Published:Updated:

ஆம்... விமரிசனங்கள் என்னைப் பாதிக்கும்!

மதன்

பிரீமியம் ஸ்டோரி
ஆம்... விமரிசனங்கள் என்னைப் பாதிக்கும்!
##~##

ணிரத்னத்துடன் பேட்டி என்றவுடன், 'சிரமமான வேலை ஆயிற்றே... ரொம்ப 'மூடி’ டைப். பதிலே வராது!’ என்றனர் சிலர். 'ஆம்/இல்லை’ என்கிறரீதியில் கேள்வித்தாள் எடுத்துக்கொண்டு போனால், மகிழ்ச்சியாக  செய்து அனுப்பிவிடுவார்’ என்றும் ஒரு யோசனை. மொத்தத்தில், கவலை பிடித்துக்கொண்டுவிட்டது. ஒரேயடியாக ஐந்து நிமிஷத்தில் பேட்டி முடிந்துவிட்டால்?

நல்ல காலமாக மணிரத்னம் ஒன்றரை மணி நேரம் நம்மோடு ரிலாக்ஸ்டாகப் பேசினார். அவராக ரொம்பப் பேசுகிறவர் இல்லை தான். அதற்கு ரொம்பப் பழக வேண்டும்போல!

ஆம்... விமரிசனங்கள் என்னைப் பாதிக்கும்!

''டைரக்டர் என்கிற முறையிலே உங்க அணுகுமுறை எப்படி? ஆர்ட்டிஸ்ட்டுக்கு நடிச்சுக் காட்டி வேலை வாங்குவீங்களா? அவங்களை நடிக்கச் சொல்லிட்டு 'பாலீஷ்’ பண்ணுவீங்களா?''

''சில பேருக்குச் சூழ்நிலை என்னன்னு சொல்லிட்டாலே போதும்... நான் என்ன எதிர்பார்க்கிறேன்னு சரியாப் புரிஞ்சுக்கிட்டு அவங்களாவே நடிச்சுடுவாங்க. இன்னும் சில பேர்கிட்டே காட்சி யைப் பத்திக் கொஞ்சம் விளக்கிப் பேச வேண்டி இருக்கும். சிலர் காட்சி யைச் சொன்னதுமே, வெவ்வேறு விதமா செய்துகாட்டி, 'எதுவேணுமோ... அதை எடுத்துக்குங்க’ன்னு சொல்வாங்க, கமல் மாதிரி. நானே நடிச்சுக் காட்டற சந்தர்ப்பம் எல்லாம் எப்பவோ தான்ஏற்பட்டு இருக்கு. எல்லாமே அந்தந்த ஆர்ட்டிஸ்ட்டைப் பொறுத்திருக்கே தவிர, 'யாரானாலும்... எதுவானாலும்... இதுதான்... இப்படித்தான்’னு விதியெல்லாம் ஸ்ட்ரிக்ட்டா வெச்சுக்கிட்டு நான் வொர்க் பண்றது இல்லே!''

'' 'ஏ’ சென்டர், 'பி’ சென்டர் மாதிரி பேச்சுக்கள் எல்லாம் உங்களைப் பாதிக்கிறது இல்லையா?''

''இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால், எல்லாத்தையும் மீறி தொலைதூரப் பார்வை பார்க்கறதுக்கு ஒரு டைரக்டர் கத்துக்கணும்னு நினைக்கிறேன். இப்போ 'ரோஜா’வையே எடுத்துக்குங்க... அது ரொம்பவே வித்தியாசமான சப்ஜெக்ட்! காஷ்மீர் தீவிரவாதிகள் பிரச்னை எல்லாம் தமிழ் மக்கள் ஆழமா அறியாத விஷயங்கள். 'அங்கே காஷ்மீர்ல ஏதோ எல்லைப் பிரச்னை இருக்காம்ப்பா!’னு மேலோட்டமா நினைக்கிற ஆடியன்ஸை, எப்படிச் சென்று அடையப்போறோம்கிறது முக்கியக் கேள்வி!

அவங்க ஏத்துக்கிற மாதிரி சொல்லணும்னா, அதைச் சுத்தி ஒரு சுவையான திரைக்கதை அமைக்க வேண்டியிருக்கு. கிட்டத்தட்ட இடை வேளை வரைக்கும் ரெண்டு வெவ்வேறு கேரக்டர் களுக்கு மத்தியில் லவ் உருவாகிப் பெருக்கெடுக் கறதையே காட்ட வேண்டியிருக்கு. அப்புறம்தான் காஷ்மீர்... தீவிரவாதம்... கடத்தல்... மீட்புன்னு போக முடிஞ்சிருக்கு. இப்படிச் சுவையான கதைங்கிற தேன் தடவி மாத்திரை தரும்போதுதான் ஜனங்க ரசிக்கிறாங்க!

எது எப்படியோ... இந்தப் படம், இந்த விஷயத்துக்காக ஓடும்... அல்லது ஓடாதுன்னெல்லாம் கண் சுருக்கிப் பார்க்கிறது பழைய ஃபார்முலா. அதெல்லாம் இப்போ உதவறதில்லை!''

''உங்களை நிறையப் பேர் உயர்மட்ட ஆடியன்ஸுக்குப் படம் எடுக்கிறீங்கன்னு சொல்றதால், இப்படியரு கோபமா?''

''அப்படி இல்லே... உயர்மட்டம், கீழ்மட்டம்னு லாம் நாமதான் தப்பாத் தரம் பிரிச்சுப் பார்க்கிறோம்னு தோணுது. உண்மையிலே மக்களுக்கு நல்ல ரசனை இருக்கு. அவங்களைப் பொறுத்தவரையில், நல்லதா கெட்டதான்னு ரெண்டே பிரிவுதான். நீங்க எதை யும் கொடுக்கலாம்... ஆனா, நல்லா, அழுத்தமாக் குடுக்கணும். அதைத்தான் முக்கியமாப் பார்த்து முடிவு எடுக்கிறாங்க! அப்படிப் பார்க்கும்போது 'ரோஜா’ மாதிரி படத்தை ஏத்துக்க அவங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கிறதில்லை!''

'''மௌன ராகம்’ வந்தப்போ உங்ககிட்ட குதிரையை அடக்கிய தேசிங்கு ராஜாவின் புதுக் கம்பீரம், ஒரு சிம்ப்ளிஸிடி தெரிஞ்சது. 'நாயகன்’ உங்களுக்கு ஒரு 'மாக்னம் ஓபஸ்’. ஆனா, அதுக்குஅப்புறம் வந்த படங்களைப் பார்க்கறப்போ... ஒரே மாதிரி சப்ஜெக்ட் சூழல்லயே சிக்கிட்டீங்க ளோன்னு தோணுதே?''

''இல்லை... நான் அப்படி நினைக்கலே. இன்னும் சொல்லப்போனால், எனது முந்தைய படங்கள்லஇருந்து முற்றிலும் மாறுபடணும்னு நான் மனப்பூர்வமா நினைக்கிறேன். அதுக்காக அந்த மாதிரி கதை டிராக்கையேகூட 'அவாய்ட்’ பண்றேன்.  உதாரணத்துக்கு, நான் இன்னொருமுறை 'தாதா’ படம் எடுத்தால், அதை நிச்சயம் 'நாயகன்’ படத்தோடு ஒப்பிடுவாங்க. நாயகனுக்கு முந்தி வரைக்கும் படங்கள்ல வர்ற 'தாதா’க்கள் அண்டர் கிரவுண்ட்லகூட த்ரீ பீஸ் சூட்- கோட்டோடுதான் காட்சி அளிப்பாங்க.

'நாயகன்’ல வித்தியாசமா, யதார்த்தமா வர்ற வேட்டி கட்டிய வேலு நாயக்கரைப் பார்த்த பிறகு, ஜனங்களால் வேற எதையும் ஒப்புக்க முடியாது! இது எனக்குத் தெரியாமல் இல்லே. இந்த மாதிரி சர்வ ஜாக்கிரதையோடுதான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அப்படியும், பத்திரிகைக்காரங்க 'அவ்வளவுதானா... மணிரத்னத்துக்குச் சரக்கு தீர்ந்திடுச்சா?’ன்னு எழுதும்போது வருத்தமா இருக்கு. மனசைப் புண்படுத்துது!''

''மனதைப் புண்படுத்தற அளவுக்கு விமரிசனங்கள் உங்களைப் பாதிக்குதா என்ன?''

ஆம்... விமரிசனங்கள் என்னைப் பாதிக்கும்!

''நிச்சயமா! அதெப்படி பாதிக்காம இருக்க முடியும்?! தன் படைப்பின் மீது அக்கறையுள்ள எந்தக் கலைஞனுக்கும் அதுபற்றிய விமரிசனம் பாதிப்பை உண்டாக்குமே!''  

''உங்க படங்கள்லயே உங்களுக்கு அதிகமான மன நிறைவு தந்த படம் எது?''

'' 'அஞ்சலி’! ரொம்ப சேட்டிஸ்ஃபையிங்கா இருந்தது. மன வளர்ச்சி குன்றிய குழந்தைங்கிற உணர்ச்சிமயமான விஷயம் மட்டுமில்லே... அந்தப் படத்துல அதுக்கு வெளியேயும் பல காட்சிகளை அமைக்க வாய்ப்பு இருந்தது. கதையைக் கொண்டு வர்றதுக்கும் ரொம்பச் சிரமம் இல்லாமல் இருந்தது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு