை நாம் தெரிந்துகொள்வதன் மூலமாக நம் பரம்பரையில் நம் முன்னோர்களுக்கு இருந்த நோய்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். சர்க்கரை வியாதி, கேன்சர், ஆஸ்துமா, மனநோய்கள், இதயநோய்கள் போன்றவை முன்னோர்களிடம் இருந்திருந்தால் அது அடுத்த தலைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
நம் குடும்ப வரலாறு பற்றி தெரிந்து வைத்தோமென்றால், நாம் முன்னெச்செரிக்கையோடு செயல்பட்டு அந்நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். எவ்வளவோ வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கிய நம் குடும்ப வரலாற்றை நாம் குழந்தைகளுக்குக் கூறும்போது இன்று நாம் அனுபவிக்கும் எதுவும் எளிதில் கிடைத்திடவில்லை, நம் முன்னோர்களின் தியாகத்தாலும் உழைப்பாலும் மட்டுமே நமக்கு இந்த நல்வாழ்க்கை வசமாகியுள்ளது என்று உணர்ந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மேலும், குடும்பநிகழ்வுகளை நாம் கூறுவதன் மூலமாக வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் வந்த காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி நிதானமாக முடிவெடுத்தார்கள் என்றும் அறிகிறார்கள்.

எந்தப் புனைவுகளுமில்லாத நம் குடும்ப வரலாற்றை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவோம். நம் குடும்பவேர்களைப் பலப்படுத்துவோம். நம் குடும்பத்தின் வயதான மூத்தஉறவினர்களை நேரில் சென்று பார்த்து அவர்களிடம் நம் முன்னோர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டு ஆவணப்படுத்துவோம். நம் முன்னோர்களின் புகைப்படங்களைப் புதுப்பித்து வைப்போம்.
புரட்டாசி மாதம் முடிந்துவிட்டது. பித்ருக்களை வழிபட்டும் அவர்களுக்கான கடன்களையும் மகாளய அமாவசையில் செய்திருப்போம். எத்தனை பேருக்கு நம் ஏழுதலைமுறையின் முன்னோர்களின் பெயர்கள் தெரியும் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி. தெரியவில்லையென்றால் அறிய முற்படுவோம்.
- அனிதா மோகன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/