பிரீமியம் ஸ்டோரி

விகடன் பொக்கிஷம்  
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

திரைவானில் ஒரு மின்னல்போல் தோன்றி மறைந்த அபூர்வ நடிகை ஷோபா.

அவரின் தற்கொலை இந்த ஆண்டு தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அப்போது விகடனில் வெளியான வைரமுத்துவின் கவிதை இது...

முற்றுப்புள்ளி

சாவை
மன்னிக்க முடியாது
சகோதரி.
இன்று இரவு
எனது டயரி
எழுதப்படாமலே இருக்கிறது.
வீட்டுக்கு வந்த
சுரதா சொன்னார்:
"ஷோபா இறந்துட்டாளாம்."

காலப்பெட்டகம்

என் காதுகளில்
அடிக்கப்பட்ட ஆணி
இருதயம் வரைக்கும்
இறங்கியது.
கந்தல் விழுந்த
'திரை'ச் சீலையில்
நீ ஒரு
சரிகையாய் இருந்தாயே
சகோதரி.

நீ சிரித்தாய்
இல்லை....
பூக்களுக்கு வகுப்பெடுத்தாய்.
அழுதது நீதானே?
எங்கள் கைக்குட்டை
ஏன் நனைந்தது?
நீ அசைவதைப்
பார்த்துத்தானே
மின்னல்
உடனே ஓடி ஒளிந்துகொண்டது.

உன்
சிணுங்கலைக்கூட
வார்த்தையாய்ச்
சேர்த்துக்கொள்ள
அகராதி ஆசைப்பட்டதே!

புல்தரையில் விழும்
பூவைப்போல்
என்னை நீ மௌனமாக பாதித்திருக்கிறாய்!
இரவிலும்கூட
வெளிச்சமாய் இருந்த நீ
ஒரு
பகலில் இருளாகிவிட்டாயே!

கண்ணீர்ப் பிசின்
இதய அறைகளை இறுக்குகிறது.
ஒரு மயில்தோகை
ஈசல் இறகைப்போல்
உதிந்துவிட்டதே!

சாவை
மன்னிக்க முடியாது
சகோதரி.
இந்த எழுத்துக்கள்
உன் சடலத்தின்மீது
தூவும்
பூக்களாய் இருக்கட்டும்.
இந்தக்
கறுப்புக் கவிதைக்கு
முற்றுப்புள்ளி
எனது
கடைசி கண்ணீர்த் துளி.

- வைரமுத்து

சென்னை, அண்ணா சாலையில் புதிய சட்டசபைக் கட்டடம் உருவாகி இயங்கி வரும் நிலையில், பழைய சட்டசபைக் கட்டடமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமே! 8.6.80 இதழில் வெளியான கட்டுரையி லிருந்து...

கோட்டையும் சட்டசபையும்

சென்ற வியாழக்கிழமை அன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்றிருந்தபோது, சட்டசபை மண்டபம் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளே பெரிய பெரிய சவுக்குக் கம்பங்கள். இருக் கைகளைச் சீர்படுத்திக்கொண்டும், புதிதாக பெயின்ட் அடித்துக்கொண் டும், மைக்குகளை சரிபார்த்துக் கொண்டும் இருந்தார்கள். கல்யா ணத்துக்காக அலங்கரிக்கப்படும் ஒரு திருமண மண்டபம்போலக் காட் சியளித்தது சட்டசபை மண்டபம். புதிய சட்டசபை கூடப் போகின்ற இந்தச் சமயத்தில் சட்டசபையைப் பற்றிய சில சுவாரசியமான சின்னச் சின்ன விஷயங்களைப் பார்ப் போம்.

சட்டசபையை உள்ளடக்கியிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை 1640-ல் கட்டப்பட்டது.

இன்று கோட்டைக்கு வெளியே தென்புறத்தில் ஓடும் ஆறு, அப்போது கோட்டை இருக்கும் வழியாக ஓடியதாம். அதற்காக, சென்னை மருத்துவக்கல்லூரி இருக்குமிடத்தில் இருந்த ஒரு குன்றை வெட்டியெடுத் துக் கோட்டையின் குறுக்கே சென்றுகொண்டிருந்த ஆற்றைத் தூர்த்துவிட்டார்களாம்.

முதன்முதலில் 1910-ம் ஆண்டு, 20 உறுப்பினர்களுக்காக அசெம்பிளி கட்டடம் கட்டினார்கள்.

1921-ல் முதன்முதலாக மேலவை - 50 உறுப்பினர்களுக்காக விரிவுபடுத்தப்பட்டு, இதற்கென்று ஒரு காலரியும் கட்டப்பட்டது.

கோட்டையிலிருந்த இடத்தை மேலும் விரிவுபடுத்தும் எண்ணத்தில் 1939-ம் ஆண்டு கோட்டையிலிருந்து செனட் மண்டபத்திற்குச் சிறிதுகாலம் சட்டசபை மாற்றப்பட்டது.

1947-ல் அரசாங்க எஸ்டேட்டில் சட்டசபை சிறிது காலம் செயல்பட்டது.

1957-ம் ஆண்டிலிருந்து மீண்டும் பழையபடி கோட்டைக்குள் சட்டசபை இயங்க ஆரம்பித்தது.

இப்போதைய சட்டமன்றத்தில் கூட இட நெருக்கடி அதிகம் என்றும், வேறு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்றும் கொள்கை அளவில் யோசித்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

- வாக்கர்

இந்திராகாந்தியின் இளைய மகன் சஞ்சய்காந்தியின் அகால மரணம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது விகடன் எழுதிய தலையங்கத்திலிருந்து சில வரிகள்...

சஞ்சய் காந்தி

காலன் இத்தனை கல் நெஞ்சம் படைத்தவனா?

காலப்பெட்டகம்

கடந்த வாரம் இளைஞர் சஞ்சய் காந்தியைப் பாராட்டி நாம் எழுதிய தலையங்கத்தில், அவருக்கு காங் கிரஸ் தலைமையைப் பதவியைத் தந்து அரசியல் பயிற்சியளிக்க வேண்டும் என்று யோசனை கூறியிருந்தோம். இந்த வாரம் அவரது அகால மரணம் குறித்து அனுதாபம் தெரிவித்துக்கொண்டிருக்கிறோம். மனிதவாழ்வு நீர்க்குமிழி போன்றது என்ற வாக்கு இத்தனை கொடூரமாகவா பலிக்கவேண்டும்?

அரசியல் வானில் உயரப் பறக்கத் தொடங்கிய சஞ்சய் காந்தி, உயரப் பறந்துகொண்டிருந்த பயிற்சி விமா னம் விபத்துக்குள்ளாகி, உயிர் துறந் தார் என்ற செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்தது.

ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் ஒளிவிளக்காகவும், காங்கிரஸ் கட்சி யின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்த சஞ்சய்காந்தியிடம் துடிப்பு இருந்தது; புதுமைகள் படைக்க வேண்டும் என்ற ஆவேச வேட்கை இருந்தது; ஓயாமல் உழைக்க வேண் டும் என்ற தணியாத ஆர்வமிருந்தது; ஏழைகளின் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என்ற பொறுமை யற்ற வேகம் இருந்தது; நினைத்ததை செய்துமுடிக்க வேண்டும் என்ற அசுரப் பிடிவாதம் இருந்தது.

காலப்பெட்டகம்

சோதனைமேல் சோதனைகளாக வந்த வேளையிலும், சற்றும் துவண்டு விடாமல் நெஞ்சுறுதியோடு நின்று, தனக்கு ஆதரவைத் திரட்டி, தூற்றித் திரிந்தவர்களும் தன்மீது கவனம் செலுத்தும்படி தன் வலிமை யைப் பெருக்கிக் கொண்டவர் இவர். இந்த அரிய சாதனை இவரது வருங்கால தலைமைப் பதவிக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்த போது, பேரிடியாக இயற்கை அவரது உயிரைப் பறித்துச் சென்றுவிட்டதே!

விண்வெளி ஆராய்ச்சியில் நமது தேசத்தின் பெருமைக்குரிய இன்னொரு மைல் கல் - எஸ்.எல்.வி-3 ராக்கெட். முழுக்க முழுக்க நமது விஞ்ஞானிகளாலும் இன்ஜினீயர்களாலுமே உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட்தான் செயற்கைக் கோள் 'ரோகிணி'யை விண்ணில் செலுத்தியது. எஸ்.எல்.வி-3 ராக் கெட் பற்றி விகடனில் அன்று வெளியான கட்டுரையிலிருந்து சில வரிகள்...

அமைதியைப் பாதுகாக்க...

கடந்த சில மாதங்களாக, பிற நாட்டு அணு ஆயுத நடவடிக்கைகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள் ளது. இந்துமா கடலில் அடிக்கடி தோன்றிப் பயம் காட்டும் மேல் நாட்டு அணு ஆயுதக் கப்பற் படைகளும், எந்தச் சமயத்திலும் அணுகுண்டு பரிசோதனையில் பாகிஸ்தான் வெற்றி பெறலாம் என்ற நிலையையும் அபாய எச்சரிக் கைகளாகக் கருதவேண்டும் என்று நமது பிரதமர் கூறியுள்ளார்.

காலப்பெட்டகம்

இந்த நிலையில், ஜூன் மாதம் 1-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட SLV - 3 என்ற ராக்கெட் வெற்றிகரமாக வான வீதியில் செலுத்தப்பட்டது. இந்தச் சாதனை இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கிய அரணாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

SLV 3 ராக்கெட் தயாரிப்பின் முக்கிய நோக்கம், ரோகிணி என்ற செயற்கைக்கோளை (Satellite) வான வீதியில் செலுத்துவதுதான் என்றாலும், அணு ஆயுத ஆய்வாளர்களின் கருத்துப்படி, அணுகுண்டுகளை ஏற்றிக்கொண்டு மிக வேகமாகக் குறிப்பிட்ட இலக்கை நோக்கிப் பாயும் ஏவுகணைகளை (Missiles) உற்பத்தி செய்யும் திறனை இந்தியா அடைந்துவிட்டது என்பதையே இந்தச் சாதனை குறிக்கும்.

அமைதியைப் பாதுகாக்க ராணுவ தளவாடங்களை அதிகப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழியென்றால், அதைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.

- டி.கே.வி.

ஆனந்த விகடன் தனது பொன் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது இந்த ஆண்டு நவம்பரில்! கவியரங்கம், முத்தமிழ் கலைவிழா, கண்காட்சி, வாசகர் விழா, பொன்விழாப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா என மூன்று நாட்கள் களை கட்டிய இந்த விழாவில், கவியரங் கத்துக்குத் தலைமை வகித்த டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் கவிதையிலிருந்து சில வரிகள்...

காலப்பெட்டகம்

வாய்மையுள்ள விகடனாரே, வம்புக்குத்தான் கேட்கின்றேன்...!

வணக்கம்.
கற்பனையாம் நூலெடுத்து
தமிழ்த்தறியில் கவிதைகளை
நெய்து வந்த கவிஞர்களே,
வணக்கம்.

என்றும் தமிழ்பால் அன்புடனே - இந்த
மன்றம் வந்த பெரியோரே,
வணக்கம்.

பாட்டுத்தேன் சுவைக்க
பறந்து வந்த வண்டினங்காள்!
வாசனை மலர்கள் நாங்கள்-
வரவேற்று வணங்குகிறோம்- அன்பு
துறக்காத மனிதர் வாசனை- என்றும்
மறக்காத மனிதர் நாங்கள்!

இறக்காத புகழுக்குரியார்- அவரால்
சிறக்காத செயல்தான் உண்டோ?
செருக்கான சொற்கள் பஞ்சம்- யாரும்
வெறுக்காத வாசன் நெஞ்சம்!

காலப்பெட்டகம்

அவர் இன்று நம்மோ டில்லை-
ஆனாலும், அவர் வைத்த
சுவர் உண்டு- சித்திரமுண்டு- இதய
விழிகளாலே பருகிடுவோம் மொண்டு!

ஆனந்தவிகடனுக்கு அகவை ஐம்பதாமே? - இல்லை.
அதிலும் ஓர் திருத்த முண்டு;
ஐம்பத்திரண்டே உண்மை;

வாய்மையுள்ள விகடனாரே!
வம்புக்குத்தான் கேட்கின்றேன்;
வயதை நீர் குறைத்துச் சொல்வதாலே
என்ன லாபம்? - இன்னும்
வாய்ப்பு தேடி அலைகின்றீரோ
திரையுலகில்? - உமக்கு
வயது முதிர முதிரத்தான் வைரம்
பாய்கின்றது
வண்ணமிகு பாத்திரங்களேற்று
எண்ணத்தைப் பொழிகின்றீர்;
தண்ணிலவு, தகத்தகாயச் சூரியன்,
விண்மீன்கள், இவை
தம் வயது கோடி கோடி ஆண்டென்று
கூறுவதைக் கேளீரோ...
அவை போல் நீவீர் வாழ்க பல்லாண்டு!

கண்மணியே! கலைமணியே! கருத்தோடு சிரிக்க வைக்கும்
பொன்மணியே! புதுமணியே!
புகழ்மணியே!
பன்மணித் திரள் போலப்
பண்பார்ந்த நடைபழகி
நெல்மணிக் குவியலாக வாசக
உழவர்களை மகிழ்விப்பாய்!

பெண்மணி உன்னைக் கண்டால்
பெறுகின்ற உற்சாகம் தான்
கண் எதிர் காஞ்சிபுரம் சேலை
கண்டும் பெறுவதில்லை!
வித்துவான்கள் இசைநிகழ்ச்சி
முடிந்த பின்னர் விகடனைத்தான் புரட்டிப் பார்ப்பார் விமர்சனத்தை!
வித்தகர்கள் நூலுக்கு மதிப்புரையும் விகடன் இதழ் தந்தால்தான் பெருமை
கொள்வார்!

கேலிச் சித்திரம்கூட விகடன் ஏட்டில்
மாலியின் கைபட்டு உயிர்பெற்றுப்
பேசக் கண்டோம்!
பல்கிப் பெருகும் சொல்வளச்
சுனைகளாய்க்
கல்கியின் கதைகளோ கருத்தைக்
கவரும்!
கொள்கையிலே வேறுபாடு
இருந்தாலும் - அதைச்
சொல்கையிலே பண்பாடு
தேவை யென்று
செய்கையிலே காட்டியவன்
விகடன் தானே;
பொய்கையிலும் நீர்ப் பாசி
மிதப்பதுண்டு அதுபோல
சிலநேரம் குறையும் உண்டு - ஆனால்
குற்றம் இல்லை.

பெண்களின் கைகளில் இருக்கும்போது
அவர்கள் கண்களுக்கு
விகடன் ஓர் காதலன்!
விட்டுப் பிரிய மனமின்றி அவர்தம்
பட்டுப் புடவையோடு அணைத்திடுவார்!
ஆண்களுக்கோ விகடன்
ஓர் ஆரணங்கு;
அட்டையெனும் 'ஜாக்கெட்'
அழகிலேயே அவர்கள் மயங்கிடுவர்!

விகடன் ஒரு பைத்தியம்! - காரணம்
இவன் இருக்கு மிடத்தை
பத்துப் பேர் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்! இதோ, இங்கேயும் பத்துப் பேர் - இனிய தமிழ் எடுத்துப் பாட வந்துளார்...
என்னைச் சுற்றிப் பத்துப் பேர்
எனக் கொள்ளினும் கொள்க!
நானும் ஓர் பைத்தியம் தானே
தமிழ் என்றால்!

நாயாகப் பிறந்தாலும் தமிழ்த்தொண்டர் முன்தானே வால் குழைப்பேன்...
வெறி நாயாக அலைந்தாலும்
'தமிழ்', 'தமிழ்' என்றுதானே
நான் குரைப்பேன்! - என்
தாயாக இருக்கின்ற தமிழே! -
தொட்டில் தாலாட்டாய் எனை வளர்த்த தமிழே!
ஊன் கலந்து உயிர் கலந்து
தேன் கலந்த பலாச்சுளை போல்
தித்திக்கும் தமிழே!
வான் கலந்தே என் மூச்சு கரையுமட்டும்
நான் பிறந்த மண்ணுக்குக்
கடமை செய்வேன்!

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு