பிரீமியம் ஸ்டோரி
 ##~##

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது குறித்து, விகடன் வெளியிட்ட தலையங்கத்திலிருந்து...

 தமிழ் மண்ணின் ரத்தினம்!

காலப் பெட்டகம் - 1998

சைவானில் பல்லாண்டுகளா கச் செங்கோலோச்சி, கர்னாடக சங்கீதத்தின் பெருமையை உலகெங் கும் நிலைநாட்டியவர் எம்.எஸ்.சுப்பு லட்சுமி! காலம் கொடுத்த அதிசய கானதேவதை அவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

எம்.எஸ். குரல் ஒலிக்காத இல்லம் ஏது? இடம் ஏது?

இமயச்சாரலில் உள்ள ஆலயங்க ளில் இருந்து, குமரிமுனையில் உள்ள கோயில்கள்வரை அவரது தெய்வீகக் குரல் தினமும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. கங்கை யைப் போலவும், காவிரியைப் போலவும் ஒரு ஜீவநதியாக அவரது நாதவெள்ளம் இந்தியாவில் என் றென்றும் பாய்ந்தோடும்.

தமிழர்கள் பெருமைகொள்ள வேண்டிய நேரம் இது!

புகழ்பெற்ற 'டைட்டானிக்’ திரைப்படம் ரிலீசானது இந்த ஆண்டுதான். படம் பற்றிய சிறு கட்டுரைத் தொடரையும், விமர்ச னத்தையும் வெளியிட்டுள்ளது விகடன். விமர்சனத்திலிருந்து ஒரு துளி...

உலகமே இந்தக் காதலர்களை காதலிக்கிறது!

'டைட்டானிக்’ திரைப்படத் தைப் பார்த்தபிறகு, திரையில் பிர மாண்டத்தையும் நுணுக்கங்களையும் ரசிக்க நமக்கு ஒரு புது அளவுகோல் கிடைத்திருக்கிறது என்பதே உண்மை!

எப்படிப்பட்ட எதிர்பார்ப்பையும் மிஞ்சி, பிரமிப்பூட்டும் ஒரு படம் 'டைட்டானிக்’.

இத்தனைக்கும் இதன் திரைக்கதை ரொம்பச் சம்பிரதாயமானது - போன தலைமுறையினரால் 'கிளாஸிக் மெலோடிராமா’ என்று அழைக்கப் பட்ட நேரடியான காதல் கதை! இதில் வில்லன் உண்டு; பணக்காரக் காதலி உண்டு; ஏகமாக கௌரவம் பார்க்கிற சுயநல அம்மாவும் உண்டு. துடிப்பு மிக்கக் காதலனாக ஓர் ஏழை இளைஞனும் உண்டு!

காலப் பெட்டகம் - 1998

அடிப்படையான பெரும் உணர் வுகளுக்கு அழிவே கிடையாது - திரைப்படங்களுக்கும் இது பொருந் தும். காலம் காலமாக எத்தனைக் காதல் கதைகளை நாம் தொடர்ந்து ரசித்து வருகிறோம்! 'உலகமே காத லர்களைக் காதலிக்கிறது!’ என்றார் ஷேக்ஸ்பியர். இந்தப் படத்தில் ரோஸ்- ஜாக் ஜோடியை உலகெங் கும் உள்ள ரசிகர்கள் இன்று காதலிக்கிறார்கள்!

ரோஸ் செல்வந்தர் வீட்டுப் பெண். மேல்மட்டத்து எச்சரிக்கை மிகுந்த நாகரிகமும் போலித்தனமும் அவள் மனதை வாட்டி வதைக்கிறது. மனதுக்குப் பிடிக்காத திருமணம் அவளைத் தற்கொலை முடிவுக்குத் தள்ளுகிறது.

ஆனால்... எந்த ஒரு தனிமனிதருடைய வாழ்க்கையிலும் திடீரென அதிசயங்கள் நிகழ முடியும். மிகச் சில மணி நேரங்களில்கூட பெரும் திருப்புமுனைகள் ஏற்படக்கூடும். மனிதன் செய்வதறியாமல் பிரமிக்க, கடவுள் மெலிதாகப் புன்னகைக்கும் தருணங்கள் அவை! ரோஸுக்கும் அப்படி ஓர் இனிமையான அனுப வம் நிகழ்கிறது.

தற்கொலை செய்துகொள்வதற்காக மேல் தளத்துக்கு ஓடிச்சென்று கப்பலின் முகப்பில் தடுப்புக் கம்பி கள் மீது ஏறி நிற்க, கடைசி நிமிடத் தில் ஜாக் வந்து அவளுடைய மனதை மாற்றுகிறான்.

ரென்வார் ஓவியத்தைப்போல ரோஸ் மொழுமொழுவென்று அழகு! ஜாக் சற்றே மெலிதான உடல்வாகு. அதுவே வித்தியாசமாக நம்மைக் கவர்கிறது!

விஷுவலகவும் 'டைட்டானிக்’ ஒரு ராஜகம்பீர விருந்து! காமிராக்கள் தான் எங்கிருந்தெல்லாம் புறப்பட்டு வந்து காட்சிகளை அள்ளுகின்றன! வானத்திலிருந்து இறங்கும் காமிரா வின் வீச்சில் தொலைதூரக் காட்சி களில் இருப்பவர்கள், 'க்ளோஸப்’ காட்சிகளிலும் அங்கேயே நிற்கிறார் கள்! அதேபோல, எங்கே நிஜம், எங்கே கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்று சுலபத்தில் இனம்பிரிக்க முடியவில்லை! (பல இடங்களில் கடல் அலைகள், டால்ஃபின்களின் துள்ளல், தொலைவில் கப்பலின் மீது நடப்பவர்கள், துறைமுகத்தில் கூட்டம் எல்லாம் கம்ப்யூட்டர் வேலையாம்!)

ஜேம்ஸ் கார்னரின் இசையை ஆடியோ காஸெட்டில் கேட்கும் போது, 'இது ஒரு பெரும் விபத்து பற்றிய படத்தின் பின்னணி இசையா?’ என்று சற்று வியப்பேற் படுகிறது. ஏற்கெனவே ஆர்ப்பாட் டமான காட்சிகள் கொண்ட ஒரு படத்தில் இசை வேறு தன் பங்குக்கு ஆவேசப்பட்டால் 'பின்விளைவுகள்’ ஏற்படலாம் என்பதை ரசனையுடன் உணர்ந்து அமைக்கப்பட்ட இசை!

'டைட்டானிக்’ யு.எஸ்-ஸில் திரையிடப்பட்டு 60 நாட்களில் 1,600 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொடுத்து 'ஜுராஸிக் பார்க்’ சாதனையை முறியடித்திருக்கிறது. ('ஜுராஸிக்’ 67 நாட்களில் 1,200 கோடி ரூபாய் வசூல்!) ஒரு சில நாட்களிலேயே 100 கோடி 'டைட் டானிக்’ ஆடியோ காஸெட்டுகள் விற்றுவிட்டன!

- மதன்

பொக்ரானில் அணுகுண்டு வெடிப்புச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது இந்தியா. அப்போது விகடன் வெளியிட்ட தலையங்கத்திலிருந்து...

அணுகுண்டும் அகிம்சையும்!

ழங்கால சீனாவில், மலைமீது ஆசிரமம் அமைத்து வாழ்ந்த 'ஷாவோலின்’ புத்தமதத் துறவிகள் குங்ஃபூ போர்க் கலையில் உச்சகட்ட பயிற்சி பெற்றவர்களாக இருப்பார் கள். அன்பும் அகிம்சையும் மனதில் நிறுத்திய துறவிகளுக்குப் போர்ப் பயிற்சி ஏன் என்ற கேள்வி எழலாம்! காரணம் உண்டு. தாய்நாட்டைக் கைப்பற்ற எதிரிகள் புகுந்தால் மட்டுமே இந்தத் துறவிகள் முறுக் கேறிய கைகளுடன் கீழே இறங்கி வருவார்கள். ஓராயிரம் எதிரிகளால் கூட இந்தத் துறவிகளிடம் மோதி வெற்றிகொள்ள முடியாது! 

அதுபோலத்தான் இந்தியா அணுகுண்டு தயாரித்திருப்பதும்!

தர்மச் சக்கரத்தை அரசு முத்திரை யாக ஏற்ற தேசம் இது. ஆணவ அரசுகள் அணு ஆயுதத்தை வைத் திருப்பதற்கும், இந்தியா வைத்திருப் பதற்கும் வேறுபாடு உண்டு. மகா விஷ்ணுவின் கையில் உள்ள சக்ரா யுதம் கண்டு அரக்கர் தவிர, வேறு யாரும் பயப்பட வேண்டிய தில்லை.

அமெரிக்காவும், மற்ற வல்லரசு களும் பதற்றமடையமல் பக்குவ மாகச் சிந்தித்தால் இது புரியும்!

நாகஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினத்துக்கு இது (1998) நூற்றாண்டு!

''நீங்கள் ராஜா; நான் சக்கரவர்த்தி!''

காலப் பெட்டகம் - 1998

27.8.1898 - 'அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி’ திருவாவடு துறை டி.என்.ராஜரத்தினம்பிள்ளை பிறந்த தேதி! வரும் வியாழனன்று அந்த மாமேதைக்கு நூறாவது ஆண்டு!

திருமருகல் என்கிற ஊரில் பிறந்து திருவாவடுதுறைக்கு இடம்பெயர்ந்து வளர்ந்த பையன், ராஜரத்தினம். ரத்தத்தில் ஹீமோகுளோபினோடு ஏழு ஸ்வரங்களும் கலந்து ஓட, எந்நேரமும் வாயில் பாட்டு ததும்பிக் கொண்டேயிருக்கும். சின்னப் பைய னாக இருக்கும்போதே கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாட வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும், திருவாவடு துறை மடத்தின் ஆஸ்தான நாகஸ்வர வித்வானாக இருந்த நடேச பிள்ளையின் நிழல் கிடைத்தவுடன் தனது ஜீவன் இந்த நீண்ட, கறுத்த நாகஸ்வரம் என்கிற வாத்தியத்தில் தான் இருக்கிறது என்று கண்டு கொண்டான் பையன்.

அப்புறமென்ன, வாழ்க்கை முழுக்க ஆரோகணம்... அதாவது ஏறுமுகம்தான்! போன இடமெல்லாம் சிறப்பு. அதனால் வந்த கித்தாய்ப்பு!

''ராஜரத்தினத்துக்கென்ன, அர்ஜுன மகராஜா. ஊருக்கு நூறு ரசிகாள். ஜில்லாவுக்கு ஒரு பொண் டாட்டி!'' - சக வித்வான்களின் சந்தோஷ விமரிசனம் இது.

ராஜரத்தினத்துக்கு ஐந்து மனைவிகள்!

ஒரு கச்சேரிக்கு, தான் வரும் போது எழுந்து நிற்காத ஜில்லா கலெக்டரிடம் ராஜரத்தினம் சொன் னாராம்... ''ஏம்ப்பா! நான் இந்த கச்சேரிக்கு மட்டும் 3,000 ரூபாய் வாங்கியிருக்கேன். உன் மாசச் சம்பளமே ஆயிரத்தைத் தாண்டாது. நீ பெரியவனா, நான் பெரிய வனா?''

கலெக்டர் என்ன, மைசூர் மகா ராஜாவையே ஒரு பிடி பிடித்துவிட் டார். கச்சேரி முடிந்ததும் கைதட்டிப் பாராட்டிய மகாராஜா, ''கணக்குப் பிள்ளை! பணத்தை எடுத்துவந்து பிள்ளைக்குக் கொடும்!'' என்றாராம். உடனே பிள்ளை, பக்கவாத்தியம் வாசித்தவரைக் கூப்பிட்டு, ''மேளக்கா ரரே, பணத்தை வாங்கும்!'' என்று சொல்லிவிட்டு, மகாராஜாவிடம் ''நீங்கள் மாநிலத்துக்கு ராஜா என்றால் நான் இசைக்குச் சக்கரவர்த்தி'' என்று சொல்லியிருக்கிறார். அப்புறம் மகா ராஜா தன் கையாலேயே பிள்ளைக் குச் சன்மானம் செய்தாராம்.

இதுபோன்ற - இருக்க வேண்டிய திமிர்க்குணத்தாலேதான் அவர் குடுமியை எடுத்துவிட்டு கிராப் வைத்துக்கொண்டதும், அக்ர ஹாரத்தில் ஆனாலும், அரண்மனை யில் ஆனாலும் செருப்பு  போட்டுக் கொண்டு நடந்ததும்!

இந்தக் குணம் கொஞ்சம் எல்லை மீறியபோதுதான், இவர் ஒப்புக் கொண்ட இடங்களுக்கு கச்சேரிக்குப் போகாததும், 'லைட்’டாக 'சுதி’ ஏற்றிய நிலையிலேயே எல்லாரையும் தூக்கியெறிந்து பேசியதும் நடந்தி ருக்கவேண்டும். மாலை 7 மணிக்கு வருவதாகச் சொன்ன இடத்துக்கு நள்ளிரவு 12 மணிக்குப் போவார். ஜனம் இவரைச் சபித்தபடி உட்கார்ந் திருக்கும். மேடையில் பக்கவாத்திய தோரணைகளோடு அமர்ந்து வாசிக்க ஆரம்பித்ததும், மோகனாஸ்திரம் விழுந்த லாகிரியில் மயங்கிக் கிடக் கும் ஊர். விடிகாலை ஏழோ, எட்டோ... கச்சேரி முடிந்ததும், கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போகும்.

காலப் பெட்டகம் - 1998

'ராஜரத்தினம் பிள்ளை’ என்றதும் அவருக்கு நெருக்கமானவர்களின் முதுமையில் தளர்ந்த கண்கள் இப் போதும் பிரகாசமாகிவிடுகின்றன.

''சுதந்திரம் கிடைச்ச நாள். குடியர சுத் தலைவர் மாளிகையில் கொடி யேறிய நாளன்று நேருவின் முன்னி லையில் நாகஸ்வரம் வாசிச்சார் பிள்ளைவாள். சொக்கிப் போயிட்டார் நேரு'' என்று பெருமையாக ஆரம் பித்தார் திருவிடைமருதூரில் வசிக்கும் டி.எஸ்.மகாலிங்கம் பிள்ளை. அந்த விழாவில், பிள்ளை வாசித்த நாகஸ் வரத்துக்கு இவர்தான் தவில்.

''பிள்ளைவாளோட வாசிப்பைக் கேட்ட நேரு, 'உங்களுக்கு என்ன வேணும்?’னு கேட்டார். உடனே ராஜரத்தினம் பிள்ளை, 'எங்க ஊர்லே திருட்டுபயம் ஜாஸ்தி. கரன்ட் வேணும்’னு சொன்னார். நாங்க நிகழ்ச்சி முடிஞ்சு ஊருக்கு வரும்போது திருவாவடுதுறை முழுக்க லைட் எரிஞ்சது. நேருவைப் பார்த்துட்டு வந்ததுக்கப்புறம் அந்த மாதிரி ஷெர்வானி, ஓவர்கோட்டு, ஷூன்னு இவர் தன்னோட தோற் றத்தையே கொஞ்ச நாள் மாத்திக் கிட்டது வேற விஷயம்'' என்றார் மகாலிங்கம் பிள்ளை.

அப்போதெல்லாம் ரயில், ராஜ ரத்தினம் பிள்ளையின் ஊரில் நிற்காது. அதனால் வெளியூர் சென்று திரும்பும் சமயம், தன் வீட்டின் பின்புறமாக ரயில் ஓடும் போது, அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தி ஐம்பது ரூபாய் அபராதம் கட்டிவிட்டு வீட் டுக்குப் போவது இவருடைய வழக் கம்.

இதுமாதிரியான சுபாவம் உச்ச கட்டத்தை அடைந்தபோது, அவரது ஊருக்கே ஆபத்தைக் கொண்டு வந்தது ஒரு சம்பவம். பின்னால் வந்த பஸ்ஸுக்கு வழிவிடாமல் சில நிமிடங்கள் தாமதம் செய்துவிட்டார் பிள்ளை. பஸ்ஸில் வந்துகொண்டி ருந்த எஸ்.பி. குரல் உயர்த்திப் பேச, அவருடைய முகத்தில் தாம்பூலத்தை உமிழ்ந்துவிட்டு வந்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து, 'தெருவில் கண்டால் சுடும்’ உத்தரவுடன் போலீஸ் படை ஒன்று பிள்ளையின் வீட்டை முற்றுகையிட்டது. தான் செல்லமாக வளர்த்து வந்த ஏராள மான நாய்களை அவிழ்த்துவிட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே பதுங்கி யிருந்தார் பிள்ளை. இவருடைய மருமகனான கக்காயி நடராஜ சுந்தரம் என்பவர் மூலம், நாகஸ்வர வித்வான் திருவெண்காடு சுப்பிர மணியத்துக்கு தாக்கீது போயிற்று. திருவெண்காட்டார் வந்து எஸ்.பி- யின் காலில் விழ, ராஜரத்தினம் பிள்ளை உயிர் தப்பியது.

- ரமேஷ் வைத்யா

கலைஞரின் பவள விழா பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆற்றிய சிறப்புரை கலைஞரை மட்டுமல்ல, கேட்ட வர் அனைவரின் நெஞ்சையும் மிக மிக நெகிழ்த்தியது.

''நான் ரெண்டு வருஷம் தர்றேன்!''

'உன்னோடு நான் இருந்த ஒவ் வொரு மணித்துளியும்

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...!’

காலப் பெட்டகம் - 1998

- இந்த வரிகள் காதலுக்கு மட்டும் இல்லை; நட்புக்கும் இந்த வரிகள் பொருத்தமாகத்தான் இருக்கும் என்பதைப் புரிய வைத்தனர் அந்த இருவர்.

''என் நண்பனே... உன்னை எதைச் சொல்லிப் பாராட்டுவது..! எந்தச் சம்பவத்தைச் சொன்னாலும் அதில் நானும் உடனிருப்பேனே... அப்படியானால் என்னை நானே பாராட்டிக்கொள்வதாகிவிடாதா?!'' என்று இயல்பான குரலில் பேச ஆரம்பித்த சிவாஜி. மெதுமெதுவாகக் குரலுயர்த்தி உணர்ச்சிகளின் விளிம் புக்குப் போய்விட்டார். கலைஞரின் பவளவிழா பாராட்டு விழா நடத்தக் கூடியிருந்த மொத்தக் கூட்டமும் திசை திரும்பி, இந்த நண்பர்கள் பக்கம் கவனமாகிவிட்டது.

''பாசமலர் படத்தில் அண்ணனாக அழவைத்த சிவாஜி, இந்த விழா மேடையில் ஒரு நண்பனாகத் தோன்றி எல்லோரையும் கண்கலங்க வைத்துவிட்டார்!'' என்றார் ஓர் இளம் இயக்குநர்.

எத்தனை பக்க வசனமென்றாலும், கணீர்க் குரலில் ஏற்ற இறக்கத்தோடு திக்கித் திணறாமல் பேசக்கூடிய நடிகர் திலகத்தால், அந்த மேடையில் சில வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிக்க முடியவில்லை.

''மேடையேறிய கணம் முதல் அவர் தன்வசத்தில் இல்லை. அதி லும் மைக்கை நெருங்கி, 'தாயே... தமிழே’ என்று ஆரம்பித்தவுடன் முற்றாகத் தன் வசம் இழந்துவிட்டார் என்று தெரிந்தது. கலைஞருடனான ஒவ்வொரு சம்பவத்தையும் மனக் கண்ணில் கண்டு அசை போட்டு, அதன் பிறகே 'அதைச் சொல்லிப் பேசுவதா... இதைச் சொல்லி பாராட் டுவதா’ என்ற நிதானத்தில் பேசினார்'' என்றார் விழாவுக்கு வந்திருந்த மூத்த சினிமா பத்திரிகையாளர் ஒருவர்.

சிவாஜியின் நிதானமெல்லாம் முற்றாக உடைந்துபோனது பேச்சின் கடைசி கட்டத்தில்தான்! 'அய்யா... இந்தப் பய பாரதிராஜா சொன்னான், எங்க ஆயுசுல எவ்வளவு வேணுமோ எழுதித் தரேன்னு! அவர்கள் இளை ஞர்கள். என்னால அவ்வளவு முடி யாது. நான் ரெண்டு வருஷம் தரேன்; எடுத்துக்கோ! அதுவரைக் கும் நான் இருப்பேனோ, மாட் டேனோ!’ என்றபோது சிவாஜிக்கு லேசாகக் குரல் உடைய, கடும் பிரயத்தனத்தோடு உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு மேடையில் உட்கார்ந்திருந்த கலைஞரின் கண்கள் கரையை உடைத்துக்கொண்டன. கண்ணாடித் திரைக்குப் பின்னால் கண்ணீர் பளபளக்கும் கண்களோடு, உதடுகள் கோணி, கட்டுப்படுத்தமுடியாத மனோநிலையில் சிக்கிய கலைஞரின் முகம், கலக்கத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியது.

காலப் பெட்டகம் - 1998

பேச்சு முடிந்து திரும்பும்போது, சிவாஜி வரும் வழியெல்லாம் கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தார்கள் மேடையில் இருந்தவர்கள். தள்ளாடிய நடையோடு கலைஞரை நெருங்கிய சிவாஜி இரு கரங்களை விரித்துக்காட்ட, அதுவரை கட்டிக் காப்பாற்றப்பட்ட மேடை மரபுகள் அவர்களின் நட்புக்கு முன்னால் தவிடுபொடியாகின. கலைஞருக்குள் சிவாஜியும் சிவாஜிக்குள் கலைஞரும், பழைய கணேசனையும் கருணாநிதியையும் தேடும் வேகத்தில் ஆரத் தழுவிக்கொள்ள... அடுத்த சில கணங்கள் அரங்கிலிருந்த எல்லோரது முகத்திலும், பிரிந்திருந்த காதலர்கள் கட்டி அணைத்துக்கொள்ளும் க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கும் பரவசம் தோன்றியது.

இருவரும் பிரிந்துவிட்ட பிறகும் கலைஞரின் கண்களில் கட்டுப்பாடில்லாமல் நீர்! 'தான் ஒரு முதல்வர், ஒரு கட்சியின் தலைவர், தன் கரகரத்த குரல் கேட்பதற்காக கூட்டம் காத்திருக் கிறது, தன் முகத்தை திரைமுழுக்கக் காட்டிக் கொண்டு காமிரா உற்றுப் பார்க்கிறது...’ என்ற எந்த சிந்தனையும் இல்லாமல், 'என் நண்பன் பேசினதில் நான் நெகிழ்ந்துபோனேன்; கண்ணிலே தண்ணீர் வந்துடுச்சு. இதிலே என்ன இருக்கு வெட்கத்துக்கு!’ என்பவர்போல, கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மேல்துண்டால் மூக்கை அழுந்தத் துடைத்தபடி மைக்கை நெருங்கினார்.

வழக்கமாகப் பேசுபவர்களே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டால், குரல் கரகரப்பாகிவிடும். ''உணர்ச்சிமயமான இந்த விழாவிலே...'' என்ற கலைஞரின் குரலில் அன்று கொஞ்சம் கூடுதல் கரகரப்பு!

- சி.முருகேஷ்பாபு

அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ட்டனின் காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது இந்த ஆண்டில்தான். விகடனில் முதன்முதல் கிளின்ட்டன்- மோனிகா காதல் பற்றி வெளியான கட்டுரையிலிருந்து ஒரு துளி இங்கே...

'பில்’லானாலும் புருஷன்!

தோ ஜாலி மூட்! மனைவி ஹில்லாரியுடன் 'பிக்னிக்’ போனார் அமெரிக்க ஜனாதிபதி கிளின்ட்டன். போன இடத்தில், அவர் தன் மனைவியைக் கட்டிக்கொண்டு கொஞ்சுகிற 'போஸ்’ பத்திரிகைகளில் வந்தன. மக்களும் தங்கள் ஜனாதிபதியின் 'ரொமான்ஸ் போஸ்’ பார்த்து, ரசித்துச் சிரித்தார்கள். அமெரிக்க மக்களுக்கு இது 'டேக் இட் ஈஸி’ விஷயம்.

ஒரு மாதம் போயிருக்கும்! இப்போது கிளம்பியிருக்கும் மோனிகா லூயின்ஸ்கி சமாசாரம், கிளின்ட்டனின் பதவியைப் பறித்துவிடும் போலிருக்கிறது! விஷயம்- மாற்றான் தோட்டத்து மலர் விவகாரம். கிளின்ட்டன் விஷயத்தில் இது முதல் கோணல் அல்ல..!

காலப் பெட்டகம் - 1998

அர்கன்சாஸ் கவர்னராக இருந்த போது கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த கிளின்ட்டன், ஓட்டல் அறைக்குள் தன்னை அழைத்து, முறைகேடாக நடந்து கொள்ள முயன்றார் என்று குற்றம் சாட்டினார் பவுலா ஜோன்ஸ் என்ற பெண்.

இந்த வழக்கு நடந்துகொண்டி ருக்கும்போதே, கிளின்ட்டனுக்கு மற்றொரு தலைவலி முளைத்தது. ஜெனிஃபர் ஃப்ளவர்ஸ் என்ற பெண், தன்னுடன் கிளின்ட்டன்  12 வருடம் தொடர்பு வைத்திருந்தார் என அறிவித்தார்.

இதோ... மோனிகா சமாசாரம் வெளிவந்ததுகூட இந்த வரிசையில் தான்! வெள்ளை மாளிகையில் தான் பணிபுரிந்தபோது, கிளின்ட்ட னுக்கும் தனக்கும் இடையே சுமார் ஒன்றரை வருட காலம் அந்தரங்க மான தொடர்பு இருந்தது என்று தனது 'நம்பிக்கையான’ தோழி லிண்டாவிடம் நட்புரீதியில் ஒரு முறை சொல்லியிருக்கிறார் மோனிகா.

தன் மகளைவிட ஆறு வயதே மூத்த மோனிகாவை கிளின்ட்டன் தனது இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்ற செய்தி லிண்டாவுக்குப் பேரதிர்ச்சி உண் டாக்கியதாம்! இதை எஃப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க உளவுத் துறைக்கு லிண்டா தெரிவித்திருக்கி றார். மோனிகா- கிளின்ட்டன் தொடர்பு பற்றிய விஷயம் கசிந்து பவுலாவின் வழக்கறிஞர்களுக்குத் தெரியவர, அதே வழக்கில் மோனி காவும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். சமயம் கிடைத்தபோதெல்லாம் பல மணி நேரம் நீடித்த இந்த உரையாடல்கள், ரகசியமாக 20 ஆடியோ காஸெட் டுகளில் பதிவு செய்யப்பட்டன. இதை வைத்துக்கொண்டுதான் விளையாட்டு ஆரம்பமானது! ஆனால், ''பவுலாவின் வழக்கறிஞர்களுக்கு நான் ஒத்துழைப்பு தரப்போவதில்லை. கிளின்ட்டனுக்கும் எனக்கும் தொடர்பு இருந்ததை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை'' என்பதுதான் மோனிகா பேசியதன் சாராம்சம். அதுபோலவே, பவுலாவின் வழக்கறிஞர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட வாக்குமூலத்திலும் சொல்லிவிட்டார்.

மோனிகா இப்படி உண்மையை மறைப்பதற்கு பின்னணி என்ன?

கிளின்ட்டனின் நெருங்கிய, நீண்டநாள் நண்பர் வெர்னன் ஜோர்டன். பவுலாவின் வழக்கறிஞர்கள் மோனிகாவைக் குறிவைத்த பின்னர், இவர் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி மோனிகாவுக்குப் பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கித் தர முயன்று இருக்கிறார். இதற்குப் பதிலாக, 'கிளின்ட்டனைக் காட்டிக் கொடுத்துவிடாதே!’ என்ற கோரிக்கைதான் இருந்திருக்கவேண்டும் என்கிறார்கள், கென்னத் குழுவில் உள்ள விசாரணையாளர்கள். அவர்களின் நோக்கம்- கிளின்ட்டன் ஒரு 'செக்ஸ்’ வெறியர் என்ற கோணத்தில் நிரூபிப்பது அல்ல! தனது மிக உயர்ந்த பதவியைத் துஷ்பிரயோகம் செய்து, வழக்கு ஒன்றில் உண்மையை மறைத்துக் கூறும்படி மோனிகாவை கிளின்ட்டன் இயக்கினார் என நிரூபிப்பதே!

'ஆமாம்... கிளின்ட்டன் என்னை கோர்ட்டில் பொய்த் தகவல் கொடுக்கவைத்தார்’ என்று மோனிகா ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தால் போதும்; கிளின்ட் டன் நாற்காலி பிடுங்கப்பட்டுவிடும். அமெரிக்காவின் காரெக்டர் அதுதான்!

- நியூயார்க்கிலிருந்து:
அண்டன் ஜோ பிரகாஷ்

'உலகே... உலகே... உடனே வா!’ - இணைய வலைதளங்களை அறிமுகப்படுத்தும் தொடர் பகுதி, இந்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பித்துள்ளது.

 

காலப் பெட்டகம் - 1998

மகாகவி பாரதியின் 'புதிய ஆத்திசூடி’ வரிகளுக்குப் பொருத்தமாக, 1987-ம் ஆண்டில் 'பரசுராம் பிஸ்வாஸ்’ என்னும் புனைபெயரில் 22 சிறப்புச் சிறுகதைகளை வெளி யிட்டது விகடன். அப்போது கதை வடிவம் கொடுக்கப்பட்ட வரிகள் அல்லாமல், வேறு 22 வரி களுக்குப் பொருத்தமாகப் பிரபல எழுத்தாளர்களின் 'புதிய ஆத்தி சூடி’க் கதைகளை இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. முதல் சிறு கதையை எழுதியுள்ளவர் சுஜாதா. 'சிவப்பு மாருதி’ என்னும் இந்தக் கதைக்குப் படம் வரைந்துள்ளவர் ஓவியர் ஸ்யாம். இதிலிருந்து விகடனில் தொடங்குகிறது ஸ்யாம்ராஜ்ஜியம்!

காலப் பெட்டகம் - 1998

விகடன் குழுமத்திலிருந்து பெண்களுக்கான பிரத்யேக மாதமிருமுறை இதழ் 'அவள் விகடன்’ வெளியாகத் தொடங்கியது இந்த ஆண்டு அக்டோபர் 14-லிலிருந்து.

வாவ் 2000 - மில்லேனியம் (2000-வது ஆண்டு) நெருங்கும் நேரத்தில், கி.பி.1900 முதல் 2000 வரையிலான உலக நிகழ்வுகளை ஆண்டுவாரியாகத் தொகுத்துத் தரும் வரலாற்றுத் தொடரை ஆரம்பிக்கிறார் வேல்ஸ். 'உலகின் காலப் பெட்டகம்’ என்று இதைக் குறிப்பிட்டால் மிகையாகாது. இந்தத் தொடருக்கான அத்தியாய எண்களை கவுன்ட்-டவுன் முறைப்படி 100-லிருந்து ஆரம் பித்து, 2000-வது ஆண்டு பிறக்கப் போகும் தருணத்தில் 'இன்னும் இரண்டே நாட்கள்’ என முடித்தி ருந்தது ஒரு புதுமை!

கம்ப்யூட்டர் நுணுக்கங்களையும் சாஃப்ட்வேர் இன்ஜினீய ரையும் மையமாக வைத்து 'நகுல்’ என்னும் சுவாரஸ்யத் தொடர் கதையை எழுதியுள்ளார் ரவி காந்தன். இதற்குப் படம் வரைந்த வர் ஓவியர் சசி. இந்தக் கதைக்கு வெவ்வேறு கோணங்களில் அவர் வரைந்திருந்த படங்கள் அத்தனை அழகு! கிடுகிடுவென வளர்ந்து வந்துகொண்டிருந்த அவர் இளம் வயதிலேயே கான்ஸர் நோய் முற்றி, இறந்தது மிகத் துயரமான நிகழ்வு!

தோல்விகளும், முதல் வெற்றி யும்... தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா, வேர்கள் ஆகிய தலைப்புகளில், வாரம் ஒரு பிரமு கர் தன் போராட்டங்கள், முன் னோர்கள், தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியவர்கள் பற்றிச் சொல்லும் தொடர் கட்டுரைகள்  இந்த ஆண்டில் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றார் பொருளாதார மேதை அமர்த்தியா சென். நோபல் பரிசு பெறும் ஆறாவது இந்தியரான இவரைக் கௌரவித்துக் கட்டு ரையும் கார்ட்டூனும் வெளியிட் டுள்ளது விகடன்.

தொழில் நகரமான கோவை யில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து, ஒட்டுமொத்த தமிழ் நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்த ஆண்டுதான்!

காலப் பெட்டகம் - 1998

தேர்தலில் பாரதிய ஜனதா ஜெயித்து, வாஜ்பாய் பிரதமர் ஆனார். ஆனால், தோழமைக் கட்சியான அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பிரதமர் வாஜ்பாய்க்குப் பல நிபந் தனைகளை விதித்து, ஆதரவுக் கடிதம் தராமல் அலைக்கழித்தார். இது குறித்துப் பல தலை யங்கங்கள், கார்ட்டூன்கள், நகைச் சுவை நையாண்டிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது விகடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு