அதிரடியாய் ஆயுத அரசங்கம் நடத்தி, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நியாயம்
வழங்குகிற 'தாதா' மம்மூட்டி. அவரது அடியாளாக வரும் ஒருத்தன் அநியாயம் செய்ய, ரஜினி கொஞ்சம் ஓங்கித் தட்டிவிடுகிறார். ஆள் அவுட்! ரஜினி கம்பிகளுக்குப் பின்னால்! தன்னுடைய ஆள் செய்த அராஜகத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அடிமனசு நியாயம் உந்தித்தள்ள, ரஜினியை வெளியே கொண்டுவருகிறார் மம்மூட்டி!
மம்மூட்டியும் ரஜினியும் ஆரம்பத்தில் பரம வைரிகளாய் மோதுகிறபோது, 'ஐயையோ... படம் முழுக்க இப்படித்தானா...' என்ற பீதி லேசாக எழுகிறது. ஆனால், ஜெயிலிலிருந்து தன்னை விடுவித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மம்மூட்டியிடமே போய்ச் சேருகிறார் ரஜினி. அதுவும் எப்படி... எடுத்த எடுப்பிலேயே உயிர்த்தோழனாக!
விதவை பானுப்ரியாவுக்குப் போதுமான 'வாழ்க்கைப் பாது காப்பு' இல்லை என்று சொரே லென்று உறைக்கிறபோது, மம் மூட்டி ரஜினியைக் கூப்பிட்டு, "இவ நெத்தியிலே பொட்டு வை!" என்று கட்டளையிடுகிறார். அவர் உரிமையோடு எடுத்த எதேச்சதிகார முடிவும், கை நடுங்க ரஜினி குங்குமம் வைப்பதைப் பார்க்கிறபோது அவர் முகத்தில் உண்டாகிற திருப்தியும் வித்தியாசமானவை. ஏக காலத்தில் நடந்து முடிகிற அந்தக் 'கல்யாண' விறுவிறுப்பு மணிரத்னத்தின் லாகவத்துக்குச் சரியான உதாரணம்!
'பிரமாதம்' என்று கிறக்கத்துடன் சொல்ல வைக்கிற பிரமையை 'ராக்கம்மா...' பாட்டிலேயே ஏற்படுத்திவிடுகிறார் இளையராஜா. காட்சியில் வரும் இயற்கையான சத்தங்களைத் தன் இசையோடு அற்புதமாகக் கலந்திருப்பது ஒரு இன்பச் சிலிர்ப்பு!
|