இந்த சிறுமிக்கு நாட்டியம் என்றால் உயிர்.
ஒரு நாள் இச் சிறுமியின் அம்மா, பெரியம்மா, அக்கா எல்லோருமாகச் சேர்ந்து இவளுக்குத் தெரியாமல் சினிமாவுக்குப் போய் விட்டார்கள். பாட்டியோடு தூங்கிக் கொண்டிருந்தவள், எப்படியோ தன்னை ஏமாற்றிவிட்டு மற்றவர்கள் சினிமாவிற்குப் போனதை ஊகித்து விட்டாள். மெதுவாகப் பாட்டிக்குத் தெரியாமல் சினிமாத் தியேட்டருக்கு ஓடினாள். ஒவ்வொரு தியேட்டராகப் போய் ''எங்க அம்மா, பெரியம்மா, எல்லோரும் இங்கே வந்திருக்காங்களா?'' என்று பரிதாபமாக வினவினாள். சரியான பதிலே கிடைக்கவில்லை.
இரவு ஒன்பது அல்லது பத்து மணி இருக்கும். வீட்டிற்குத் திரும்பி வர வழி தெரியவில்லை. கால் வலி, தண்ணீர் தாகம் வேறு. தெருக் குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு, மெல்ல நடந்தாள்.
வீட்டிலோ ஒரே குழப்பம்! சினிமாவிலிருந்து திரும்பி வந்தவர்கள் குழந்தையைக் காணாமல் துடிதுடித்துப் போய் போலீசுக்கும் தெரிவித்துவிட்டனர். காலைப் பத்திரிகையில் 'குழந்தை காணவில்லை' என்று விளம்பரம் கொடுக்க ஏற்பாடாகிக் கொண்டிருந்தது!
தெருவில் அழுதுகொண்டிருந்த சிறுமியை மளிகைக் கடைக்காரர் ஒருவர் அடையாளம் கண்டு, பத்திரமாக வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தார்.
அந்தச் சிறுமிதான் தற்போது சினிமா வானில் நட்சத்திரத் திலகமாக விளங்கும் சாவித்திரி.
(10-4-66)
|