Published:Updated:

நாணய பூஜை!

அப்துல் ரகுமான்

நாணய பூஜை!
##~##

நாணயம் தேவைப்பட்டது
மனிதனுக்கு!
உலோகத்தால் செய்தான்
காகிதத்தால் செய்தான்
இன்னும் தேவைப்பட்டது
வியர்வையால் செய்தான்
இன்னும் தேவைப்பட்டது
ரத்தத்தால் செய்தான்
இன்னும் தேவைப்பட்டது
கண்ணீரால் செய்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சந்தையானது உலகம்
இருபத்திநாலு மணி நேரச் சந்தை!
விற்பனைக்கு வந்துவிட்டன
எல்லாம்
கூவி விற்கப்படுகின்றன...
பட்டம், பதவி, வேலை எல்லாம்
விலைக்கு ஏற்றபடி கிடைக்கின்றன
நீதி, கற்பு, மானம், ஓட்டு எல்லாம்
பேரம் படிந்தால் கிடைக்கும்...
தேசம் கூட!

எல்லாவற்றுக்கும் விலைவாசி
ஏறிக்கொண்டே போனாலும்
நாளுக்கு நாள் விலை குறையும்
சரக்கும் ஒன்று உண்டு
மனிதன்!

நாணய பூஜை!

வாங்கும் வெறி பிடித்தது
மனிதனுக்கு!
கண்களை விற்று
விளக்குகளை வாங்கினான்
பசியை விற்று
உணவை வாங்கினான்
தூக்கத்தை விற்று
கட்டிலை வாங்கினான்
பிறகு
தன்னையே விற்றுக்கொண்டான்
எதையும் வாங்காமல்!

இப்போது
எல்லா இடங்களிலும் கேட்கிறது
நாணயங்களின் கூச்சல்!
சுப்ரபாதத்தில்
கல்யாண மேளத்தில்
ஆலயமணி ஓசையில்
'சத்ய மேவ ஜயதே’யில்
'ஜன கண மன’வில்
இதயத்துடிப்பில் கூட!

பிராமணர், ஷத்திரியர், சூத்திரர் என்று
யாரும் இல்லை இப்போது
எல்லோரும் இப்போது வைசியர்கள்
 

எல்லா கொடிகளுக்கும்
மேலே பறக்கிறது
நாணயக் கொடி!

எல்லா மதவாதிகளும் ஒன்றுபட்டு
செய்கிறார்கள்
நாணய பூஜை!
இதில் மட்டும் இல்லை
நாத்திகம்!