Published:Updated:

ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!

ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!

பிரீமியம் ஸ்டோரி

விகடன் பொக்கிஷம்
ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!
ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!
ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!
ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!
ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!

ந்தக் காலத்தில் காவிரியில் மேட்டூர் அணை எழும்பவில்லை. அணைக்கப்படாத

கன்னியாகக் காவிரி ஓடி வந்தாள். ஆடி மாதம் இரு கரையும் புரண்டு வெள்ளம் வரும். அலைகள் கொந்தளித்து எழப் புதிய வெள்ளம் பெருகி வரும். அந்தக் காட்சியைக் கண்டாலே ஆனந்தமாக இருக்கும். நம்மைவிட உழவர்களுக்குப் பேரானந்தம். அந்த வெள்ளத்தைப் பறை கொட்டி வரவேற்பார்கள்.

மேற்கே குடகுப் பகுதியில் அடர்ந்த மழை பொழிவதால் காவிரியில் பெருக்கு உண்டாகும். அங்கே பெய்யும் மழையின் சாரல் தமிழ்நாட்டில் சேலம், திருச்சி மாவட்டங்களில் இருக்கும். அதைச் 'சோனை' என்பார்கள். சோனை பெய்தால் காவிரியில் வெள்ளம் வரப்போகி றது என்று தெரிந்துகொள்ளலாம்.

காவிரியின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் காவிரி வெள்ளத்தைக் கண்டு குதூகலிப்பார்கள். காவிரித் தாயை வாழ்த்திக் கற்பூரம் ஏற்றி வழிபடுவார்கள். அகல்களில் தீபங்களை ஏற்றிக் காவிரியில் மிதக்க்விடுவார்கள். ஆனி மாதம் வெள்ளம் வரத் தொடங்கி, ஆடி மாதம் அது பெருகி வரும். ஆடி மாத நடுவில் காவிரி அழகு சுமந்த மங்கை போல வரும்.

'மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடையது போர்த்துக்
கருங்க யற்கண் விழித்து ஓங்கி
நடந்தாய் வாழி காவேரி!'

என்று இளங்கோவடிகள் பாடுகிறார்.

காவிரி வெள்ளத்தைக் கண்டு உழவர்கள் ஆரவாரிக்கிறார்கள். மதகுகளில் அதன் நீர் பாய்ந்து சலசலக்கிறது; இனிய கட்டுச் சோற்றைக் கொண்டு வந்து விழாக் கோலத்தோடு காவிரிக் கரையில் உண்பவர் கள் ஆரவாரம் செய்கிறார்கள். இவ்வாறு யாவரும் இன்புறக் காவிரி நடக்கிறாளாம்.

ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!

'உழவர் ஓதை, மதகு ஓதை
உடைநீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி!'

என்று இந்தக் காட்சியை வருணிக்கிறார் இளங்கோவடிகள்.

எங்கள் ஊராகிய மோகனூரில் காவிரித் துறையில் படிக்கட்டுகள் அமைத்திருக் கிறார்கள். சரியாகப் பதினெட்டு படிக் கட்டுகள் இருக்கும். மெல்ல மெல்ல, வெள்ளம் படிக்கட்டுகளை மறைத்துக்கொண்டு பெருகி வரும். ஆடிப் பதினெட்டன்று பதினெட்டாம் படியை வந்து தொடும். அந்தக் காலத்தில் வெள்ளத்தைக் கணக்குப் பண்ணி இந்தப் படிக்கட்டுகளைக் கட்டி யிருக்கிறார்கள். கரையில் சிவன் கோயில்.

மக்கள் பலவகையான சித்திரான்னங்களைச் செய்துகொண்டு காவிரிக் கரைக்குக் கொண்டு வந்து உண்பார்கள். வீட்டிலிருந்து உண்டால் அந்த இன்பம் வருமா? பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரே குதூகலம். சித்திரான்னங்களை உண்பதும், இடையிடையே ஒரு வாய் காவிரி நீரை எடுத்து அருந்துவதுமாக அந்த விருந்து உணவு நடைபெறும். காவிரியிலும் அந்த உணவைச் சிறிது வீசி எறிவார்கள்.

காவிரி இல்லாத ஊர்களிலிருந்து மாட்டு வண்டிகளில் ஜனங் கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளக் காட்சியைப் பார்த்து மகிழ்வார்கள். நீராடி, தாம் கொண்டு வந்த பெரிய பாத்திரங் களில் காவிரி நீரை நிரப்பிக் கொண்டு, அவற்றைத் தலையில் வைத்துக் குலவை இட்டுக் கொண்டே தம் ஊருக்குச் செல்வார்கள். ஜனக்கூட்டம் வரும்போது கடை கண்ணிகள் வந்து விடும். எங்கே பார்த்தாலும் பதினெட்டாம் பெருக்காகிய விழாக் கோலமாக இருக்கும். காவிரி நீரைப் புனிதமாக எண்ணித் தம் ஊருக்கு எடுத்துச் சென்று அங்குள்ள தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!

காவிரி வெள்ள நீரில் காதோலை, கருகமணி, மலர்கள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுவார்கள். வெளியூர்களிலிருந்து வந்தவர்களே மிக்க ஆரவாரத்தோடு மிகுதியாக இந்த வழிபாட்டைச் செய்வார் கள். பதினெட்டாம் பெருக்கைப் பார்த்துவிட்டு ஊருக்குச் சென்ற வர்கள் காசிக்குப் போய்க் கங்கையில் நீராடிவிட்டு வந்தது போன்ற மகிழ்ச்சியை அடைவார்கள்.

ஆடி மாதம் அதிகமாக விழாக்கள் நடைபெறுவதில்லை. ஆனால், காவிரிக் கரையில் வெள்ளத்தைக் கண்ட மக்கள், நீர்விழா கொண் டாடுவார்கள்.

இனி வயலில் நெல் நன்றாக விளையும் என்றும், வீட்டில் உணவுப் பொருள் நிரம்புமென்றும் எண்ணி இன்புறுவார்கள். அவர்கள் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம் பியிருக்கும். ஆடிப்பெருக்கில் காவிரித் தாய் நீர் நிரம்பி வருவதனால், இத்தனை வகையில் மக்களுக்கு நிறைவு ஏற்படும். "வாழி காவேரி" என்று வாழ்த்துவார்கள்.

ஆண்டுக்கு ஒரு முறைதான் ஆடிப்பதினெட்டு வரும். ஆனால் என்ன? அப்போது உண்டாகும் இன்பம் ஆண்டு முழுவதும் உள் ளத்தில் சுருதி போடும். அடுத்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரையில் அவர்கள் உள்ளத்தில் அது பசுமையாக இருக்கும். புறத்திலே வயல்கள் பசுமைக்காட்சியுடன் அழகு கொழிக்க இருக்கும்; அவர் களுடைய அகத்தில் மகிழ்ச்சி கொழிக்கும்.

'பூவர் சோலை மயில் ஆலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகு அசைய
நடந்தாய் வாழி காவேரி!'

என்று போற்றி வாழ்த்தும் அந்தக் காலம் இப்போது பழங்கனவாய்ப் போய்விட்டது என்றாலும், அதன் எழிலை முதியவர்கள் உள்ளத்தில் காண்பார்கள்; இலக்கியமும் எடுத்துரைக்கிறது.

ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!
ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு