பிரீமியம் ஸ்டோரி
விகடன் பொக்கிஷம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
 
காலப் பெட்டகம்

கலைஞர்களின் காணிக்கை

காலப் பெட்டகம்

பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க எதையும் துறக்கத் தயாராயிருக்கிறோம் என்பதை பாரதம் நிரூபித்துக் காட்டிவிட்டது. தேசிய பாதுகாப்பு நிதிக்கு தினசரி ஆயிரக்கணக்கில் பணம் வந்து குவிகிறது. தமிழ் நாட் டில், திரை உலகக் கலைஞர்கள் ஒன்றுகூடி 'கிரிக்கெட் மாட்ச்', 'கயிறு இழுப்புப் போட்டி' ஆகியவற்றை நடத்தினார்கள். அதில் கிடைத்த தொகையான முப்பதினாயிரம் ரூபாய், தேசியப் பாதுகாப்பு நிதிக்கு அளிக்கப்பட்டது.

சென்ற 1964-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதியன்று கடல் கொந்தளித்து, தனுஷ்கோடியை மூழ்கடித்த பெருந் துயரம் நிகழ்ந்தது. அது பற்றி, இந்த ஆண்டின் முதல் இதழில் நீண்ட தலையங்கம் எழுதி, தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளது விகடன்.

இசைத் துறையில் புதிய பாணியை உண்டாக்கி, தமக்கென ஒரு தனி வழியை ஏற்படுத்திக்கொண்டவர் ஜி.என்.பி. எனப்படும் ஜி.என்.பாலசுப்பிரமணியம். அந்த இசை மேதை இந்த ஆண்டு மறைந்தார். அவரைப் பற்றி 'என் குருநாதர்' என்னும் தலைப்பில் எம்.எல்.வசந்தகுமாரி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

என் குருநாதர்
- எம்.எல்.வசந்தகுமாரி

சுமார் இருபத்தாறு ஆண்டு காலமாக நானும் என் குடும்பத்தினரும் திரு. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களுடனும், அவரது குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகி வந்திருக்கிறோம். காலஞ் சென்ற என் தந்தையும், திரு ஜி.என்.பி. அவர்களின் தந்தையும் தஞ்சை ஜில்லாவில் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். கடைசி வரை நெருங்கிய நண்பர்களாயிருந்தவர்கள். எனக்குச் சுமார் பத்து வயது இருக்கும்போது, என் தந்தை ஒரு நாள் என்னை ஜி.என்.பி. அவர்களின் வீட்டுக்கு அழைத் துச் சென்றார். அப்போது ஜி.என்.பி. திருவல்லிக்கேணி பெரிய தெரு வில் வசித்து வந்தார். ஜி.என்.பி. என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

''ஐயா! குழந்தை ரொம்பவும் நன்றாகப் பாடுகிறாள். இவள் மிகவும் நல்ல நிலைமைக்கு வரப் போகிறாள். நீங்கள் அடிக்கடி இவ்விடம் அழைத்து வாருங்கள். என்னிடமிருந்து அவள் நிறையப் பாடம் செய்யட்டும்'' என்று மிக அன்புடன் சொன்னார். அதற்குப் பிறகு பத்து வருட காலம் அவரிடம் நூற்றுக்கணக்கான உருப்படிகள் பாடம் செய்தேன். நூற்றுக்கணக்கான அவருடைய கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன்.

காலப் பெட்டகம்

திரு. ஜி.என்.பி. அவர்களுக்கு ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும். தென் னாட்டிற்கு திருமதி ரோஷனாரா பேகம், படேகுலாம் அலிகான் இவர்களைப் போல ஹிந்துஸ்தானி பாடகர்கள் அறிமுகமாவதற்கு அவர்தான் காரணம். ஒரு சமயம், திரு. குலாம் அலிகான் 'காவதி' என்ற ராகம் பாடினார். அது ஒரு சிக்கலான ராகம். பாடுவது ரொம்ப சிரமம். ஆனால், நம் ஜி.என்.பி. அவர்கள் அடுத்த தினம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபா கச்சேரியில் ராகமாலிகையாக சுலோகம் பாடும் போது, காவதி ராகத்தையும் பாடிக் காட்டினார்.

எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய சக்தி அவருக்கு உண்டு. கீர்த்தனங்களை ரொம்பவும் சீக்கிரத்தில் ஸ்வரப்படுத்திவிடுவார்.

ஒரு தினம், யாரோ ஓர் ஆங்கிலேயர் ரேடியோவில் வயலின் வாசித்திருக்கிறார். அடுத்த தினம் ஜி.என்.பி. அவர்கள் ''வசந்தி! நேற்று ஓர் ஆங்கிலேயர் வயலின் வாசித்தார். அவர் வாசித்த டியூன் நம் சங்கராபரணத்தை ஒட்டி இருந்தது. அதில் எல்லா ஸ்வரங்களையும் வைத்துக் கொண்டு க்ரக பேதம் செய்தார். நான் எல்லாவற்றுக்கும் ஸ்வரம் எழுதி வைத்திருக்கிறேன், பார்'' என்று சொன்னார்.

காலப் பெட்டகம்

சில்லறை ராகங்களாகிய தேவ மனோஹரி, ரஞ்சனி, மாளவி மாதிரி பல ராகங்களை விஸ்தாரமாகவும் ரக்தியாகவும் பாடுவார். கச்சேரிகளில் சின்னப் பல்லவியாகப் பாடுவார். பார்த்தால் ரொம்பவும் சுலபமாகவும் தோன்றும். ஆனால், அதே பல்லவிகளை நாம் கையாளும்போது, ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்.

திரு.ஜி.என்.பி. அவர்கள் சிறந்த கலா ரசிகர். எல்லாக் கலைகளையும் நன்கு ரசிப்பார். சாப்பாட்டு விஷயத்தில் பரம ரசிகர். ரொம்பவும் ருசியாக இருந்தால்தான் சாப்பிடுவார். வாசனை திரவியங்கள் அவருக்கு ரொம்பவும் பிரியம். ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி, மேடையில் நன்றாகப் பேசும் திறமை உள்ளவர் ஜி.என்.பி.

சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவரது சிறந்த சங்கீத ஞானத்தாலும், ஸம்ஸ்கிருத தெலுங்கு பாஷை ஞானத்தாலும் பல அரிய கீர்த்தனங்களைச் சொந்தமாக இயற்றியுள்ளார். அவர் மறைந்துவிட்ட போதிலும் அவர் இயற்றிய கீர்த்தனைகள் இந்த உலகம் உள்ளவரை அழியாத செல்வங்களாகத் திகழும்.

வாராவாரம் 'பத்துக் கேள்விகள்' என்று ஒரு பகுதி வெளியாகிறது. இதில் பலதரப்பட்ட வேலை செய்யும் சாமானிய மனிதர்களிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தப் பகுதியில்தான் எத்தனை வித மக்கள்... எத்தனை வகை வாழ்க்கை!

தண்டையார்ப்பேட்டை -
மயிலாப்பூர் பஸ் டிக்கெட் எவ்வளவு?

சென்னை அரசாங்க பஸ் போக்குவரத்தில், சென்னை நகரில் அதிக தூரம் ஓடும் பஸ் தண்டையார்ப்பேட்டைக்கும் மயிலாப்பூருக்கும் இடையில் ஓடும் 4-ம் எண் பஸ்தான். தூரம் 10 மைல். போக்குவரத்து நேரம் 56 நிமிஷங்கள். மொத்த ஸ்டேஜ் 9. டிக்கெட் 38 பைசா.

மிகக் குறைந்த தூரம் உள்ளது தங்கசாலை - ஐகோர்ட்டுக்கு இடையில் ஓடும் 33-ம் எண் பஸ். தூரம் 1.8 மைல். ஸ்டேஜ்கள் 3. டிக்கெட் 14 பைசா.

தண்டையார்ப்பேட்டை - மயிலாப்பூருக்கு டிக்கெட் 38 பைசா. ஆனால் இதைவிட அதிக 'சார்ஜ்' வசூலிக்கப்படும் பஸ் ரூட், பெரம்பூருக்கும் தியாகராய நகருக்கும் இடையில் ஓடும் 29-ஙி. மொத்த ஸ்டேஜ்கள் 10. டிக்கெட் 42 பைசா. தூரம் 9.9 மைல். போக்குவரத்து நேரம் 55 நிமிஷங்கள்.

தகவல்: முத்துலட்சுமி

ம.பொ.சி.க்கு
மனைவியுடன் சண்டை!

காலப் பெட்டகம்

ம.பொ.சிவஞானம் அவர்களுக்கும், அவர் மனைவிக்கும் இடையே ஒரு சமயம் பெரிய தகராறு ஏற்பட்டது.

ம.பொ.சி-க்குப் பெண் குழந்தை பிறந்தபோது, அதற்கு 'மாதவி' என்று பெயர் சூட்டினார். இந்தப் பெயரை அவர் மனைவி எதிர்த்தார். சிலப்பதிகாரத்தில் மாதவி பரத்தை என்று சொல்லப்பட்டிருப்பதால், அது நல்ல பெயர் இல்லை என்பது மனைவியின் வாதம். ம.பொ.சி. தம் சிலப்பதிகார ஞானத்தை மனை வியிடம் காட்டி, மாதவி கண்ணகி போல கற்புக்கரசி என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒழுக்கமான வளே என்று வாதாடினார். மனைவி மூன்று நாட்கள் பட்டினியாகச் சத்தியாகிரகம் செய்து பார்த்தார். அதற்கும் சிலம்புச் செல்வர் விட்டுக் கொடுக்கவில்லை. கடைசியில் ம.பொ.சி-க்குதான் வெற்றி! மக ளுக்கு மாதவி என்றே பெயரிட்டார்கள்.

- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நூல் வெளியீட்டு விழாவில் ம.பொ.சி-யே வெளியிட்ட தகவல்.

அப்பாவின் ஆசை!

காலப் பெட்டகம்

நாடக உலகில் பற்பல புதுமை களைப் புகுத்தியுள்ள டி.கே.எஸ். சகோதரர்கள், அண்மையிலும் ஒரு புதுமையைச் செய்திருக்கிறார்கள். குழந்தைகளை முக்கிய பாத்திரங் களாக வைத்துக்கொண்டு 'அப்பா வின் ஆசை' எனும் நாடகத்தைத் தயாரித்துள்ளார்கள்.

'உழைத்துப் பிழைக்க வேண் டும், பொய் சொல்லக்கூடாது, திரு டக் கூடாது' என்ற குறிக்கோளை வலியுறுத்தும் கதை இது.

பெரியவர்களும் நாடகத்தில் நடித்துள்ளபோதிலும், குழந்தைகள் தான் ரசிகர்கள் மனத்தை வெகுவா கக் கவர்கிறார்கள். குமாராக நடிக் கும் கமலஹாசன் மிகச் சிறப்பாக நடித்து, எல்லோரையும் பிரமிக்க வைக்கிறான். அவனுக்கு ஈடு கொடுக்கிறார்கள் ராமுவாக நடித்த கண்ணப்பனும், கோபுவாக நடித்த அண்ணாத்துரையும். பெரியசாமி யாக நடித்த காதர் என்ற சிறுவன் பேசினால் போதும், ஜனங்கள் கை தட்டி ரசிக்கிறார்கள். கிரிஜாவாக நடித்த பிருந்தா என்ற சிறுமியை, நாடகம் பார்த்த எவராலும் மறக் கவே முடியாது.

கதை, வசனம், பாடல்கள் எழுதிய திருச்சி பரதன் பாராட்டுக்குரியவர்.

தமிழ்நாட்டில் குழந்தைகளைக் கொண்டு, குழந்தைகளுக்கென்று ஒரு நாடகத்தை முதன்முதலில் தயாரித்துள்ளவர்கள் இவர்கள்தான். குழந்தைகளுக்கான இலக்கியங்களோ, நாடகங்களோ தமிழில் போதிய அளவு வளர்ந்திராத இந்தத் தருணத்தில், டி.கே.எஸ்.சகோதரர்கள் இப்படி ஒரு நாடகம் நடத்த முன் வந்திருப்பதை மனமாரப் பாராட்ட வேண்டும்.

பெரியாரும் பெரிய பெரியார்!

கோவை ரயில்வே ஜங்ஷனில் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டுஇருந்தது. பெரியார் ஈ.வெ.ரா. அவசர அவசரமாக மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறி உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் அதே ரயிலில் சென்னைக்குப் பயணம் செய்வதற்காக ஜி.டி.நாயுடு வந்தார். பெரியார் உட்கார்ந்திருந்த பெட்டிக்குப் பக்கத்தில் சிறு கூட்டம் நின்றுகொண்டு இருந்தது. அந்தக் கூட்டத்தைக் கடந்து சென்ற ஜி.டி.நாயுடு, மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பெரியார் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தார்.

''என்ன, இந்தப் பெட்டியில் உட்கார்ந்திருக்கிறீர்கள்? முதல் வகுப்புப் பெட்டிக்கு வாருங்கள். உங்கள் டிக்கெட்டைக் கொடுங்கள். மூன்றாவது வகுப்பு டிக்கெட்டை முதல் வகுப்பு டிக்கெட்டாக மாற்றி வரச் சொல்வோம்'' என்ற ஜி.டி. நாயுடு, பெரியாரிடமிருந்து டிக் கெட்டை வாங்கி, மேற்கொண்டு பணம் கொடுத்து, முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி வர ஒருவரை அனுப்பினார்.

காலப் பெட்டகம்

''நீங்கள் ஏன் நின்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் பெட்டிக்குப் போங்கள். நான் வந்துவிடுகிறேன்'' என்றார் பெரியார்.

கோவை ஜங்ஷனிலிருந்து எக்ஸ் பிரஸ் நகர்ந்தது. பெரியார் முதல் வகுப்புப் பெட்டிக்கு வருவார் என்று எதிர்பார்த்த ஜி.டி.நாயுடு, அவர் வராதது கண்டு பெருமூச்சு விட்டார்.

திருப்பூர் ரயில்வே நிலையத்தில் எக்ஸ்பிரஸ் நின்றது. ஜி.டி.நாயுடு ரயிலை விட்டு இறங்கி, பெரியார் இருந்த பெட்டிக்கு வந்தார். ''என்ன! முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி விட்டு மூன்றாம் வகுப்பில் உட் கார்ந்திருக்கிறீர்களே?'' என்றார்.

''எனக்கு இங்கேயே ரொம்ப வசதியாக இருக்குதுங்க'' என்றார் பெரியார்.

''பின்னே எதற்கு முதல் வகுப்பு டிக்கெட் வாங்கணும்?''

''வாங்கலீங்களே! நீங்க அனுப் பிச்ச ஆளைக் கையோடு அழைத்து வரச்சொல்லி, டிக்கெட்டையும் பணத்தையும் வாங்கிக்கிட்டேன். ஒன்றும் நஷ்டமில்லீங்க. இங்கே ரொம்ப வசதிங்க'' என்று பெரியார் நிதானமாகச் சொன்னார். ஜி.டி. நாயுடு சிரித்துக்கொண்டே போய் விட்டார்.

ஈ.வே.ரா. அவர்களுக்குக் கார் அன்பளிப்பு விழா ஒன்றில் பேசு கையில், எம்.ஆர்.ராதா சொன்னார்: ''பெரியாருக்கு இன்று கார் கொடுக் கிறோம். கார் கொடுப்பதைவிட இவருக்குக் கட்டை வண்டி கொடுப் பதுதான் நல்லது. ஏனென்றால், பெரியாருக்குக் காரின் மதிப்பே தெரியாது. திருச்சியிலிருந்து சென் னைக்குப் பெரியார் வந்துகொண்டு இருப்பார். வழியில் யாராவது 15 மூட்டை கடலையை ரோட்டில் வைத்திருப்பார்கள். பெரியார் காரை நிறுத்தச் சொல்வார். 'என்ன விலை?' என்பார். 'மூட்டை 15 ரூபாய்' என்பான். உடனே, பெரி யார் டிரைவரைப் பார்த்து, 'ஏம்பா! சென்னையில் கடலை மூட்டை என்ன விலை?' என்று கேட்பார். '20 ரூபாய்' என்று சொல்வான். 'அப்படியானால் 15 மூட்டையையும் தூக்கிக் காரில் போடு. மூட்டைக்கு ஐந்து ரூபாய் லாபம்' என்பார். வேணுமானால் பாருங்கள், பெரி யாரால் காருக்கு இருக்கும் மதிப்பே போகப்போகிறது.''

ராதா சொன்னது இன்று மெய் யாகிவிட்டது. மாதத்தில் குறைந்தது பத்து நாளாவது பெரியார் எடைக்கு எடை உப்புப் புளி மிளகாயிலிருந்து பருப்பு வரை வாங்குகிறார். அவரு டைய அன்பர்கள் பெரியாரை தராசிலேயே குடியேற்றுவதென்று தீர்க்கமாக முடிவு செய்துவிட்டார் கள். அவர்கள் அன்பின் மிகுதியால் கொடுக்கும் அத்தனை சாமான்களும் பெரியாரின் காரில்தான் பயணம் செய்கின்றன.

சென்னையில் பெரியார் நடத் திய ஒரு போராட்டத்திற்காக வெளி யூர்களிலிருந்து தொண்டர்கள் வந்து தங்கியிருந்தார்கள். அவர்க ளுக்குச் சமைத்துப் போடுவதற்காக பெரியார், திராவிடர் கழகப் பிரமுகர் ஒருவரிடம் இரண்டு ரூபாய் கொடுத்துக் காய்கறி வாங்கி வரச் சொன்னார். அவரும் காய்கறி வாங்கி வந்தார். 'பில்'லைப் பெரியா ரிடம் கொடுத்தார். அதைக் கையில் வாங்கி நிதானமாகப் பார்த்துவிட்டு, ''ஏம்பா, நீ பிழைக்கிற பிள்ளை தானா?'' என்று கேட்டார் பெரியார். ''நாலணாவிற்குக் காய்கறி வாங்கி னாலும் ஒரு இணுக்கு கறிவேப் பிலையும், கொத்தமல்லியும் சும்மா கொடுப்பார்கள். நீ இரண்டு ரூபாய்க் குக் காய்கறி வாங்கிவிட்டு, ஒரு அணா கொடுத்துக் கறிவேப்பிலை வாங்கியிருக்கிறாயே! ஒரு கட்டு கறிவேப்பிலையும், ஒரு கட்டு கொத்தமல்லியும் ஓசியாக வாங்க வேண்டாமா?'' என்று கேட்டார்.

இப்படி சிக்கனத்துக்குப் பெயர் பெற்ற பெரியார்தான், திருச்சியில் பயிற்சிப் பள்ளியைத் துவக்கிய தோடு, இன்று கல்லூரி கட்டுவதற்கு பல லட்சம் ரூபாயும், பல ஏக்கரா நிலங்களும் கொடுத்திருக்கிறார். அண்மையில் திருச்சிக்குச் சென்ற முதலமைச்சர் திரு. பக்தவத்சலம், கல்லூரி கட்டுவதற்குப் பெரியார் தேர்ந்தெடுத்த இடத்தைப் பார்வை யிட்டார்.

''கல்லூரிக்கு இடம் போதாதுங் களே?'' என்று பக்தவத்சலம் கூற,

''அதுக்கென்னங்க, எவ்வளவு பணம் செலவழிந்தாலும் பக்கத்தில் உள்ள நிலங்களை விலைக்கு வாங் கிக் கொடுத்துவிடுகிறேன்'' என்றார் பெரியார்.

- சோலை

 
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு