பிரீமியம் ஸ்டோரி
விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
ஜனக் கணிதை வைபவம்
தலையங்கம்
தலையங்கம்

லகத்திலேயே மிகப் பெரிய சாதனை என்று சொல்லப்படும் ஜனக் கணிதை வைபவம், சுதந்திர இந்தியாவில் சென்ற வாரம் ஆரம்பமாகியிருக்கிறது.

இந்தியாவைவிட அதிக ஜனத் தொகை கொண்ட சீனாவில்கூட இனிமேல்தான் ஜனக் கணிதை நடைபெறவிருக்கிறது. இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, 1941-ம் ஆண்டு இந்நாட்டில் ஜனக் கணக்கெடுப்பு நடைபெற்றது நினைவிருக்கலாம். ஆனால், அப்போது எடுத்த கணக்குகள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. தேசம் சுதந்திரம் பெற்ற பின், முதல் தடவையாக இப்போதுதான் நாம் நமது தேசத்தைப் பற்றிய முழு விவரங்களையும் உண்மையான ஜனக் கணிதை மூலமாகத் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

சென்ற வருஷம் அமெரிக்காவில் ஜன சங்கியைக் கணக்கெடுப்பதற்கு ரூ.45 கோடி செல விட்டார்கள். ஆனால், சுதந்திர இந்தியாவில் இப்போது நடைபெறும் ஜனக் கணிதை வேலைக்கு ஏற்படக்கூடிய செலவு சுமார் 1 லு கோடி ரூபாய்தான் ஆகும். இவ்வளவு சொற்ப செலவில், அமெரிக்காவைவிட மும்மடங்கு அதிக ஜனத்தொகை கொண்ட இந்நாட்டில் ஜன சங்கியைக் கணக்கெடுப்பு வேலையை எவ்வாறு பூர்த்தி செய்யமுடியும் என்றால்... ஜனக் கணக்கெடுப்புக் கைங்கரியத்தில் ஊதியம் இல்லாமல் தொண்டாற்றப் பொதுமக்களில் சுமார் எட்டு லட்சம் பேர் முன் வந்திருக்கிறார்கள். இதனாலேயே, ஜனக் கணிதை வேலையைச் சொற்ப செலவில் முடிக்கலாம் என்று தீர்மானிப்பது இந்திய சர்க்காருக்குச் சாத்தியமாயிற்று.

ஜனக் கணிதை ஊழியர்கள் இந்திய ஜனாதிபதி மாளிகை முதல் சாதாரண மனிதர் குடிசை வரையில் சென்று விவரங்கள் சேகரிப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று குடும்பத் தலைவரி டம் அவருடைய குடும்பத்தினரின் எண்ணிக்கை, வருமானம், தொழில், ஜாதி, பொருளாதார நிலைமை முதலிய விவரங்களைக் கேட்டுப் பதிவு செய்துகொள்வார்கள்.

1861-ம் ஆண்டிலிருந்து பத்து வருஷத்துக்கு ஒரு முறை இந்நாட்டில் ஜனக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இப்போது நடைபெறும் கணக்கெடுப்பு ஒன்பதாவது முறையாகும்.

சுதந்திர இந்தியாவின் நோக்கம், தேச நிலைமையைச் சரிவர அறிந்து தேச முன்னேற்றத்திற்கான ஆக்க வேலையில் ஈடுபட வேண்டுமென்பதாகும். இப்போது நடைபெறும் ஜனக் கணிதையின் மூலம் கிடைக்கும் விவரங்கள் எதிர்கால ஆக்க வேலைகளுக்குப் பெரிதும் பயன்படக்கூடும்.

எனவே, இப்போது நடைபெறும் ஜனக் கணக்கெடுப்புப் பணியை ஒரு தேசிய வைபவமாகக் கருதி, அதில் ஒத்துழைப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.

 
தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு