Published:Updated:

ஒரு தேக்கு இலை... ஓர் ஓவியம்... மாதம் 50 ஆயிரம் வருமானம்! கலக்கும் நம்பிக்கை மனிதர் தீபன்

விஜய் சேதுபதியுடன் தீபன்
விஜய் சேதுபதியுடன் தீபன்

இலை வடிவமைப்பைத் தனது தொழிலாக மாற்றிக்கொண்ட தீபன், முதலீடு இல்லாமலேயே நிறைவான வருமானம் ஈட்டுகிறார்.

திறமையும் புதுமையும் இணைந்தால், வரவேற்பு நிச்சயம். அதற்கு உதாரணமான தீபன், இலைகளில் மனிதர்களின் உருவங்களை வடிவமைக்கிறார். இந்தியாவில் அதிகம் பிரபலமாகாத இந்த இலை ஓவியத்தை தனது தொழிலாக மாற்றிக்கொண்டவர், முதலீடு இல்லாமலேயே நிறைவான வருமானம் ஈட்டுகிறார். தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தீபன், தனது ஆர்ட் ஆர்வத்தை மெருகேற்றி, இலை வடிவமைப்பில் வெற்றி பெற்ற கதையைப் புன்னகையுடன் விவரிக்கிறார்.
இலை ஓவியத்துடன் தீபன்
இலை ஓவியத்துடன் தீபன்

“ஸ்கூல் படிக்கிறப்போ பென்சில் ஆர்ட் வரைவேன். பிறகு, பென்சில் கார்விங் ஆர்ட்ல (pencil lead carving art) ஆர்வம் செலுத்தினேன். அது காலேஜ் படிக்கும்வரை தொடர்ந்தாலும், தனித்துவமா ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். 2015-ல் பி.எஸ்ஸி படிச்சுகிட்டிருந்தேன். அப்போ, கனடாவைச் சேர்ந்த இலை ஆர்ட் வடிவமைப்பாளர் டெஸ்ஸி ஜென்னி மார்ஷல் (Dessie Jeanie Marshall) என்ற பெண்ணைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். உலகளவில் இலை ஆர்ட்டை புரொஃபஷனா மாத்திக்கிட்ட முதல் நபரான இவர், பல நாடுகளிலும் இந்த ஆர்ட்டில் ஆர்வமுள்ளவங்களை இணைச்சு ஒரு குழுவை உருவாக்கியிருக்கார். அவரோட இலை வடிவமைப்புகளைப் பார்த்த பிறகு எனக்கும் இந்த ஆர்ட் மேல ஆர்வம் வந்துச்சு.

பல்வேறு மரங்களின் இலைகள்ல சின்னச் சின்ன உருவங்களை வடிவமைச்சேன். அடிக்கடி இலைகள் கட்டாகிடும். தொடர்ந்து என் முயற்சியைக் கைவிடலை. ஆறு மாசத்துக்குப் பிறகு, ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோவின் உருவத்தைச் சரியா வடிவமைச்சேன். அப்போ அரச மரம், தேக்கு மர இலைகளை அதிகம் பயன்படுத்தினேன். ஆனா, தேக்கு மர இலைகள் கொஞ்சம் பெரிசாகவும், காலப்போக்கில் இலையின் நிறம் மாறாமலும், உருவம் செய்ய உகந்ததாகவும் இருந்துச்சு. எனவே, அடர் பச்சை நிறத்துல இருக்கும் தேக்கு மர இலைகள்லதான் உருவங்களை வடிவமைக்கிறேன்.

இலை ஓவியம்
இலை ஓவியம்

இளநிலை, முதுநிலை படிக்கும்போது காலேஜ் மதியம்வரைதான் இருக்கும். எனக்குக் கிடைச்ச ஓய்வு நேரத்தைச் சரியா பயன்படுத்திகிட்டு, இலை ஆர்ட் செய்றதுல அதிக ஆர்வம் செலுத்தினேன். எந்தப் பயிற்சியும் தேவைப்படலை. சோதனை முறையில் செய்து பார்த்துத்தான் இந்த ஆர்ட்டைக் கத்துகிட்டேன். இலையில் நான் வடிவமைச்ச உருவங்களை, இன்ஸ்டாகிராம்ல பதிவிடுவேன். அதன் மூலம் என்னோட இலை வடிவமைப்புகளைப் பார்த்துட்டு மார்ஷல் எனக்கு மெசேஜ் அனுப்பினார்.

அப்போ அவங்ககிட்ட இந்த ஆர்ட் பத்தின பல்வேறு பயனுள்ள விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். ‘இந்தியாவில் இந்த ஆர்ட்டை இதுவரை யாரும் புரொஃபஷனா எடுத்துக்கலை. நீங்க புரொஃபஷனா எடுத்துக்கிட்டா, உங்க நாட்டிலும் இந்த ஆர்ட் பிரபலமாகும்’னு ஊக்கப்படுத்தினார். மேலும், அவரது குழுவிலும் இணைந்தேன்” என்பவர், கடந்த ஆண்டிலிருந்து இலை ஆர்ட் வடிவமைப்பைத் தனது தொழிலாக மாற்றியிருக்கிறார்.

இலை ஓவியம்
இலை ஓவியம்

“போன வருஷம்தான் எம்.எஸ்ஸி முடிச்சேன். வேலைக்குப் போய்கிட்டே, இலை ஆர்ட் வேலைகளையும் செஞ்சேன். ஆனா, மனசு ஆர்ட் வேலையிலதான் இருந்துச்சு. சரியான முடிவெடுக்க முடியாம குழப்பத்துலதான் இருந்தேன். ‘பேட்ட’ படத்தின் ரிலீஸ் நேரம். ரஜினி மன்ற நிர்வாகிகள் அந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்க்குப் பரிசாகக் கொடுக்க, ரஜினியின் உருவம் ஒன்றை இலையில் வடிவமைச்சுக் கொடுக்கும் ஆர்டர் கிடைச்சுது. அது அவங்க எல்லோருக்கும் பிடிச்சிருந்துச்சு. பிறகு, ரஜினி சாருக்குக் கொடுக்க மீண்டும் ஒரு ஆர்டர் கிடைச்சுது. அது ரஜினி சாருக்கும் ரொம்பவே பிடிச்சிருந்ததா சொன்னாங்க.

புதுமையா ஏதாவது செய்யலாம்னு, தென்னை ஓலையில நடிகர் விஜய் சேதுபதியின் உருவத்தை வடிவமைச்சேன். அதை என் சமூக வலைதளப் பக்கங்கள்ல பதிவிட்டேன். அந்த உருவத்தை, விஜய் சேதுபதி பார்த்துட்டு எனக்கு வாழ்த்துச் சொல்லி ஆடியோ மெசேஜ் அனுப்பினார். பிறகு, விஜய் சேதுபதி என்னைச் சந்திக்கக் கூப்பிட்டிருந்தார். அவரை நேரில் சந்திக்கும்போது பரிசாக் கொடுக்க, தேக்கு மர இலையில் அவரின் உருவம் ஒன்றை வடிவமைச்சு கொண்டுபோனேன்.

இலை ஓவியம்
இலை ஓவியம்
``விஜய் சேதுபதியைப் பார்க்கும்போது அந்த ரஜினிகாந்த் ஞாபகத்துக்கு வந்தார்!" - பார்த்திபன் தொடர் - 6

சென்னையில் ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துட்டிருந்த அவரைச் சந்திச்சப்போ, அந்தத் தென்னை மர உருவம் பத்தி பாராட்டினார். அப்போ அவருக்குப் பரிசு கொடுத்தேன். அதைப் பிரிச்சுப் பார்த்துட்டு மீண்டும் பாராட்டியவர், அதை வடிவமைச்ச விதம் பத்தி விளக்கமா கேட்டார். ‘உன் திறமையை இன்னும் பெரிசா கொண்டுபோ’ன்னார். அதன் பிறகு ஆர்டர்கள் அதிகரிக்கவே, வேறு வேலையில் கவனம் செலுத்த முடியலை. இந்த ஆர்ட் வடிவமைப்பை என் முழுநேர வேலையா மாத்திக்கிட்டேன்” என்கிறார்.

இலை ஆர்ட் வடிவமைப்பு முறை பற்றிக் கூறும் தீபன், "தேக்கு மர இலையை, நியூஸ் பேப்பருக்குள் வைத்து, பேப்பர்மீது ஏதாவதோர் எடையை வெச்சு ஒருநாள் வெச்சுடுவேன். அதன் பிறகு அந்த இலை கொஞ்சம் மிருதுவாக மாறிடும். அதுல உருவங்களை வடிமைப்பது எளிதா இருக்கும். நியூஸ் பேப்பர்ல இருந்து எடுத்த இலையில் பச்சை நிற ஸ்டிக் பேனாவால் அவுட்லைன் உருவத்தை வரைவேன். பிறகு, சின்ன கத்தியால் ஃபோகஸ் லைட் உதவியுடன் அவுட்லைனுக்கு உள்ளே இருக்கும் பாகங்களை கட் பண்ணி எடுப்பேன். பிறகு, அந்த இலையை கிளிசரின் கரைசல்ல வெச்சு மூடிய நிலையில் 12 மணிநேரம் வைப்பேன். இதனால், வடிவமைக்கும் ஆர்ட் எத்தனை நாளானாலும் கலர் மாறாமல், அப்படியே இருக்கும். பிறகு இலையை உலர்த்தி, வெள்ளை நிற கேன்வாஸ் ஷீட்டில் (ஆர்ட் பேப்பர்) இலையை ஒட்டி 12 மணிநேரம் வெச்சிருப்பேன்.

கார்த்திக் சுப்புராஜ் கையில் ரஜினி ஓவியம்
கார்த்திக் சுப்புராஜ் கையில் ரஜினி ஓவியம்

அந்த உருவம் எனக்குத் திருப்திகரமா இருந்தால், அதை போட்டோ எடுத்து வாடிக்கையாளருக்கு அனுப்புவேன். அவருக்கும் பிடிச்சிருந்தா, அதை ஃப்ரேம் பண்ணி கூரியர் அனுப்பிடுவேன். உட்கார்ந்தபடி, சிரித்தபடி, நின்றபடினு ஒவ்வொரு வாடிக்கையாளரும் வித்தியாசமான தோற்றத்துல உருவம் செய்துதரச் சொல்லுவாங்க. எந்த உருவமா இருந்தாலும், அதை ஒரே வடிவம் கொண்ட தேக்கு மர இலையிலதான் செய்வேன். ஆரம்பத்துல கொஞ்சம் சவாலா இருந்ததுடன், நிறைய இலைகள் சேதாரமாகும். இப்போ எல்லாவித உருவத்தையும் ரெண்டே நாளில் செய்து முடிக்கும் அளவுக்கு அனுபவம் கிடைச்சுடுச்சு. அதனால, சேதாரம் இல்லாம, ஒரே இலையில துல்லியமா உருவத்தை வடிவமைச்சுடுவேன்.

பாதாம் இலை, பலா இலை, வாழை இலை, ஆலமர இலை உட்பட பல்வேறு இலைகள்லயும் உருவங்கள் செய்றேன். வாழை இலை பலமான காத்துக்கே கிழிஞ்சுடும். அதுல உருவம் செய்றது பெரிய சவால். போன வருஷம் வரைக்கும், ‘இலைகள்ல ஆர்ட் பண்றேன்னு, வீட்டில் குப்பை போட்டுகிட்டு இருக்க. இதெல்லாம் நிரந்தர தொழிலா செய்றது சிரமம்’னுதான் என் வீட்டில் சொன்னாங்க. ஆனா, இப்போ அவங்களே ஆச்சர்யப்படுவதோடு, ஆதரவும் கொடுக்கறாங்க.

இலை ஓவியம்
இலை ஓவியம்

லாக்டெளனுக்கு முன்னாடி வரை, மாசத்துக்கு 10 ஆர்டர் வந்துச்சு. இப்போ இலை ஆர்ட் பத்தி பலருக்கும் தெரியவரவே, லாக்டெளன் காலத்தில் அதிக ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. இப்ப மாசத்துக்கு 20 ஆர்டர்களுக்கு மேல வருது. ஃப்ரேம் வொர்க், கூரியர் செலவுடன் சேர்த்து ஒரு ஆர்டருக்கு 3,000 ரூபாய் வாங்கறேன். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவான கட்டணம்தான். மாசத்துக்கு 50,000 ரூபாய் சம்பாதிக்கறேன். இதுல எனக்குச் செலவுனு பெரிசா எதுவுமில்லை. க்ரியேட்டிவிட்டி, திறமைதான் பெரிய மூலதனம். இந்தியாவில் இப்போவரை இந்தத் தொழில்ல சிலர்தான் இருக்காங்க. ஆர்ட் திறமை இருக்கிற எல்லோரும் இந்தத் தொழில்ல வெற்றி பெற முடியும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு