Published:Updated:

காமராஜர் தொடங்கி `முதல் ஜேம்ஸ்பாண்டு' சீன் கானரி வரை!-150 'போ(ஆ)ட்டோகிராப்' வாங்கிய அபூர்வ சிகாமணி

சிகாமணி சேகரித்த புகைப்படங்கள் ( நா.ராஜமுருகன் )

நாட்டில் அரசியல் நிலவரம் சரியில்லாத சமயத்திலெல்லாம் அவரது போட்டோவை எடுத்து வைத்துக்கொண்டு, 'உன்னைப்போல் ஒரு தலைவர் எங்களுக்காக இன்னும் பிறக்கலையே ஐயா'ன்னு அங்கலாய்ப்பேன்.

காமராஜர் தொடங்கி `முதல் ஜேம்ஸ்பாண்டு' சீன் கானரி வரை!-150 'போ(ஆ)ட்டோகிராப்' வாங்கிய அபூர்வ சிகாமணி

நாட்டில் அரசியல் நிலவரம் சரியில்லாத சமயத்திலெல்லாம் அவரது போட்டோவை எடுத்து வைத்துக்கொண்டு, 'உன்னைப்போல் ஒரு தலைவர் எங்களுக்காக இன்னும் பிறக்கலையே ஐயா'ன்னு அங்கலாய்ப்பேன்.

Published:Updated:
சிகாமணி சேகரித்த புகைப்படங்கள் ( நா.ராஜமுருகன் )

சமூகவலைதலங்கள் 'ட்ரெண்டிங்'காக இருக்கும் இந்த நூற்றாண்டில், உலகத் தலைவர்கள் போடும் ட்வீட்டுக்கோ, ஹாலிவுட் நடிகர் / நடிகைகள் ஷேர் செய்யும் ஒரு புகைப்படத்துக்கோ, உடனே கமெண்ட் போட்டோ, டேக் செய்தோ, அவர்களோடு 'இன்ட்ராக்ட்' செய்ய முடியும். ஆனால், 70, 80, 90 கிட்ஸுகளுக்கு, 20 வருடங்களுக்கு முன்புவரை, பிரபலங்களைச் சந்தித்து ஆட்டோகிராப் வாங்குவது மட்டுமே ஆகப்பெரும் பொழுதுபோக்கு, பொக்கிஷம்.

சிகாமணி சேகரித்த காமராஜர் புகைப்படம்
சிகாமணி சேகரித்த காமராஜர் புகைப்படம்
நா.ராஜமுருகன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை ஒரு 'ஹாபி'யாகவே செய்துவரும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள அத்தனூரைச் சேர்ந்த சிகாமணியைச் சந்தித்தோம். நல்லதொரு காபி சகிதம் நம்மை வரவேற்றதோடு, நம்மை நாஸ்டாலஜியாவில் மூழ்கடித்தார்.

"நான் ஆறாவது வரைதான் படிச்சேன். அதன்பிறகு, குடும்பத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலில் இறங்கினேன். பொழுதுபோக்கா பல பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பிச்சேன். இந்தியா மட்டுமன்றி, உலகளாவிய அரசியல், சினிமாப் பிரபலங்களைப் பற்றிய விசயங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்குவேன். அப்படிதான், கடந்த 1968 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்ல போட்டியிட்ட ராபர்ட் எஃப். கென்னடி சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட செய்தியை பத்திரிகைகள் மூலம் தெரிஞ்சுகிட்டேன். 'கென்னடி குடும்பத்துக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது?'ன்னு பரிதாபம் வந்துச்சு. உடனே, ராபர்ட் எஃப். கென்னடியோட தம்பி எட்வர்ட் கென்னடிக்கு, எனக்குத் தெரிஞ்ச ஆங்கிலத்தில் கடிதம் எழுதினேன்.

சிகாமணி சேகரித்த புகைப்படங்கள்
சிகாமணி சேகரித்த புகைப்படங்கள்
நா.ராஜமுருகன்

முறையான முகவரி தெரியலன்னாலும் பிரபலமாக இருந்தவர் என்பதால், பெயர், அவரோட பதவியைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுதினேன். ஆனா, எட்வர்ட் கென்னடி, 'என் சகோதரர் கொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டு அனுதாபக் கடிதம் அனுப்பியதற்கு நன்றி'ன்னு பதில் கடிதமும், தன் அண்ணன் மற்றும் தனது புகைப்படங்களில் தனது ஆட்டோகிராபையும் போட்டு, பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைப் பார்த்ததும் எனக்கு, உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய சினிமாப் பிரபலங்களின் போட்டோகிராப் மற்றும் ஆட்டோகிராப்களைச் சேகரிக்கும் ஆர்வம் வந்துச்சு. அடுத்து, இந்திய முன்னாள் பிரதமர் நேருவின் நண்பரும் யூகோஸ்லாவியின் ஜனாபதியாக இருந்தவருமான மார்ஷல் டிட்டோவுடைய புகைப்படம், ஆட்டோகிராப் கேட்டுக் கடிதம் எழுதினேன். பதில் வரவில்லை. பொதுவாக, கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதுமாதிரி விசயத்துக்கு முக்கியத்துவம் தரமாட்டாங்கன்னு சொன்னாங்க. ஆனால், தொடர்ந்து நான்குமுறை கடிதம் எழுதினேன். அதன்பிறகு, தன்னோட ஆட்டோகிராப் போட்ட புகைப்படத்தை அனுப்பினார். அதனால், இன்னும் முழுமூச்சா பல உலகத் தலைவர்கள், ஹாலிவுட் நடிகர், நடிகர்களுக்கு போட்டோ கேட்டுக் கடிதம் எழுத ஆரம்பிச்சேன். எலிசபெத் டெய்லரின் போட்டோவைக் கேட்டுக் கடிதம் எழுதினேன். முதல் முயற்சியிலேயே, என்னோட ஆர்வத்தைப் பாராட்டியதோடு, தனது கையெழுத்திட்ட அழகான புகைப்படத்தை அனுப்பினார்.

சிகாமணி சேகரித்த பிடல் காஸ்ட்ரோ புகைப்படம்
சிகாமணி சேகரித்த பிடல் காஸ்ட்ரோ புகைப்படம்
நா.ராஜமுருகன்

இதெல்லாத்தைம்விட, நான் இப்போதும் மிகவும் மதிக்குற உலகத் தலைவர் மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ. அவரோட ஆட்டோகிராப் கூடிய புகைப்படத்தை, ஒரே கடிதம் மூலம் பெற்றேன். அதைப் பொக்கிஷம் போல பாதுகாக்கிறேன். அதேபோல், இன்றும் நாம் பெருந்தலைவராகக் கொண்டாடுகிற காமராஜர் ஐயாவோட புகைப்படத்தைக் கேட்டு, கடிதம் எழுதினேன். அவரும் தனது கையெழுத்திட்ட புகைப்படத்தை அனுப்பினார். நாட்டில் அரசியல் நிலவரம் சரியில்லாத சமயத்திலெல்லாம் அவரது போட்டோவை எடுத்து வைத்துக்கொண்டு, 'உன்னைப்போல் ஒரு தலைவர் எங்களுக்காக இன்னும் பிறக்கலையே ஐயா'ன்னு அங்கலாய்ப்பேன்.

அதேபோல், 1971-ல் தனிமெஜாரிட்டியோட ஆட்சியைப் பிடித்த அப்போதைய பிரதமர் இந்திராகாந்திக்கு, பாராட்டிக் கடிதம் எழுதினேன். உடனே பத்து வரியில் எனக்கு நன்றி தெரிவித்து, அவர் பதில் கடிதம் அனுப்பினார். அதே வருடம் எனக்குத் திருமணம் நடந்துச்சு. எனது திருமணப் பத்திரிகையை எட்வர்ட் கென்னடிக்கும், அப்போதைய தமிழக முதல்வர் கலைஞருக்கும் அனுப்பினேன். எட்வர்ட் கென்னடி வாழ்த்து தெரிவித்து பதில் கடிதம் அனுப்பினார். கலைஞரும், 'மணமக்கள் நீவிர் நலம் சூழ, வளம் பெருக வாழ்ந்திட விழைகிறேன்'னு கைப்பட வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதோடு, ஹாலிவுட் படங்களில் கௌபாய் வேடங்களில் பின்னியெடுத்த கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கும், கோலிவுட் நடிகர் ஜெய்சங்கருக்கும் நான் பரம ரசிகன். அவர்களும் எனது கடிதத்தை மதிச்சு, தங்களோட புகைப்படங்களை, தத்தமது கையெழுத்துகளோடு அனுப்பி வச்சாங்க.

சிகாமணி சேகரித்த எலிசபெத் டெய்லர் புகைப்படம்
சிகாமணி சேகரித்த எலிசபெத் டெய்லர் புகைப்படம்
நா.ராஜமுருகன்

அதேபோல், ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸுக்குக் கடிதம் எழுதி, அவரோட போட்டோவை வாங்கினேன். இப்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் ரொனால்டு வில்சன் ரீகன் / ஜிம்மி கார்ட்டர் (கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தில் ரெஃபெரென்ஸாகப் பயன்படுத்தபடும் பெயர்) / பில் கிளிண்டன் / ஜெரால்டு போர்டு / ஜார்ஜ் புஷ், இங்கிலாந்துப் பிரதமர்களாக இருந்த லார்ட் வில்சன், எட்வேர்டு ஹீத், முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன்னு 120 க்கு மேற்பட்ட உலகத் தலைவர்கள், உயர்பதவிகளில் இருந்த அரசியல் பிரபலங்களின் புகைப்படங்களை அவங்கங்க கையெழுத்தோட, கடிதம் எழுதி, சேகரிச்சேன்.

அதேபோல், ஹாலிவுட்டில் முதன் முதலில் ஜேம்ஸ்பாண்டு கேரக்டரில் கலக்கி எடுத்த, சர் தாமஸ் சீன் கானரி புகைப்படத்தையும் வாங்கி, பத்திரமாக வச்சிருக்கேன். இப்படி, 30-க்கும் மேற்பட்ட உலக / இந்திய அளவிலான சினிமாப் பிரபலங்களின் புகைப்படங்களைச் சேகரிச்சேன். பலர் ஒரே கடித்தத்திற்கு, மதிச்சு உடனே போட்டோ அனுப்புவார்கள். ஆனால், சிலர் பலதடவை முயற்சிசெய்த பிறகே போட்டோவை அனுப்பி வைப்பாங்க. ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் கணவர் ரிச்சர்ட் பர்ட்டனோட போட்டோவை 7 முறை கடிதம் எழுதியபிறகே வாங்க முடிஞ்சது. அதேபோல், அப்போது பிரபல ஹாலிவுட் நடிகையா இருந்த சோபியா லாரனுக்கு 5 முறை கடிதம் எழுதியபிறகே புகைப்படம் அனுப்பினார். ஆனால், அப்போது அவருக்குப் போட்டியா இருந்த ஜினா லோலா பிரிகிடா, நான் எழுதிய ஒரே கடிதத்துக்கே ரிப்ளை பண்ணினார். நான் பெரிதும் மதிக்கிற நெல்சன் மண்டேலா, மாபெரும் போராளி சேகுவேரா, பிரபல பாடகராக இருந்த மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை வாங்க முடியவில்லை என்ற ஏக்கம் இப்போதும் இருக்கு.

சிகாமணி சேகரித்த பில் கிளிண்டன் புகைப்படம்
சிகாமணி சேகரித்த பில் கிளிண்டன் புகைப்படம்
நா.ராஜமுருகன்

இதுபோல், இந்தப் புகைப்படம் சேகரிக்கும் முயற்சியில் பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்திருக்கு. அப்போது பிரபல குத்துச்சண்டை வீரராக இருந்த முகமது அலிக்குப் புகைப்படம் கேட்டுக் கடிதம் அனுப்பினேன். ஆனா, அப்போது பிரபல ஹாலிவுட் நடிகரா இருந்த சிட்னி பாய்ட்டர்கிட்ட இருந்து கடிதமும், அதில் அவரது புகைப்படமும் வந்தது. 'முகமது அலிக்கு நீங்கள் அனுப்பிய கடிதம் தவறுதலாக எனக்கு வந்துவிட்டது. இருவரும் கலிபோர்னியா என்பதால், மாறி வந்திருக்கலாம்'னு பெருந்தன்மையா அனுப்பியிருந்தார். மறுபடியும், முகமது அலிக்குக் கடிதம் எழுதி, அவரது புகைப்படத்தை வாங்கினேன். இப்படி, வேறு யாரும் சேகரிச்சாங்களான்னு தெரியலை.

ஆனால், உறவுக்காரங்க எல்லாம், 'இது தேவையில்லாத வேலை. இந்தக் குப்பைகளை வச்சு என்ன சாதிக்கப் போற?'ன்னு கேட்பாங்க. அப்போ, மனசுக்கு கஷ்டமா இருக்கும். ஆனா, எங்க ஊரு போஸ்ட் மாஸ்டர், 'நம்ம குக்கிராமத்துக்கு உங்க புண்ணியத்துல உலக அளவிலான பிரபலங்களின் கடிதம் வருது. பெருமையா இருக்கு'ன்னு பாராட்டுவார். ஒவ்வொரு முறை பதில் கடிதங்களை போஸ்ட்மேன் வீட்டுக் கதவைத் தட்டிக் கொடுக்கிறப்பவெல்லாம் என் மனைவி அமுதாதான் போய் வாங்குவாங்க. 'இந்தாங்க உங்களுக்கு உலகத் தலைவர் கடுதாசி போட்டுருக்காரு'ன்னு ஜாலியா கிண்டலோட சொல்வாங்க. ஆனால், இந்த விசயத்தில் அவங்களுக்கு அவ்வளவு பெருமை. இதை, கின்னஸ் ரெக்கார்டுக்கு அனுப்பலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனால், 7 வருஷத்துக்கு முன்னாடி என் மனைவி இறந்துபோயிட்டாங்க.

சிகாமணி சேகரித்த புகைப்படங்கள்
சிகாமணி சேகரித்த புகைப்படங்கள்
நா.ராஜமுருகன்

அந்த வேதனையிலிருந்து மீளமுடியாத நான், அதன்பிறகு கடிதம் எழுதி பிரபலங்களின் புகைப்படங்களை வாங்கும் முயற்சியை நிறுத்திட்டேன். கின்னஸுக்கும் அனுப்பலை. பழைய பால்யகால மலரும் நினைவுகளை அணையாமல் மனதில் அவ்வப்போது கிளறிவிடும் இந்தப் புகைப்படங்களும் ஆட்டோகிராப்களும்தான் என்னை மனதளவில் இளமையாக வச்சிருக்கும் கிரியா ஊக்கி" என்றார் நெக்குருகிப்போய்!

மலரும் நினைவுகள் இந்தப் புகைப்படங்கள் வாயிலாக இன்னும் உங்கள் மனதை மலர்ச்சிப்படுத்தட்டும். வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism