Published:Updated:

ஒரு பட்டாம்பூச்சி மைக்கேல் ஜாக்சனிடம் அழைத்துச்சென்றது!

“வீட்டுக்கு ஒரு போன் வந்துச்சு. ‘ஜான், நான் மைக்கேல் ஜாக்சன் பேசுறேன்’னு சொன்ன வுடனே எனக்குள்ளே பயங்கர ஆர்ப்பரிப்பு. `உங்ககூட சேர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியில் வேலை செய்யணும்’னு சொன்னார்.

பிரீமியம் ஸ்டோரி
“கேமராவுக்குக் காலத்தின் இயக்கத்தை நிறுத்தி அதை நினைவு களாகவும் சாட்சியங்களாகவும் மாத்துகிற சக்தி இருக்கு.

கேமராவால்தான் விளிம்பு நிலை மனுஷங்களுக்கும், உலகமே கொண் டாடக்கூடிய பிரபலங்களுக்கும் பாகுபாடு அற்ற உயிரோட்டத்தைக் கொடுக்க முடியும்” - கேமராமீதான காதலை வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறார் ஜான் ஐசக். உலகறிந்த புகைப்படக் கலைஞர். ஐக்கிய நாடுகள் சபையில் புகைப்படக்காரராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தமிழர்.

ஒரு பட்டாம்பூச்சி மைக்கேல் ஜாக்சனிடம் அழைத்துச்சென்றது!

ருவாண்டாவும் போஸ்னியாவும் இனப்படுகொலையால் ரத்தத்தில் நனைந்தபோது முக்கிய நிகழ்வுகளைப் புகைப்படங்கள் வழியே ஆதாரமாக்கியவர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் வாழ்க்கை முறையை கேமரா வழியே ஒளிச்சட்டகத்துக்குள் அடக்கியவர். மைக்கேல் ஜாக்சனுக்கு பிரத்யேகப் புகைப்படக்காரர். அன்னை தெரசா, ஹாலிவுட் நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் போன்றவர்களின் இறுதிநாள் வரை அவர்களுடன் பயணம் செய்தவர். எல்லாவற்றையும்விட முக்கியம், இவர் தமிழர், திருச்சிக்காரர்.

ஒரு பட்டாம்பூச்சி மைக்கேல் ஜாக்சனிடம் அழைத்துச்சென்றது!

“சொந்த ஊரு திருச்சி பக்கம் இருங்களூர் கிராமம். என் சின்ன வயசுல எங்க ஊருல கரென்ட் கிடையாது. தண்ணி வசதி இருக்காது. தமிழ் மீடியத்துல படிச்ச பையன். நடுத்தரக் குடும்பம். எனக்குக் கால்நடை மருத்துவம் படிக்கணும்னு ஆசை. வீட்லேயும் சேர்த்து விட்டாங்க. ரெண்டு வருஷத்துல எனக்கு செட் ஆகாதுன்னு தோணுச்சு. சின்ன தயக்கத்தோட, அம்மாகிட்ட சொன்னேன். நான் தயங்குன அளவுகூட என் அம்மா யோசிக்கல. ‘உன் இஷ்டம். உன் எதிர்காலத்தை நீதான் உருவாக்கணும்’னு சொன்னாங்க. அந்த நம்பிக்கைதான் என்னோட இவ்வளவு வளர்ச்சிக்கும் காரணம். இப்ப அம்மா என்கூட இல்ல. ஆனா அவங்க கொடுத்த தன்னம்பிக்கை இருக்கு” - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் ஐசக். கால்நடை மருத்துவக்கல்லூரியிலிருந்து விலகி சென்னை நியூ காலேஜில் விலங்கியல் பிரிவில் சேர்ந்தார் ஐசக்.

ஒரு பட்டாம்பூச்சி மைக்கேல் ஜாக்சனிடம் அழைத்துச்சென்றது!

‘`படிக்கும்போது இசை மேல பயங்கர ஆர்வம். எப்போதும் கிட்டாரும் கையுமாதான் இருப்பேன். எனக்கு அமெரிக்க நாட்டுப்புற இசை தெரியும். அது போதும்னு நம்பி அமெரிக்கா கிளம்பி வந்துட்டேன். அமெரிக்கா வந்தப்போ கையில் ஒரு டாலர்கூட கிடையாது. நண்பர் வீட்டுலதான் தங்கியிருந்தேன். நிறைய கஷ்டங்கள். ஆனா அமெரிக்கா வந்தது தப்போன்னு ஒரு நாள்கூட யோசிச்சது இல்ல. எனக்கான அடையாளத்தை உருவாக்காம இந்தியா திரும்பக்கூடாதுன்னு உறுதியா இருந்தேன்.

ஜான் ஐசக்
ஜான் ஐசக்

தெரு ஓரங்களில் நின்னு பாட்டுப்பாடுவேன். என் பாட்டைக் கேட்டுட்டு ஒரு பெண், ‘ஐ.நா சபையில் இசைக்குழுவுக்கான ஆடிஷன் நடக்குது. போய்ப் பாருங்க’ன்னு சொன்னாங்க. அவங்க மூலமாதான் ஐ.நா சபையில் சின்ன வேலை கிடைச்சுது. அதன்பிறகு கொஞ்ச நாளிலியே டார்க் ரூம் டெக்னீஷியனா என்னை வளர்த்துக்கிட்டேன். சின்ன வயசுல இருந்தே கேமரா மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்துச்சு. சிங்கப்பூரில் இருக்கும் என் அண்ணன் அவர் பயன்படுத்துன `அசாகி பென்டெக்ஸ்’ (Asahi Pentax) கேமராவைக் கொடுத்தார். அதுலதான் போட்டோ கிராபி கத்துக்கிட்டேன். என்னோட கேமராவில் நான் என் கேர்ள் ஃபிரெண்ட்டை எடுத்த படங்கள் என் வாழ்க்கையோட பொக்கிஷங்கள். என் மனைவி ஜெனிட்டிதான் அப்போ என் கேர்ள் ஃபிரெண்ட். அவங்களை என்னோட இன்னொரு அம்மான்னு சொல்லுவேன்” - சிரித்துக்கொண்டே மனைவியை அறிமுகம் செய்து வைக்கிறார் ஐசக்.

ஒரு பட்டாம்பூச்சி மைக்கேல் ஜாக்சனிடம் அழைத்துச்சென்றது!

ஐசக், டார்க் ரூம் டெக்னீஷியனாக வேலை செய்துகொண்டிருந்த நேரம், ஒரு பிரபல நிறுவனம் புகைப்படப் போட்டி அறிவித்தது. அசாமில் வசித்த ஒரு குடும்பத்தைப் புகைப் படம் எடுத்திருந்த ஐசக், அதைப் புகைப்படப் போட்டிக்கு அனுப்பியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு பட்டாம்பூச்சி மைக்கேல் ஜாக்சனிடம் அழைத்துச்சென்றது!

‘`எனக்கு முதல் பரிசு அறிவிச்சாங்க. என் பெயர் அச்சிட்டு ‘லைகா எம்5’ (Leica M5) கேமராவைப் பரிசா கொடுத்தாங்க. ஆனா, லென்ஸ் வாங்கக்கூட காசு இல்லாம அந்தக் கேமராவை வித்துட்டேன். அந்தக் காசை வெச்சு ‘மினல்டா எஸ்.ஆர்.டி 101 (Minolta SRT 101) கேமராவும் சில லென்ஸும் வாங்கினேன். ருவாண்டாவிலும் போஸ்னியாவிலும் நடந்த இனப்படுகொலைகளை நேரில் பார்த்த என்னால் இப்போகூட அதிலிருந்து மனசளவில் மீளமுடியல. ரெண்டு முறை தற்கொலை எண்ணமும் வந்துச்சு. இனிமே இந்தத் துறையே வேணாம்னு முடிவு பண்ணி என்னோட எல்லா கேமராவையும் பேக் பண்ணிட்டேன். ஆனா ஒரு பட்டாம்பூச்சி என் வாழ்க்கையை மாத்துச்சு. ரொம்ப சோர்வா உட்கார்ந்திருந்த நிமிஷம், ஜன்னல் ஓரம் இருந்த ஒரு பட்டாம்பூச்சி என்னைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி இருந்துச்சு. அந்த நிமிஷத்தை உலகத்துக்குக் காட்ட திரும்ப கேமராவை எடுத்தேன். இதோ இப்போகூட கேமரா என் கையில்தான் இருக்கு. கடந்த 20 வருசமா இந்த ஒலிம்பஸ் கேமராவைத்தான் வெச்சிருக்கேன்” என்ற ஐசக் சில நிமிட அமைதிக்குப் பின் கண்கள் மிளிர மைக்கேல் ஜாக்சன் உட்பட பிரபலங்களுடன் பணியாற்றியது பற்றிப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

ஒரு பட்டாம்பூச்சி மைக்கேல் ஜாக்சனிடம் அழைத்துச்சென்றது!

“வீட்டுக்கு ஒரு போன் வந்துச்சு. ‘ஜான், நான் மைக்கேல் ஜாக்சன் பேசுறேன்’னு சொன்ன வுடனே எனக்குள்ளே பயங்கர ஆர்ப்பரிப்பு. `உங்ககூட சேர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியில் வேலை செய்யணும்’னு சொன்னார். நான் திரும்பவும், `யார் பேசுறீங்க’ன்னு கேட்க, `மைக்கேல் ஜாக்சன்’னு அந்தக் குரல் சொல்லுச்சு. ஃபிரெண்ட்ஸ் யாரோ கலாய்க்கிறாங்கன்னு போனை வெச்சுட்டேன். திரும்ப பத்து நிமிஷத்துல மைக்கேல் ஜாக்சனின் மேனேஜர் போன் பண்ணி `ஹிஸ்டரிங்கிற இசை நிகழ்ச்சிக்காக மைக்கேல் ஜாக்சனுடன் 35 நாடுகளுக்குப் பயணம் செய்யணும்’னு சொன்னார். அப்படியே என்னை மறந்து உட்கார்ந்துட்டேன். 83 நிகழ்ச்சிகளில் மைக்கேல் ஜாக்சனுடன் புகைப்படக்காரராக வேலை செஞ்சேன். மேடைக்குப் பக்கத்துல இருந்து இருந்து என்னோட ஒரு காது, கேட்குற திறனையே இழந்துருச்சு. மைக்கேலைத் தொடர்ந்து அன்னை தெரசாகூடவும் என் பயணம் தொடங்குச்சு. அவங்ககூட இருக்கும்போது, உலகத்துக்கு ஏதாவது செய்யணுங்கிற பாசிட்டிவ் எண்ணம் மனசுக்குள்ள பரவும். ஆட்ரே ஹெப்பர்ன் நடிச்ச நிறைய படங்களை சின்ன வயசுல பார்த்து வியந்திருக்கேன். அவங்ககூட பயணம் செஞ்சதெல்லாம் இப்பகூட கனவு மாதிரிதான் இருக்கு. நான் எடுத்த புகைப்படம்தான் அவங்க வாழ்வில் ரொம்ப அழகான புகைப்படம்னு பல இடத்துல சொல்லியிருக்காங்க.

ஒரு பட்டாம்பூச்சி மைக்கேல் ஜாக்சனிடம் அழைத்துச்சென்றது!

ஒரு புகைப்படக்காரருக்கு கேமரா எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனிதநேயமும் இருக்கணுங்கிறது என்னோட கருத்து. என் கேமராவில் அடக்கத் தவறிய சில நிமிடங்களை நினைச்சுப் பெருமைப்படுறேன். வியட்நாமில் இனவேறுபாடு காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற ஆரம்பிச்ச நேரம். ஒரு சின்னப்பொண்ணு அம்மா, அப்பாவைப் பறிகொடுத்து, கொள்ளையர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு, எழுந்துகூட உட்காரமுடியாத நிலையில் இருந்தா. அந்தப்பொண்ணை அந்த நிமிஷம் போட்டோ எடுக்கணும்னு தோணல. காப்பகங்களில் பேசிப் பாதுகாப்பான இடத்தை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன். இதை என்துறை சார்ந்த ஃபிரெண்ட்ஸ்கிட்ட சொன்னப்போ, ‘அந்தப் பொண்ணை போட்டோ எடுத்திருந்தா நிறைய இடத்துல பாராட்டு கிடைச்சிருக்கும்’னு சொன்னாங்க. `அப்படியான பாராட்டும், அடையாளமும் எனக்கு எப்போதும் வேண்டாம். என் திறமையை வெளிப்படுத்த இன்னும் ஆயிரம் வாய்ப்புகள் வரும்’னு நான் கடந்து போயிருக்கேன்.

இப்போ விலங்குகளைப் புகைப்படம் எடுக்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு. புதுசு புதுசா நிறைய கத்துக்குறேன். ஐ.நா சபை தொலைக்காட்சியில் இந்தியப் புலிகளைக் காப்பது பற்றிய என் டாக்குமென்ட்ரியை வெளியிட்டாங்க. அமெரிக்கா வந்து அம்பது வருஷத்துக்குமேல ஆச்சு. ஆனா. இப்போகூட தமிழ்நாட்டுமேல இருக்கும் ஈர்ப்பு குறையல. மனசு கொஞ்சம் சோர்வாச்சுனாகூட சின்ன வயசு நினைவுகள் நிழலாட ஆரம்பிச்சுரும். அடிக்கடி இந்தியா வந்து ஃபிரெண்ட்ஸ்கூட தங்குவேன். கூடிய சீக்கிரம் நீண்ட நாள் பயணமா இந்தியா வரணும். என் மண்ணோட வாசனையை சுவாசிக்கணும். பெண் குழந்தைகள் பற்றி டாக்குமென்ட்ரி எடுக்குற திட்டம் இருக்கு. வரதட்சிணை, பெண் சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரா அந்தப் படம் பேசும். நிச்சயம் அந்தப் படம் மூலம், பெண் குழந்தைகள் தேவதைகள்னு ஒரு தமிழனாக இந்த உலகத்துக்குச் சொல்லுவேன். தமிழன் என்பதே என் அடையாளம்’’ என்று புன்னகைததும்பச் சொல்லி விடை கொடுக்கிறார் ஐசக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு