ராகினி ரிக்ரியேஷன்ஸாரின் 'எதிர்நீச்சல்' நாடகத்தைப் பார்த்துவிட்டு வருகிறவர்கள் சும்மா இருப்பதில்லை; தங்களுடைய உறவினர்களையும் நண்பர்களையும் அந்த நாடகத்தைப் போய்ப் பார்க்கும்படி சொல்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் அரங்கேற்றப்பட்டு, அத்தனை சபாக்களிலும் நடைபெற்று வரும் இந்த நாடகம், சென்னையையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருக்கிறது.
''இந்த நாடகத்தில் நடிக்கும் அத்தனை பேரும் உயிர்த் துடிப்புடன் பேசி நடித்திருக்கிறார்கள். ஆகா..! அந்த நாயரையும், பொருள் செறிந்த அவருடைய மலையாளப் பேச்சையும் மறக்கவே முடியாது'' என்று கூறுகிறார்கள். உண்மைதான். ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழுவினர், நடிப்பில் எப்போது சோடை போனார்கள்?
''நாடகத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி புதுமையிலும் புதுமை! ஒரே செட்டில், ஒரே வீட்டில் நாடகம் முழுவதையுமே நடத்திக்காட்டி விடுகிறார்கள். இதுவரையில் ஒருவரும் இம்மாதிரி செய்ததில்லை'' என்று 'எதிர்நீச்ச'லின் வெற்றிக்கு இப்படியும் ஒரு காரணம் கூறப்படுகிறது.
ஆனால், இவற்றுக்கெல்லாம் மேலாக, மாது வையும், நாயரையும், சபாபதியையும், கிட்டு மாமாவையும், பட்டு மாமியையும், பேப்பர் பைத்தியத்தையும் மேடையில் உலவவிட்ட நாடகாசிரியரை மறந்துவிட முடியுமா? நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு குணச்சித்திரத் தையும் அப்பழுக்கின்றிப் படைத்து, அன்றாட வாழ்க்கை என்னும் இலக்கியத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து வசனங்கள் அமைத்து, வேடிக்கைப் பேச்சுக்களின் மூலம் பல உண்மைகளையும் நீதிகளையும் மனத்தில் பதிய வைத்து நாடகத்தை உருவாக்கித் தந்துள்ள கே.பாலசந்த ரின் பேனாவின் சக்திக்கும், டைரக் ஷன் திறமைக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது 'எதிர் நீச்சல்'.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்த பாலசந்தருக்கு நாடகம் எழுதுவது மாணவராயிருந்த நாட்களிலேயே ஏற்பட்ட ஒரு பழக் கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே அநேக நாடகங்களை மேடை ஏற்றியிருக் கிறார் இவர். பின்னர், சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீசில் உத்தியோகத்தில் சேர்ந்தபோது, அங்கும் வருடத்திற்கு ஒருமுறை ஒரு புது நாடகத்தைத் தயாரித்துப் பல பரிசுகளைத் தட்டிக்கொண்டு போயிருக்கிறார். அவருக்குப் புகழைத் தேடித் தந்த 'மேஜர் சந்திரகாந்த்' முதன்முதலில் ஏ.ஜி.எஸ். ஆபீசில் தான் அரங்கேறியது.
|