Published:Updated:

“புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு!” - பிரபு காளிதாஸ்

புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு
பிரீமியம் ஸ்டோரி
புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு

புகைப்படம்

“புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு!” - பிரபு காளிதாஸ்

புகைப்படம்

Published:Updated:
புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு
பிரீமியம் ஸ்டோரி
புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு

“ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு பிரத்யேகமான குணம் உண்டு. அதை அள்ளி எடுத்துப் பதிவுசெய்பவனே சிறந்த புகைப்படக்காரன். ஒரே ஃபிரேமில் வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவுசெய்யும் ஒரு புகைப்படம், சிறந்த இலக்கியப் படைப்புக்கு இணையானது. தேடலும் வேட்கையும் இல்லையென்றால் இங்கே யாராலும் உயிர் வாழ முடியாது. பூட்டாத பூட்டுக்குச் சாவி தேடி அலைகிறவன்தான் கலைஞன். கனவில் சாவியைத் தொலைச்சுட்டு, யதார்த்தத்தில் பூட்டை உடைக்க முடியாமல் அலையுறவங்கதான் அநேகம் பேர். ஒரு புகைப்படக்காரனாக உயிரையும் ஆன்மாவையும் புகைப்படங்களின் வழியாகவே பேச முயல்கிறேன்” சித்திரம் சித்திரமாகப் பேசுகிறார் பிரபல புகைப்படக்காரர் பிரபு காளிதாஸ். தமிழின் தவிர்க்க முடியாத ‘ஐகான்' புகைப்படக்காரர்களில் ஒருவர்.

பிரபு காளிதாஸ்
பிரபு காளிதாஸ்

“படித்த காலத்தில் ஓவியம்தான் முதல் விருப்பமாக இருந்தது. BSNL-ல் வேலை பார்த்த அப்பாவுக்கு இது நல்ல முடிவாகப்படவில்லை. மகன் படிச்சு முடிச்சதும் சட்டுனு, நிலையான அரசாங்க வேலையைப் பார்க்கணும்னு அவருக்கு ஆசை. அதில் தவறேதும் இல்லை. அப்பா எனக்கு ஒரு தங்கச் சங்கிலி போட்டிருந்தார். அதை அவர் அனுமதியோடு விற்று ஒரு கேமராவை வாங்கிட்டேன். ஃபிலிம் ரோல் செலவுக்கெல்லாம் சின்ன நிகழ்வு, காதுகுத்து, கல்யாணம்னு போய் சம்பாதிச்சேன். என்னை அறியாமலேயே புகைப்படம் எடுக்க வந்தவன் நான். என் படங்கள் உசத்தியானவைனு சொல்லிக்கிட்டது கிடையாது. பதிலாக என் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கேன்னு சொல்லலாம்.

ஒரு புகைப்படம் ஒவ்வொரு தடவை பார்க்கிறபோதும் ஏராளமான அனுபவங்களைத் தரணும். நிறைய புரிபடணும். சமயங்களில் நாம் எதிர்பார்க்காத ஏதோ ஓர் இடத்துக்கு நம்மைத் தூக்கிட்டுப் போகும் ஞாபகங்களைக் கிளறி விடணும். ஒரு நல்ல போட்டோவை எடுத்து முடித்த பிறகு அது பலருக்குப் பிடிக்கலாம்; சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், அதை எடுத்தவன் என்கிற முறையில் எனக்கு அது பிடிக்கணும். மிகச் சிறந்த புகைப்படங்கள் பேச வந்த விஷயங்களை மறக்கடித்து, மறந்த விஷயங்களைப் பேசவைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு!” - பிரபு காளிதாஸ்

ஆரம்பத்திலும்... ஏன் இப்பொழுதும்கூட, திருமண போட்டோகிராபியை குடும்பத்தின் தேவைக்காக கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்புறம் புகைப்படம் எடுக்கும் வகையில் ஏதாவது ஓர் இடம், தீம் சார்ந்து இயங்கினால் அதில் பலன் சார்ந்தும், பொருள் நிறைந்தும் இருக்கும் என நண்பர்கள் சொன்னார்கள். நான் முகங்களை எடுக்கத் தீர்மானித்து அத்தனை உண்மையோடும், ஒப்பனை இன்றியும் சாதாரண மனிதர்களை எடுத்தேன். அவர்களை அவர்களாகவே இருக்கவைத்தேன். நிறைய பேச வேண்டியிருந்தது. அவர்கள் மொழியில் அதைச் சொல்லியாக வேண்டும். வெட்கப்படுவார்கள்; சந்தேகப்படுவார்கள்; கோபப்படுவார்கள்; உள்நோக்கம் என எதுவும் இருக்குமோ என எண்ணுவார்கள். அனைத்தையும் கடந்து சம்மதத்துடன் எடுத்த படங்களே இவை.

“புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு!” - பிரபு காளிதாஸ்
“புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு!” - பிரபு காளிதாஸ்

மறதியிடமிருந்து நினைவைக் காப்பாற்றுவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது - அதுதான் புகைப்படம். ஒரு நினைவு புகைப்படமாகிவிட்டால், அதன் பிறகு அதற்கு மறதியே கிடையாது. ஆயிரம் பக்கம் எழுதுவதைவிட நூறு புகைப்படங்களில் நம் சந்ததிக்கு நம் வாழ்க்கையைப் புரியவைத்துவிடலாம். தனிமனிதனுக்கு நினைவு இருப்பதுபோல இந்தச் சமூகத்துக்கும் ஊருக்கும் நினைவு இருக்கிறது. ஆக, ஒரு செயலைச் செய்யும்போது, நினைவில் மீட்டுருவாக்கம் செய்யும்போது, மொழி இல்லாமலேயே செய்யக்கூடிய தருணம் இருக்கு. மொழியே பயன்படுத்தப்படாமல் என் இருப்பை, நான் வந்து அங்கு உணர்த்த முடியும்.

முகங்களை எடுக்க நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது. முக்கியமான திருவிழாக்கள், ஊர்கூடிப் பெருகும் இடங்களுக்குப் போயிருக்கேன். உத்தரப்பிரதேசம், பீகார்னு உள்ளே கிராமங்களுக்கெல்லாம் போயிருக்கேன். பார்க்கிற எல்லா முகமும் வசீகரம்னு சொல்லிட முடியாது. நான் இங்கே வசீகரம்னு சொல்றது அழகு இல்லை. அப்படியே மக்கள் தன்னியல்பில் இருக்கிற இடம். நாம் வந்துவிட்டோம்னு எதையும் மாத்திக்காமல் அப்படியே இருக்கிறது. வார்த்தெடுத்த மாதிரி உடம்பு இருக்கணும்னு அவசியம் கிடையாது. அழகெல்லாம் உடல் அசைவின் போக்குலேயே வரும். நாம் கைவிட்ட உரையாடல்கள் அவர்கள் வழியே வரும்.

“புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு!” - பிரபு காளிதாஸ்
“புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு!” - பிரபு காளிதாஸ்

கூத்து நடக்கும் இடங்கள், குலசேகரப்பட்டினத்தில் நடக்கிற தசரா விழாவுக்கு போயிருக்கேன். நாட்கணக்கில் தங்கி, படங்கள் எடுத்திருக்கேன். எனக்குக் கூத்துக் கலைஞர்கள் எல்லோரையும் காட்சிப்படுத்திவிட வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய மறந்துவிட்டோம். நான் இந்தப் படம் எடுக்கும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் சந்தோஷம் நிறைவானது. ஒரு முகம் முக்கியமானது எனத் தெரிந்துகொள்வதற்கான தேர்வு முக்கியமானது. அவர்கள் இயல்பிலிருந்து கொஞ்சம் விலகிட்டாலும் புகைப்படம் அதன் கலைத்தன்மையை இழந்துவிடும். நீங்கள் அந்தக் கணத்தில் தவறவிடக்கூடிய மனித உணர்ச்சி என்பது திரும்பக் கிடைக்கவே கிடைக்காது. ஒவ்வொரு புகைப்படத்திலும் வாழ்க்கை இருக்கு. தீராத நினைவுகள் உண்டு. நினைவுகளைக் காப்பாற்றவும், அழிந்து போகாமல் காப்பாற்றவும் புகைப்படங்களால் மட்டுமே முடியும்.

அலைபேசிகள், முகநூலில் கொட்டப்படும் படங்களால் தரமான புகைப்படங்களின் கவனிப்பு குறைந்துவிட்டது. ஆனால், அவற்றில் நீங்கள் ஆழம் காண முடியாது என்பதே உண்மை. புகைப்படக் காரர்களிடமிருந்து ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற வார்த்தை அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறது. முகங்களின் புன்னகையில் கேரக்டரைப் புரிந்துகொள்ள முடியாது. சந்தோஷமான சிரிப்பு கணத்தில் முகமே மாறும். அந்தப் புகைப்படம் உங்களின் தனித் தேவைக்கு மட்டுமே பயன்படும். மேல்நாட்டுப் புகைப்படங்கள் மூடிய உதடுகளோடு மட்டுமே இருக்கின்றன. பாஸ்போர்ட்டுக்கான புகைப்படங்களில் ஒருநாளும் புன்னகைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில், வெளிநாடுகளில் அந்தப் புகைப்படத்தைப் புறக்கணித்து விடுவார்கள். சிரிக்காத படங்களில் மட்டுமே கேரக்டர் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு கதை உருவாகிறது.

“புகைப்படங்கள் நம் ஞாபகத்தின் ஒரே தொகுப்பு!” - பிரபு காளிதாஸ்

தொடர்ந்து முகங்களைத் தேடும் வேலையில் இருக்கிறேன். இதைப் புத்தகமாக்க வேண்டும் என்பது கனவு. இதில் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் பின்னான கதை இருக்கிறது. ஆனால், நான் பார்த்த பெரும்பாலானவர்களிடம் அவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர வேறு முக்கியமான வேலை ஒன்றும் என்னிடம் கிடையாது.”