''ஐந்து காரெக்டர்கள். ஒரு சின்ன போராட்டம். இதை ஒரு பரிசோதனையாக எடுத்திருக்கிறேன்'' என்கிறார் டைரக்டர் பாலசந்தர்.
சுலபமாகச் சொல்லிவிட் டார் பாலசந்தர். ஆனால், சின்ன போராட்டமா அது!
பேசும் கண்கள்; எண்ணங்களைத் தெரிவிக்கும் அழகிய முகம்; ஒரு பாடகிக்கே உரித்தான களையுடன் கச்சேரியைத் துவங்குகிறார் ஸ்ரீவித்யா - எம். ஆர்.வி.பைரவி என்ற பாடகியாக! 'ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம்...' என்று பாடுகிறார். ஓர் இரண்டரை மணி நேரத்தில்தான் எத்தனை உணர்ச்சிகள்!
ஒரு பெரிய இசைக் கச்சேரியே திரைக்கதையாக நம் கண்முன் விரிகிறது.
நாட்டைச் சீர்திருத்த விரும்பும் ஒரு மாணவன், சமூகத்தின் அநீதிகளைக் கண்டு பொறுக் காமல் வீட்டை விட்டு வெளி யேறுகிறான். அடிபட்டுக் கிடந்த அவனை, கச்சேரி செய்து விட்டுத் திரும்பும் ஸ்ரீவித்யா எடுத்து வருகிறார். இரண்டு வாரம் அவர்கள் வீட்டில் தங்கிக் குணம் அடைகிறான். அங்கே அன்பு, அபிமானமாக, பற்றாக வளர்கிறது.
இளம் வயதில் கல்யாணம் செய்துகொண்ட பைரவி, கணவன் தன்னைக் கைக் குழந்தையுடன் விட்டுவிட்டு ஓடிப்போன நிலையில், ஒரு குழந்தைக்குத் தாயாய் இருப் பது தன் எதிர்கால இசை வாழ்க்கைக்கு ஊறு செய் யுமோ என்ற பயத்தில், தன் மகளையே அநாதை என்று கூறி எடுத்து வளர்க்கிறார். பலன்? வயது வந்த மகளுக்கு உண்மை தெரியும்போது மகள் வெகுள்கிறாள். தாயை உதாசீனம் செய்கிறாள். வீட்டைவிட்டு வெளியேறி, மேஜர் சுந்தர் ராஜனின் வீட்டுக்குப் போய்ச் சேருகிறாள்.
மேஜரின் மகன் (கமல்ஹாசன்) பாடகி மீது காதல் கொள்கிறான். பாடகியின் மகள் (ஜெயசுதா) மேஜர் மீது காதல் கொள்கிறாள். கதையில் சிக்கல் துவங்கிவிட்டது.
|