பிரீமியம் ஸ்டோரி

24-06-09
விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
சீனா, ருஷ்யா, அமெரிக்கா!
தலையங்கம்

ந்தியாவைப் பொறுத்தவரையில் 'காஷ்மீர் பிரச்னை' என்பதே கிடையாது. அது எப்போதோ முடிவாகிவிட்ட ஒரு விஷயம். ஆனால், பாகிஸ்தானுக்கோ காஷ்மீரைத் தவிர வேறு ஒரு பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. மண்ணாசை, பாகிஸ்தானை இதயமற்ற அரக்கனாக்கி விட்டிருக்கிறது. பழி பாவங்களுக்கு அஞ்சாமல், நம் மக்களைக் கொள்ளையடித்தும், கொலை செய்தும் அது அநாகரிகமாக நடந்துகொள்கிறது. எப்படியாவது காஷ்மீரை அடைய வேண்டும் என்பதற்காக, எவருடைய உதவியையும் பெறத் தயாராயிருக்கிறது.

பாகிஸ்தானின் வெறியை வெகு நன்றாகப் புரிந்து கொண்ட கள்ளமிக்க கம்யூனிஸ்ட் சீனா, 'நம் எதிரியின் எதிரி, நமது நண்பன்' என்பதற்கிணங்க பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுகிறதேயழிய, தன் 'நண்ப'னுக்கு காஷ்மீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அதற்குச் சிறிதேனும் கிடையாது. உண்மையில் இந்த நட்பின் பயனாக காஷ்மீரின் ஒரு பகுதியை சீனாதான் விழுங்கியுள்ளது!

'ஆசியாவில் தனது ஆதிக்கத்திற்குப் பெரும் தடையாக இருக்கும் இந்திய ஜனநாயகத்தைக் குலைப்பதற்கு பாகிஸ் தானைப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் பாகிஸ்தானை அமெரிக்காவிடமிருந்து பிரிக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு கனிகள் விழ வேண்டும்.' இதுதான் சீனாவின் சதித் திட்டம்.

சீனா விரித்த வலையில் பாகிஸ்தானின் முழுமையாகச் சிக்கிக் கொண்டுவிடக் கூடாதே என்று அமெரிக்காவுக்குக் கவலை. பொறுப்பற்ற முறையில் முரட்டுத்தனமாகப் பாகிஸ்தான் நடந்து கொண்டாலும், ஆத்திரத்தில் அது ஐ.நா.வை விட்டு விலகி விடாமலிருப்பதற்காக அமெரிக்கா அதனிடம் பரிவு காட்டுகிறது. அமெரிக்காவின் இந்தக் கொள்கையின் காரணமாகவே, தற்போது பாதுகாப்பு சபையும் பாகிஸ்தானிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ள முடியாமல் திண்டாடுவதைப் பார்க்கிறோம்.

ருஷ்யா, சீனாவை சமாதான சக வாழ்வின் விரோதியாகக் கருதுகிறது. அமெரிக்காவோ, அதை ஜனநாயகத்தின் பகை வனாகக் கருதுகிறது.

இந்தியாவைத் தாக்கினால், அமெரிக்காவும் ருஷ்யாவும் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்று சந்தேகத் திற்கிடமின்றிப் புரிந்துகொண்டுவிட்டது சீனா. ஆகவேதான் அது தற்போது பயமுறுத்தல்களிலும் வெறிப் பேச்சுக்களிலும் இறங்கியுள்ளது. அண்மையில் அமெரிக்காவுக்கு சீனா விடுத்துள்ள சவால், அதனுடைய வலிமையைக் காட்டவில்லை; பொறுப்பற்ற போர் வெறியைத்தான் காட்டுகிறது.

அண்டை வீட்டுக்காரர்கள் நம்மை வலுச் சண்டைக்கு இழுப்பது என்று முடிவு செய்துவிட்டால் நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா? நாம் அமைதியாக முன்னேற்றமடைந்து கொண்டிருப்பது பொறுக்காமல் சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து 'பனிப் போரை' நம் வாசலுக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டன. அதன் விளைவுகளை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் பாரத மக்களின் பொறுப்பு பன் மடங்காகியிருக்கிறது.

'உச்சி மீது வானிடிந்து விழுந்தாலும் அஞ்ச மாட் டோம்' என்ற நெஞ்சுரத்தை முதலில் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். பொருளாதாரத்தில் நாம் தன்னிறைவு பெறவேண்டும். முக்கியமாக, உணவுப் பொருள்களை உடனடியாகப் பெரும் அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். பிறர் உதவியையே நம்பியிராமல் நம் பொருளாதாரத் திட்டங்களை அமைக்க வேண்டும். எப்பாடுபட்டாவது நம் பாதுகாப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நம் தேவைகளையும் வசதிகளையும் குறைத்துக் கொண்டு, தியாக வாழ்வு வாழ நம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டும்.

 
தலையங்கம்
-
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு