Published:Updated:

நான் மீண்டும் சந்திக்கிறேன்

சோறு விற்கிற மங்கம்மாஜெயகாந்தன்

நான் மீண்டும் சந்திக்கிறேன்

சோறு விற்கிற மங்கம்மாஜெயகாந்தன்

Published:Updated:
நான் மீண்டும் சந்திக்கிறேன்
##~##
''ஐ
யையோ... இன்னாடி இது... என்னெ வந்து போட்டோ புடிக்கிறாங்களே... இன்னாத்துக்கோசரம்? எனுக்குப் பயமா இருக்குதே! இன்னாங்க? எதுக்கு என்னெ போட்டோ புடிக்கிறீங்க?'' என்று பயந்து, பதை பதைத்துப் பக்கத்தில் இருப்பவர்களிடமும் போட்டோ கிராபரிடமும் முறையிட்டுக்கொண்டாள் ஸால்ட் கோட்டர்ஸ் வாசலருகே சோறு விற்கிற மங்கம்மாள்.

ஐம்பது வயதாகிறவளிடம் தேங்கியிருக்கிற பேதைமை மிகவும் அழகாக இருந்தது.

நான் அவளைப் பார்த்து ஆதரவோடும் இணக்கத் தோடும் சிரித்து, ''பயப்படாதே... ஒண்ணும் உனக்கு ஆபத்து வந்துடாது. உன்னைப் பாத்துப் பேசி, உன் போட்டோவைப் பத்திரிகையில போட்டு, உன்னைப் பத்தி எழுதறதுக்காகத்தான் போட்டோ புடிக்கச் சொன்னேன்'' என்று தைரியம் கூறினேன்.

''இன்னாடி இது கூத்தாகீது! என்னெப் போயி போட்டோப் புடிச்சி, பேப்பர்லே எய்தப் போறாங்க ளாமே! நானோ தலை ஒரு கோலம், துணி ஒரு கோலமாக் கீறேன்...'' என்று பெண்மை மிகுந்த நாணத்துடன் சிரித்துத் தலையைச் சரிசெய்துகொள்கிறாள் மங்கம்மாள்.

அதற்குள் அங்கே சிறு கூட்டம் கூடிவிட்டது.

''அ! ஆயா... உன்னெ சினிமா ஷ்டார் ஆக்கப்போறாங்கோ'' என்று ஒருவன் கேலி செய்கிறான்.

போட்டோ எடுத்தாகிவிட்டது.

ஒரு பையன் தலையில் முண்டாசுடன் சாப்பிட வந்து அவளெதிரே குத்துக்காலிட்டு உட்காருகிறான். ஓர் அலுமினியத் தட்டில் மந்தார இலை போட்டுச் சோறும் கீரைக் குழம்பும் வைத்து அவனிடம் தருகிறாள் மங்கம்மாள்.

''இந்தச் சாப்பாடு என்ன விலை?''

நான் மீண்டும் சந்திக்கிறேன்

''நாப்பது காசு.''

''முன்னே எல்லாம் ரெண்டணாதானே?'' என்றேன் நான்.

''எப்போவெல்லாம்?'' என்று என்னைக் கூர்ந்து பார்த்தாள். 'உனக்கு எப்படித் தெரியும் இந்தச் சாப்பாட்டின் விலை?’ என்பது போன்ற பார்வை.

''இருவத்தஞ்சி வருஷத்துக்கு மிந்தி சூளை மில்லு வேலை செஞ்சிக்கினு இருந்துதே, அப்போ!''

''அடேயப்பா! அது எம்மாங்காலம் ஆவுது! உனக்கு எப்படித் தெரியும்?''

''நானே வாங்கித் துண்ணுருக்கேனே...'' என்றதும், வாயைப் பொத்திக்கொண்டு, ஏதோ ஹாஸ்யத்தை ரசிக்கிறவள் மாதிரிச் சிரிக்கிறாள் மங்கம்மாள்.

''நெசம்மாவா?'' என்று கொஞ்சம் சகஜ பாவத்துடன் வினவுகிறாள்.

''ஆமாம். அப்போ சூளை மில்லு கேட்டாண்ட ஒரு அம்மா, தடிம்பலா, நெத்தியில பெரிசா குங்குமப் பொட்டு வெச்சிக்கினு சோறு விக்கும். நான் அந்த அம்மாவுக்கு ஒரு ரூவா பாக்கி கூடத் தரணும்'' - என்று உண்மையை, வெகு காலமாக என்னுள் தவிக்கும் ஓர் ஏக்கத்தைச் சொன்னேன். ஒரு வேளை இந்த மங்கம்மாவுக்கு அவளைத் தெரிந்திருக்குமோ என்ற நப்பாசை எனக்கு.

''பாரேன்... டமாஸ் பண்றாரு!'' என்று சிரிக்கிறாள் மங்கம்மாள். எனக்கு வாழ்க்கையின் 'தமாஷ்’ புரிகிறது.

''நீ மீன் குழம்பெல்லாம் வெக்கறதுஇல்லையா?''

''ம்ஹும்! எப்பவும் மரக்கறிதான். ஒரு நாளைக்கு ஒரு படி, ஒண்ணரைப் படி அரிசி போட்டுச் சோறு வடிப்பேன். அதுவே சமயத்துல மீந்து போவுது. மீந்து போனா காத்தால பயது போட்டு அத்தெயும் வித்துடறது தான்.''

''பழைய சோறுகூட வாங்கித் துண்ணுவாங்களா, இன்னா?''

''துண்ணாம இன்னா? வெயிலுக்கு நல்லதாச்சே... காத்தாலயில நீ வந்துதான் பாரேன்... துண்றாங்களா, இல்லியான்னு. ஆனா, துட்டு குடுக்க மாட்டாங்க... கடன்தான். பயதுக்கோசரம் இல்ல. காத்தால நேரத்துல கையில துட்டு இருக்கறவங்க, நாஷ்டா துண்றத்துக்குப் போவாங்க. கையில துட்டு இல்லாதவங்க, கடனுக்குப் பயது துண்ணுவாங்க. காத்தால வாங்குனா, பகலிக்கே குடுத்துடுவாங்க - நானும் இருவத்தி அஞ்சி வருஷமா இதோ ஸால்ட் கொட்டாயாண்ட சோறு வித்துக்கினுதான் கீறேன். ஆனா, இந்த ரேசன் காலத்துலதான் சாராயம் வாங்கிக்கினு வர்ற மாதிரி பயந்து பயந்து அரிசி வாங்கியாருவேன். எந்த சாமி புண்ணியமோ... ரேசன் ஒயிஞ்சுது. இப்ப அரிசி தாராளமா கெடைக்குது.''

''உன் புருசன் இன்னா செய்யறாரு?''

''அது-கெயவன்... வூட்லயே படுத்துக் கெடக்குது. நோவு. நடமாட முடியில. தோ பூடும்... அதோ பூடும்னு இருந்துதேன்னு - உசிரோடு இருக்கும்போதே பாத்துடட்டும்னு பையனுக்குக் கண்ணாலம் கட்டிவெச்சேன். ஆனா, அந்தப் பையனுக்குத்தான் வேலைஇல்லே. சுத்திக்கினுக் கீறான்; பொஞ்சாதி வேறே... இப்ப இன்னாடான்னா வேலை இல்லாமெ சுத்தற பையனுக்கு, அவன் பொஞ்சாதிக்கு, காயலாக் கெடக்கற கெயவனுக்கு - அல்லாருக்கும் நான்தான் கஞ்சி ஊத்தறேன். எங்கே போயி சொல்றது எந் தலை எய்த்தெ?''

''உன் மவனெ எதனாச்சும் வேலைக்கிப் போடான்னு அனுப்பறதுதானே?''

''அவனா? தொரை மாதிரி டிரஸ் பண்ணிக்கினு சினிமாவுக்குப் போவத் துட்டு கேக்கறான். குடுக்கலேன்னா... தவலை, குண்டா, சட்டி எதுனாச்சும் தூக்கிக்கினு பூடறாம்பா...''

''நீ சோறு வித்தே நெறய துட்டு சேத்துவெச்சிருக்கியோ இன்னாவோ? அத்தெக் கண்டுக்கினு அவன் ஜாலியா இருக்கான்போல இருக்கு?''

நான் மீண்டும் சந்திக்கிறேன்

''ம்... வெச்சிருக்கேன்... நீதான் வந்து எடுத்துக்கியேன்... வவுத்தெரிச்சலைக் கௌப்பாதேப்பா...''

''மொதல்ல எப்ப இந்த சோறு விக்கிற தொழிலை ஆரம்பிச்சே?''

''எங்க வூட்டுக்காரு இங்கதான்... ஸால்ட் கொட் டாயில வேலை செஞ்சுக்கினு இருந்தாரு...''

''இன்னா வேலை?''

''இன்னா வேலையா? பார வண்டி தள்றதுதான். அப்பல்லாம் நானு பகல்ல அவுருக்கு சோறு கொண்டாருவேன். அவுருக்கு நடுவுல காயலா வந்துடுச்சி. ரெண்டு மூணு நாளாச்சி. கையில துட்டு இல்லே. வூட்ல அரிசி இருந்துச்சு. இத்தெயும் ஆக்கி இன்னக்கி ஒரு வேளைக்கித் துன்னுட்டா, அடுத்த வேளைக்கி இன்னா பண்றதுன்னு - சோத்தெ ஆக்கி, கொயம்பு வெச்சிக் கொண்ணாந்து இங்கே வித்தேன். நெதம் நெதம் சோறாக்கறது; சோறு விக்கறது; வூட்ல இருக்குதுங்களே அதுங்களுக்குக் கஞ்சி ஊத்தறது - இப்படியே பூட்டுது எங் காலம்...'' என்று பெருமூச்செறிகிறாள் மங்கம்மாள்.

அதுவரை சாப்பிட்டுக்கொண்டு இருந்த பையன், தட்டையும் சில்லறையும் கொடுத்தான். பக்கத்திலேயே தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு, அடுத்து வந்தவனுக்கு அதிலேயே சோறு போட்டுக் கொடுத்தாள் மங்கம்மாள்.

மட்டமான புழுங்கலரிசிச் சோறும் கீரைக் குழம்பும் மணம் வீசிற்று. எனக்கும் சாப்பிட ஆசைதான். ஆனால், என் தகுதிக்குத் தகாது என்று அவளே போட மாட்டாள் போலிருந்தது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இதே மாதிரி குத்துக்காலிட்டுக் கையில் அலுமினியத் தட்டை ஏந்திக்கொண்டு நானும் சாப்பிட்டேனே, அதை நினைத்துக் கொண்டேன்!