Published:Updated:

அன்னம்மாக்காவின் சோகமும் சந்தோஷமும்!– சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

வீடு முழுவதும் மார்க்ஸ், கார்க்கி, பாரதியார், பகத்சிங்ன்னு படங்களை வரிசையா மாட்டிவைத்திருப்பார். வீட்டுக்கு யார் வந்தாலும் சோறு போடாம அனுப்பமாட்டாரு.

எல்லோருடைய ஊரிலும் சேவல் கூவி தான் பொழுது விடியும்னா எங்க தெருல அன்னம்மாக்கா பலகாரம் சுடுவதற்கு, விறகு அடுப்பில் தீப்பற்ற ஊதுகுழாயை வைத்த ஊதும் சத்தத்தில்தான் எங்க பொழுது விடியும். அன்னம்மாக்காவோட முழுப்பேரு அன்னலெட்சுமி. தெருல இருக்குற நண்டு சிண்டுக்கெல்லாம் பணியாரக்கடை பாட்டி. அன்னம்மாக்காதான் எங்க தெருவுக்கு அன்னபூரணி. பொழுது விடியும் முன்பே எழுந்து வாசல கூட்டி அதில சாணிய கரைச்சு தெளித்து வாசல் விரிய கோலம் போட்டு நிமிர்ந்து பார்த்துச்சுன்னா மணி நால தொடப்போகும்.

Representational Image
Representational Image

இரட்டை அடுப்பு ரெண்டு வச்சு அதற்கு தினமும் பொட்டு வச்சு, `அன்னம்மாக்கா ஆப்பக்கடை'ன்னு தகரபோர்டில் எழுதிய கடையின் பெயர்ப்பலகைக்குப் பூ வைத்து ஊதுபத்தி காட்டுவது அக்காவின் வாடிக்கை. இட்லி, பணியாரம், ஆப்பம், கொழுக்கட்டைன்னு நாலு அடுப்புல நாலு பலகாரத்த நேர்த்தியா சுடும். சாம்பார், சட்னி, தேங்காய்பால்ன்னு எல்லா தொட்டுக்குறதும் வீட்டில் செய்வது போலவே இருக்கும். தேங்காய்பால் என்ற பெயரில் சீனித்தண்ணியும் மலிவு விலையில அரிசி வாங்கி இட்லியா இல்லை, அரிசிக்களியான்னு நம்மள குழப்புகின்ற வேலையெல்லாம் அக்காவுக்குத் தெரியாது.

துரித உணவுகளான நூடுல்ஸ்ஸும் பாஸ்தாவும் எங்க தெருவுக்குள்ள நுழைய முடியாம நெளிஞ்சிட்டு இருக்குன்னா அதுக்குக் காரணம் அன்னம்மாக்காதான். ஊறுகாய் கம்பெனிக்கு வேலைக்குப் போயிட்டு வர பெண்களுக்கும் அதிகாலையில எந்திருச்சு சமைத்தால் அலர்ஜியாகும் பெண்களுக்கும் ஆபத்பாந்தவி நம்ம அன்னம்மாக்காதான். காலையில எந்திருச்சு பல்லுகில்லு வெலக்குதுகளோ இல்லையோ அன்னம்மாக்கா கடைக்கு முன்னாடி எல்லா சிறுசுகளும் அட்டெண்டன்ஸ் போட்டுருங்க. `பாட்டி எனக்கு ஆப்பம்', `பாட்டி எனக்கு மாப்பணியாரம்', `பாட்டி எனக்கு சட்னி'ன்னு பாட்டிய ஏலம்விட்டுட்டு இருக்குங்க. மாப்பணியாரம்னா முழுசா வேக வைக்காத பணியாரம். அதை இலையில் வைத்துக்கொண்டு ஏலக்காய் மணத்தோடு வெல்லங்கலந்த அரிசிமாவை சில சிறிசுக விரல்ல தொட்டுத்தொட்டு சுவைத்துக்கொண்டிருப்பார்கள்.

எங்க தெரு பச்ச குழந்தைங்க சாப்பிடுற முதல் திட உணவு நம்ம அன்னம்மக்கா கடை இட்லிதான். தெருப்பிள்ளைக வயிறாற குறைந்த விலைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடுவது அன்னம்மாக்காவால்தான். யாரிடமும் சாப்பாட்டுக்கு காசு கறாரா கேட்காது. எத்தன ஹோட்டல் ரோட்டோரத்தில் முளைத்தாலும் அன்னம்மாக்கா கைப்பக்குவத்துக்கு யாரும் ஈடு கொடுக்கமுடியாது. அன்னம்மக்காவிற்கு தெருவே பழக்கமென்றாலும் உற்ற தோழிகள் மீனாட்சியும் கிருஷ்ணம்மாவும்தான். அந்த ரெண்டு பேரிடம் மட்டும்தான் தன் சுகதுக்கத்த அன்னம்மாக்கா சொல்லும். அன்னம்மாக்கா பிறந்தது காரியாப்பட்டியில, வாக்கப்பட்டு வந்தது எங்க ஊரு மதுரைக்கு.

அன்னம்மாக்கா வீட்டுக்காரரு கம்யூனிஸ்ட். அக்காவுக்கு இந்த கட்சி கூட்டமெல்லாம் எதுவும் தெரியாது. ஆனா அவுக வீட்டுக்காரருக்கு கட்சிதான் எல்லாம். வீட்டுக்கு அரிசி வாங்கிப்போட்டாரோ இல்லையோ கட்சியோட வாசகர் சாலைக்கு தினசரி செய்தித்தாள் வாங்கிப்போட மறந்ததில்லை. வீடு முழுவதும் மார்க்ஸ், கார்க்கி, பாரதியார், பகத்சிங்ன்னு படங்களை வரிசையா மாட்டிவைத்திருப்பார். வீட்டிற்கு யார் வந்தாலும் சோறு போடாம அனுப்பமாட்டாரு. மதுரைக்கு சோலியா வர்ற ஊர்க்காரவுக வண்டிக்கு மட்டும் காச வச்சுக்கிட்டு சோத்துக்கு நம்ம அன்னம்மாக்கா வீட்டுக்கு வந்துருவாக.

Representational Image
Representational Image

ஊரப் பத்திப் பேச ஆரம்பிச்சார்னா விடிய விடிய பேசுவாரு. உள்ளூர் கதையிலர்ந்து உலக கதையெல்லாம் பேசுவாரு. ஊர் சனங்களுக்கு ஒண்ணும் புரியாது. இருந்தாலும் கிளம்புறப்ப கிடைக்கிற டீக்காக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய் மாறிவிடுவார்கள். அன்னம்மாக்கா அடுப்படியில் வேலை பார்த்துக்கொண்டே வீட்டுக்காரரு பேச்ச ரசிச்சுகிட்டிருக்கும். அவர் பேச்ச கேட்டுக் கேட்டு இப்ப அன்னமாக்காவுக்கும் பொது அறிவு வளர்ந்துருச்சு. அன்னம்மாக்காவின் கணவர் மில்லில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வாங்குற சம்பளத்துல பாதிய புத்தகத்துக்கும் ஆடியோ கேசட்டுகளுக்கும் செலவு செஞ்சிருவாரு. இரவு பாட்டு கேட்காம தூங்கமாட்டாரு. டி.ஆர் மகாலிங்கத்திலிருந்து எம்.எஸ்.வி, கண்டசாலானு பழைய பாடல்கள் ஹிட் கேசட்ஸ் நிறைய வச்சிருந்தாரு. அவரு வைக்கிற பாட்ட ஓசியில கேட்டு தெருவே தூங்கிரும்.

தீபாவளிக்குக்கூட புது உடை போடமாட்டாரு. ஆனா மே தினம் வந்தா ஆள கையில புடிக்கமுடியாது. புது டிரஸ் போட்டுக்கிட்டு கட்சி அலுவலகத்துக்குக் காலங்காத்தாலேயே போய்விடுவார். ரோட்டுல போற எல்லோருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்வார். அவர் வீடு அளவில் சிறியதாய் இருந்தாலும் புத்தகங்களுக்கென்று தனி இடம் ஒதுக்கியிருந்தார். மாக்ஸிம் கார்க்கி, பாரதியார், ராகுல் சாங்கிருத்தியாயன், ஜே.கே-ன்னு அவர் புத்தக அலமாரியே அவருடைய உயர்ந்த சிந்தனையைச் சொல்லும்.

குழந்தையில்லாமல் இருந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு பிறந்த தன் குழந்தைக்கு கார்ல்மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயர் வைத்து மகிழ்ந்தார். அவருக்கு தன் மகளை நன்றாகப் படிக்க வைத்து அரசு அதிகாரியாய் உருவாக்க வேண்டும் என்று ஆசை. சிறுவயதில் தன் மகள் ஜென்னி செப்பு சாமான்களை வைத்து விளையாடினால்கூட திட்டி புத்தகத்தைப் படி என்பார்.

Representational Image
Representational Image

ஆங்கிலமென்றால் அரண்டு ஓடும் எங்க தெருவுல முதன்முதலில் ரெபிடெக்ஸ்(RAPIDEX) ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகம் தன் மகளுக்கு வாங்கிக்கொடுத்தவர் அவர்தான். `உனக்கு நான் சேர்த்து வைக்கிற சொத்து இந்தப் புத்தகங்கள்தான்' என்பார். ஓய்வு நேரங்களில் புத்தகத்தை எடுத்து தூசு தட்டி அதை அழகாய் அடுக்கி வச்சு அவர் தன் பொழுதைக்கழிச்சாரு. தானுண்டு தன் புத்தகமுண்டு, புத்தகத்தில் உள்ள உயர்கொள்கைகளை தனக்கானதை கொண்டு வாழ்ந்த அந்த மனுசனுக்கு ஒருநாள் இடது காலில் சிறிய வீக்கம் ஏற்பட்டது. அன்னம்மாக்கா, மருத்துவமனைக்குப் போகலாமென்று எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காம சின்ன கட்டிதான் வீட்டு வைத்தியத்திலேயே சரி பண்ணிரலாம்னு அஜாக்கிரதையாய் இருந்தார். நாளாக நாளாக வீக்கம் வற்றவில்லை. இப்படியே இருந்தா நல்லதுக்கில்லைனு அன்னமாக்கா கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்துச்சு. சோதிச்சு பார்த்த டாக்டருங்க இடது காலில் சீழ் கோத்து அழுகிருச்சு, அது இப்ப வலது காலுக்கும் பரவியிருச்சு, அதனால ரெண்டு காலையும் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க.

அன்னம்மாக்காவுக்கு உலகமே இருண்டமாதிரி இருந்துச்சு. இருந்தாலும் புருஷன் உயிரோட இருந்தா போதும்னு மனச தைரியமாக்கி ஆபரேசனுக்குக் கையொப்பம் போட்டுச்சு. அரசாங்க ஆஸ்பத்திரிதான், ஆனா ஸ்கேனு, எக்ஸ்ரேனு ஒவ்வொண்ணுக்கும் ஒரு கமிஷன் குடுத்துதான் அங்க சிகிச்சையே கிடச்சுச்சு. ஒரு வாரங்கழிச்சு ஆஸ்பத்திரியிலிருந்து புருஷன வீட்டுக்குக் கூட்டிவந்துச்சு. கால் இல்லாததால வேலையை விட்டு நீக்கிட்டாங்க. சிட்டா பறந்து திரிஞ்ச மனுசன் வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டாப்ல. அவரிடமிருந்த பழைய கலகலப்பு களவாடப்பட்டுவிட்டது. யாரிடமும் பேசுவதில்லை. தன் புத்தகங்களைத் தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே அவர் முடங்கிக்கிடப்பதைப் பார்த்து அன்னம்மாக்காவுக்குப் பைத்தியம்பிடித்து விடும் போல் இருந்தது. அன்னம்மக்காவின் நிலையைப் பார்த்த தோழி மீனாட்சி, அன்னம்மாக்காவிடம் "அன்னம், கவர்ன்மென்ட்ல ஊனமுற்றோர் உதவித்தொகையும் மூன்று சக்கர வண்டியும் தராங்களாம். நீ கலெக்டர் ஆபீஸூல போய் கேட்டுப்பாரு" என்றாள்.

அன்னம்மாக்காவும், இப்ப இருக்கிற நிலைமைக்குக் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் புருஷனைக் கூப்பிட்டுக்கொண்டு அரசு அலுவலகத்துக்குச் சென்றாள்.

விண்ணப்பத்தில் தொடங்கி மருத்துவ சான்றிதழ் வாங்குற வரை எல்லாவற்றிலும் கமிஷன். எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் அந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு வரிசையில் சோர்ந்து போய் நிக்கிறதும், சில பேரை, `நேரமாச்சு நாளைக்கு வாங்க'ன்னு அலைகழிக்கிறதப் பார்த்த அன்னம்மாக்காவுக்கு அழுகைதான் வந்துச்சு. நேர்மையில்லாம, மனிதநேயமுன்னா என்னன்னு தெரியாத அந்த அலுவலர்களைப் பார்க்குறப்ப அன்னம்மாக்காவுக்கு கோபமாய் வந்தது. இதையெல்லாம் தட்டிக்கேட்க யாரும் வரமாட்டாங்களானு தன் ஆதங்கத்தை தன் புருஷனிடம் கூறியது. அங்கு நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்னம்மாவின் கணவர் தனக்குள்ளே, "படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று" என்ற பாரதியின் கவிதையை நினைத்துக்கொண்டிருந்தார். தன் மனைவியிடம், "ஏழைகளோட கோபம் என்றைக்கு எரிமலையாய் வெடிச்சுருக்கு. வா அன்னம், வீட்டுக்குப் போகலாம் முடியல" என்றார்.

Representational Image
Representational Image

அரை உசுரா கிடக்குற மனுசன இப்படி அல்லாட வச்ச அந்த லஞ்சப் பேய்களப் பார்த்து அன்னம்மாக்காவுக்கு ஆத்திரமாக வந்தது. தம் இயலாமையோடு இல்லம் வந்து சேர்ந்தார்கள் இருவரும். வெளியுலகம் தெரியாம இருந்துட்டு இப்ப காலிழந்த தன் புருஷனையும் மகளையும் எப்படிக் காக்குறதுன்னு அன்னம்மாக்காவுக்கு ஒண்ணும் புரியல. தனக்கு தெரிஞ்ச சமையலை முதலீடாய் வைத்து இட்லிக்கடையை ஆரம்பித்தார்கள். வியாபாரம் நன்றாக நடந்தது. அன்னம்மாவின் கணவர் மனைவிக்கு தன்னால் இயன்ற வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். நாள்கள் ஓடியது. ஒரு காலைப்பொழுதில் அன்னம்மாவின் கணவர் திடீரென மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்க ஆட்டோவில் கொண்டுபோகும் போதே மாரடைப்பு ஏற்பட்டு "ஆத்தே" ன்னு அன்னம்மாக்காவின் மடியில் தலை சாய்ந்தார். அப்போது ஜென்னி பள்ளி இறுதியாண்டில் இருந்தாள். சொந்த பந்தங்களெல்லாம் அன்னம்மாக்காவிடம், `ஜென்னிக்கு விரைவாக திருமணத்தை முடித்துவைத்துவிட்டால் உன் பாரம் குறையுமில்ல' என்று கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அன்னம்மாக்கா தன் கணவனின் ஆசைப்படி மகளை கல்லூரியில் சேர்த்தாள்.

மகள் கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் நல்ல வரன் வந்ததும் திருமணம் முடித்து வைத்துவிட்டாள். கடை திறந்த நாளில் இருந்து இதுநாள் வரை நீண்ட விடுப்பு கடைக்கு விட்டதில்ல. நேத்து இரவுதான் அன்னம்மாக்கா மகளும் மருமகனும் பேரனோட ஊரிலிருந்து வந்திருந்தாங்க. அன்னம்மாக்காவுக்கு பேரன் வந்ததுல சந்தோஷம் தாங்கல. அதனால கடைக்கு லீவு விட்டுருச்சு. வாடிக்கையாளர் பொடிசுகளெல்லாம் கடை லீவு என்றவுடன் தவிச்சுருச்சுக. அன்னம்மாக்கா காலையிலேயே கறிக்குழம்பு வச்சு பூரி சுட்டு, மதியானத்துக்கு மருமகனுக்கு மீன்குழம்பு வச்சு ஒரே தடபுடல்தான்.

Representational Image
Representational Image

மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு அவர்களை சற்று ஓய்வு எடுக்கச்சொல்லிட்டு தன் வழக்கமான வேலைகளை தொடங்க அன்னம்மாக்கா அடுப்படியில் நுழையும் போது வாசலில் மீனாட்சியின் குரல் ``அன்னம்... என்ன பண்ணிட்டு இருக்குற, எந்த நாளுமில்லாத அதிசயமா இருக்கு, இன்னைக்கு என்ன கடைக்கு லீவு விட்டுப்புட்ட. உடம்புக்கு சுகமில்லையா எப்ப பார்த்தாலும் சட்டிய உருட்டிக்கிட்டுதான் கிடக்குற, கொஞ்ச நேரம் இங்க வந்து உட்காருன்னு"என்றவாறு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அன்னம்மாக்காவை அழைத்துக்கொண்டிருந்தாள். செத்த பொறுக்கா வந்துர்ரேன்னு சொல்லிக்கிட்டே அன்னம்மாக்கா சொளகு நிறைய வெங்காயத்தையும் வெள்ளைப்பூண்டையும், பேசிக்கிட்டே உரிக்கிறதற்காக எடுத்துவந்தாள். கூடவே கொறிப்பதற்காக மக ஊரிலிருந்து வாங்கி வந்ந நொறுக்குத்தீனியையும். (நம்ம ஊரு பெண்கள் தனக்கான நேரத்தைக்கூட தன் குடும்பத்துக்காகத்தான் செலவிடுவார்கள்)

"உடம்பு நல்லாதானிருக்கு, ஊரிலிருந்து எம்மவ ஜென்னி புருஷனோட வந்திருக்கு, அதான் கடை லீவு " என்றாள் அன்னம்மா. என்ன ஏதும் விசேஷமான்னு மீனாட்சி கேட்டதற்கு "ஜென்னி வீட்டுக்காரருக்கு ஐதராபாத் ஆபீஸில் ஒரு வாரம் ட்ரெய்னிங்காம். அதான் இங்க ஒரு வாரம் விட்டுட்டு போலாம்னு வந்திருக்காரு"னு அன்னம்மா கூறினாள்.

"சந்தோஷம், ஜென்னிய கூப்பிடு" என்றாள் மீனாட்சி. `இப்பதான் சாப்பிட்டுட்டு தூங்குதுக' என்றாள் அன்னம்மா. "சரி எந்தரிச்ச பிறகு பேசலாம்"னு சொல்லிக்கிட்டே மீனாட்சி ஜிலேபியைப் பிய்த்து வாயில் போடும் நேரம், "ஜென்னி வாங்கிட்டு வந்த பலகாரத்தை என்னைய விட்டுப்புட்டு தின்டா வயிறு வலிக்க போகுதுனு" சத்தங்குடுத்துக்கிட்டே கிருஷ்ணம்மா அன்னம்மா வீட்டை நோக்கி தன் கனத்த சரீரத்தை நகர்த்த முடியாமல் அசைத்து வந்தாள்.

கிருஷ்ணம்மா என்ற கிருஷ்ணவேணியைப் பார்த்து" என்ன குண்டம்மா எங்க போயிட்டு வர இப்படி மூச்சு வாங்குது" என்றாள் மீனாட்சி. "எனக்கு போக்கிடம் எங்க இருக்கு உங்கள விட்டா. இங்க தான் வந்துட்டு இருந்தேன் வர்ற வழியில பானுமதி கூப்பிட்டா. அதான் அவ கூட செத்த நேரம் பேசிட்டு வரேன்" என்றாள் கிருஷ்ணம்மா. ஏன் வட்டிக்காசு லேட்டா குடுத்துட்டியா என்றார் அன்னம்மாக்கா. "எத மறந்தாலும் வட்டிக்காசு குடுக்குறத மட்டும் மறக்க மாட்டேன். அவ மக பரிமளாவிற்கு கவர்ன்மென்டு வேலை கிடைச்சுருக்காம் அதுக்கு எல்லோருக்கும் ஸ்வீட் குடுத்து கொண்டாடுறா.

Representational Image
Representational Image

நான் வந்துட்டு இருந்ததைப் பார்த்து எனக்கும் ஒண்ணு கொடுத்தா. இந்தா சாப்பிடுங்கனு ஸ்வீட்டை தன் தோழிகளிடம் நீட்டினாள் கிருஷ்ணம்மா. "அந்த குறைகுடம் பரிமளாவுக்கா வேலை கிடைச்சுருக்கு!தன் பேரைக்கூட ஒழுங்கா எழுதத்தெரியாது அவளுக்கு. பரிமளம்னு எழுதச் சொன்னால் பரிமலம்னு எழுதுனவ. அவ ஆத்தா அதையும் பெருமையா எடுத்துக்கிட்டு, எம்மவ மெட்ரிக்குலேசன்ல படிச்சவ, அவளுக்குத் தமிழே தெரியாதுனு பெருமையா சொன்னா. அவளுக்கா கவர்ன்மென்ட் வேலை. என்ன காலக்கொடுமை "என்றாள் மீனாட்சி. நீ வேற, அவ படிச்சா வாங்கினா! அவ அப்பாவோட வேலை கருணை அடிப்படையில அவளுக்கு கிடைச்சுருக்கு என்றாள் கிருஷ்ணம்மா. "அவ அப்பன், சம்பளமும் கிம்பளமும் வாங்கி தெருல பாதி இடத்தை வளைச்சுப்போட்டு போயிட்டான். போதாக்குறைக்குப் பல பேர் வயித்துல அடிக்கிற வட்டித்தொழில் வேறு. இப்ப மகளுக்கு கவர்ன்மென்ட் வேலை வேற"_மீனாட்சி "இவ வேலைக்குப் போயி எத்தனை ஊர விலைக்கு வாங்கப்போறாளோ. வட்டிக்காசு குடுக்க கொஞ்சம் லேட்டாயிருச்சுன்னா அவ ஆத்தா பானுமதிய கூட சமாளிச்சுரலாம். ஆனா இந்தப் பரிமளா வயசு வித்தியாசம் பார்க்காம திட்டுவா. ம்! எத்தன பிள்ளைக படிச்சுப்புட்டு திறமையிருந்தும் வேலையில்லாம அல்லாடுதுக" என்றாள்.

உரையாடலின் நடுவே அன்னம்மாக்காவின் முகம் வாடியிருப்பதைப் பார்த்த மீனாட்சி, அன்னம் என்னாச்சு? ஏன் கண்ணு கலங்கியிருக்கு என்றாள். "ஒண்ணுமில்லைக்கா, நம்ம ஜென்னியும் பரிமளமும் ஒரே காலேஜில்தான் படிச்சுதுக. ஜென்னி தான் காலேஜ் ஃப்ர்ஸ்ட். பரிமளா பாதிப் பாடத்துல ஃபெயிலாம். எப்படியோ தட்டித்தடுமாறி பாஸ் ஆனான்னு ஜென்னி சொல்லுச்சு. ஜென்னிக்கு மேற்படிப்பு படிக்கணும்னு ரொம்ப ஆசை. நான் தான் குடும்பச் சூழ்நிலைய சொல்லி கல்யாணம் பண்ணிவைத்து விட்டேன். அவ அப்பா ஓயாம சொல்லிக்கிட்டு இருப்பாரு, எம்மவ நல்லா படிச்சு அரசு அதிகாரியாக வரணும், நாலு பேருக்கு நல்லத பண்ணணும்னு. அவரு ஆசைய என்னால நிறைவேத்த முடியலை. அத நினைச்சுதான் கலங்குறேன்"என்றாள். அதற்கு கிருஷ்ணம்மா" ஏன்டி கலங்குற , உம்மவளுக்கு நீ என்ன குறை வச்ச. உன் தகுதிக்கு மீறி சீர் செனத்தி செய்து நல்ல மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுத்து உன் கண்ணுக்குள்ள வச்சு பொத்திப் பொத்தி பாதுகாக்கிற. இப்ப பேரனும் வந்துட்டான். எதுக்குக் கவலைப்படுற" என்றாள்.

Representational Image
Representational Image

"நல்லாத்தான் இருக்கா, ஒரு குறையுமில்ல. இப்ப எதுவும் தோணாது. சில வருடங்கள் கழித்துப்பார்த்தால் வாழ்க்கையில் ஒரு வெறுமை வரும். நாம எதை சாதிச்சோம்னு தோண ஆரம்பிக்கும். மனைவி, தாய், பாட்டி இதையெல்லாம் தாண்டி நாம் யாரென்று யோசிச்சா விடை சூனியம்னு வரக்கூடாது. அவப்படிச்சது வீணாகக்கூடாது, காலையில எந்தரிச்சோமா, சட்டிய சுரண்டுனமா சோறாக்கி குழம்பு வச்சோமா நாலு சீரியல் பார்த்துட்டு நாளக்கடத்தினோமானு வாழ்க்கை போகக்கூடாது. ஆரம்பத்திலேயே அயர்ந்துட்டோம்னா வாழ்க்கையில உயர முடியாதுக்கா. அவளுக்குள்ள இருக்குற திறமைய அவளோட தனித்துவத்தை அவ உணரணும். விதை நெல்லை வீட்டுக்குள்ளேயே பூட்டி வச்சுட்டோம்னா வீணாப்போயிரும். அதை நல்ல நிலத்துல விதைக்கணும்க்கா" என்றாள்.

"அன்னம், உன் வீட்டுக்காரரு மாதிரி பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுற எனக்கு தான் ஒண்ணும் புரியல" என்றாள் மீனாட்சி பொம்பள பிள்ளைக வேலைக்குப் போனாத்தான் சந்தோஷமுன்னு நான் சொல்ல வரல. ஆனா வேலைக்குப் போகணும்னு நினைக்கிற பிள்ளைகள பூட்டி வைக்கக் கூடாது என்றாள் அன்னம்மாக்கா. “நீ சொல்றது சரிதான். பதருக்கெல்லாம் பதவி கிடைக்கிறத பார்க்கிறப்ப மனசு பரிதவிக்கதான் செய்யுது. என்ன பண்ண, நல்லதுக்கு இங்க காலம் கிடையாது” என்றாள் கிருஷ்ணம்மா. சரி அன்னம் நேரமாச்சு, நீ போயி வேலையைப்பாரு. தகுதியானது வென்றே தீரும்னு பெரியவங்க சொல்லுவாங்க, கவலப்படாத, உன் வீட்டுக்காரரு சாமியா இருந்து உன் ஆசையை நிறைவேற்றுவாரு" என்று கூறிவிட்டு இருவரும் விடைபெற்றனர்.

சாயங்காலம் வாசலில் மருமகன் கை நிறைய பையோட வந்து நின்றார். ஜென்னியிடம் ஒரு பையை நீட்டினார். பையைத்திறந்து பார்த்த ஜென்னிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. `தாங்க்ஸ்ங்க தாங்க்ஸ்ங்'கன்னு முகம் மலர சிரித்தாள். `என்னம்மா ஜென்னி, மாப்பிள்ளை என்ன வாங்கிட்டு வந்திருக்காரு' என்றாள் அன்னம்மா. அதற்கு ஜென்னி, `TNPSC (Group1) குரூப் 1 எக்ஸாமுக்கு புக் வாங்கிட்டு வந்திருக்காருமா. ரொம்ப நாளா எழுதனும்னு ஆசப்பட்டுட்டு இருந்தேன். இன்னிக்கு தான் வழி பிறந்திருக்கு'னு சந்தோஷப்பட்டா.

`குரூப்1 எக்ஸாம்ன என்னம்மா'னு அன்னம்மா மகளிடம் கேட்டாள். `டெப்டி கலெக்டர், மாவட்ட பதிவாளர் போன்ற உயர்பதவி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசால் வைக்கக்கூடிய எக்ஸாம்மா. இந்த பரீட்சைய மட்டும் எழுதி நான் பாஸ் பண்ணிட்டேன்னா அப்பா நினைச்ச மாதிரி பெரிய அரசு அதிகாரியா ஆகிருவேன்'மான்னு அன்னம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்டு குதூகலித்தாள். மருமகனின் செயலைப் பார்த்த அன்னம்மாவிற்கு சந்தோஷம் தாங்கல. `நல்ல பையனுக்குத்தான் தன் மகளை மணமுடித்துக் கொடுத்திருக்கிறோம்' என்று தன் கண்கள் பனிக்க மருமகனுக்கு நன்றியைக் கூறினாள். தன் கணவரின் போட்டோவுக்கு முன்னால் சென்று, `உங்க ஆசை நிறைவேறப்போகுதுங்க.

Representational Image
Representational Image

நம்ம மக பெரியஅரசு அதிகாரியாய் ஆகப்போறாங்க, அன்னிக்கு உங்களுக்கு உதவித்தொகை வாங்கப்போனப்போ லஞ்சம் வாங்குறவங்களைப் பார்த்து ஆத்திரப்பட்டோமே, இல்லாதவங்களுக்கு உதவ யாருமில்லையானு கவலப்பட்டேனே அதுக்கெல்லாம் விடிவு பிறக்கப்போகுதுங்க'னு, மனசுக்குள்ளேயே பேசிக்கிட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

மகளுக்கு எந்த ஊரில் போஸ்டிங் போடப்போறாங்களோ? நாம துணைக்குப் போகணுமே, பணியாரக்கடைய விட்டுட்டு எப்படி போறதுன்னு சிந்திச்சுக்கிட்டே, நாளைய பொழுது எல்லோருக்கும் நல்லதாக விடியும் என்ற நம்பிக்கையோடு பல கனவுகளோடும் கற்பனைகளோடும் தூங்கப்போனாங்க நம்ம அன்னம்மாக்கா.

-அனிதா மோகன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு