Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்


விகடன் பொக்கிஷம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

காஞ்சி மகான் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அமரத்துவம்

எய்தினார். அப்போது விகடன் வெளியிட்ட தலையங்கத்தில், வழக்கமான புன்னகைக்கும் சின்னத்துக்குப் பதிலாக, விகடன் தாத்தா எழுந்து நின்று, கைகள் கட்டி, தலைகுனிந்து அஞ்சலி செலுத்துவது போன்ற சின்னம் வெளியாகியுள்ளது.

தவமுனிவர் தத்துவமானார்

டமாடும் தெய்வம் நான்கு ஆண்டுகளாக நடமாடவில்லை. பேசும் கடவுள் நான்கு வருடங் களாகப் பக்தர்களிடம் பேசவில்லை. தரிசனமே காட்சியாக, மௌனமே மொழியாக அருள்மாரி பொழிந்து கொண்டிருந்த தவமுனிவரின் வடி வம் நம் கண்களிலிருந்து மறைந் தாலும், தத்துவ உருவில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும்.

காலப்பெட்டகம்

மனிதகுலத்தின் மீதுள்ள பெருங் கருணையால், மெய்ப்பொருள், பொய்யான மெய் உருவம் தாங்கி, நம்மோடு பேசிப் பழகி, அன்பைக் கொட்டி, அருளுரை வழங்கி, பண்பை வளர்த்து, உள்ளம் உயர்த்தி, உய்யும் வழி காட்டி, உலகுக்கோர் ஆசானாய் நூறாண்டு காலம் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு அப்பேரொளி நமக்கு வழிகாட்டப் போகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இயற்கையன்னை ஈன்றெடுக்கும் ஈடு இணையற்ற மகான்கள் கொலு வீற்றிருக்கும் நவரத்தின மணிமண்டபத்தில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடுநாயகமாக விளங்கி, பிருந்தாவனவாசியாக, புவனமெங்கும் சத்தியமும் சாந்தியும் நிலவி, மக்கள் குலம் வளமோடு வாழ, வாழ்த்தி, நல்வழி நடத்திக்கொண்டிருப்பார். ஐயமில்லை.

'மருத நாயகம்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, பெங்களூர் மகாராணி கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஜோத்ஸனா என்கிற பெண்ணைத் தேர்வு செய்திருக்கிறார் கமல்ஹாசன் என்று, 3.4.94 இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டது விகடன். அடுத்த இதழில், வாசகர்களை ஏப்ரல் ஃபூல் செய்வதற்காக விகடன் செய்த குறும்பு அது என்று விளக்கமாக இன்னொரு கட்டுரை வெளியானது. நிபுணர்களைக் கொண்டு, விகடன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரா.கண்ணனுக்குத் தத்ரூபமாகப் பெண் போல மேக்கப் போட்டு, உடை மற்றும் அலங்காரங்களையும் பக்காவாகச் செய்து கட்டுரை வெளியிட்டிருந்ததில், அத்தனையும் உண்மை என்றே நம்பிவிட்டார்கள் வாசகர்கள். பின்னர், விஷயம் தெரிந்ததும், விகடனின் குறும்பை ரசித்துக் கடித மழை பொழிந்தார்கள். இங்கே, சாம்பிளுக்கு இரண்டு கடிதங்கள்...

காலப்பெட்டகம்

விகடனின் சூப்பர் (மருதநாயக) ஏப்ரல் ஃபூலுக்கு என்னால் முடிந்த சின்னப்பரிசு... சென்ற வெள்ளிக் கிழமை பிறந்த என் அக்கா மகளுக்கு நாங்கள் வைத்த பெயர் 'ஜோத் ஸனா'!

- கோ.முத்துச்செல்வன், தஞ்சாவூர்-6

விகடன் வாசகர்கள் அனைவரையுமே ஏமாற்றி, இந்த ஆண்டின் தலைசிறந்த (ஏப்ரல்) முட்டாளாக்கி வெற்றிக்கொடி நாட்டிய விகடனாருக்குப் பாராட்டுக்கள்! உங்களுடைய ஆ.வி. டீம் தயாரித்த அதிஜாக்கிரதை ப்ளான் மற்றும் முன்னெச்சரிக்கை முஸ்தீபுகளை அறிந்தபோது, எங்களிடம் பயம் காரணமாக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நன்றாகவே உணர முடிந்தது.

- ஏ.ஹபீபுர் ரஹ்மான், சென்னை-42

இந்தித் திரையுலக இசை மேதை ஆர்.டி.பர்மன் மறைந்தார்.

இவர்களது ஒப்பந்தம்!

காலப்பெட்டகம்

'பூத் பங்களா'வில் ஆரம்பித்து, 350 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர், அண்மையில் மறைந்த பிரபல இந்திப் பட இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன். வீட்டிலும் சரி, ஸ்டுடியோவிலும் சரி... எப்போதும் பயங்கர குஷியாகக் காணப்படு வார். இவ்வளவு உற்சாகமான மனிதருக்குக் குடும்ப வாழ்க்கையில் அவ்வளவு நிம்மதி இல்லை. முதல் மனைவி ரீடாவுடன் 14 ஆண்டுகளே வாழ்ந்தார். அப்புறம் இருவரும் பிரிந்தனர். 1980-ல் பம்பாய்ப் படவுலகின் பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லேயை மணந்தார். ஏற்கெனவே மணமாகி, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின், கணவர் கண்பத் போன்ஸ்லேயிடமிருந்து பிரிந்து வாழ்ந்தவர் ஆஷா.

பர்மன்- ஆஷா திருமணப் பந்தத்தில் குறிப்பிடும்படியான விநோதம் ஒன்று உண்டு. இதுபற்றி பர்மன் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஆஷா அளித்திருந்த பத்திரிகைப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் அது...

"நானும் பர்மன்ஜியும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தவுடன், முதலில் செய்துகொண்ட ஒப்பந்தம் என்ன தெரியுமா? 'பகல் பொழுது முழுவதும் இருவரும் சேர்ந்திருக்கலாம்; பார்ட்டிக்குப் போகலாம்; பிரச்னை இல்லை. ஆனால், இரவு நேரத்தில் என் குழந்தைகளைப் பார்க்க நான் என் வீட்டுக்குப் போய்விடுவேன். அவருடைய அபார்ட்மென்ட்டுக்கு அவர் போய் விட வேண்டும்!' இத்தனை வருடத் தாம்பத்யத்தில் ஒரு இரவுகூட நாங்கள் சேர்ந்து இருந்ததில்லை. இருக்கவும் முடியாது! காரணம், என் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா இரண்டுமே நான்தான்!"

- வி.சந்திரசேகரன்

குமுதம் நிறுவனரும் ஆசிரியருமான எஸ்.ஏ.பி. அமரர் ஆனார். அவரைப் பற்றிய நினைவுகளை, அவரிடம் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் எழுத, 'எடிட்டர் எஸ்.ஏ.பி.' என்னும் தலைப்பில் அதைத் தொடர் கட்டுரையாக வெளியிட்டுள்ளது ஆனந்த விகடன். முதல் அத்தியாயத்திலிருந்து ஒரு சிறு துளி...

எடிட்டர் எஸ்.ஏ.பி.

காலப்பெட்டகம்

"சரி, கீதை படிப்போம்..." என்றார் குமுதம் பப்ளிஷர் கலங்கிய விழிகளுடன்.

புரசைவாக்கம் ஹன்ட்டர்ஸ் ரோடில், எடிட்டரின் பங்களா.

முன்ஹாலில் எடிட்டரின் உருவப் படம் ஒரு முக்காலியின் மீது வைக்கப்பட்டு மாலை சாத்தப்பட்டிருக்கிறது. எல்லோரும் அழுது அரற்றி முடித்து, எடிட்டரின் உடல் அமெரிக்காவிலிருந்து எப்படி, எப்போது வரும் என்பதைத் தெரிந்து கொண்டு, கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போதுதான் பப்ளிஷர் அதைச் சொன்னார்.

அதற்குக் காரணம் உண்டு.

எடிட்டருக்குக் கீதையைக் காட்டிலும் பிரியமானது வேறொன்றும் இருந்ததில்லை. கீதையைத் தவிர்த்து வேறொன்றையும் வாழ்க்கைக்கு நெறியாக அவர் கொண்டதில்லை.

38 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சின்மயானந்தா சுவாமிகளின் கீதை லெக்சரைக் கேட்டு, இன்றைய மாடர்ன் மனிதனாக இருந்தாலும் கூட கீதையின் கர்மயோகம் எப்படி வழிகாட்டுகிறது என்ற சுவாமிஜியின் புதிய கண்ணோட்டத்தையும் புதிய வியாக்கியானத்தையும் உணர்ந்து புல்லரித்து, கீதையைப் பாராயணம் செய்யும் வழக்கத்தை ஆரம்பித்து, புரட்சிகரமாக மாறிப்போனார் எடிட் டர். அதற்கு முன்பே அவரிடம் இலைமறைகாயாக இருந்த சீரிய பண்புகள் அன்று மலர்ச்சி பெற்றன. அறிவும் ஆற்றலும் கற்பனையும் செயல் வேகமும் அசுரத்தனமாக வளர்ச்சி பெற்றன.

அதற்கு அதிகாரபூர்வமாக அப்படியரு பெயர் இல்லையே தவிர, 'கீதை கிளாஸ்' என்ற ஒன்று ஜனனமாயிற்று. மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்தில் பப்ளிஷரின் வீட்டு மாடியில், வாரம் இரு முறை மாலை 6 மணி முதல் 8 மணி வரையில் ஒவ்வோர் அத்தியாயம் படிப்பதும், முந்தின கிளாஸில் படித்த சுலோகத்தையும் அர்த்தத்தை யும் நெட்டுருப் பண்ணி வைத்து, ஒப்பித்து விவாதிப்பதும் வாடிக்கை யாயிற்று. திங்கட்கிழமையும் வியா ழக்கிழமையும், சாயந்தரம் மணி ஐந்தரை ஆயிற்றென்றால், கையில் என்ன வேலை இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு, "கீதை கிளாஸுக்கு நேரமாச்சு சார்..." என்று சொல்லி ஜ.ரா.சுந்தரேச னையும் என்னையும் காரில் ஏற்றிக் கொண்டு தானே ஓட்டிச் செல்வது வழக்கமாயிற்று. சில சமயம் புனித னும் வருவார். காரில் போகும்போதும் மயிலாப்பூரிலிருந்து திரும்பும் போதும் பத்திரிகை விஷயமோ, கதை விஷயமோ, சினிமா விஷ யமோ பேசக்கூடாது என்பது அவர் கட்டளை. படித்த, கேட்ட, அனுபவித்த உயர்ந்த விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசலாம்; அல்லது பக்திப் பாட்டுப் பாடலாம். பெரும்பாலும் சுந்தரேசன்தான் பாடுவார். நல்ல சாரீர வளம் அவருக்கு உண்டு. எடிட்டர் சன்னமான குரலில் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' பஜன் பாடுவார். அநேகமாக நான் சாட்சி மாத்திரமே!

இரண்டு வழக்கம் வைத்துக் கொண்டிருந்தார் எடிட்டர். வைகுண்ட ஏகாதசியன்று காலை கீதை 18 அத்தியாயத்தையும் ஒரே மூச்சாகப் பாராயணம் செய்து, அது முடிந்ததும் பஜன்ஸ் பாடி விட்டுத் திரும்புவது ஒன்று.

காலப்பெட்டகம்

இன்னொன்று, நெருங்கிய நண்பரோ உறவினரோ காலமானால், அவர்கள் வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு கீதை பாராயணம் செய்வது. வருகிறவர்கள், அந்தச் சூழ்நிலையில் ஒருமூலையில் எடிட்டரும் நாங்களும் கீதை படிப் பதை விசித்திரமாகப் பார்ப்பார்கள். எடிட்டர் அதையெல்லாம் பொருட்படுத்தமாட்டார்.

அதனால்தான் இன்று அவர் மாலையும் உருவப்படமுமாக ஆகி விட்டபோது, "கீதை படிப்போம்" என்றார் பப்ளிஷர். அவரும் சுந்தரேசனும் நானும் கீதை படிக்கத் தொடங்கினோம்.

- ரா.கி.ரங்கராஜன்

பாண்டியம்மாள் வழக்கை மறக்க முடியுமா? பத்மினியின் வழக்கும் துயரமானது. இதோ, அந்தக் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்...

நீதி வென்றது!

வ்வளவு துன்பங்கள் வந்தாலும், கடைசியில் நீதி வெல்லும் என்று சொல்வதுண்டு. இப்போது அது நடந்திருக்கிறது!

பாண்டியம்மாள் வழக்கை மறக்கமுடியுமா? 'கொலையானார்' என்று கருதப்பட்ட பாண்டியம் மாள் கோர்ட்டுக்கு உயிரோடு வந்து நின்ற கதை அது!

அவரது கணவர் வேலுச்சாமி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மதுரைவீரன், அர்ஜு னன் என மூவர் மீதும் பாண்டியம்மா ளைக் கொலை செய்ததாக போலீஸ் போட்ட பொய் வழக்கு பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

'அந்த நிரபராதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அவர்க ளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும்' என்று உயர்நீதிமன்றத்தில் 'ரிட்' மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ர மணியன்.

அவர்கள் விடுதலையானார்கள்!

அதன் பிறகும் நமது நஷ்ட ஈடு கோரிக்கை வழக்கு தொடர்ந்தது. இப்போது அந்த நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. 'பாண்டியம்மாள் கணவர் வேலுச்சாமிக்கு ஒன்றரை லட்ச ரூபாயும் மதுரை வீரன், அர்ஜுனன் ஆகியோருக்குத் தலா 50,000 ரூபாயும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்' என்று கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது!

தீர்ப்பு கிடைத்த செய்தி சொல்ல பாண்டியம்மாளின் ஊருக்கு விரைந்தோம். விருதுநகரிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில், பொட்டல்காட்டுக்குள் கிடக்கிறது வாய்ப்பூட்டான்பட்டி. பாண்டியம்மாள் - வேலுச்சாமி தம்பதியின் மகன் கணேசன், புழுதியில் புரண்டு விளையாடிக்கொண்டிருந்தான். "தங்கச்சிப் பாப்பாவோட அம்மா ஊருக்குப் போயிருக்கு. அப்பா கடையில இருக்காரு" என்றான்.

பாண்டியம்மாள் கிடைத்து, வேலுச்சாமி விடுதலையான பிறகு அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பெயர் சரஸ்வதி!

பக்கத்து ஊரான ரெட்டியபட்டியில் சைக்கிள் கடை வைத்து நடத்துகிறார் வேலுச்சாமி.

"அதென்னமோங்க விதி... தலை யெழுத்து-விளையாடிடுச்சு! யாரைச் சொல்லி என்ன பண்ண? கடவுள் புண்ணியத்துல காப்பாத்துனீங்க. இன்னிக்கு என் குடும்பம் நல்லா இருக்குன்னா, அதுக்கு உங்க எடிட்டர் ஐயாவுக்குத்தான் நன்றி சொல்லணும்" என்றார் கைகூப்பியபடி.

அர்ஜுனன் குடும்பம்தான் சிதறிப்போய்விட்டது. இந்த வழக்குக்குப் பிறகு வீட்டில் கணவன் - மனைவிக்குள் நிம்மதியில்லை. அதுவும் திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே கொலை வழக்கு... வாழ்க்கையே திசை மாறியதால் தினந்தோறும் தகராறு! இரண்டு மாதங்களுக்கு முன்னால், அர்ஜு னின் மனைவி தன் பச்சைக் குழந் தையை விட்டுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். அர்ஜுனன் விரக்தியோடிருப்பதாக ஊரில் சொன்னார்கள். நாம் போயிருந்தபோது அவர் வீட்டில் இல்லை.

மதுரைவீரன், நீண்ட நாள் தாடியோடு இருந்தார். விருதுநகர் மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன்... வழக்கிலிருந்து விடுதலையானால் கை விலங்கு கால் விலங்கு போட்டு, 21 அக்னிச் சட்டிகள் ஏந்தி, உடம்பில் ரதம் கட்டி இழுப்பதாக வேண்டுதல்! வருகிற ஏப்ரல் 4-ம் தேதி திருவிழா வில் இதை இவர் செயல்படுத்தலாம்! நெடுஞ்சாலைத்துறை வேலை மீண்டும் கிடைத்து, இப்போது பணியில் இருந்தாலும், சம்பளம் மொத்தமும் வழக்குக்காகக் கடன் வாங்கியிருந்த தொகையின் வட்டிக்கே போய்விடுகிறதாம்.

பிழைக்க வழி...? ஊர்க்காரர்கள், இவர் குடியிருக்கும் மருளூத்திலேயே ஒரு கடை வைத்துத் தந்திருக்கிறார்கள் மதுரைவீரன் மனைவிக்கு!

மொத்தத்தில், ஒரு பொய் வழக்கு மூன்று நபர்களின் குடும்பத்தையே அலைக்கழித்துச் சின்னாபின்னப் படுத்திவிட்டது!

- கே.ராஜகுமார்

புது வாழ்வு!

டந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி... நள்ளிரவு நடந்து விட்ட அந்தப் பயங்கரம் - செய்தியாக வெளிவந்தபோது தமிழகமே பரிதவித்து நின்றது.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கணவரின் முன்னாலேயே, காவலர்களால் மிருகத்தனமாகப் பலாத்காரம் செய்யப்பட்டார் பத்மினி.

"அந்தக் கொடுமையான காட்சியைக் கண்டு கதறித் திமிறிய என் கணவர் நந்தகோபாலைக் கொலை செய்து தூக்கிலிட்டது போலீஸ்..." என்ற கதறலுடன் தமிழக அரசின் கதவுகளை வேகமாகத் தட்டிய அந்த பத்மினியை நினைவிருக்கிறதா?

தென் ஆற்காடு வள்ளலார் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஜான்ஸிராணி மற்றும் சில தோழர்களின் துணையுடன் போராடத் துவங்கினார் பத்மினி.

பத்மினி கேஸை விசாரிக்க, பழனியப்பன் விசாரணை கமிஷனைத் தமிழக அரசு நியமித்தது. ஒண்ணரை ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது கமிஷனின் விசாரணை! ஆனால், அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கிடையில், காவல்துறையின் புலனாய்வு அதிகாரி லத்திகாசரண் ஓராண்டுக்கு முன்பு பத்மினி விவகாரங்கள் சம்பந்தமாக ஆய்வு நடத்தித் தாக்கல் செய்த 800 பக்கங்களுக்கும் மேற்பட்ட மிக நீண்ட அறிக்கையின் அடிப்படையில், உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு உடனடியாக ஒரு லட்சம் ரூபாயைத் தற்காலிக நிவாரணத் தொகையாக பத்மினிக்கு அளித்து, 'மிக விரைவில் அவருக்கு வேலை வாய்ப்பொன்று அளிக்கப்படும்' என்றும் அறிவித்தது. இருந்தும், கடந்த ஓராண்டு காலமாக அவருக்கு வேலை கொடுக்கப்படாமல் தள்ளிப் போடப்பட்டது.

இப்படி ஒரு சூழ்நிலையிலும் துளியும் நம்பிக்கை தளராமல் இருந்தார் பத்மினி. நம்பிக்கைக்குப் பலன்... பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இப்போது வேலை கிடைத்திருக்கிறது.

இருந்த ஒரே துணையான கணவரும் போன பிறகு, வாட்டியெடுத்த வறுமை காரணமாக உறவினர்களும் கைகொடுக்க முடியாத நிலையில், பத்மினிக்குக் கைகொடுத்தது சி.பி.எம். கட்சியின் ஜனநாயக மாதர் சங்கம்தான்!

- ஆர்.தணிகைத்தம்பி

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் 'டணால்' தங்கவேலு மறைந்தார்.

தங்கமான வேலு!

காலப்பெட்டகம்

சென்னை- தி.நகரிலிருக்கும் ராஜாபாதர் தெரு...

நவராத்திரி வருகிறது என்றாலே கல்யாண அமர்க்களத்துடன் தயா ராகும் அந்த வீடு, இந்த வருடம் பொலிவிழந்து, சோகத்தின் விளிம் பில் கிடக்கிறது.

அந்த வீடு- மறைந்த நடிகர் கே.ஏ.தங்கவேலுவுடையது!

"தீவிர தெய்வ பக்தி உள்ளவர் அவர். நவராத்திரி பூஜை அவருக்கு ரொம்பப் பிடித்தமானது. அதனாலேயே ஒரு கல்யாணத்தையும் விடப் பிரமாண்டமாக அதைக் கொண்டாடுவார்!" என்று பேச ஆரம்பித்தார், வீட்டின் ஹாலில் தங்கவேலுவின் மாலை சூடிய படத்துக்கு எதிரே கண்ணீரோடு உட்கார்ந்துகொண்டிருந்த சரோஜா தங்கவேலு. அருகிலேயே தங்கவேலுவின் மூன்று பெண்களும்.

"அவர் சினிமாவில் ரொம்பப் பிரபலமாக இருந்த காலங்களில், நவராத்திரிக்காக ரோடு அடைக்கும் பந்தல் போடுவார். சினிமா செட்டிங் போல பிரமாண்டமாக இருக்கும் கொலுவோட அமைப்பு. கொலு நடக்கிற நாட்களில் ஒவ்வொரு பிர பலத்தின் கச்சேரி நடக்கும். அப்போ தெல்லாம் காருகுறிச்சி அருணாசலம் நாதஸ்வரத்திலிருந்து எம்.எஸ்.வி. வரை தினமொரு கச்சேரி! தினசரி சினிமா காட்சிக்கும்கூட ஏற்பாடு செய்வார். நவராத்திரி நாட்களில் சிவாஜி, ஜெமினி போன்ற பிரபல நடிகர்களிலிருந்து எல்லோரும் வரு வாங்க" என்றார் சரோஜா. பிரபலங் களை மட்டுமின்றி, தன் தெருவைச் சேர்ந்த அனைவரையுமே கொலுவுக்குக் கூப்பிட்டு மகிழ்வாராம் தங்க வேலு.

புதுமை எங்கிருந்தாலும், அதைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தும் வழக்கமுள்ள விகடன், 3D படங்கள் என்னும் புதுமையை அறிமுகப்படுத்தி, வாரந்தோறும் ஒரு 3D படத்தை விகடன் பின் அட்டையில் வெளியிட்டு, வாசகர்களை ஒரு புதிய அனுபவத்தில் திளைக்கச் செய்தது.

பார்க்கப் பார்க்கப் பரவசம்! ஒரு 3D பிரமிப்பு!

ரோப்பியர்கள், அமெரிக்கர் கள், ஜப்பானியர்கள் என்று எல்லோருக்குமே இப்போது பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறது. சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ஓட்டல்களிலும் கூட்டம் கூட்டமாக நின்று, என்ன ஏது என்று புரிபடாத, கலவரமாகத் தோன்றும் ஒருவகையான படங்களை வெறித்துப் பார்ப்பதிலேயே அவர்களுக்கு மணிக்கணக்காக நேரம் செலவாகிறது. திடீரென்று 'எனக்குத் தெரிகிறது!' என்று துள்ளிக் குதிக்கிறார்கள் சிலர். வேறு சிலர் 'ஊஹூம்... தெரியவில்லை!' என்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு செல்கிறார்கள்.

காலப்பெட்டகம்

இப்படி எல்லோரையும் பைத்தியம் பிடிக்க வைத்திருப்பது என்ன?" லேட்டஸ்ட் 'க்ரேஸ்' ஆன ஸ்டீரியோ க்ராம் 3D படங்கள்! இவற்றை ரசிக்க ஸ்பெஷல் கண்ணாடி எதுவும் தேவையில்லை என்பதுதான் ஜோரான விஷயம்!

காலப்பெட்டகம்

இப்படிக் கண்ணாடி இல்லாமல் 3D படங்களைச் செய்துகாட்டுவதற்கான சோதனைகள் 1950-லிருந்து அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கின்றன. 1962-ல்தான் வெற்றி! காரணம், நவீன கம்ப்யூட்டர்களின் உதவி! முன்பே 3D படம் தயாரிப்பில் வெற்றி பெற்றாலும், அதற்கு இரண்டு படங்கள் தேவைப்பட்டன. பக்கத்துப் பக்கத்தில் அவற்றை வைத்து, ஸ்பெஷல் லென்ஸ் பொருத்தப்பட்ட 'ஸ்டீரியோஸ்கோப்' என்னும் சாதனத்தின் வழியாகப் பார்த்தால்தான், அந்த ஜோடிப் படங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து 3D படமாகும். குறைந்தபட்சம் பிரத்யேக மூக்குக் கண்ணாடியாவது தேவைப்பட்டது!

இப்போது இந்த வித்தையை, ஜஸ்ட் லைக் தட் ஒரே படத்தில் செய்துகாட்டியிருப்பதுதான் கம்ப்யூட்டரின் சாதனை. அண்மையில் அமெரிக்க வார இதழான 'டைம்' பத்திரிகை, ஸ்டீரியோக்ராம் பற்றி சுவையான ஒரு கட்டுரையைப் படங்களுடன் வெளியிட்டிருந்தது.

- மதன்

காலப்பெட்டகம்

வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்த 'அனு... அக்கா... ஆன்ட்டி' உரையாடல் பகுதி தொடங்கியது இந்த ஆண்டுதான். கற்பனைக் கதாபாத்திரங்களான இவர்கள் தமிழக, இந்திய விஷ யங்களை மட்டுமின்றி, உலக விஷயங்களைப் பற்றியும் இயல்பாகப் பேசி அரட்டை அடித்ததில், நிஜமான கேரக்டர்கள் போலவே விகடன் வாசகர்கள் மனதில் பதிந்துபோனார்கள். அனு, அக்கா, ஆன்ட்டி மூவருக்கும் தங்கள் தூரிகையால் உருவம் கொடுத்தவர்கள் ஓவியர்கள் ஜெயராஜ், ம.செ மற்றும் மாருதி.

எம்.ஜி.ஆரின் முதல் படமான 'சதி லீலாவதி' உள்பட, ஆரம்ப கால தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய மாபெரும் இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன், 42 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டில்தான் மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது, விகடன் அவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் சில பகுதிகள், 13.5.2009 இதழில் மறு பிரசுரம் செய்யப்பட்டன.

ரசிப்புத் திறன் கொண்ட வாசகர்களுக்கு, துப்பறியும் திறன் கொண்ட வாசகர்களுக்கு, படைப்புத் திறன் கொண்ட கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் நாவல், குறுநாவல், படக்கதைத் தொடர், சிறுகதை, புகைப்படம், கவிதை, நாடகம், கார்ட்டூன் என அத்தனை அம்சங்களிலும் போட்டிகள் வைத்து, ஒரு மெகா பரிசுத் திட்டத்தை இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷல் இதழில் வெளியிட்டுள்ளது விகடன். மொத்தப் பரிசுத் தொகை மலைக்க வைக்கிறது - 25 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்!

டி.வி. விமர்சனப் பகுதி (ஸைட்ஸ் ஆன்) இந்த ஆண்டு தொடங்கியுள்ளது.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்