Published:Updated:

``என் பள்ளி விழாவுக்கு வந்திருந்தவர் யார்னு சொன்னா நம்புவீங்களா?" - பட்டிமன்றம் ராஜா #Motivation

பட்டிமன்றம் ராஜா

மேடை ஏற வேண்டும்; 1,000 பேர் மத்தியில் பேச வேண்டும்.... இவையெல்லாம் எனக்கு மனசுக்குள் அச்சத்தைக் கொடுத்தன. அதனால், அந்தப் பொறுப்பு வேண்டாம் என நான் நினைத்தேன்.

``என் பள்ளி விழாவுக்கு வந்திருந்தவர் யார்னு சொன்னா நம்புவீங்களா?" - பட்டிமன்றம் ராஜா #Motivation

மேடை ஏற வேண்டும்; 1,000 பேர் மத்தியில் பேச வேண்டும்.... இவையெல்லாம் எனக்கு மனசுக்குள் அச்சத்தைக் கொடுத்தன. அதனால், அந்தப் பொறுப்பு வேண்டாம் என நான் நினைத்தேன்.

Published:Updated:
பட்டிமன்றம் ராஜா

பட்டிமன்றம் ராஜா வங்கி ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். சமூகம், வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றின் மீது ஆழமான பார்வையும் அழுத்தமான கருத்து வீச்சுகளும் உள்ளவர். பட்டிமன்றப் பேச்சாளராக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். அவரை `வாழ்வை மாற்றிய வாக்கியம்' பகுதிக்காகச் சந்தித்தோம், அப்போது அவர் கூறிய ஆக்கபூர்வமான கருத்துகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக...

பட்டிமன்றம் ராஜா
பட்டிமன்றம் ராஜா

``வாழ்க்கை வார்த்தைகளால் பின்னப்பட்டது. வழிநெடுக நாம் நிறைய கேட்கிறோம். சில வார்த்தைகள், சில வாக்கியங்கள், நம் காதுகளைத் தொட்டு அப்படியே காணாமல் போகின்றன. சில நம் காதுகளில் நுழைந்து, நம்மால் மறுக்கப்படுகின்றன. ஆனால், சில வார்த்தைகள் மட்டும் நம் மனதில், மூளையில், அறிவில் நுழைந்து தங்கிப்போய் நம்மை நகர்த்திச் செல்லும் வழிகாட்டியாக மாறுகின்றன.

சிறுவயதிலிருந்தே நாம் நிறைய விஷயங்களைக் கேட்டிருப்போம். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, ஆசான் என இவர்கள் சொல்லிக் கேட்ட வார்த்தைகள், அவர்கள் இல்லாமல்போன பின்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவை வல்லமை படைத்த வார்த்தைகளாக மாறிப்போய்விடும். எந்தெந்த வார்த்தைகளெல்லாம் நம் மனதில் தங்கிப் போகின்றனவோ அவையே நம்மை வழிநெடுக சோர்வடையாமல் நகர்த்திச் செல்கின்றன. `வாழ்க்கையில இதை மட்டும் மறந்துடாதே' என்று சொல்லியிருப்பார்கள். அவர்கள் இன்று இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், அவர்கள் சொன்ன வார்த்தைகள் அவர்கள் குரலிலேயே நம் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

பட்டிமன்றம் ராஜா
பட்டிமன்றம் ராஜா

நான் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து படித்த பையன். எனக்கு நகர வாழ்க்கையைப் பார்க்கும்போதெல்லாம் மனசுக்குள் ஒரு பயம் இருக்கும். எங்கள் கிராமத்தில் ஆறு, ஆறரை மணிக்கெல்லாம் ஊரே அடங்கிப்போய்விடும்.

ஊர் அடங்கிப்போவது என்றால், அந்த ஊருக்குள் அதற்குப் பின் எந்தப் போக்குவரத்தும் இருக்காது. இரவு வந்துவிட்டாலே பெரும் அமைதி எல்லா இடங்களிலும் பரவிவிடும்.

இப்போது மாதிரி வீட்டுக்கு வீடு கரன்ட்டெல்லாம் கிடையாது. எங்கோ ஒரு வீட்டில் கரன்ட் இருக்கும். அதுவும் ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும்தான் எரியும். மற்றபடி சிம்னி விளக்கு, லாந்தர் விளக்கு வெளிச்சம்தான் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும். 7 மணிக்கெல்லாம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு 8 மணிக்கெல்லாம் தூங்கப்போய்விடுவோம். அப்போதெல்லாம், நம் இரவை, உறக்கத்தை காவு கேட்கும் வானொலி, தொலைக்காட்சி, போன் எதுவும் கிடையாது.

ஊருக்குள் திருவிழா நடக்கும் நாள்களில் மட்டும், ஊர் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். மற்ற நாள்களிலெல்லாம் ஊர் ரொம்ப அமைதியாக இருக்கும். நாய்கூட சத்தம் போடாது.

அப்படிப்பட்ட ஊரிலிருந்துதான் நான் மதுரைக்கு வந்து படித்தேன். மதுரை பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப், பள்ளிக்கூடம்... இந்த மூன்றைத் தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாது. இப்படிப்பட்ட பின்புலத்துடன் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் ஆசிரியர் ஹென்றி அல்மைடா, என்னை தமிழ் இலக்கிய மன்றச் செயலாளராகத் தேர்வு செய்தார். இலக்கிய மன்றத்துக்கான பேச்சுப் போட்டிக்குப் பெயர் கொடுக்க, என் வகுப்பிலிருந்து பல மாணவர்கள் முன்வந்தனர். எனக்கு உள்ளூர பயம். எவரிடமும் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். ஆனால், ஆசிரியர் ஹென்றி என்னைப் பார்த்து, `டேய் நீ இங்க வா. நீ வந்து இதில் சேர்ந்துகொள்' என்று கூறியதுடன் 'முயற்சி திருவினையாக்கும்' என்ற தலைப்பும் கொடுத்து பேசச் சொன்னார்.

பட்டிமன்றம் ராஜா
பட்டிமன்றம் ராஜா

இப்படி, ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு தலைப்பு. எல்லோருமே சிறப்பாகவும் நன்றாகவும் பேசினார்கள். நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. அதற்குக் காரணம், செயலாளர் பொறுப்பு. அது எனக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால், மேடை ஏற வேண்டும், ஆயிரம் பேர் மத்தியில் பேச வேண்டும். இவையெல்லாம் எனக்கு மனசுக்குள் அச்சத்தைக் கொடுத்தன. அதனால், அந்தப் பொறுப்பு வேண்டாம் என நான் நினைத்தேன். `நிகழ்ச்சி நடக்கும்போது நாம பாட்டுக்கு கீழ ஜாலியா மண்ணுல உக்காந்து விளையாடிட்டு இருக்கலாம், நேரமா பஸ்ஸை பிடிச்சு வீட்டுக்குப் போயிடலாம். ஆனா...' என்று மனதுக்குள் பல புலம்பல்கள்.

மூன்று நாள்கள் கழித்து முடிவுகள் தெரிந்தன. பேச்சுப் போட்டியில் நான் தேர்ச்சி பெற்று, இலக்கிய மன்றச் செயலாளரானேன். அன்றைக்கே இலக்கிய மன்றம் தொடக்க விழா என்று, காலையிலேயே அறிவித்துவிட்டார்கள்.

மதியம் 3 மணிக்கு விழா தொடங்குவதாக இருந்தது. அந்த நேரத்தில் தலைமை ஆசிரியர் அறையிலிருந்து பியூன் ஒருவர் வந்து, ஒரு குயர் நோட்டை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார்.

நான் ஹென்றி சாரிடம் சென்றேன்.

`இது எதுக்கு சார்?'

'நீதான்டா இலக்கிய மன்றச் செயலாளர். இதுல எழுதி இருக்கிற ஆண்டு அறிக்கையை நீதான் பேசணும்.'

`சார் எனக்கு இதெல்லாம் சரிவராது சார். நான் கிராமம் சார்... என்னை விட்டுடுங்க சார்.'

`டேய்... உனக்குத்தான் இது சரியா இருக்கும். நான் உனக்கு என்ன தலைப்பு கொடுத்தேன்..? `முயற்சி திருவினையாக்கும்'. அதனால, நீ முயன்று பாரேன்... நிச்சயமா உன்னால முடியும். நீ நெனச்சா... இது என்ன, எந்தத் துறையிலும் மேலே வரலாம். எந்தப் போட்டியிலும் கலந்துகிட்டு வெற்றி பெறலாம். இதை நீ நல்லா ஞாபகம் வெச்சுக்கோ.'

இப்போது நினைத்துப் பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. நான் ஒன்று சொன்னால் நம்புவீர்களா? அந்த இலக்கிய விழாவுக்கு விருந்தினராக வந்திருந்தவர் யார் தெரியுமா? சாலமன் பாப்பையா ஐயா! இதற்கு அவர்தான் சாட்சி. இலக்கிய மன்ற ஆண்டறிக்கை வாசித்தல் முடிந்ததும், அவரிடம் நான் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். இவையெல்லாம் சத்தியமாக நடந்தவை.