ஸ்பெஷல் -1
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

டி.டி.கே.

தலையங்கம்

வணிகத் துறையில் சிறந்து விளங்கி, பின்னர் அரசியலில் நுழைந்து, தமது நுண்ணிய அறிவாலும் வாதத் திறமையாலும் பிறரைக் கவர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை, தமக்கே உரிய தீர்க்க தரிசனத்துடன் ராஜாஜி கண்டுபிடித்து, தேசிய அரங்கத்திற்கு அறிமுகப்படுத்தினார். வளர்ந்து வரும் டி.டி.கே-யின் மதிப்பையும் புகழையும் உற்றுக் கவனித்த காமராஜ், அகில இந்திய அரசியலில் அவர் அரிய பெரிய சாதனைகள் புரியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர பெரு முயற்சிகள் எடுத்துக்கொண்டார்.

அரசியல் நிர்ணய சபையிலும், பின்னர் பாராளுமன்றத்திலும் டி.டி.கே-யின் சிறப்புமிகு பணிகளையும், ஆக்கபூர்வமான கருத்துக்களையும், தனிப்பட்ட முறையில் அளித்த ஆலோசனை களையும் கண்டு வியந்த நேருஜி, நவபாரதத்தை நிர்மாணிக்கும் பெரும் பணியில் தமக்கோர் உறுதுணையாகவும், சோஷலிசத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சியில் தமக்குப் பக்கபலமாகவும் அவரை ஆக்கிக்கொண்டார். எல்லா முக்கியத் துறைகளிலும் டி.டி.கே. தமது சிந்தனையையும் செயல்திறனையும் வெளிக்காட்ட வழிவகுத்துத் தந்தார்.

'அற்புதங்களை நிகழ்த்திக் காட்டவல்ல அலாதியான ஒரு பொருளாதார மேதை’ என்று நாடே பாராட்டும் வகையில், பட்ஜெட் தயாரிக்கும் முறைகளிலும், புதிய புதிய வரிகளைக் கண்டு பிடிப்பதிலும் சிறந்து விளங்கி, சமுதாய ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து, படிப்படியாக சோஷ லிசத்தைப் புகுத்த முயன்றவர் டி.டி.கே. முக்கியமாக, மத்தியதர வகுப்பினரின் நண்பன் என்று பெயர் எடுத்தவர் அவர்.

பல அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக, ஆட்சித் துறையில் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் சென்னையிலேயே இறுதியாகக் குடியேறிய டி.டி.கே., கர்னாடக இசையிலும், நூல் களைப் படிப்பதிலும் நிம்மதி கண்டு அமைதியாக வாழ்ந்து வந்தார். ஆனால், நாட்டு நடப்புக் களை உன்னிப்பாகக் கவனித்து வந்த அவர், நாடு போகிற போக்கு சரியாக இல்லை என்று உள்ளம் குமுறி, தமக்குப் பிரதம மந்திரியிடத்திலும் காமராஜிடத்திலும் இருந்த நட்புறவையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவர்களது கூட்டுத் தலைமையால் நாடு பயன் பெறவேண்டும் என்று விரும்பி, ஓரளவு அதில் வெற்றியும் கண்டார்.

சுய சிந்தனையாளரும், நாட்டுக்குத் தேவையானவற்றை அறிந்து, அதை ஆட்சியாளர்களிடம் நெஞ்சுரத்துடன் அறிவுறுத்தி, திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்தும் வழிமுறைகளையும் வகுத்துத் தரக்கூடிய வல்லமை பெற்றிருந்த டி.டி.கே-யின் மறைவு, நாட்டு மக்களுக்கு உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும்!