Published:Updated:

கெஞ்சும் ஓரங்குட்டான்... கொஞ்சும் பெங்குயின்... தாமஸ் விஜயனின் சாகச உலகம்!

வொய்ல்ட்லைஃப்
பிரீமியம் ஸ்டோரி
வொய்ல்ட்லைஃப்

வொய்ல்ட்லைஃப் - படங்கள்: தாமஸ் விஜயன்

கெஞ்சும் ஓரங்குட்டான்... கொஞ்சும் பெங்குயின்... தாமஸ் விஜயனின் சாகச உலகம்!

வொய்ல்ட்லைஃப் - படங்கள்: தாமஸ் விஜயன்

Published:Updated:
வொய்ல்ட்லைஃப்
பிரீமியம் ஸ்டோரி
வொய்ல்ட்லைஃப்

அது தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவிலுள்ள போர்னியோ அடர் வனப்பகுதி. `பிரேசில் நாட்டிலுள்ள அமேஸான் காடுகளுக்கு ஒண்ணுவிட்ட தம்பி’ என்று அதைச் சொல்லலாம். புலி, சிறுத்தை, யானை என்று நம் ஊர் வனவிலங்குகளைத் தாண்டி ஒராங்குட்டான், பங்கோலின், வேலஸஸ் எனும் பறக்கும் விஷத்தவளை, மரத்துக்கு மரம் தாவும் பல்லிகள், மலை அணில்கள், வேள்பாரி கதையில் வரும் தேவாங்குகள், அதே கதையில் வரும் சுண்டாப்பூனையை ஒத்த `Bay Cat’ எனும் பூனை இனம், காண்டாமிருகத்தின் கொம்பைப் போன்று தலையில் கொம்புவைத்த ஹார்ன்பில் பறவைகள், எச்சிலில் விஷம் வடியத் திரியும் `இகுவானா’ எனும் உடும்பு வகைகள் என்று பல விலங்குகளின் புகலிடம் போர்னியோ.

கெஞ்சும் ஓரங்குட்டான்... கொஞ்சும் பெங்குயின்... தாமஸ் விஜயனின் சாகச உலகம்!

அப்படிப்பட்ட காட்டில் தங்கவேண்டிய சூழல் தாமஸ் விஜயனுக்கு. அந்த போர்னியோ காட்டின் ஏதோ ஒரு மூலையில் சுற்றிலும் பாமாயிலுக்கான பனை விளைச்சலுக்காக, சட்டத்துக்குப் புறம்பாக வெட்டப்படக் காத்திருக்கும் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில்தான் பயணம். அங்கே 50 முதல் 60 அடி வரை வளர்ந்து நிற்கும் இந்த மரங்கள்தான் `ஒராங்குட்டான்’ என்று சொல்லப்படும் வாலில்லா மனிதக் குரங்கினங்களின் வாழ்விடம். அந்த மரங்கள் வெட்டப்பட்டால், ஒராங்குட்டான்கள் வீடில்லா நிலைக்குத் தள்ளப்படும். அந்தச் சோகக் கதையைத் தன் கேமராவில் பதிவு செய்யவே போர்னியோ பயணப்பட்டார் புகைப்பட நிபுணர் தாமஸ் விஜயன்.

40 அடி உயர மரத்தைத் தேர்ந்தெடுத்து… அதிலேயே ஒரு சுமாரான டென்ட் அடித்து… கொண்டுவந்த உணவுப்பண்டங்கள் காலியாகும் வரை நாள்கணக்கில் இல்லை; மாதக்கணக்கில் காத்திருக்கிறார்.

ஒரே ஒரு விநாடிதான். ஒராங்குட்டான் ஒன்று அவர் தங்கியிருந்த மரத்தை நோக்கி மேலேற… ‘சட் சட்’ என அந்தக் காட்சியை தனது கேமராவில் நிரப்புகிறார் தாமஸ் விஜயன். அவர் எடுத்த அந்தப் புகைப்படம்தான் – இந்த ஆண்டுக்கான சிறந்த `வொய்ல்ட்லைஃப் புகைப்பட விருதை’த் தட்டிச் சென்றிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கெஞ்சும் ஓரங்குட்டான்... கொஞ்சும் பெங்குயின்... தாமஸ் விஜயனின் சாகச உலகம்!

‘‘எத்தனை நாள் காத்திருந்தேன் என்றே தெரியவில்லை; அநேகமாக மாதக்கணக்கில் காத்திருந்திருப்பேன். கீழே அந்த ஆற்றில் முதலைகள் அதிகம். வேறு எங்கேயும் பயணிக்க முடியாது’’ என்று தனது புகைப்பட அனுபவம் பற்றிச் சிலிர்க்கிறார், தாமஸ் விஜயன்.

கேரளாவில் பிறந்து, கனடா நாட்டில் செட்டில் ஆகியிருக்கும் தாமஸ் விஜயன், இப்போது இந்தியாவின் விரல்விட்டு எண்ணக்கூடிய வொய்ல்ட்லைஃப் புகைப்பட நிபுணர்களில் முக்கியமானவர். சின்ன வயதில் தன் பாக்கெட் மணியைச் சேமித்துவைத்து, புகைப்படக் கருவிக்கான ஃபிலிம்ரோல் வாங்கி, பக்கத்திலுள்ள சரணாலயத்துக்குச் சென்று படமெடுத்தது… நாடு நாடாக, காடு காடாகப் பயணித்தது… பள்ளிப் பருவத்தில் ரங்கனதிட்டுப் பறவைகள் சரணாலயத்தில் தனது ஃபிலிம் கேமராவை வைத்துப் படமெடுத்தது... என்று தன் கதையை ஸ்கைப்பில் சொன்னார் தாமஸ் விஜயன்.

கெஞ்சும் ஓரங்குட்டான்... கொஞ்சும் பெங்குயின்... தாமஸ் விஜயனின் சாகச உலகம்!

‘‘இந்த ஒராங்குட்டான் புகைப்படம் உலக அளவில் வொய்ல்ட்லைஃப் புகைப்பட விருது வாங்கும் என்று நம்பினீர்களா... இந்தப் புகைப்படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?”

‘‘நிச்சயம் நம்பித்தான் இந்தப் படத்தை எடுத்தேன். இதற்கான உழைப்பு அந்த மாதிரி. மாதக்கணக்கில் இரவு முழுவதும் காட்டுப் பூச்சிகளின், கொசுக்களின் கடிகளைத் தாங்கிக்கொண்டு தூங்காமல் காத்திருந்து இந்தப் படத்தை எடுத்தேன். இந்தப் புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால், அதில் நான்கு விஷயங்கள்தான் டார்கெட்டாக இருக்கும்.

ஆகாயம், தண்ணீர், பிரபஞ்சத்தில் வாழும் ஓர் அரிய உயிரினம், அந்த சப்ஜெக்ட் நம்மை நோக்கி ஏதோ சொல்ல வருவது – இந்த நான்கையும் மனசுக்குள் வைத்துத்தான் இந்தப் படத்தை க்ளிக்கினேன். நீங்கள் அந்த ஒராங்குட்டானை உற்றுப் பார்த்தால்… அது உங்களிடம் ஏதோ தன் துயரத்தைச் சொல்ல வருவதுபோலவே இருக்கும். நிஜம்தான்; பாமாயில் மரங்களுக்காக அழிக்கப்படும் காடுகள்தான் அவற்றின் இருப்பிடம். அவை மனிதர்களின் தேவைக்காக அழியக் காத்திருக்கின்றன. ‘இனி நான் எங்கே போவேன்’ என்று அந்த ஒராங்குட்டான் உங்களிடம் கெஞ்சுவதுபோல் இருக்கும். அவற்றின் இயல்பான வாழ்விடங்கள் காக்கப்பட வேண்டும். ‘The world is Going Upside Down’ என்பதுதான் அதன் கான்செப்ட். இப்படித்தான் புகைப்பட கமிட்டியில் என் படம் இன்டர்நேஷனல் போட்டோகிராபி அவார்டு வாங்கியது.’’

கெஞ்சும் ஓரங்குட்டான்... கொஞ்சும் பெங்குயின்... தாமஸ் விஜயனின் சாகச உலகம்!

‘‘அந்தப் பயண அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்!’’

‘‘நான் ஏற்கெனவே சில தடவை போர்னியா காடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அழிந்துவரும் அந்த மரங்கள் பற்றியும், மனிதர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒராங்குட்டான்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சட்டெனப் பயணத்துக்கு ரெடியாகிவிட்டேன். போர்னியாவுக்குப் போவது எளிதில்லை. காட்டின் முகப்புக்குப் போக கடலைத் தாண்டித்தான் போக வேண்டும். அங்கே அலைகள் ஐந்து மீட்டர் உயரத்தில் எழும். அதில் பயணிப்பது உயிருக்கே ஆபத்தானது. கடற்கரையில் இறங்கினால்… சட்டென வரும் ஆறு. கூடவே ஃபைபர் படகைக் கொண்டு போயிருந்தேன். அதில் இரண்டு பேர் மட்டும்தான் பயணிக்க முடியும். இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், ட்ரை ஃப்ரூட்ஸ், சாக்லேட்கள், கூல்டிரிங்க்ஸ் – கேமராவோடு சேர்ந்து இவை எப்போதுமே என் பையில் இருக்கும். இவைதான் சாப்பாடு. கிடைத்த பூச்சிகளைச் சாப்பிட நான் ஒன்றும் ‘Man Vs Wild’ பியர் கிரில்ஸ் இல்லையே!

ஐந்து அடி ஆழ ஓடையில் கேமராக்களைத் தூக்கிக்கொண்டு முதலைகளிடமிருந்து தப்பித்துப் போனது… மழைக்காகக் காத்திருந்து அந்த அடர்ந்த காட்டிலேயே தங்கியது... படமெடுத்தபோது, அந்த ஒராங்குட்டானிடம் நான் பேச்சுவார்த்தை நடத்தியது… எல்லாமே என் வாழ்க்கையின் `வாவ்’ நிமிடங்கள்!’’

கெஞ்சும் ஓரங்குட்டான்... கொஞ்சும் பெங்குயின்... தாமஸ் விஜயனின் சாகச உலகம்!

‘‘அந்த ஒராங்குட்டானைப் படம் எடுக்கும்போது உங்களைத் தாக்க முற்பட்டதா?’’

‘‘இல்லை; ஆனால், நான் படமெடுக்கும் வரை அது என்னையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. ‘நம்ம இடத்தில் இவன் யாருடா புதுசா’ என்று நினைத்திருக்கலாம். காட்டுக்குள்தான் என் வாழ்க்கை என்பதால், பெரும்பாலும் விலங்குகளின் உணர்வைப் புரிந்துகொண்டிருக்கிறேன்’’ என்று சிலிர்க்கிறார் தாமஸ் விஜயன்.

அமூர் எனும் ஜாகுவார், கொடிய முதலைகள், நீலத் திமிங்கலங்கள், சுறா மீன்கள், கடல் சிங்கங்கள் என அபூர்வ விலங்குகளைப் படமெடுத்த அனுபவம் இவருக்கு உண்டு. மானை சிறுத்தை வேட்டையாடுவது, சிங்கம் ஒன்று மான்குட்டியைக் கொல்லாமல் செல்லமாகத் தட்டிக் கொடுப்பது, பெங்குவின்கள் குடும்பமாக பனிக்கட்டியில் சர்ஃபிங் போவது என்று உயிரினங்களின் உணர்வு நிமிடங்களைத் தனது கேமராவுக்குள் சிக்க வைத்திருக்கும் தாமஸ் விஜயன், இதுவரை 1,000–க்கும் மேற்பட்ட வொய்ல்ட்லைஃப் போட்டோகிராபி அவார்டுகளை அள்ளியிருக்கிறார். சைபீரியன் காட்டில் மாதக்கணக்கில் காத்திருந்து அவர் எடுத்த அமூர் சிறுத்தைப் படங்கள், உலகிலேயே ஐந்து புகைப்பட நிபுணர்களால் மட்டுமே முடிந்த ஒரு சாதனை. அவர்களில் தாமஸ் விஜயனும் ஒருவர்.

கெஞ்சும் ஓரங்குட்டான்... கொஞ்சும் பெங்குயின்... தாமஸ் விஜயனின் சாகச உலகம்!

‘‘நீங்கள் விலங்குகளிடமிருந்து தப்பித்த சேஸிங்… ரன்னிங் அனுபவங்கள்!’’

‘‘நிறைய உண்டு. புலிகளிடமிருந்து தப்பித்திருக்கிறேன். புலிகள்மீது எனக்குத் தனிப்பட்ட காதல் உண்டு. நமக்குக் கைரேகை வித்தியாசப்படுவது மாதிரி, ஒவ்வொரு புலிக்கும் ஒரு வரி உண்டு. அதை வைத்தே எந்த நாட்டுப் புலி என்று என்னால் ஓரளவு கணிக்க முடியும். யானைகளிடம் சேஸிங் நடந்ததுண்டு. பாலைவன மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் `சேண்ட் வைப்பர்’ எனப்படும் கொடிய பாம்புகளிடமிருந்து தப்பித்த அனுபவம் உண்டு. என்னைக் கேட்டால்… விலங்குகளுக்கு நம்மைவிட உள்ளுணர்வு அதிகம். அவற்றின் கோபத்துக்கு ஆளாகாதவரை எந்தப் பிரச்னையும் நமக்குக் கிடையாது!’’

கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயனின் சகோதரரும் ஒரு வொய்ல்ட்லைஃப் போட்டோகிராபர்தான். இவர்களுக்கு சிங்கம், புலி, சிறுத்தை போன்ற பூனையினங்களைப் படம் பிடிப்பதென்றால், கொள்ளை இஷ்டமாம். இந்த ஆர்வத்தாலேயே ‘Cat Brothers’ என்ற பெயர் அவர்களுக்கு உண்டு.

காடுகள் மட்டுமல்ல; கடும் பனிப்பிரதேசங்களிலும் தாமஸ் விஜயனின் கேமரா `க்ளிக்’ செய்திருக்கிறது. தாமஸ் விஜயன் ஒரு பர்ஃபக்‌ஷனிஸ்ட் என்பதற்கு உதாரணமாக இதைச் சொல்லலாம். தனக்குப் பிடித்த ஃபிரேம் கிடைப்பதற்காக, மைனஸ் 40 டிகிரி குளிரில், பல மணி நேரம் அலைந்து படம் எடுத்தாராம்.

கெஞ்சும் ஓரங்குட்டான்... கொஞ்சும் பெங்குயின்... தாமஸ் விஜயனின் சாகச உலகம்!

‘‘உங்கள் அன்டார்டிகா அனுபவம் பற்றி..?”

‘‘காடு, மலை, அருவி, பாலைவனம், கடல்களைவிட பனிப் பிரதேசங்களில் படம் எடுப்பதுதான் மிகவும் சிக்கலானது. பனித்துளி சிறிதாகப்பட்டாலே கேமரா வேலை செய்யாது. அப்படிப்பட்ட குளிரில்தான் பெங்குவின்களை, பனிக்கரடிகளைப் படம் பிடிப்பேன். கேமராவில் பர்ஃபெக்‌ஷன் என்று எதுவுமே கிடையாது. என்னைப் பொறுத்தவரை நமது க்ளிக்குகள் எல்லாமே நமது அனுபவங்கள்தான். அதாவது, தப்பாகப் படம் எடுத்தால்கூட அதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்! ஆனால், எனக்குப் பிடிக்கும் ஷாட் வரும்வரை விட மாட்டேன். அன்டார்டிகாவுக்கு ஹெலிகாப்டரில்தான் போவேன். சில நேரங்களில் பனிப் பிரதேசங்களில் பயணிக்க ஈஸியாக ATV (All Terrain Vehicle)களையும் எடுத்துச் செல்வேன். ஒரு பெங்குவின் குழந்தையை அதன் பெற்றோர் கொஞ்சுவது போன்ற அந்த ஃபேமிலி புகைப்படத்தை எடுக்க, மைனஸ் 40 டிகிரி குளிரில் தினமும் எட்டு மணி நேரம் கால் புதைய பனியில் நடந்தேன்! பனிச்சிறுத்தையும் படுத்திவிட்டது (சிரிக்கிறார்).

பனிப்பிரதேசங்களில் உடல் சம்பந்தமான பிரச்னைகளை அதிகம் சந்திக்கவேண்டியிருக்கும். ஷூக்களில் பனிநீர் இறங்கினால்… கால்களில் `Frost Bite’ என்கிற நோய் வரும். கால் விரல்களையே எடுக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்தச் சவால்களை நான் பயத்துடன் எதிர்கொள்வதில்லை!’’ என்கிறார் தாமஸ் விஜயன்.

சின்ன வயதில் ஃபிலிம் ரோல் வாங்கக் காசில்லாமல் திரிந்த தாமஸ் விஜயன்தான் இப்போது, Nikon கேமரா நிறுவனத்துக்கான பிராண்ட் அம்பாஸடர். ‘‘அடுத்து சைபீரியாவுக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்’’ என்று ஸ்கைப்பை ஆஃப் செய்தார் தாமஸ் விஜயன்.