சீனு அண்ணாவும் பார்த்துக்கொண்டார்கள். பிறகு கல்கியும், துமிலனும் சேர்ந்தார்கள்.
வளர்ச்சிக்குத் தக்கபடி ஆனந்த விகடன் அலுவலகம் பிராட்வேயில் 140-ம் நம்பரில் இருந்த பெரிய கட்டடத்திற்கு மாறியது. நான் அங்கே சந்தா இலாகா, ஸ்டோர்ஸ் இலாகா, புத்தக இலாகா என எல்லாவற்றுக்கும் மானேஜராகப் பல காலம் பணியாற்றினேன். அப்போது, சில புத்திமதி களை 'செயல் மூலம்' கற்றுக்கொடுத்தார் வாசன்.
ஒரு சமயம், சபா ஒன்றில் சங்கீதக் கச்சேரி கேட்கச் சென்றேன். ஆசிரியர் கல்கி அவர்களுக்கு 'மரியாதை டிக்கெட்' வரும். அன்று 'கல்கி' கச்சேரிக்குச் செல்லவில்லை. நான் அந்தச் சபாவில் மெம்பராதலால் சென்றிருந்தேன். நான் இலவசமாக அங்கு சென்றுவிட்டேன் என்று 'கல்கி' நினைத்து, வாசனிடம் இதைப்பற்றி விசாரிக்கச் செய்தார். நான் அதிர்ச்சி அடைந்து, "என் மெம்பர்ஷிப்பில் அல்லவா சென்றிருந்தேன்! அப்படியே அவர் டிக்கெட்டில் போனாலும், அதற்கு அவ்வளவு முக்கி யத்துவமா?" என்று கேட்டேன். "சிறு விஷயமானாலும் முக்கியம்தான்! அப்போது உனக்குச் 'சொந்தம்' தலைதூக்குகிறது. 'கல்கி' அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர் ஆசிரியர். அந்தப் பதவிக்குரிய மரியாதையைத் தரவேண்டும்" என்று கண்டிப்பாகச் சொன்னார் வாசன்.
ஒருநாள், குமாஸ்தா ஒருவர் காரமாக ஏதோ பேசிவிட்டு டெலிபோனை ஓங்கிக் கீழே வைத்தார். "அப்பனே! டெலிபோன் கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும்" என்றேன். அந்தக் குமாஸ்தா என்னுடன் ஒரு மூச்சு சண்டை போட்டுவிட்டார். நான் வாசன் அவர்களிடம் இதைச் சொன்னேன். அடுத்த நாள், என் மேஜை மீது அந்த குமாஸ்தாவின் மன்னிப்புக் கடிதம் இருந்தது. நான் உடனே வாசனிடம் சென்று, 'அந்தக் குமாஸ்தா மன்னிப்புக் கேட்டுவிட்டதால் விசாரிக்கவேண்டாம்!' என்றேன். "நீ விரும்பினாலும், நான் விசாரிக்க முடியாது. நானல்லவா உன்னிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் செய்தேன்!" என்றார். காரியாலய ஒழுங்கு முறையில் அந்தக் காலத்திலேயே அவ்வளவு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தவர் அவர்.
|