Published:Updated:

அவங்கதான் இவங்க!

காற்றின் பாடலாக, மழையின் நடனமாக, நதியின் கீதமாகப் பேசும் பொற்சித்திரங்கள். ஏழெழுத்து மந்திரங்கள், எல்லோரையும் விழிகளாலேயே வீழ்த்துகிற அழகு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
அவங்கதான் இவங்க!

''இப்பெல்லாம் யார் சார் இருக்கா? முந்தி எல்லாம் பத்மினி, கே.ஆர்.விஜயா, சரோஜாதேவின்னு எவ்வளவு அருமையான நடிகைங்க இருந்தாங்க... இப்ப அந்த மாதிரி ஒருத்தரைக் காட்ட முடியுமா?'' என்று பேச்சுவாக்கில் ஒரு நண்பர் எதையோ  கொளுத்திப்போட, நாங்கள் மும்முரமாகத் தேட ஆரம்பித்தோம்.

அட, ஆச்சர்யம்! காலம் பெயர்களை மட்டும்தான் மாற்றி இருக்கிறது. அதே நடிகைகள் இன்றும் இருக்கிறார்கள்... இன்னும் அழகாக! இதோ எமது ஜாலி ஆராய்ச்சியின் முடிவுகள்:

வைஜெயந்திமாலா - ஐஸ்வர்யா ராய்

காற்றின் பாடலாக, மழையின் நடனமாக, நதியின் கீதமாகப் பேசும் பொற்சித்திரங்கள். ஏழெழுத்து மந்திரங்கள், எல்லோரையும் விழிகளாலேயே வீழ்த்துகிற அழகு. அழகுடன் இணைந்த நடிப்பும் நடனமும் - அதிகப்படி போனஸ். ஜீன்ஸ் அணிந்த வைஜெயந்திமாலாவின் பெயர்தான் ஐஸ்வர்யா ராய்!

அவங்கதான் இவங்க!

ஸ்ரீதேவி - ஷாலினி

செல்லச் சிட்டுகளாத் திரிந்து சட்டென்று சிறகு விரித்த பறவைகள். முன்னது மயில். பின்னது புறா. குழந்தைத்தனம்... குறும்புக் கண்கள்... அரும்பிய அழகு என அனைவரையும் அசத்தியது மூன்றாம் பிறை. அந்த இடத்துக்கு வந்த நிலவோ அஜீத்தை ஆட்டிப் படைக்கிறது!

தேவிகா - ரோஜா

கரிய பெரிய விழிகள், ஊறவைத்த உதடுகள், உலகத்தை அசைக்கும் பார்வை. குடும்பப் பெண்ணுக்குக் குடும்பப் பெண்... கவர்ச்சிக்கு கவர்ச்சி என்று எந்தப் பாத்திரத்துக்கும் பொருந்துகிற உடல்வாகு. 'ஆண்டவன் கட்டளை’ நாயகியின் மறு பதிப்பு ஆர்.கே.செல்வமணியின் ரோஜா!

சௌகார் ஜானகி - தேவயானி

இலைமறை கனியாய் கவர்ச்சி... எப்போதேனும் மலர்ச்சி... அவ்வப்போது பீறிடும் அழுகாச்சி. இரு கோடுகளில் ஒரு கோடு அன்று சௌகார் ஜானகி. இன்றைக்கு அவரது கிளிசரின் மறுமலர்ச்சி தேவயானி!

ஜெயலலிதா - குஷ்பு

எப்போதும் செய்தியில் இருப்பு. முன்னணி ஹீரோக் களின் இணை. கால ஓட்டத்தில் ஒருவரை தெய்வம் ரேஞ்சுக்கு வணங்கினால், மற்றவருக்குக் கோயில் கட்டி வைத்த புகழ். கிசுகிசுக்களுக்கே கிளுகிளுப்பு ஊட்டியவர்கள். பூசினாற் போன்ற வனப்பு. பூசி மெழுகாத பேச்சு. கலைச்செல்வியின் பேர் சொல்ல பொருத்தமான பூ - குஷ்பூ!

அவங்கதான் இவங்க!

கே.ஆர்.விஜயா - மீனா

அவருக்கு எம்.ஜி.ஆர் - சிவாஜி. இவருக்கு ரஜினி, கமல்! கண்ணீரும் கவர்ச்சியும் சமச் சீரான விகிதத்தில் கலந்த தொரு ஹோம்லி இமேஜ். தொப்புளும் காட்டுவார்கள், தொட்டிலும் ஆட்டுவார்கள். முத்துப் பல் காட்டிச் சிரித்த புன்னகை அரசியின் ஒரே வாரிசு - இந்த தெத்துப் பல் அழகி!

மஞ்சுளா - ரியாசென்

குறுக்குச் சிறுத்தவர்கள். திறந்த மனசுக்காரர்கள். பார்பி பொம்மை போலவே இருந்தாலும், பதறவைக்கும் கவர்ச்சி. ரிக்ஷாக்காரனைக் காதலித்த மஞ்சுளாவின் இடம், மாயனை மயக்கிய மச்சக்கன்னிக்கு மட்டுமே!

சரோஜாதேவி - சிம்ரன்

ஸ்விம் சூட்டோ, டிராக் சூட்டோ... இரண்டுக்கும் பொருந்துகிற இடையினம்.

தம்மைப் பின்தொடரும் கதாநாயகர்களைப் பார்த்து, ''ஏன் மிஸ்டர் என் பின்னாடியே வர்றே?'' என்று கேட்கையில் இமைகள் படபடக்கிறவர்கள். கொஞ்சும் தமிழ், துள்ளும் இளமை, அள்ளும் அழகு என்று அபிநய சரஸ்வதியின் ஸீட்டில் அமரச் சரியான டிக்கெட் சிம்ரன்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு