Published:Updated:

சென்னையில் ஒருநாள்! #MyVikatan

Representational Image
Representational Image

ஒவ்வொரு நிமிடமும் ரசனையோடு அனுபவிக்கும் என் கிராம வாழ்க்கையிலிருந்துவிட்டு இந்த நகர வாழ்வின் வேகத்தில் வாழத் தொடங்குவது சற்று கடுமையானதாகத்தான் உள்ளது.

இதோ மெல்லமாய் விடைபெற்று வந்துவிட்டேன். எப்பொழுதுமே ஒரு குழந்தையாகவே பார்த்தாலும், இப்போது கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக, குடும்பப் பொறுப்புகளைச் சுமந்த குழந்தையாக என்னைப் பார்க்கும் என் தாயின் கனவுகளையும் இதுவரை தன்னை அடையாளமாகக் கொண்ட தன் மகன் இனி தனக்கு அடையாளமாக மாறப் போகிறான் என்ற என் தந்தையின் நியாயமான ஆசையினையும் மனதில் சுமந்து கொண்டு, கண்ணுக்கு கண்ணாக என்னை வளர்த்த தாத்தா பாட்டி, எனக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் என் அக்கா தம்பி, மகன் போல என்னைத் தாங்கிப்பிடித்த என் வீட்டு கொய்யா மரம், என்னைத் தொந்தரவு செய்து விளையாடும் என் செல்ல நாய்க்குட்டி, என்னுடைய மகிழ்வான தருணங்களை அதிகமாகப் பார்த்த என் பள்ளிக்கூடம், இன்னும் பல அற்புதமான தருணங்களை கடந்த கால நினைவுகளாக நெஞ்சில் சுமந்து கொண்டு, நான் இதுவரை சுவாசித்த மஞ்சள் காற்று நாசிகளிலிருந்து கரைந்து போக, மெல்லமாய் உப்புக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கிவிட்டேன்.

Representational Image
Representational Image

ஆம் வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரில் இன்று நான்.. ஒவ்வொரு நிமிடமும் ரசனையோடு அனுபவிக்கும் என் கிராம வாழ்க்கையிலிருந்துவிட்டு இந்த நகர வாழ்வின் வேகத்தில் வாழத் தொடங்குவது சற்று கடுமையானதாகத்தான் உள்ளது. எங்கள் ஊரின் பகல் பொழுதில் குளிரும் பனியால் தோன்றும் வெண்மையான காட்சி இங்கே புகையாலும் தூசிகளாலும் தோன்றியிருக்கிறது. எங்கள் ஊரில் தலையுயர்த்திப் பார்க்க வைக்கும் பனை மரங்களும் கம்பீரக் காட்சி தரும் அரசமரங்களும் இங்கே பிரமாண்ட கட்டடங்களாக உருவெடுத்துள்ளது.

வட்டமடித்து வானில் பறக்கும் வண்ணப் பறவைகள் இங்கே வானூர்திகளாகவும் காதுகளில் பாயும் குருவிகளின் கீச்சுக்கள் இங்கே வாகனங்களின் இரைச்சலாகவும் மாறியிருக்கின்றன. இங்கு வாகன நெரிசல்களில் வளைந்து வளைந்து நடக்கும்போது என் கால்கள் எங்கள் ஊரின் வயல் வரப்புகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அடிக்கடி பெய்யும் மழையிலும் தவறாமல் நனைந்து ரசிக்கும் எம் துள்ளல்கள், இங்கே என்றேனும் பெய்யும் மழையிலும் நனையத் தோணாமல் கழிவுக் கால்வாயிலிருந்து தப்பிக்கத் தோன்றும் பயமாக மாறியுள்ளது. தலையில் துணியைக் கட்டிக்கொண்டு காலை வயலுக்குப் போகும் ஆட்களைப் பார்த்த என் கண்கள், இங்கே முகத்தில் துணியைக் கட்டிக்கெண்டு வேலைக்குப் போகும் ஆட்களைக் கண்டு மேலும் ஒரு புதுமையை உணர்கிறது.

Representational Image
Representational Image

என் சிறு வயதில் எந்த நண்பனிடம் பழகக்கூடாது என்று என் வீட்டில் உதிர்த்த கண்டிப்பான வார்த்தைகள் அதே நண்பனிடம் எங்கள் மகனைப் பார்த்துக்கொள் என்று அன்புக் கட்டளையாக மாறிய போது வெற்றி கண்ட நட்புக்காகவும், தனித்தனி வீட்டில் வாழ்ந்த நானும் என் நண்பர்களும் இன்று ஒரே வீட்டில் இருக்கும் மகிழ்வுக்காகவும், வரப்போகும் மனைவிக்காகவும், அமைக்கப் போகும் குடும்பத்திற்காகவும், சகோதரியின் திருமணம், சகோதரனின் படிப்பு,

இவற்றையெல்லாம் விட எங்கள் ஊரில் வீதி மக்கள் எல்லாரும் ஒரே குடும்பம் போல வாழ்ந்து வந்தது மாறி, இங்கே பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட வெகுதூர மனிதர்களாக பழக்கவழக்கமின்றி பிரிந்து வாழ்கிறார்கள். இன்னும் ஒருபடி அதிகமாக, ஒரே ஒரு தொலைக்காட்சி எங்கள் ஊரையே இணைத்து அமர வைக்கும். ஆனால், இங்கே ஒவ்வொரு கைபேசியும் ஒரே குடும்ப ஆட்களையே பிரித்து வைத்திருப்பது வேதனை. இப்படியான அதிரடி மாற்றங்கள் கடினத்தின் உச்சமாக இருந்தாலும் துணிச்சலோடு இங்கே வாழ பல சுயநலக் காரணங்களுண்டு.

Representational Image
Representational Image

இதுவரை உழைத்த பெற்றோருக்கு ஓய்வு கொடுத்து அவர்களைக் காக்க வேண்டும் என்கிற பல எண்ணங்கள் கூடியிருக்கும் கனவுகளை நனவாக்கத் துடிக்கிற என்னைப் போல ஏராளமான இளைஞர்களுக்கு மத்தியில் இந்த நகரில் வாழ்வது தன்னம்பிக்கையின் மொத்த பலமும் கிடைத்த நிறைவு உள்ளத்தோடு உலவ வைக்கிறது.

சென்னை.. தனி ஊராக இல்லாது தமிழ் நாடாக உள்ளது. பல கலாசாரம் மற்றும் பண்பாடுகளைச் சுமக்கும் இந்த மண் அன்பு, பாசம், ஆசை, கோபம், பிரிவு, வலி, ஏக்கம், தனிமை, தன்னம்பிக்கை, கனவு என்று பல உணர்வுகளைச் சுமக்கும் மனிதர்கள் கூட்டத்தையும் சுமந்து கொண்டுள்ளது. என் முதல் நாள் அனுபவத்தில் இத்தனை பாடங்கள் சொல்லிக் கொடுத்த இந்த மண்ணுக்காகவே வாழ்ந்து பாருங்கள் சென்னையில் ஒருநாள்...!

- அரவிந்த ராஜா சிவகுமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல