Published:Updated:

ஆசை வெட்கமறியும்...

ஆசை வெட்கமறியும்...

ஆசை வெட்கமறியும்...

ஆசை வெட்கமறியும்...

Published:Updated:

01-04-09
விகடன் பொக்கிஷம்
ஆசை வெட்கமறியும்...
ஆசை வெட்கமறியும்...
 
ஆசை வெட்கமறியும்...
ஆசை வெட்கமறியும்...

த்தியோகம், கலகம், சூதாட் டம், மது, தூக்கம், பிற பெண்கள், ஆகாரம் இவற்றை ஒருமுறை தீண்டிவிட்டால், தப்பித்துக் கொள்ளவே முடியாது. எனவே, இவற்றிலிருந்து அறவே விலகி யிருப்பது உத்தமம்.

- (ஒரு கவி)

ஷாவைக் கண்டதுமே திகைத்துப் போய் நின்றாள் கௌரி. 'இவள் ஏன் இங்கு வந்து நிற்கிறாள்? தன் கணவரின் பெட்டி இவளுடைய கைக்கு எப்படி வந்து சேர்ந்தது?'

''மிஸ்டர் சங்கர் இன்னும் வீட்டுக்கு வரலையா? அவர் என்னோடு தியேட் டருக்கு வந்த இடத்தில் இதை விட்டு விட்டு வந்துவிட்டார். கொடுத்து விட் டுப் போக வந்தேன்'' என்றாள் உஷா.

'இவளோடு அவர் தியேட்டருக்குப் போனாரா? கடமை தவறாத அவர், இவளிடம் கைப்பெட்டியை விட்டு விட்டு வந்தாரா..?' - குழம்பி நின்றாள் கௌரி.

''ஏன் கௌரி, உன் கணவர் விவ காரம் கூட தியேட்டர் வரை போய் விட்டது போலிருக்கிறதே!'' - கௌரி யின் காதோடு கேட்டாள் கமலா.

சங்கர் ஒரு பெண்ணுடன் - அதுவும் உஷாவுடன் தியேட்டருக்குப் போயி ருக்கிறார். எந்த உஷாவுடன் சுற்றுவ தாகப் பிரபு சமூக அவமதிப்புக்கு உள்ளாயிருக்கிறாரோ, அதே பெண்ணுடன், தன் கணவரும் தியேட்டருக்குப் போயிருக் கிறார். தான் போற்றிப் பாதுகாத்த - இந்த விநாடி வரை பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கோஹினூர் வைரத்தில் களங்கம் ஏற்பட்டுவிட்டதா?

''உஷா, அவருடைய பெட்டி உன்னிடம் எப்படி வந்தது?'' - கௌரி மனம் படபடக்கக் கேட்டாள்.

உஷா மிகவும் ஒயிலாகத் தன் உதடு களை நெளித்துக்கொண்டு, ''இதென்ன கேள்வி? காலை ஒன்பது மணியிலிருந்து நானும் அவரும் ஒன்றாக இருந்திருக்கிறோம். எத்தனை விஷயங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம்! என்னிடமிருந்த சில விஷயங்களை அவர் எடுத்துக் கையாண்டிருக்கிறார். அவரிடமிருந்த எத்தனையோ பொருட் களை நான் எடுத்துக் கொள்ள நேர்ந்திருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று'' என்றாள்.

கௌரியின் முகம் குன்றிக் கறுத் தது. கமலா பதுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

''உஷா, விளையாடுகிறாயா? உன் பேச்சை நான் நம்பமாட்டேன். அவர் வேலைக்குப் போயிருக்கிறார். உன்னு டன் சுற்றியிருக்க மாட்டார்...''

''பாவம், பல அப்பாவி மனைவிகள் தம் கணவன்மார் மீது கொண்டிருக்கிற ஒரே நம்பிக்கை இதுதான். ஏழு மணி எட்டு மணிக்கெல்லாம் டிபன் கட்டிக் கொண்டு 'ஆபீஸூக்குப் போயிட்டு வர்றேன்'னு கிளம்பிப் போகிற புரு ஷர்கள் எல்லாம் வேலைக்குத்தான் போகிறார்கள் என்று சொல்ல முடி யாது. அப்படி அத்தனை பேரும் ஒழுங்காகப் போவதென்றால், இப்போது ஆபீஸ்களில் குவியும் காஷூவல் லீவு விண்ணப்பங்கள், சம்பளப் பிடிப்புக் குறிப்புகள் எல்லாம் பத்தில் ஒரு பங்காகக் குறைந்து விடும். என்னமோ பாவம், தன் கணவர் ஒழுங்காக வேலைக்குத்தான் போகிறார், பிற பெண்களை ஏறெடுத் தும் பார்க்கமாட்டார் என்று நம்பிக் கொண்டிருக்கிற லட்சோப லட்சம் அப்பாவிப் பெண்களிலே நீங்களும் ஒருத்தி போலிருக்கிறது. உங்கள் நம்பிக்கையை நான் கெடுப்பானேன்! இந்தாங்க, பையை எடுத்துக் கொள் ளுங்கள். நான் வர்றேன்'' என்று சங்கரின் கைப் பையை அங்கிருந்த ஒரு ஸ்டாண்டில் வைத்துவிட்டுக் கிளம்ப யத்தனித்தாள் உஷா.

''உஷா..!'' - கௌரியின் குரல் சற்றுக் கண்டிப்புடன் எழுந்தது. உஷா நின்றாள்.

''இப்படி அரையும் குறையுமா என் கணவரைப் பற்றி எதை எதையோ சொல்லிட்டுப் போனா அக்கம்பக்கத் தில் இருப்பவங்க என்ன நினைப் பாங்க?'' என்று அருகிலிருந்த கமலா வைப் பார்த்துச் சொன்ன கௌரி, ''நீயும் அவரும் காலை ஒன்பது மணியிலிருந்து என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதைச் சொல்லி விட்டுப் போ!'' என்றாள்.

''கௌரி அக்கா...'' - 'அக்கா' என்று ஓர் அழுத்தம் கொடுத்து உச்சரித்த உஷா, அந்த ஓர் உச்சரிப்பிலேயே துடித்துப்போன கௌரியின் உணர்வு களைத் தூண்டி வெகு சாதாரணமாக, ''நீங்க விஷயம் தெரிஞ்சவங்க. ஓர் ஆணும் பெண்ணும் பல மணி நேரம் சேர்ந்திருக்கும்போது அவர்களுக் கிடையில் எவ்வளவோ விவகாரங்கள் நடந்திருக்கும். அதில், சில விவகாரங் கள் வெளியே சொல்கிறாற்போல் இருக்கும்; சில விஷயங்கள் வெளியே சொல்லிக்க முடியாதவையாக இருக் கும். மொத்தத்தில் எல்லாமே, சம்பந் தப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே தெரிந்த, சொந்தமான ரகசி யங்கள். அதை மற்றவர்களிடம் வெளிப்படையாகச் சொல்வது நாகரிகம் அல்ல.''

''உஷா, மழுப்பாதே! நான் மற்றவள் இல்லை. அவருடைய மனைவி.'' -கௌரி சீறினாள்.

''அவருக்குத்தானே மனைவி..! எனக்கு? அவருடைய அந்தரங்கங்களில் அவர் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் பரவாயில்லை. நானும் சம்பந்தப்பட் டிருக்கும்போது, எப்படி வெளியே சொல்வது?''

''என் கணவரின் அந்தரங்கங்களில் சம்பந்தப்பட நீ யார்?''

''அவருடைய மனத்தைக் கவர்ந்த வள். கூண்டுக்குள் அடைபட்டு ஒரே வட்டத்துக்குள் வளைய வந்துகொண்டு இருந்த அவரை, வெளிச்சமான பரந்த உலகத்துக்குக் கொண்டு வந்து புதியன பலவற்றை அவருக்கு அறிமுகப்படுத்தி அவருடைய முன்னேற்றத்துக்கு வழி வகுக்கப் போகிறவள். இதையெல்லாம் அவரே தன் வாயால் சொன்ன வார்த் தைகள்.''

கல்லாய்ச் சமைந்து நின்றாள் கௌரி.

''அக்கா, நான் உங்களுக்குத் தேவை யான அளவு விவரங்களைச் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் அந்தரங்கங்களை நான் சொல்வதாக இருந்தால், அவரிடம் அனுமதி பெற்றுத்தான் சொல்ல வேண்டும். நாளைக்கு நான் அவரைச் சந்திக்கும்போது கேட்டுச் சொல் கிறேன்.''

ஆசை வெட்கமறியும்...

''என்னது? நாளைக்கும் அவரைச் சந்திக்கப் போகிறாயா?'' - கௌரி ஆத்திரத்துடன் கேட்டாள்.

''ஷ்யூர்..! திடீரென்று ஒரு நாள் உங்கள் வீட்டிற்கே பெட்டியும் படுக் கையுமாக வந்து, 'அக்கா, உங்கள் குடும் பத்தில் ஒருத்தியாக உங்களோடு தங்கி விடப் போகிறேன்; இடம் கொடுங்கள்' என்று கேட்கவும் நேரிடலாம். அப்படி திடுதிப்பென்று வந்து நின்றால், உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்பதற்காகத்தான் முன்கூட்டியே, எங்கள் தொடர்பு முளை விட்டவுடனேயே உங்களிடம் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் வர்றேன்.'' - உஷா கிளம்பி வாசல் வரைக்கும் சென்று விட்டாள்.

கௌரி சீற்றத்துடன், ''ஏண்டி, நீயும் உன் அக்காளும் சேர்ந்து குடும் பத்தைக் கெடுக்கப் புறப்பட்டிருக் கீங்களா?'' என்று கத்தினாள்.

உஷா நின்று நிதானமாகத் திரும் பிப் பார்த்து, ''அக்கா, உலகத்தில் எந்தப் பெண்ணும் குடும்பத்தைக் கெடுக்கிறவள் இல்லை. குடும்பங்களை உருவாக்குபவள்தான் பெண்கள். உளுத்துப்போன உதவாக்கரை ஒன்றை அழித்து, அதில் இருந்து இன்னொன்றை உருவாக்குவதைப் போல, ஏற்கெனவே பரஸ்பரம் யாருக்கும் மகிழ்ச்சியில் லாமல் பெயரளவுக்குக் குடும்பமாக இருக்கும் ஒன்றை அழித்துப் புதிய குடும்பத்தை உருவாக்குவதில் வேண்டு மானால் என்னைப் போல் ஒரு பெண் முயற்சிப்பாளே தவிர, உருப் படியாக இருக்கிற குடும்பத்தை யாரும் அழிக்க முற்படமாட்டார்கள்'' என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.

கௌரி அவமானத்தால் உதடுகள் துடிக்க, படபடத்து நின்றாள்.

''ஏன் கௌரி, உன் குடும்பமும் உளுத்துப் போய்த்தான் இருக்கிறது போலிருக்கிறது. என் குடும்பம் ஆடிப் போனதை எல்லாருமே தெரிந்து கொண்டுவிட்டார்கள். ஆனால், உன் குடும்பம் தடுமாறிப் போயிருப்பதை உஷாதான் முதலில் தெரிந்து வைத் திருக்கிறாள். கௌரி, ஒரு குடும்பம் ஆடிப் போயிருப்பதை யார் தெரிந்து கொண்டாலும் தெரிந்து கொள்ளா விட்டாலும், உஷா மாதிரி ஒரு பெண் தெரிந்து கொண்டிருக்கக் கூடாது. அப்புறம் வேறு வினையே வேண்டாம். ஆடுகிற கணவன்-மனைவி உறவை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பாள். கொஞ்ச நாட்களுக்கு முன், என் கணவர் - அவர் தன்னளவில் எவ்வளவு தப் பான நடத்தை உள்ளவராக இருந்தா லும் உன் கணவரைப் பற்றி எச்சரித் தார். அப்போது என்னவோ ஜம்பம் பேசினாய். இப்போது சம்பந்தப்பட் டவளே வந்து நோட்டீஸ் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். விவாகரத்து நோட்டீஸோ, விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகையோ அவள் வந்து கொடுக் கிறதுக்குள் விழித்துக் கொள். எதற் காகச் சொல்கிறேன் என்றால், தோழி களான நாம் இரண்டு பேருமே வாழாவெட்டியாக இருப்பது அவ்வளவு பெருமைக்குரிய விஷயமாக இருக்காது அல்லவா! சரி, நான் கிளம்பறேன்.'' - கமலா புறப்பட்டாள்.

மாலை ஐந்து பத்துக்கெல்லாம் பிரபுவின் கார் வீணாவின் வீட்டுக்குள் நுழைந்தது. சோர்வும், அதே நேரத்தில் ஏதோ ஆர்வப் பரபரப்புமாகக் காரி லிருந்து இறங்கி வந்த அவன், வாசற் படியில் பொட்டிட்டு மங்கலமாகப் பூச்சூடி நின்ற உருவத்தைக் கண்டு ஒரு விநாடி திகைத்து நின்றான். வீணாவேதான்!

''கோயிலுக்குப் புறப்படுகிறாயா வீணா?'' - வியப்புடன் கேட்டான்.

''இல்லை. நான் தெய்வத்தை எதிர்பார்த்து நிற்கிறேன். ஒரு பெண்ணுக்கு அவளுடைய வீட்டை விடப் பெரிய கோயில் எதுவுமில்லை.''

''வீணா, என்ன சொல்றே?'' - நெற்றி சுருங்கக் கேட்டான்.

''நீங்கள் இன்று ஐந்தேகாலுக்குள் வீட்டுக்கு வந்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களை வரவேற் கத்தான் காத்திருக்கிறேன்.''

வீணாவின் வார்த்தைகள் அவ னைச் சுட்டெரிப்பது போலிருந்தன. 'வீணா எந்த நிலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள்? தன்னை எந்த நிலையில் வைத்துப் பார்க்க அவள் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறாள்? அந்த நிலைக்கும் அந்தஸ்துக்கும் தான் எந்த அளவு பொருத்தமானவன்? தன்னால் அந்த நிலையை நிர்வகிக்க முடியுமா?'

வீணா சித்திரத் தேராக நகர்ந்து முன்னேற, அவளைத் தொடர்ந்து சென்றான் பிரபு. உஷாவின் போர்ஷன் அருகே சென்றதும் வீணா சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தாள். சொல்லி வைத்தாற்போல் அப்போது பிரபுவின் கண்கள் உஷாவின் போர்ஷன் கதவுப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தன. அங்கே பூட்டுதான் தொங்கிக்கொண்டு இருந்தது.

வீணா குறும்புப் புன்னகையுடன், ''பிரபு, நீங்கள் வந்ததும் வராததுமாக ஓர் அதிருப்தியான ஏமாற்றம் ஏற்பட் டதற்காக வருந்துகிறேன்'' என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

''ஆ... ஆங்..!'' - சட்டென்று தன்னைச் சமாளித்தான் பிரபு.

''ஏன் பதறுகிறீர்கள்? நீங்கள் எனக் காக வராவிட்டாலும், உஷா வீட்டில் இருக்கிறாளா, சங்கர் போய் விட் டாரா, எவ்வளவு நேரம் அவர் இங்கே இருந்தார் என்று தெரிந்து கொள்வதற் காகவாவது ஆபீஸ் முடிந்ததும் நேராக இங்கு வந்து நிற்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், துரதிர்ஷ் டவசமாக, உங்களுக்குச் சாதகமான பதில்கள் இங்கு இல்லை. என்னால் முடிந்த அளவு மனச்சாந்தி தர முடி யுமா என்று முயற்சிக்கவே வாசலில் உங்களுக்காகக் காத்திருந்தேன். வாங்க, முதலில் கொஞ்சம் களைப்பைப் போக்கிக் கொள்ளுங்கள். வேலையிலி ருந்து வந்தவர் - அதுவும் இரண்டு வேலை செய்துவிட்டு வந்தவர் - ரொம்பக் களைப்பாக இருப்பீர்கள்.''

''இரண்டு வேலையா?''

''ஆமாம். ஆபீஸ் வேலை ஒன்று. உஷா இப்போது என்ன செய்துகொண்டு இருப்பாள், சங்கர் என்ன ஆனான், திடுதிப்பென்று வீட்டுக்குப் போனால் அந்த வீணா சண்டாளி திட்டிக் கழுத்தை அறுப்பாளே என்று குழம் பிக்கொண்டு மனத்தில் ஒரு தனி 'டிராக்' வேலை செய்துகொண்டு இருக்குமே, அந்த வேலை மற்றொன்று.'' - சிரித்தாள் வீணா.

இப்படி எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, பொட்டில் அறைகிறாற் போல் வார்த்தைகளால் அடிக்கிறாளே என்று பொறி கலங்கிப் போனான் பிரபு.

''சரி, குளித்துவிட்டு வாருங்கள். தலையில் நிறைய உஷ்ணம் ஏறியிருக் கும் - ஓவர் ஒர்க் செய்த இன்ஜின் மாதிரி! அதற்குள் டீ தயாரித்து வைக்கிறேன்...'' - குளியலறைக்குப் பிரபுவை அனுப்பிவிட்டு, அடுக்களையை நோக்கி நடந்தாள் வீணா.

குழாயைத் திறந்து விட்டான். ஜிலீர் என்று குளிர்ந்த நீர் ஷவரின் வழியாகப் பாய்ந்து, அவனுடைய உடலை நனைத்தது. குளுமை, மனசுக்கு இதமாக இருந்தது.

இதே மாதிரி அன்று குளியலறைக் குள் உஷாவுடன் என்ன விளையாட்டு! காணக் கிடைக்காத காட்சிகளைக் கண்டு... இயற்கை ஒரு பெண்ணின் மேனியில் போட்டு மகிழ்ந்த கோலங் களை, தெவிட்டத் தெவிட்ட ரசித்து மகிழ்ந்த நினைவுகள்...

குளிர்ந்த நீர் மேலே கொட்டிக் கொண்டிருக்கும்போதே, அவனுடைய உடல் சூடேறியது. அதே மாதிரி சங்கரையும் காக்க வைத்துவிட்டு குளிக்கச் சென்றிருப்பாளோ அந்த உஷா?

சட்டென்று வெளியே குரல்.

''அக்கா!'' - உஷாவின் குரல்தான்.

பரவசத்தில் பொங்கினான் பிரபு. உஷா வந்துவிட்டாள். அப்பாடா..! இரவில் அவனோடு அவள் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. திரும்பி வந்து விட்டாள். கூடவே ஒரு பயம்... அந்த சங்கர் பயல் குரல் கேட்கிறதா? நல்லவேளையாக இல்லை!

''பிரபு வந்துவிட்டாரா?'' - உஷா கேட்கிறாள். பிரபு உள்ளமெல்லாம் இனித்துச் சிலிர்த்தது. வந்ததும் வரா ததுமாக நம்மைப் பற்றி விசாரிக்கி றாளே!

''வந்துவிட்டார். குளித்துக்கொண்டு இருக்கிறார். அது இருக்கட்டும் உஷா, வெளியே போயிருந்தியே... ஹேட் எ நைஸ் டைம்..?''

''ஓ..! மிஸ்டர் சங்கரோட கம்பெனி எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. நைஸ் மேன்! எல்லாம் எனக்கு ரொம்பப் புது அனுபவம்! அப்புறம் சொல்றேன். முதலில் குளிக்க வேண்டும்.''

திக்கென்றது பிரபுவுக்கு! சங்கரோடு புது அனுபவமாமே... அப்படி என்ன புது அனுபவம்?

அப்படியே குளியலறையை உடைத் துக்கொண்டு வெளியே வந்து உஷா வின் கழுத்தை நெறித்து, 'என்ன விஷ யம், சொல்லு?' என்று கேட்கவேண்டும் போல் இருந்தது அவனுக்கு. அரை மணி நேரம் ஆகியிருக்கும்... டீ குடித்த பிரபுவுக்கு டீ குடித்த மாதிரியில்லை. அவன் வீணாவிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தான். அது சிரிப்பாகவும் இல்லை; பேச்சாகவும் இல்லை.

''மிஸ்டர் பிரபு, அரை மணி நேரம் நான் உங்களைச் சித்திரவதை செய்தது போதும், இல்லையா?'' - வீணா கேட்டாள்.

''என்ன?''

ஆசை வெட்கமறியும்...

''ஆமாம். உஷா வந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது. அவ ளிடம் போய்ப் பேச வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக் கிறீர்கள். நான் குத்துக்கல்லாக எதிரே உட்கார்ந்து தடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போய் உஷாவைச் சந்தித்துப் பேசிவிட்டு வாருங்கள். நான் அதற்குள் சமையலைக் கவனிக் கிறேன்.'' - வீணா எழுந்து செல்ல, மெல்ல உஷாவின் போர்ஷனுக் குள் நுழைந்தான் பிரபு.

ஷவரின் ஒலி. உஷா குளித்துக் கொண்டிருக்கிறாள். என்ன அமுத மான வேளை! குளியலறைக் கதவு கூடத் திறந்திருந்த மாதிரி இருந்தது. சபலத்தின் புல்லரிப்பில் பர வசமாகி நின்றான் பிரபு. உள் ளத்தில் கிளுகிளுப்பு! மெதுவாக அவன் விரல், சாத்தியிருந்த குளியலறைக் கதவைத் தொட் டது. கதவு அசைந்தது.

மறுகணம், சீற்றத்துடன் படா ரென்று குளியலறைக் கதவைச் சாத்தி உள்தாளிட்டாள் உஷா. அவள் குரல் கடுமையாக ஒலித்தது... ''மிஸ்டர் பிரபு, ஒவ்வோர் ஆண்கள் எவ்வளவு கௌரவமாக இருக்கிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்கிறீர்கள்? சே..!''

நிலைகுலைந்து நின்றான் பிரபு.

 
ஆசை வெட்கமறியும்...
- தொடரும்
ஆசை வெட்கமறியும்...