குழந்தைகள் பார்வையில் உலகம் என்றுமே தனித்த ஒன்றுதான். அவர்களின் கண்களில் படும் விசித்திரங்களைக் கலையின்வழி காட்சிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது CBL எனப்படும் சென்னை ஃபோட்டோ பினாலே மற்றும் கோதே கலாச்சார நிறுவனம் இணைந்து நடத்திய புகைப்படக்கலை கற்றல் வகுப்புகள்.
கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில், விளையாட தெருவில் கூட இறங்க முடியாமல் வீட்டிலேயே நேரத்தை போக்கிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு, தங்கள் சுற்றுப்புறத்தைக் கண்களால் அன்றி வேறொரு வழியில் பார்க்கச் செய்யும் ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தித் தந்தது. அதன் விளைவாக, அந்த மாணவர்கள் எடுத்தப் புகைப்படங்கள் ‘A Land of Stories' என்ற தலைப்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

வாரம் இரண்டு நாட்கள் வகுப்புகள் நடக்க, மற்ற நாட்களில் புகைப்படப் பயிற்சி மேற்கொள்ளும் விதமாய் அவர்களுக்கு ஐபோன்கள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சி காலம் முழுவதும் ஐபோனை அவர்களே வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.
பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் புகைப்படக் கண்காட்சியில் 40 மாணவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களாலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களாலும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘குழந்தைகளுக்கு ஒன்றைக் கற்றுக்கொடுக்கும்போது, கற்றுக் கொண்டதிலிருந்து அவர்கள் உருவாக்குவதைக் காட்சிப்படுத்துவதை நான் தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறோம். அவர்களின் ஆர்வத்தை அங்கீகரிக்கும் விதமாக இதை நாங்கள் கடைபிடித்துவருகிறோம்,” என்கிறார் சென்னை ஃபோட்டோ பினாலேவின் ப்ரிஸம் குழுமத்தின் மேலாளர் உதய் ஞானதாசன்.
மாணவர்களைப் பயிற்றுவிக்கும் கல்வியாளர் ஹபீபா பேசும்போது, “புகைப்படக்கலையின் அடிப்படைகள் மட்டுமின்றி, ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையிலும் நாங்கள் கலையைக் கொண்டு சேர்க்க முயற்சிப்போம். உதாரணத்திற்கு நாங்கள் சமீபத்தில் கற்றுக்கொடுத்த ஒரு கரு ஆண்தன்மையை வெளிப்படுத்தும் விதமாகப் புகைப்படம் எடுத்தல்; இதன் ஓர் அங்கமாகப் பெண்கள் சார்ந்த பொருள்களை ஆண்கள் எப்படி அணுகிறார்கள் என்பதை அறிய மல்லிகைப் பூவை தலைப்பாகக் கொடுத்துப் புகைப்படங்கள் எடுக்கச் சொன்னோம். இவை மட்டுமின்றி காலநிலை மாற்றம் தங்கள் சூழலை எப்படி பாதிக்கிறது என்பதை மையப்படுத்தியும் வகுப்புகள் அமைந்தன,” என்றார்.
A Land of Storiesகண்ணகி நகரைச் சேர்ந்த 3 மாணவிகள் சந்தியா, ரூத், ஜனனி ஆகியோரிடம் பேசியபோது, “கொரோன காலத்துல வீட்டுக்குள்ளயே இருந்தோம், கவர்மண்ட் ஸ்கூல்ங்கறதுனால ஆன்லைன் கிளாஸ்கூட இல்ல, அந்தச் சமயத்துல தான் போட்டோகிராபி சொல்லித்தர போறதா ஹபீபா மேடம் வந்தாங்க, அவங்க குடுத்த போனிலயே பாடமும் படிச்சோம், படம் பிடிக்கவும் கத்துக்கிட்டோம்,” என்றனர் மகிழ்ச்சியாக!
-சுபஸ்ரீ
(பயிற்சிப் பத்திரிகையாளர்)