
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் நடிச்ச முதல் படம் 'தபஸ்வினி’. எம்.கிருஷ் ணன் டைரக்ட் செய்த அந்தப் படத்தில் பிரேம் நசீர், ஷீலாவோடு நடிச்சேன். முதல் படத்திலேயே எனக்குக் கிடைச்சது ஒரு சோகப் பாத்திரம். ஒரு விதவைத் தங்கைப் பாத்திரத்தை ஏற்று நடிச்சேன். நான் இது வரைக்கும் நடிச்ச 40 மலையாளப் படங்களிலும் அநேகமா நான் சோகப் பாத்திரங்களைத்தான் ஏற்று நடிச்சிருக்கேன். சாரதா மாதிரின்னு வெச்சுக்குங்களேன். சோகப் பாத்திரங்களையே ஏற்ற பழக்கத்தினாலோ என்னவோ, என்னோட முதல் தமிழ்ப் படமான 'அவள் ஒரு தொடர்கதை’யிலும் சோகமான பாத்திரம்தான் கெடைச்சது. என்னால கொஞ்சமாவது சிறப்பா செய்ய முடிஞ்சதுக்கு பாலசந்தர் சார் கொடுத்த ஊக்கமும் மலையாளப் பட அனுபவமும்தான் காரணம்!''
''பாலசந்தர் டைரக்ஷனில் நடிக்கக் கூப்பிட்டபோது என்ன நினைத்தீர்கள்?''
'' 'தேடிப் போனது, கால்ல சிக்கினா மாதிரி’ன்னு மலையாளத்துல ஒரு பழமொழி இருக்கு. அது மாதிரி பாலசந்தர் படங்கள் நிறையப் பார்த்து இருக்கேன். அதில் எல்லாம்ஏறக் குறைய ஒரு மலையாளப் படம் மாதிரி'ரியலிசம்’ இருக்கும். அதனால், தமிழ்ல நடிக்க வந்தா, பாலசந்தர் படத்தில் நடிக்கணும்னு எனக்குள் ஒரு ஆசை இருந்தது. ஆனா, என்னுடைய முதல் படமே அவர் டைரக்ஷன்லன்னு வந்தப்போ, என்னால் நம்பவே முடியலை!''
'அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் கவிதா பாத்திரம் ஏற்று நடித்த சுஜாதா, படத்தில் நெருப்பாகக் காட்சி அளிக்கிறார். ஆனால் நேரில்? நீரின் குளுமையாக, அப்போதுதான் குளித்துவிட்டு வந்த ஈரத் தலையுடன்பாவாடை, பிளவுஸ் அணிந்து பள்ளிக்கூடத்துக்குப் போகிற ஒரு எஸ்.எஸ்.எல்.சி.

மாணவிபோலத் தோற்றம் அளித்தார் சுஜாதா. தன்னுடைய வயது 18 என்று துணிந்து அவர் பொய் சொல்லலாம். ஆனால் பாவம், தன்னுடைய உண்மையான வயது 24 என்று கூறும் அளவுக்கு வெகுளியாக இருக்கிறார்.
சுஜாதா உருவத்தில் சிங்களமும், கேரளமும் கலந்த ஒரு பெண் மாதிரி இருக்கிறார்.பேச்சிலோ மலையாள வாடை அடிக்கிறது. 'ஸ்லாங்’ தமிழ் பேசுகிறார். பேசும்போது சில தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடுகிறார்.
''பாலசந்தர் இந்தப் படத்துக்காக என்னை முதன்முதலாகப் பார்த்தபோதுகூட தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று சொன்னார். அதற்காக, என்னைத் தினமும் உரக்க பேப்பர் படிக்கும்படி சொன்னார். நானோ எனக்கு இந்தப் படம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து, பேசாமல் இருந்துவிட்டேன்.
ஒரு மாதம் கழித்து மறுபடியும் என்னைக் கூப்பிட்டு அனுப்பி ஒப்பந்தம் செய்தார். முதல் ஷூட்டிங்கின்போது கொஞ்சம் பயம்தான். மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு இருக்கேன்னு முதல்ல 'டப்’ பண்ணாங்க. அப்புறம் கொஞ்சம் தைரியமாக, சரளமாகத் தமிழ் பேசினேன்.
நான் பேசின தமிழைப் பார்த்து, பால சந்தரே... 'யாருகிட்டேயாவது தமிழ் கத்துக் கிட்டயா?’ன்னு கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார்!'' என்கிறார் சுஜாதா வெட்கமாக!
பேட்டி: கே.சுந்தரம்