ஸ்பெஷல் -1
Published:Updated:

காலப் பெட்டகம் - 2000

காலப் பெட்டகம் - 2000

• குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.

##~##

வள்ளுவர் ஏன் வளைந்து நிற்கிறார்?

டந்த சனிக்கிழமையன்று, கலைஞரால் திறந்துவைக்கப்பட்டு கன்யாகுமரி கடல் நடுவே கம் பீரமாக எழுந்து நிற்கிறார் 95 அடி உயர மகாவள்ளுவர். மூன்று அடுக்குகள் கொண்ட 38 அடி உயர பீடத்தையும் சேர்த்து மொத் தம் 133 அடி!

3681 மெகா சைஸ் கருங்கல் துண்டுகளில் செதுக்கப்பட்டு ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப் பட்டு உருவாக்கப்பட்டது இந்தச் சிலை!

பீடத்தின் மூன்றாவது அடுக்குவரை மக்கள் சென்றுவர படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மெகா சைஸ் சிலையின் உள்பாகத் தில் 16X8 அடி அளவில், பாதம் முதல் உச்சி வரை வெற்றிடம் இருக்கிறது. இருந்தும், சிலையின் எடை 7,000 டன் வந்துவிட்டதாம்!

காலப் பெட்டகம் - 2000

''முக்காலத்தையும் வென்ற, செயல்படக்கூடிய குறளை இயற் றியவர் வள்ளுவர் என்பதால் நிற் கும்படியாக வடிவமைத்தோம். மூன்று விரல்களால் அவர் உணர்த் துவது மூன்று பால்களையும் குறிக்கும் முப்பால் முத்திரை. சிலையின் ஸ்கெச் படத்தை நீண்ட நேரம் ஆராய்ந்த கலைஞர், 'வள்ளுவர் ஏன் வளைந்துகொண்டு நிற்கிறார்?’ என்று கேட்டார். 'வளைவு கனிவைக் காட்டும் ஐயா!’ என்று விளக்கினேன்'' என் கிறார் சிற்பி கணபதி ஸ்தபதி.

-அ.பால்முருகன், தேவராஜன்

• கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரைக் கடத்தினான் சந்தன வீரப்பன். விகடனில் இது குறித்து பலப்பல தலையங்கங்களும், கார்ட்டூன்களும், கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. ராஜ்குமாரைத் தன்னிடம் 108 நாட்களுக்குப் பணயக் கைதியாக வைத்திருந்து, பின்னர் விடுவித்தான் வீரப்பன்.

''இதோ என் அன்புப் பரிசு!''

காலப் பெட்டகம் - 2000

ராஜ்குமார் விடுவிக்கப்படும் போது வீரப்பனும் அவனது கூட் டாளிகளும் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்களாம். ராஜ் குமாருக்கும், அவருடன் இருந்த இன்னொரு பணயக் கைதி நாகே ஷ§க்கும் ஒரு வேட்டி, ரெடிமேட் வெள்ளை ஷர்ட், ஒரு அங்கவஸ் திரம் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்து, தன் முன்னாலேயே அவற்றை அணியச் சொல்லி அழகு பார்த்தான் வீரப்பன். பதிலுக்கு ஒரு பரிசு கொடுத்தார் ராஜ்குமார். மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் உருவம் பொறித்த தங்க நாணயம் அது. சாமுண்டீஸ்வரி கோயிலில் பூஜிக்கப்பட்டு, அதன் பின் ராஜ்குமார் வீட்டில் விசேஷ பூஜை நடத்தி பூஜித்த குங்குமத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பரிசைக் கொடுத்தனுப்பியிருந்தார் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா. கன்னடர்கள் தங்களின் ஆன்மிகச் சின்னமாகக் கருதுவது சாமுண்டீஸ் வரி டாலரைத்தான். ''என் அன்புப் பரிசு'' என்று சொல்லி அந்த டால ரைத் தரும்போது ராஜ்குமாருக்குக் கண் கலங்கிவிட்டது. ராஜ்குமாரும் வீரப்பனும் கட்டிப்பிடித்துக் கலங்கி, பிரியாவிடை பெற்றனர்!

• நாவலர் நெடுஞ்செழியன் மறைந்தார். பல ஆண்டுகளுக்கு முன், விகடனில் 'என் கணவர்’ என்னும் தலைப்பில், திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன் கொடுத்திருந்த பேட்டிக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி...

என் கணவர்!

காலப் பெட்டகம் - 2000

''நான் படித்துப் பட்டம் பெற்றுப் பணியாற்றவும் முற் பட்டுவிட்டேன். அப்போதுதான் எங்கள் தூரத்து உறவினர் திருநாவுக்கரசு அவர்கள் மூலம், எங்கள் வீட்டுக்குப் பெண் கேட்க வந்தார் திரு.நெடுஞ்செழியன்.

என் தந்தை முதலில் மறுத்து விட்டார். அதற்குக் காரணம், அவர் ஓர் அரசியல்வாதி என்பதும்,  அவர் 150 ரூபாய் சம்பளத்தில் ஒரு பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் என்பதும்தான். தன் மருமகப் பிள்ளைக்கு அந்த வருமானம் போதாது என்று எண் ணினார் என் தந்தை. இப்படி முதலில் தயங்கியவர், பின்னர் சம்மதம் தெரிவித்தார்.

திருமணப் பேச்சு தொடர்ந்த போது, 'தாலி கட்டமாட்டேன்; சடங்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்ற திரு.நெடுஞ்செழிய னின் கருத்தை நானும் ஆமோதித் தேன். எங்களுக்குப் பதிவுத் திரு மணம் நடைபெற்றது.

ரிஜிஸ்ட்ரார் எங்கள் வீட்டுக்கு வந்தார். தி.மு.க பிரமுகர்கள் பலர் வந்திருந்தார்கள். ஆனால், எந்த விதமான சொற்பொழிவும் கிடை யாது. திருமணத்துக்கு அடையாள மாகப் பொன் சங்கிலி ஒன்றை எனக்குப் போட்டார் அவர். அவ்வளவுதான்!

என் கணவருக்கு சொத்து எது வும் கிடையாது. அவரது தூய உள்ளமும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவையும்தான் அவருடைய சொத்துக்கள்.

அரசியலை அவர் பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ளவில்லை. அதுதான் அவரது மூச்சு! சினிமா போன்ற துறைகளில் புகுந்து பணம் சம்பாதிப்பதை அவர் விரும்பவில்லை.

அவருக்கு அரசியல்தான் வாழ்வு. இன்று தி.மு.க இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு, என் கணவரின் பணியும் ஒரு முக்கியக் காரணம் என்று நான் சொல்வேன். இது தற்பெருமை யாகக்கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை அதுதான்!''

• கவிக்கோ அப்துல்ரகுமானுக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. அதையட்டி விக டனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியின் ஆரம்ப வரிகள் இங்கே...

கவிதைக்காக, ஒரு கவிஞனுக்கு..!

காலப் பெட்டகம் - 2000

பாரதிதாசனுக்குப் பிறகு தனக் கென ஒரு கவிதா மண்டலத்தை உரு வாக்கி... நிறைய கவிக்குயில்களை உருவாக்கிக்கொண்ருப்பவர் கவிக்கோ அப்துல்ரகுமான். கடந்த முப்பதாண்டு களாக கவிவேள்வி நடத்திக்கொண்டு இருக்கும் ரகுமானுக்கு இப்போது சாகித்திய அகாடமி விருது கிடைத் திருக்கிறது.

சென்னை, திருவான்மியூர் கடற் கரையோரத்தில் உள்ள அவரது இல் லத்தில் ரகுமானைச் சந்தித்தோம்...

''கவிதைக்காக, கவிஞனுக்கு முதல்தடவையாக சாகித்திய அகாடமி பரிசு தந்திருப்பதாகத்தான் சொல்வேன். 1968-ம் ஆண்டு 'வெள்ளைப் பறவை’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அ.சீனிவாசராகவனுக்குப் பரிசு தரப்பட்டது. அவர் பேராசிரியர். கவிஞராக அறிமுகமானவர் அல்ல. சிறந்த கவிஞரான பாரதிதாசனுக்கு, அவர் எழுதிய 'பிசிராந்தையார்’ என்ற நாடகத்துக்காகப் பரிசு தந்தார்கள். அதே போல் கவிஞர் கண்ணதாசனுக்கு 'சேரமான் காதலி’ நாவலுக்காகப் பரிசளித்தார்கள். ஒரு கவிஞனுக்கு அவனின் கவிதைக்காக விருது தரப்பட்டது இப்போது தான்...'' என்று சொல்லிச் சிரித்தார் அப்துல் ரகுமான்.

காலப் பெட்டகம் - 2000

• பத்மபூஷண் விருது ரஜினிகாந்துக்கும், பத்மவிபூஷண் விருது ஆங்கில நாவலாசிரியர் ஆர்.கே.நாராயணுக்கும் இந்த ஆண்டு கிடைத்தது.

பத்மவிபூஷண்     ஆர்.கே.நாராயண்

காலப் பெட்டகம் - 2000

அண்மையில் இலக்கிய சாதனைகளுக்காக பத்மவிபூஷண் விருது பெற்ற ஆங்கில நாவல் - சிறுகதை ஆசிரியர் ஆர்.கே.நாராயண் எனக்கு அறிமுகமானது 63 வருடங்களுக்கு முன். அதற்கு முன் 12 ஆண்டுகள் 'குஞ்சப்பா’ வாக மட்டுமே அவரை நான் அறிந்திருந்தேன்!

மைசூர் அத்தை மகனான அவர், நான் பிறப்பதற்கு முன் னரே, புரசைவாக்கத்தில் இருந்த  எங்கள் வீட்டில் பாட்டி, மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து, லூதரன் மிஷன் பள்ளியில் படித்த தாகச் சொல்லக் கேள்விப்பட் டிருக்கிறேன். பின்னர், மைசூரி லிருந்து அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம் பள்ளி அனு பவங்களையும், ஆசிரியர்களின் குணாதிசயங்களைப் பற்றியும் கதை சொல்வதுபோல், எங்களிடம் நகைச்சுவையுடன் சுவாரஸ்ய மாகப் பேசிக்கொண்டிருப்பார்.

குஞ்சப்பா ஆங்கிலத்தில் எழுதும் கதைகள் 'சன்டே இண்டு’வில் வெளிவருவதாக வீட்டில் பேசிக் கொள்வார்கள். முத்தையா செட்டி யார் பள்ளியில் மூன்றாம் பாரம் படித்துக்கொண்டிருந்த நான், ஆங்கிலக் கதைகளைப் படித்து புரிந்துகொண்டுவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கையில், மாணிக்க முதலியார் பார்க்கிலிருந்த 'மினி’ நூல் நிலையத்துக்குச் சென்று, வாரம் தவறாமல் அந்தக் கதை களைப் படிப்பேன். அப்போது தான் முதன்முறையாக அவரு டைய பெயர் ஆர்.கே.நாராயண் (நாராயணசாமியின் சுருக்கம்) என்று தெரிந்துகொண்டேன். எனவே, அதுதான் எனக்கு முதல் அறிமுகம்! அவருடைய இளைய சகோதரரான 'டூடூ’, ஆர்.கே.லக்ஷ்மண் என்ற பெயரில் அந்தக் கதைகளுக்குச் சித்திரம் வரைவார். அவற்றைப் பிரமிப்புடன் வெகு நேரம் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பேன்.

ஆர்.கே.நாராயணின் இங்கிலீஷ் சிம்பிளாக இருக்கும். சில வார்த்தைகள் புரியாவிட்டாலும், கதையை ஒரு மாதிரி புரிந்து கொண்டுவிடுவேன். பின்னர் ஒரு சமயம் சின்ன அத்தை வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவருடைய புகழ்பெற்ற முதல் நாவல் 'Swami and Friends’யை எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அதில் வந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போய், உண்மை நிகழ்ச்சி களைக் கண்முன் பார்ப்பது போல் உணர்ந்தேன். பின்னர் ஆனந்த விகடனில் அந்த நாவல் 'சுவாமியும் சிநேகிதர்களும்’ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாராவாரம், கலர் காகிதத்தில் வெளிவந்தபோதும் படித்தேன். அதன் பிறகு 'Dark Room’ என்ற அவரது நாவல், 'இருட்டறை’ என்ற தலைப்பில் விகடனில் வெளியானபோதும் படித்தேன்.

ஆர்.கே.நாராயணின் புகழ் பெற்ற 'The Guide’ என்ற நாவலை, 1966-ம் ஆண்டு 'சாகித்திய அகாடமி’க்காக 'வழிகாட்டி’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதைத் தவிர, தமது அமெரிக்க அனுபவங்களைப் பற்றி அவர் எழுதிய 'Dateless Diary’ என்ற நூலின் பெரும்பகுதிகளை 'அமெ ரிக்காவில் நான்’ என்ற தலைப் பில் விகடனில் எழுதினேன்.

ஆர்.கே.நாராயண் மிக எளிமையானவர். நாளும் அவரைத் தேடி வரும் புகழும் செல்வமும் அவர் மீது ஒட்டிக்கொள்வதில்லை. அவருக்காகப் பாராட்டு விழா நடத்துவதோ, அவரை நேரில் புகழ்ந்து பேசுவதோ, அவரை மேடையில் பேசச் சொல்லுவதோ, பத்திரிகையாளர்களும் டி.வி-காரர்களும் காமிராவோடு பேட்டி காண வருவதோ அவருக்குப் பிடிக்காதவற்றில் சில.

- பரணீதரன்

• 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’, 'மக்கள் கலைஞர்’ என்றெல்லாம் போற்றப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் மறைந்தார்.

காலப் பெட்டகம் - 2000

தான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசேஷமென்றாலும், அதை ஆதரவற்றோர், அநாதை இல்லங் களில் கொண்டாடுகிற வழக்கம் ஜெய்சங்கருக்கு உண்டு. அநாதைக் குழந்தைகளுக்கான விருந்தைப் பிரபலமானவர்கள் கையால் பரிமாற வைப்பாராம்.

''எல்லாச் செலவுகளையும் நீங்க பண்ணிட்டு, அதை ஏன் அவங்க கையால தரச் சொல்றீங்க?'' என்று ஒரு நண்பர் கேட்டபோது, ''நான் கூப்பிட்டு வர்ற வி.ஐ.பி-க் கள் யாரும் இந்த மாதிரி இடங்க ளுக்கு இதுவரைக்கும் வந்திருக்க மாட்டாங்க. அதனால, இது ஒரு வாய்ப்பா இருந்து, இந்த உதவி அவங்கள்ல சிலர் மனசைத் தொட்டாக்கூடப் போதும்... நாளைக்கு அவங்களும் இதுமாதிரி உதவிக ளைச் செய்ய என் முயற்சி ஒரு தூண்டுதலா அமையும் இல்லியா, அதுக்காகத்தான்!'' என்றாராம் அண்மையில் மறைந்த நடிகர் ஜெய்சங்கர்.

• ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய மூன்று பள்ளி மாணவிகளை அரசியல் அரக்கர்கள் சிலர் உயிரோடு பஸ்ஸில் வைத்துக் கொளுத்திய கொடூரம் இன்னமும் நம் நெஞ்சில் ரணமாக வலித்துக்கொண்டு இருக்கிறதே! 'நடுங்குகிறது நெஞ்சம்’ என்னும் தலைப்பில், விகடனில் அப்போது வெளியான கட்டுரையில், ''டிவி- யில் அந்த பஸ் எரியறதைக் காட்டறப்ப எல்லாம், 'அம்மா... அம்மா’ன்னு ஒரு அலறல் கேட்குதே, அது என் பொண்ணோட குரல்தான்! அதைப் பார்க்கும்போதெல்லாம், 'ஐயோ..! என் குழந்தை அதுக்குள்ள துடிக்குதே’னு மனசு கதறுது'' என, அந்த மாணவிகளின் பெற்றோர் கதறிய கதறலை இப்போது படித்தாலும், இதயம் கலங்குகிறது; கண்கள் குளமாகின்றன.

அரசியல் வெறி!

கொழுந்துவிட்டு எரிந்த அரசியல் வெறி எனும் நெருப்புக்கு ஒரு பாவமும் அறியாத மூன்று மாணவிகள் பலியாகியிருக்கும் கொடுமை கண்டு, கோபக் கனலில் நாடே கொதித்துப் போயிருக்கிறது.

காலப் பெட்டகம் - 2000

அப்பாவி மாணவிகளைப் பொசுக்கி, கோப சாந்தி செய்து கொண்ட அரக்கர்களைச் சட்டம் எப்படிக் கடுமையாகத் தண்டிக்கப் போகிறது என்பதையும், மீண்டும் இப்படியரு மாபாதகச் செயலை யாரும் செய்யத் துணியாத அளவுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதையும் அறிய, ஈரம் உலராத விழிகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.

சட்டம் தண்டிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். அந்தப் பாதகர்களைத் தாங்கி நிற்கும் கட்சி இதற்கு என்ன பரிகாரம் தேடப் போகிறது? நடந்து முடிந்த அக்கிரமச் செய லுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், அந்தக் கொடூர புத்தி கொண்டவர்களைத் தாமாகவே முன்வந்து மக்கள் முன் அடையாளம் காட்டவேண் டும். அதை விடுத்து, பழியை அடுத்தவர் தலையில் தூக்கிப் போடும் அரசியல் தந்திரத்தைக் கையாண்டு தப்பிக்க நினைத்தால் மக்களின் மாளாக் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

''இந்தக் கொடூரத்தைச் செய்த வர்களைக் கடவுளே மன்னிக்க மாட்டார்'' என்று குமுறியிருக்கிறார் இறந்துபோன ஒரு மாணவியின் தந்தை.

கடவுளாவது நின்று கொல்லும். மக்கள் மனது வைத்தால்...

ஜாக்கிரதை!

• நாஞ்சில் கி.மனோகரன் மறைந்தார்.

எதிர்க்கட்சிகளை மதித்தவர்!

காலப் பெட்டகம் - 2000

முதுகுளத்தூரில் அரசு விழா! ''தி.மு.க-வின் மாவட்டச் செயலா ளர் கூட்டத்தில்கூடக் கலந்துகொள் ளாமல் இங்கு வந்திருக்கிறேன் என்றால், இது எதிர்க்கட்சித் தலை வரின் தொகுதி. நான் எதிர்க்கட்சி களை மதிப்பவன்'' என்று பேசி விட்டுச் சென்னைக்கு வந்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன், கடந்த செவ்வாய்க்கிழமை காலை யில் இறந்துவிட்டார்.

பட்டு உடை, கையில் ஒரு சந்தனக்கோல் என ஒரு டிரேட் மார்க் முத்திரையோடு வலம் வந்த நாஞ்சில் மனோகரனின் 'பர்சனா லிட்டி’ எல்லோராலும் ரசிக்கப்பட் டது. அந்த மந்திரக்கோல் ரகசியம் என்ன?

ஹார்ட் அட்டாக்கில் இப்போது இறந்துபோன மனோகரனுக்கு, இதற்கு முன் 1971-ல் ஒரு முறை லேசான அட்டாக் வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தினமும் வாக்கிங் போன இவர் எடுத்துச் சென்ற கம்பு கையிலேயே தங்கி விட்டது. இப்படியாக இருபது கட்டைகளை மனோகரன் வைத்தி ருந்தார். அவரது உடல் எரியூட்டப் பட்டபோது, அதிலிருந்து நான்கு கட்டைகளைப் போட்டு எரியூட்டி யிருக்கிறார்கள்!

புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுத் தனியறையில் ஒரு கடிதம் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டுள்ளது. 'மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, கடந்த ஆண்டு என்னிடம் வந்த மொத்தம் நான்காயிரம் ஃபைல்களையும் ஒன்றுவிடாமல் சரிபார்த்துக் கையெழுத்திட்டுள்ளேன்’ என்று நாஞ்சில் மனோகரன் எழுதிய கடிதத்தில், 'மகிழ்ச்சி. பாராட்டுக்கள்! அன்புள்ள மு.க.’ என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.

'எதிர்க்கட்சிகளை மதிப்பவன் நான்’ என்று தனது கடைசி கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன் பேசியது போலவே, அவர் இறந்த அன்றும் ஒரு சம்பவம் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்த காளிமுத்து வந்திருந்தார். நாஞ்சிலாரின் மனைவி இந்திராவிடம், ''மேடம்தான் மரியாதை செலுத்த என்னை அனுப்பி வெச்சாங்க. 'நான் சென்னையில் இருந்தா வந்திருப்பேன்’னு உங்களிடம் சொல்லச் சொன்னாங்க'' என்றாராம் காளிமுத்து.

தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிசயமாக நடந்த சம்பவமும் நாஞ்சில் மனோகரன் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது!

- ப.திருமாவேலன்

• 'கோழி கூவுது’ படத்தில் அறிமுகமான நடிகை விஜி தற் கொலை செய்துகொண்டார்.

சில்க் போல...

காலப் பெட்டகம் - 2000

''திருவண்ணாமலையில் 'கோழி கூவுது’ ஷூட்டிங். திருவிழா ரேஞ்சுக்கு வேடிக்கை பார்க்கப் பெரும் கூட்டமே திரண்டிருந்தது. சுபஸ்ரீ என்ற புதுப் பொண்ணுதான் ஹீரோயின். அதுவரை அவரை முறைப்படி அறிமுகப்படுத்தாத நிலையில், அந்தக் கூட்டத்துக்கு மத்தியிலேயே அறிமுகப்படுத்திவிடச் சொன்னார், படத்தின் தயாரிப்பாளரான என் சகோதரர் பாஸ்கர்.

பரபரவென மினிமேடை தயாராயிற்று. மைக் பிடித்து ஹீரோயின் பெயரை உச்சரிக்கும் முன்பு, திடீரென்று ஒரு யோசனை... பக்கத்திலிருந்த சில்க் ஸ்மிதாவிடம் அவரது ஒரிஜினல் பெயரைக் கேட்டேன். 'விஜி’ என்று சொன்னார். உடனே 'புதுமுகம் விஜி’ என்று அந்தப் புதுப்பொண்ணை அறிமுகப்படுத்தினேன். 'சில்க் போலப் பரபரப்பான நடிகையாக வரவேண்டும்’ என்ற விருப்பத்தில்தான் அப்படிப் பெயர் சூட்டினேன். அவளோ, சில்க் போலவே காதல் விவகாரத்தில் மனமுடைந்து, அதே ஸ்டைலில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டாள். என் மனசைச் சிதைத்துவிட்டது அவள் மரணம்!''

- கங்கை அமரன்

• தேசியத் தலைவர் 'பாரத ரத்னா’ சி.சுப்பிரமணியம் இந்த ஆண்டு அமரர் ஆனார். இவர் நிதியமைச்சராக இருந்தபோது (1961-ல்) ஆனந்த விகடனில் 'நான் சென்ற நாடுகள்’, 'உலகம் சுற்றினேன்’ என்னும் தலைப்புகளில் பயணத் தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். மறைந்த சி.எஸ். பற்றி விகடனில் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கே...

சி.எஸ்.

மறைந்த தேசியத் தலைவர் 'பாரத ரத்னா’ சி.சுப்பிரமணியம் பற்றி, அவ ருடைய மகள்களான அருணா ராம கிருஷ்ணனும் சுதந்திரா சக்திவேலும் நினைவுகூர்கிறார்கள்...

அருணா ராமகிருஷ்ணன்:

காலப் பெட்டகம் - 2000

''கல்வி வளர்ச்சியில் அப்பா வுக்கு ரொம்ப ஈடுபாடு இருந்தது. அதை எங்கள் சொந்த வாழ்க்கை யில் செயல்படுத்தி வெற்றிபெற அப்பா எங்களுக்குப் பெரிதும் உதவினார்.

பெண்கள் முன்னின்று கல்வி நிறுவனத்தை நடத்தினால், நல்ல பலன் அளிக்கும் என்பது அப்பா வின் அசைக்கமுடியாத நம் பிக்கை!

பாரதி வித்யா பவன் என்ற பெயருள்ள பள்ளிக்குப் புதிதாகப் பொறுப்பேற்று, ஓர் உயர்தரக் கல்வி நிறுவனமாக நடத்துவதில் அப்பா எனக்குக் கொடுத்த ஊக் கமும் உற்சாகமும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

ஒவ்வொரு வகுப்பிலும் அள வுக்குள் அடங்கின பிள்ளைகளைத் தான் சேர்க்கவேண்டும் என்பது அப்பாவின் முதல் கட்டளை. 'தர முள்ள கல்வி கற்பிக்கப்படவேண் டும். தகுதியுள்ள ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கவேண் டும். ஒவ்வொரு மாணவனையும் ஆசிரியர் நினைவு வைத்துக் கொண்டு, அவர்களை அன்புடன் அரவணைத்துக் கல்வி போதிக்க வேண்டும்’ என்பார் அப்பா.

அப்பாவின் நிர்வாகத் திறமை, நேர்மை, காலம் தவறாமை, உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் ஆற்றல், பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்வது இவை எல்லாம் அவருடைய ஆசியினால் என் உள்ளுணர்வில் பதிந்து வழிநடத்திச் சென்றதுதான், இந்த அளவுக்கு எங்கள் கல்வி நிறுவனம் வளர்ந்த தற்குக் காரணம் என நான் நினைக் கிறேன்.''

சுதந்திரா சக்திவேல்:

''பொதுவாக எங்கள் அப்பாவை நாங்கள் ஒரு 'ஷாக் அப்ஸர்வர்’ மாதிரி நினைப்பதுண்டு. எங்கள் வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் அப்பாவிடம் மனம் விட்டுப் பேசுவோம். எதையும் சம நோக்குடன் பார்த்து, மனம் சஞ்சலப்படாமல், எந்த முடிவை எப்படி எடுத்தால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து சொல்வார்.

என் மகள் அகல்யா விஷயத்தில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அகல்யா ஒரு முஸ்லிம் இளைஞ ரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். கலாசார வேறுபாடு கள் ஏற்படுமே என்று கவலைப் பட்டு, அந்தத் திருமணத்துக்கு அனுமதி தரமுடியாது என்று சொல்லிவிட்டோம். ஆனால் அகல்யா, தன் காதலர் ஸுகிலையே பதிவுத் திருமணம் செய்துகொண் டாள்.

திருமணம் முடிந்ததும் இரு வரும் என் அப்பாவின் ஆசி கோரி, அவரிடம் சென்றார்கள்.

'என்கிட்டே நீ முதலில் வந்து சொல்லியிருக்கலாம் இல்லையா? நானே வந்து உங்கள் திருமணத் துக்குச் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருப்பேனே?’ என்று அகல்யாவிடம் சிரித்துக்கொண்டே சொன்னார் அப்பா.

'அகல்யா தானாகவே மனம்ஒப்பித் தேர்ந்தெடுத்துக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பப்பட்டபோது, அதை நீயும் உன் கணவரும் ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக ஆசி வழங்க முன்வந்திருக்க வேண்டும். எந்த மதத்திலும் நமக்கு நம்பிக்கை உண்டு என் பதை உணர்த்த, நம் குடும்பத் திலேயே ஒரு திருமணம் நடந்தி ருப்பது எவ்வளவு பெரிய விஷ யம்?’ என்று என்னிடம் கூறினார் அப்பா.

அகல்யாவுக்குக் குழந்தை பிறக் கப்போகிறது. 'எனக்கு இன்னொரு கொள்ளுப் பேரனோ, பேத்தியோ பிறக்கப் போகிறது’ என்று அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார்.

அவர் பார்த்துச் சந்தோஷப் படுகிற அந்தப் பாக்கியம் எங்க ளுக்குக் கிடைக்கவில்லை!''

பேட்டி: மங்களம் ஆத்ரேயி

• 'முப்பது கோடி முகமுடையாள்’ என்று மகாகவி பாரதி வர்ணித்த பாரதத் தாய் இந்த ஆண்டு '100 கோடி முகமுடையாள்’ ஆனாள்!

நூறு கோடி சாதனை1

அஷ்டமி திதி, ஆயில்ய நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினமான கடந்த வியாழனன்று விடியற்காலையில், டெல்லி சப்தர் ஜங் மருத்துவமனையில் ஜனித்த ஆஸ்தா என்னும் பெண் குழந்தை இந்திய ஜனத் தொகையை நூறு கோடியாக உயர்த்தியிருக்கிறது! பச்சிளம் குழந்தையின் பிஞ்சு முகத்தில் காமிரா வெளிச்சங்கள் மின்ன, மத்திய அமைச்சர்கள் குழந்தையை வாழ்த்தியிருக்கிறார்கள்!

''இந்தியாவின் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியிருப்பது சீரியஸான விஷயம்'' என்று கவலை தெரிவித்திருக்கிறார் பிரத மர் வாஜ்பாய்.

கல்வியறிவுமிக்க பெண்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு அதிகளவில் வெற்றி பெறுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. எனவே, அளவுகடந்த மக்கள் தொகைப் பெருக்கத்தைத் தடுப்பதற்கான வழிகளில், முதல் முக்கிய வழியாகப் பெண் கல்வியைப் பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும்.

அதே சமயம், ஏற்கெனவே உள்ள நமது எண்ணிக்கை வலிமையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்றும் சிந்திக்கவேண் டும். நம்மைவிட அதிக மக்கள் தொகை உள்ள சீனா, பொருளா தார வலிமையிலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதி லும் சிறந்து விளங்குவதன் ரகசியத்தை நமது ஆட்சியாளர்கள் கண்டறியவேண்டும்!

இந்த ஆண்டின் முதல் இதழில், இந்த நூற் றாண்டின் மிக முக்கியமான தமிழர்கள் 100 பேரைப் பற்றிய குறிப்புகளைப் படங்களுடன் வெளியிட்டிருக்கிறது விகடன்.

 

ரேஷன் கார்டு பெறுவது எப்படி, காஸ் கனெக்ஷன் பெறுவது எப்படி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வழிகாட்டும் பகுதியான 'வழிகாட்டி’, பிரமுகர்களின் அனுபவக் கட்டுரைகளாக மலர்ந்த 'நினைவுச் சிறகுகள்’, முக்கியப் புள்ளிகள் நாட்டு நடப்பை அலசும் 'வி.ஐ.பி. மேடை’, பிரபலங்களைப் பற்றிய இளம் வயது நிகழ்வுகளை அவர்களின் தாய்மார்கள் பகிர்ந்துகொள்ளும் 'என் மகன்’ எனப் பல விறுவிறுப்பான பகுதிகள், விகடனில் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. பழைய அபூர்வ புகைப்படம் ஒன்றைப் பார்த்து, அது பற்றிய நினைவுகளை, அந்தப் படத்துடன் தொடர்புடைய ஒரு வி.ஐ.பி. பகிர்ந்துகொள்ளும்  'படக்கதை’ என்னும் சுவாரஸ்ய பகுதியும் இந்த ஆண்டில் விகடனில் வெளியாகியுள்ளது.

காலப் பெட்டகம் - 2000

சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை’, ராஜேஷ்குமாரின் 'கொஞ்சம் மேகம், கொஞ்சம் நிலவு’, 'சுபா’வின் 'கண்மணி சுகமா?’, எகிப்து நாட்டுப் பின்னணியில் ஐஸ்வர்யன் எழுதிய 'மூன்றாவது பிரமிடு’ ஆகிய தொடர்கதைகளும், 'ஏடாகூடக் கதைகள்’ என்னும் தலைப்பில் ரவிபிரகாஷ் எழுதிய கிம்மிக் கதைகளும், ரகுவம்சத்தை அடிப்படையாக வைத்து பரணீதரன் எழுதிய 'கவி சொல்லும் கதைகள்’ என்கிற கட்டுரைத் தொடரும் விகடனில் வெளியானது இந்த ஆண்டுதான். கவி சொல்லும் கதைகள் தொடருக்கு அற்புதமாகப் படங்கள் வரைந்து அசத்தியிருந்தார் 'இந்து’ கார்ட்டூனிஸ்ட் கேசவ்.

வாரந்தோறும் விகடன் அட்டையில் வெளியாகும் சிறு சதுரத் துண்டுப் படங்களைக் கத்த ரித்து முழுப்படமாகச் சேர்த்துச் சரியாக ஒட்டி அனுப்புவோருக்குப் பரிசு என்கிற ஒரு புதுமை யான போட்டி நடத்தி, ரூ.2,00,000 பரிசளித்தது விகடன்.

காலப் பெட்டகம் - 2000

பழம்பெரும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சாவி, ஆரம்பக் காலத்தில் விகடனில் சிறுகதைகளும், 'வாஷிங்டனில் திருமணம்’ போன்ற தொடர்கதைகளும், 'இங்கே போயிருக் கிறீர்களா?’, 'கேரக்டர்’ போன்ற கட்டுரைத் தொடர்களும் எழுதியவர். விகடனிலேயே உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றியவர். பல்லாண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்த ஆண்டில் விகடனில் நிறைய அரசியல் நகைச்சுவைக் கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார். விகடனில் ஆரம்பக் காலத்தில் வெளியான 'நமது அரசியல் நிருபர் சரடு’ பகுதியை மீண்டும் துவக்கியுள்ளார்.

இந்த ஆண்டு வெளியான சிறு

காலப் பெட்டகம் - 2000

கதைகள் பலவற்றுக்கு ஓவியர் மாருதி வரைந்துள்ள ஓவியங்கள், புகைப்படமா... ஓவியமா என நம்மை ஒரு கணம் வியப்பில் ஆழ்த்துகின்றன. ஒவ்வொரு படமும் அத்தனை தத்ரூபம்... அத்தனை உயிர்ப்பு!

'ஒரு டஜன் கேள்விகள்’ என்னும் தலைப்பில், செருப்பு தைப்பவர், கிளி ஜோசியக்காரர் என வாழ்க்கையின் அடித்தளத்தில் இருக்கும் சாமானிய மனிதர்களின் பேட்டிகளையும் வெளியிட்டுள்ளது விகடன். பேட்டி கண்டு எழு தியவர் குமுதம் புகழ் பால்யூ.

காலப் பெட்டகம் - 2000

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்’ தொடர்கதை, விகடனில் இந்த ஆண்டு தீபாவளிச் சிறப்பிதழில் தொடங்கியுள்ளது. வைரமுத்து இதற்கு முன்பே விகடனில் 1994-ல், 'தண்ணீர் தேசம்’ என்னும் தலைப்பில் கவிதை நடையிலான ஒரு தொடர்கதையை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டார மொழியில் எழுதுவதில் பிரசித்தி பெற்றவர் மேலாண்மை. பொன்னுச்சாமி. சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவர் விகடனில் எழுதியுள்ள சிறுகதைகள் ஏராளம். இந்த ஆண்டு, 'ராசாத்திகள்’ என்னும் தலைப்பில் இவர் விகடனில் புதுமைத் தொடர்கதை ஒன்றை எழுதியுள்ளார். ராசாத்தி என்கிற கதாபாத்திரத்தின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தனிச் சிறுகதை; தொடர்ந்து படித்தால் அழகான ஒரு தொடர்கதை. வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற தொடர் இது.