Published:Updated:

மதுரைத் தெருக்களின் வழியே - 15: பழங்கால திரையரங்க அனுபவங்களுக்கு மாற்றாகுமா நவீன மல்டிபிளக்ஸ்?

பழங்கால திரையரங்கம், மல்டிபிளக்ஸ்

சினிமா என்றால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் திரையிடப்பட வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்பினர். திரைப்படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் காட்டப்படும்போது எத்தனை ரீல்கள் என்று ஆர்வத்துடன் பாரத்தனர்.

மதுரைத் தெருக்களின் வழியே - 15: பழங்கால திரையரங்க அனுபவங்களுக்கு மாற்றாகுமா நவீன மல்டிபிளக்ஸ்?

சினிமா என்றால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் திரையிடப்பட வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்பினர். திரைப்படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் காட்டப்படும்போது எத்தனை ரீல்கள் என்று ஆர்வத்துடன் பாரத்தனர்.

Published:Updated:
பழங்கால திரையரங்கம், மல்டிபிளக்ஸ்
தியேட்டரில் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, கனவுலகில் மிதக்கிற பெரும்பான்மையினர் ஒருபோதும் அறிந்திராத பெரிய உலகம் விரிந்திருக்கிறது. திரைப்படத்தைத் தியேட்டரில் வெளியிடுவது தொடர்புடைய பல்வேறு வேலைகளில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கின்றனர். சினிமா தயாரிப்பில் தொடர்புடைய நடிக நடிகையர், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் போன்றோரின் ஊதியத்துடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத மிகவும் குறைந்த பணத்துக்காகப் பலர் வேலை செய்கின்றனர்.

மதுரை, மேலக்கோபுரத் தெருவிலிருந்து பிரிகின்ற தானப்ப முதலி தெரு, கீழ அனுமந்தராயன் தெரு போன்ற தெருக்களில் பிலிம் கம்பெனிகள் செயல்படுகின்றன. ஆங்கிலத் திரைப்படங்களை வெளியிடுகிற நிறுவனங்கள் மிட்லாண்ட் ஹோட்டலுக்கு அருகில் இருக்கிற சந்தில் செயல்படுகின்றன. சிறிய அறையில் செயல்பட்ட பிலிம் கம்பெனிகளின் கைவசம் உரிமை வைத்திருக்கிற திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். இப்பொழுது பிலிம் கம்பெனிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

தயாரிப்பாளரிடமிருந்து திரைப்படத்தை விலைக்கு வாங்கி மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் திரையரங்குகளில் திரையிடுவதில் சேது பிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் செயல்பட்டன. புதிய திரைப்படம் 'பி', 'சி' மையங்களில் திரையிடப்பட்ட பின்னர் வேறு சிறிய நிறுவனங்களுக்கு விற்கப்படும். அந்தக் கம்பெனிகள் அவ்வப்போது ஏதாவது ஒரு தியேட்டரில் படத்தைத் திரையிட்டுக் கிடைக்கிற வருமானத்தில் வாழ்ந்தனர். திரைப்படத்தைக் கிராமத்துத் தியேட்டர்களில் வெளியிடுவதற்குத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பிலிம் கம்பெனிகளுக்கும் இடையில் புரோக்கர்கள் இருந்தனர். திரைப்பட விநியோகத் தொழில் செய்கிற கம்பெனியின் ரெபரசன்டேட்டிவ் ஆகத் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குக்குச் சென்று டிக்கெட் விற்பனை, பண வசூலை மேற்பார்வையிடுகிறவர்கள் கணிசமாக இருக்கின்றனர்.

பழங்கால தியேட்டர்கள்
பழங்கால தியேட்டர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எண்பதுகளில்கூட கிராமத்துத் திருவிழாக்களில் ஊர் மந்தையில் 16 எம்.எம். அல்லது 35 எம்.எம் படங்களைத் திரையிட்டனர். ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் திறந்தவெளியில் படத்தைக் கண்டுகளித்தனர். சினிமா புரொஜக்டர், பிலிம் பெட்டிகளுடன் கிராமத்திற்குச் செல்வதற்கெனத் தனிப்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டன. இப்பொழுது அதுபோன்ற திரையிடல் எதுவுமில்லை. திரைப்படம் காட்டுகிற நிறுவனங்களும் இல்லை.

ஒரு திரைப்படம் 18 ரீல்கள் எனில் பிலிம் 18 வட்ட அலுமினிய டப்பாக்களில் தனித்தனியாக அடைக்கப்பட்டு, பெரிய அளவிலான தகரப் பெட்டிக்குள் வைத்து தியேட்டர்களுக்கு அனுப்பப்படும். மதுரைக்கு அருகிலுள்ள கிராமம் எனில் சைக்கிளில் பிலிம் பெட்டி கொண்டு செல்லப்படும், தொலைவிலுள்ள ஊர் எனில் பேருந்துகள் மூலம் அனுப்புவார்கள். பிலிம் பெட்டியின்மீது அனுப்புகிற கம்பெனியின் பெயரும், செல்லவிருக்கிற தியேட்டரின் பெயரும் ஊரும் எழுதப்பட்ட தாள் ஒட்டப்பட்டிருக்கும். தகரப் பெட்டிகளைத் தயாரிப்பதுடன் நெளிந்த பெட்டிகளைச் சீராக்கிடவும் பட்டறைகள் இயங்கின. நவீனத் தொழில்நுட்பத்தில் பிலிம் சுருளுக்கு இடமில்லை. எல்லாம் டிஜிட்டல் மயம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிலிம் கம்பெனி உரிமையாளருடன் தியேட்டர் உரிமையாளர் அல்லது மேலாளர் இருவருக்கும் இடையில் நிகழ்கிற பேரம் முடிந்தவுடன் திரைப்படத்தின் வண்ணச் சுவரொட்டிகள், தியேட்டர் பெயருடன் அச்சடிக்கப்பட்ட விளம்பரச் சுவரொட்டிகள் போன்றவற்றை வாங்கிச் செல்வார்கள். திரைப்படத்தின் பெயர், தியேட்டரின் பெயர், ஊரின் பெயர் போன்றவற்றுடன் ’குளுகுளு வண்ணக் கலரில்’ போன்ற வாசகங்களுடன் பெரிய அளவில் சினிமா போஸ்டர்கள் அச்சடிக்கிற அச்சியந்திரங்கள் இரவு பகலாக இயங்கின. தியேட்டரில் வழங்கப்படுகிற டிக்கெட்டுகள் அச்சடிக்கிற இயந்திரங்களும் பரபரப்பாக இயங்கின. திரைப்படத்துடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டு சம்பாதிக்கிறவர்கள் எண்ணிக்கை கணிசமானது.

திரைப்படத் தொழில் ஒருவகையில் சூதாட்டம் போன்றதுதான். பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் நொடித்துப்போகிற சூழலில் திரைப்பட விநியோகஸ்தர்களும் கடனாளியாகி நொடிப்பது இயல்பானது. எண்பதுகளில் என் நண்பர் ரமணி அவரின் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பழைய படங்களை வாங்கித் திரையிடுகிற பிலிம் கம்பெனி வைத்திருந்தார். புதுப்படம் வாங்கிடத் திட்டமிட்டு, முதலில் விஜயசாந்தி நடித்த தெலுங்கு டப்பிங் படமான 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' படத்தை வாங்கி விநியோகித்தனர். பணம் கொட்டியது. அதே சூட்டில் கமல்ஹாசன் நடித்த 'மகாநதி' படத்தை ஏகப்பட்ட பணம் கொடுத்து விநியோக உரிமையை வாங்கினர். 'மகாநதி' படம் ஓடாத காரணத்தினால் அதுவரை சம்பாதித்த பணத்தை இழந்ததுடன், கம்பெனியையும் மூடுகிற நிலை ஏற்பட்டது. சினிமாத் தொழிலில் இதெல்லாம் சகஜம்.

மகாநதி
மகாநதி

எங்கள் ஊர்க்காரர் ஒருவர் தொடக்கத்தில் பிலிம் கம்பெனியின் படம் ஓடுகிற தியேட்டருக்குச் செல்கிற ரெபரசன்டேட்டிவ் வேலை செய்தார். பின்னர் எண்பதுகளில் ’செல்வம்’, ’பணம் படைத்தவன்’ போன்ற பழைய திரைப்படங்களின் வெளியீட்டு உரிமையை வைத்துக்கொண்டு திரையரங்குகளுக்குப் படப்பெட்டியை அனுப்பி ஓரளவு வசதியாக இருந்தார்.

90களில் கிராமப்புறக் கீற்றுக் கொட்டகை தியேட்டர்கள் நசிவடைந்த சூழலில், வீடியோ கேசட்டுகளின் அறிமுகத்தினால், திரையரங்குகள் தள்ளாடிக்கொண்டிருந்தன. என் நண்பரால் தொடர்ந்து பிலிம் கம்பெனியை நடத்த முடியவில்லை. அப்பொழுது தற்செயலாக அவரைச் சந்தித்தேன். அவர் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பத்து நிமிடம் ஓடுகிற பிட்டுப் படத்தின் பிலிம் சுருளை வாங்கி, பாடாவதியான மலையாளப் படத்துடன் சேர்த்து ஊருக்கு வெளியே இருக்கிற தியேட்டர்களில் திரையிடுவதாக வருத்தத்துடன் சொன்னார். எப்பொழுதும் திரைப்படம் சார்ந்தவர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்த தானப்ப முதலி தெரு, எதிர்காலத்தில் நசிந்துவிடும் என்பதன் அறிகுறிதான் என் நண்பரின் பேச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தியேட்டரில் டிக்கெட் விற்பனையாளர், டிக்கெட்டை வாங்கிக் கிழித்துத் தந்து அனுமதியளிக்கிறவர், ஆபரேட்டர், போஸ்டர் ஓட்டுகிறவர் எனப் பலரும் பணியாற்றுகின்றனர். திரைப்படக் கொட்டகையில் வேலை செய்கிறவர்கள் வேறு ஆதாயம் தருகிற எந்த வேலைக்கும் செல்ல மாட்டார்கள். சினிமா என்ற போதையில் தியேட்டரில் வேலை பார்க்கிற பணியாளர்களும் மிதப்பார்கள்.
இம்பீரியல் டாக்கீஸின் விளம்பரம்
இம்பீரியல் டாக்கீஸின் விளம்பரம்

மதுரையிலுள்ள பழைமையான திரையரங்குகளான 'இம்பீரியல் தியேட்டர்', 'சிடி சினிமா' பற்றிச் சொல்ல வேண்டியது அவசியம். போன நூற்றாண்டில் மதுரைக்கு மின்சாரம் அறிமுகமானபோது, ஜெனரேட்டர் மூலம் இம்பீரியல் தியேட்டரில் படங்கள் திரையிடப்பட்டன என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். திரையில் மௌனப் படம் ஓடும்போது, திரைக்கருகில் நீளமான கம்புடன் நின்று காட்சியைப் பற்றி விவரிக்கும் 'வர்ணனையாளர்' பற்றி ப.சிங்காரம் தனது 'புயலிலே ஒரு தோணி' நாவலில் குறிப்பிட்டிருக்கிறார்.

மீனாட்சியம்மன் கோயிலுக்கருகில் சிறிய வீடு போன்ற அமைப்பிலிருந்த இம்பீரியல் தியேட்டர் எழுபதுகளில்கூட இயங்கியது. ரிக்ஷா ஓட்டுநர்கள், சுமை தூக்குவோர், கை வண்டி ஓட்டுநர்கள் போன்ற அடித்தட்டு ஆண்கள் கூட்டம் திரையரங்கில் நிரம்பி வழியும். மாடிக்கு 0.70 காசு நுழைவுச் சீட்டுதான். நான் அந்தத் தியேட்டரின் விநோதத்தன்மையினால் ஈர்க்கப்பட்டு சில தடவை போயிருக்கிறேன். எங்கும் வெற்றிலைச்சாறு படிந்து அழுக்காக இருக்கும், கஞ்சாப் புகை நெடி நீக்கமற நிறைந்து, சற்று நேரத்தில் நமது தலையும் சுழலும். காலுக்கடியில் பெருச்சாளிகள் ஓடிக்கொண்டிருக்கும். யாராவது சீட்டுகளுக்கு இடையில் ஒன்றுக்கு இருந்து தரை ஈரமாக இருக்கும். இருக்கைகள் மூட்டைப்பூச்சிகளால் மொய்க்கப்பட்டிருக்கும். தியேட்டரை விட்டு வெளியேறும்போது ஆடைகளை உதறிவிட்டுத்தான் வெளியே வரவேண்டும். எழுபதுகளில் பல திரையரங்குகள் மூட்டைப்பூச்சிகளை உற்பத்தி செய்து பரப்பும் மையங்களாக விளங்கின.

விளக்குத் தூணின் இன்றைய தோற்றம்
விளக்குத் தூணின் இன்றைய தோற்றம்

`சிடி சினிமா' என்பது விளக்குத்தூணுக்கு அருகில் பெரிய வீடு போலிருக்கும். எப்பவும் பழைய படங்கள்தான் திரையிடப்பட்டன. அவற்றைக் காண நிரந்தர வாடிக்கையாளர் இருந்தனர். எந்தத் திரையரங்குகளிலும் சீட்டுக் கிடைக்காமல், எப்படியும் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறியுடன் கிளம்பியவர்களின் புகலிடமாக இம்பீரியல், சிடி சினிமா திரையரங்குகள் இருந்தன. எண்பதுகளில் இம்பீரியல் தியேட்டர் இடிக்கப்பட்டு, வணிகக் கட்டடம் கட்டப்பட்டுவிட்டது. சிடி சினிமா இன்று அதே கட்டடத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கிறது.

மதுரையில் விக்டோரியா எட்வர்டு ஹால் எனப்படும் அரங்கு, இரவில் ரீகல் தியேட்டராக உருமாறும். ரீகல் திரையரங்கிலும், பரமேஸ்வரியிலும் ஆங்கிலப் படங்கள் மட்டும்தான் திரையிடப்படும். ஆங்கில அறிவை விருத்தி செய்திட ரீகல் டாக்கிஸில் ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்திடுமாறு எங்கள் கல்லூரி ஆங்கிலப் பேராசியர்கள் வழிகாட்டினர்.

பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் 90 நிமிடங்கள்தான் திரையிடப்படும். எனவே திரைப்படம் காட்டப்படுவதற்கு முன்னர் லாரல் ஹார்டி, சார்லி சாப்ளின் போன்றோர் நடித்த நகைச்சுவைத் துண்டுப் படங்களும் டாம் அண்டு ஜெர்ரி கார்ட்டூன் படங்களும் காட்டப்பட்டன.
மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம்
மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம்
சினிமா என்றால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் திரையிடப்பட வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்பினர். திரைப்படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் காட்டப்படும்போது எத்தனை ரீல்கள் என்று ஆர்வத்துடன் பாரத்தனர். பார்வையாளர்கள் கொடுக்கிற காசுக்கு நிறைய நேரம் படம் பார்த்திட விரும்பினர்.

மதுரை மேலமாசி வீதியில் எண்பதுகளில்கூடச் செயல்பட்ட சாந்தி திரையரங்கின் பூர்வீகப் பெயர் 'சந்திரா டாக்கீஸ்', அது பல்வேறு நாடகக் கம்பெனிகள் மாதக்கணக்கில் நாடகம் போடும் இடமாக இருந்துள்ளது. நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ். சகோதரர்கள், கண்ணையா போன்ற நாடகக்குழுக்களின் நாடகங்களைக் கண்டுகளிக்குமிடமாக விளங்கிய பெரிய நாடகக் கொட்டகை எனப் பொதுமக்களால் அழைக்கப்பெற்ற சந்திரா டாக்கீஸ், இன்று பெரிய கார் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுவிட்டது. வெளியே நின்று அந்தக் கட்டடத்தைப் பார்க்கும்போது, ஏதோ நடந்து முடிந்ததன் சாட்சியாக விரைத்து நிற்கிறது.

தங்கம் தியேட்டர்
தங்கம் தியேட்டர்

மதுரை நகரின் அடையாளமாக விளங்கிய தங்கம் தியேட்டர் பற்றி மதுரைக்கார்களுக்குப் பெருமை. ஆசியாவிலேயே மிகப் பெரிய தியேட்டர் என்று பெயர் பெற்றிருந்த தங்கம் தியேட்டருக்குள் நுழைந்தால் கடல்போலத் தோன்றும். இம்புட்டுப் பெரிய தியேட்டரை வடிவமைத்துக் கட்டிய நிபுணர்கள் கெட்டிக்காரர்கள். தியேட்டரின் மாடிப்பகுதியே தனியான தியேட்டர் போலப் பரந்திருக்கும். எழுபதுகளின் இறுதியில் அடைமழைக் காலத்தில் நண்பருடன் இரண்டாவது ஆட்டத்திற்குத் தங்கம் தியேட்டருக்குப் போயிருந்தேன். தியேட்டரில் கூட்டம் இல்லை. மாடி டிக்கெட் 1.15 ரூபாய் கொடுத்து வாங்கி, மாடிக்குப் போனோம். வெறிச்சோடியிருந்த மாடியைப் பார்த்தவுடன் பயமாக இருந்தது. எதுவும் நடக்கலாம் என்ற எண்ணத்துடன் படம் பார்த்தோம். உயர்ந்து நின்ற தங்கம் திரையரங்கு இன்று வெறும் சொல்லாகிவிட்டது.

எழுபதுகளின் நடுவில் பிரமாண்டமான கட்டடத்தில் தொடங்கப்பட்ட மினிப்ரியா தியேட்டர்தான் மதுரையில் முதன்முதலாக குளிரூட்டப்பட்ட அரங்கு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அப்பால் அத்துவானக் காட்டில் இப்படியொரு தியேட்டரைக் கட்டியிருக்கிறார்களே என்று முதல் தடவை போனபோது தோன்றியது. முதன்முதலாகத் திரையிடப்பட்ட ’ஆ கலே லக் ஜா’ என்ற இந்தித் திரைப்படம் நூறு நாள்கள் ஓடியது. புதிய தியேட்டரின் குளிர்ச்சிக்காகவும் பாடல்களுக்காகவும் கல்லூரி மாணவர்கள் கூட்டமாகப் போய்ப் படத்தைப் பார்த்தனர். அந்தப் படத்தின் விளம்பரத்தில் ’அணைக்கவே அழைக்கிறேன்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

ஆ கலே லக் ஜா இந்திப் படம் | Aa Gale Lag Jaa
ஆ கலே லக் ஜா இந்திப் படம் | Aa Gale Lag Jaa

மதுரை நகரமெங்கும் தேவி டாக்கீஸ், நியூசினிமா, கல்பனா, அலங்கார், சிந்தாமணி, ஸ்ரீமீனாட்சி, சென்டிரல், தங்கம், பரமேஸ்வரி, ரீகல், வெள்ளைக்கண்ணு, மிட்லாண்ட், கணேஷ் போன்ற பழைய தியேட்டர்கள் வலைப்பின்னல்களாகப் பரவியிருந்தன. எழுபதுகளுக்குப் பின்னர் சக்தி, சிவம், தீபா, ரூபா, மினிப்ரியா, சினிப்ரியா, சுகப்பிரியா, அபிராமி, அம்பிகா, அம்பிகை, மதி, மது, அமிர்தம், குரு, மாப்பிள்ளை விநாயகர், தமிழ், ஜெயா, சோலைமலை போன்றவை நவீன மோஸ்தரில் கட்டப்பட்டன. திரையரங்குகள் வெறுமன கட்டடங்கள் மட்டுமல்ல. ஒளிக்கற்றை உருவாக்கும் மாயக்கணத்தில் செயலிழந்தது, விநோத உலகினுக்குள் பயணிக்கும் மக்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றின.

சிந்தாமணி, நியூசினிமா, தேவி, தங்கம் போன்ற திரையரங்குகள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று எழுபதுகளின் இறுதியில் யாராவது கூறியிருந்தால், அதைப் பைத்தியக்காரனின் உளறலாக எல்லோரும் கருதியிருப்பார்கள். ஆனால் என்ன ஒரு மாயப்புனைவு நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்தான் காணாமல் போய்க்கொண்டிருக்கிற திரையரங்குகள்.

இது ஏதோ மதுரை நகரத்துக் காட்சிமட்டுமல்ல, தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளின் நிலைமையும்கூடத்தான். திரைப்படம் நமக்குள் உருவாக்கிய புனைவுகளின் அடித்தளமான திரையரங்குகள் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ”பழையன கழிதலும் புதியன புகுதலும் தவறு இல்லை; காலத்தில் அதுதான் நிகழும்” என்ற பழந்தமிழ் இலக்கண நூலான நன்னூல் குறிப்பிடுவது திரையரங்கிற்கும் பொருந்துகிறது. சரி, போகட்டும். இன்றைய மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அவற்றுக்கு மாற்றாகுமா என்பதைக் காலம்தான் பதிலாகச் சொல்லும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism