Published:Updated:

முருகக் கடவுளின் அழகுச் சிற்பங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முருகக் கடவுளின் சிற்பங்கள்
முருகக் கடவுளின் சிற்பங்கள்

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்

பிரீமியம் ஸ்டோரி

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பகுத்த நிலப்பகுதிகளில், மலை சார்ந்த நிலப்பரப்பே குறிஞ்சி என்பதாகும். நிலத்திற்குரிய தெய்வமே முருகக் கடவுளாவான்.

சங்கத் தமிழ் நூல்கள் வரிசையில் பத்துப்பாட்டுள் முதல் நூலாக விளங்குவது திருமுருகாற்றுப்படை. இதில் நக்கீரர் அந்தப் பாட்டினை ஆறு பகுதிகளாகப் பிரித்துப் பாடியுள்ளார். முதற் பகுதியில் திருப்பரங்குன்றத்தின் சிறப்புகளை விரிவுறக் கூறுவதோடு முருகக்கடவுளின் திருவுருவக் கோலங்களையும் அழகுத் தமிழில் எடுத்துரைத்துள்ளார்.

kudavayil balasubramaniyan
kudavayil balasubramaniyan

அவ்வாறு கூறும்போது, `ஆறு முகங்களை உடைய கந்தக் கடவுளின் ஒரு முகம் குறவருடைய மடப்பத்தினை உடைய மகளும் வல்லிக் கொடி போன்ற இடுப்பினை உடையவளுமான வள்ளியுடன் திகழும் மகிழ்ச்சியைக் காட்டுவதாக உள்ளது’ என்கிறார்.

`ஒருமுகம் குறவர் மடமகள் நுசுப்பின்

மடவரல் வள்ளியோடு நகை அமர்ந்தன்றே’

- என்று பாட்டுகிறார் நக்கீரர்.

மார்கழி மாதத்துத் திருவாதிரை நாளுக்குரியவர் சிவன். அதுபோல், அவரின் திருக்குமரனாகிய கந்தவேள் வைகாசி மாதத்து விசாக நட்சத்திரமான (16-ம் நட்சத்திரம்) விசாக நாளில் பிறந்தவன். ஆகவே, முருகனுடைய பல திருநாமங்களில் ஒன்றாக விசாகன் எனும் திருப்பெயர் வழங்கி வருகிறது.

தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் குமரனுக்குப் பல்லவப் பேரரசர்கள் காலந்தொட்டு வடிக்கப்பெற்ற பல்லாயிரக்கணக்கான திருவடிவங்கள் தமிழகக் கோயில்களில் திகழ்கின்றன.

கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்


முக்காலப் பாண்டியர், பல்லவர், சோழர், விஜயநகரர், நாயக்கர், குறுநிலத் தமிழ் வேந்தர்கள் எனப் பலரும் கல்லிலும், செம்பிலும் எடுத்த அப்பெருமானின் திருவடிவங்களில், குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்த திருக்கோல காட்சிகளின் மாட்சிமையை இனிக் காண்போம்.

 பல்லவப் பேரரசர்கள் காலத்தில் எடுக்கப்பெற்ற குடைவரைக் கோயில்களிலும் கட்டுமானக் கோயில்களிலும், கருவறையில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் சிவபெருமான் உமையம்மை ஆகிய இருவரும் அமர்ந்திருப்பார்கள். அவர்களின் இடையே குழந்தை முருகன் இடம் பெற்றிருப்பான்.

சோமாஸ்கந்தர்
சோமாஸ்கந்தர் மாமல்லபுரத்தில் உள்ள திருமூர்த்தி குடைவரைக் கோயிலில் சிவன், திருமால், முருகன் ஆகிய மூவர்க்கும் தனித்தனி குடைவரைகளும் அதில் அந்தந்த மூர்த்திகளின் திருவுருவங்களும் காணப்பெறுகின்றன. இங்கு காணப்பெறும் கந்தனின் வடிவம் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

 திருச்சிராப்பள்ளி கீழ் குடைவரையில் உள்ள முருகனின் சிற்ப வடிவம் பிரமாண்டமானது. இதனைப் பல்லவர் படைப்பென்றும், `இல்லை முத்தரையர்களின் படைப்பே’ என்றும் வல்லுநர்கள் கூறுவர்.

 புதுக்கோட்டை மாவட்டம் - திருவேங்கை வாயில் சிவாலயத்தில், அமர்ந்த கோல முருகப்பெருமானின் கற்சிற்ப வடிவைக் காணலாம். மடக்கிய இடது தொடையின் மீது இடக்கரத்தை ஊன்றியவாறு, வலக் கரத்தால் அபயம் காட்டி, பின்னிரு கரங்களில் முறையே அக்க மாலையும் வஜ்ஜிராயுதமும் ஏந்தியவராகத் திகழ்கிறார் இந்த முருகன். இப்பெருமானின் தலைக்குப் பின்புறம் சோதி வடிவான சுடர்களுடன் திகழும் ஒளி வட்டம் உள்ளது.

மேலப்பழுவூர் முருகன்
மேலப்பழுவூர் முருகன்
கழுகு மலை முருகன்
கழுகு மலை முருகன்முருகனின் இந்தக் கோலம், `ஞான ஸ்கந்தன்’ எனக்குறிப்பிடப் பெறும் ஞானத்தின் திருவடிவமாகும். முற்காலப் பல்லவர், பாண்டியர் கலைகளின் சங்கமித்த ஒரு வடிவமாக இதனைக் கருதலாம்.

 கி.பி எட்டாம் நூற்றாண்டில் மதுரை ஒத்தக்கடை ஆனைமலையில் முற்கால பாண்டியர் கால அதிகாரிகளால் குடைவிக்கப்பெற்ற நரசிங்கர் குடைவரையும், கந்தனின் குடைவரையும் உள்ளன.

அங்கு முருகன் ஒரு காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் திகழ்கிறான். அருகே ஒரு கையை உயர்த்திய வண்ணம் மலர் ஏந்திய வடிவில் மார்பில் கச்சையணிந்த பெண் உருவம் ஒன்று காணப்படுகிறது. அவ்வடிவத்தினை இந்திரனின் மகளாகிய தெய்வானை என்றே அனைவரும் கூறுவர்.

சங்கத் தமிழ் நூல்களாகிய பரிபாடல், நற்றிணை, திருமுருகாற்றுப் படை ஆகியவற்றில் காணப்பெறும் குறிப்புகளையும், திருஞான சம்பந்தரின் திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய இரு தலப்பதிகத்தின் பாடல்கள், அரிசிற்பக்கரை புத்தூர் பாடல், திருநாவுக்கரசரின் திருமறைக்காட்டு திருக்குறுந்தொகை பாடல் ஆகிய அனைத்தையும் தொகுத்து நோக்கும்போது, ஆனைமலையில் குமரனுடன் அமர்ந்திருப்பது வள்ளி நாயகியே என்பதை உய்த்து உணரலாம்.

 கழுகுமலையில் உள்ள பாண்டியர் குடபோகக் கோயில் விமானத்தில் உள்ள அமர்ந்த கோல ஞானகுமரனின் திருவடிவம், பாண்டியர் கலையின் உச்சத்தைத் தொட்ட படைப்பாகும்.

 பல்லவர் படைத்த சிவாலயங்களின் கருவறைச் சுவரில் இடம் பெற்ற தந்தை தாயுடன் இடம்பெற்ற குழந்தை முருகனின் கற்சிற்ப வடிவங்களைச் சோழப் பேரரசர்கள் செம்பில் வடித்து அனைத்து சிவாலயங்களிலும் சோமாஸ்கந்தராக இடம்பெறச் செய்தனர். அவை உலகக் கலை வல்லவர்களால் தலைமிசை வைத்துப் போற்றப் பெறுகின்ற சிறப்பினைப் பெற்றவையாம்.

 சோழர்களின் சிற்றரசர்களாக மேலப்பழுவூரினைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் பழுவேட்டரையர்கள். இவர்கள், `கீழையூர் அவநிகந்தர்ப்ப ஈஸ்வர கிருஹம்’ என்ற பெயரில் எடுத்த இரட்டைக் கோயிலில் திகழும் நின்ற கோல முருகனின் வடிவமும் அமர்ந்த கோல வடிவமும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

 கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயத்தில் ராஜேந்திரசோழன் வடித்த நின்ற கோல முருகனின் கற்சிற்பமும் வாள், கேடயம், குத்தீட்டி, சேவல் ஆகியவற்றைத் தரித்த போர்க்கோல முருகப்பெருமானின் செப்புத்திருமேனியும் சோழர் கலையின் முத்திரைப் படைப்புகளாகும்.

lord murugan
lord murugan
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்


 மாமன்னன் ராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலின் முதல் ராஜகோபுர அதிட்டானத்தில் முருகப்பெருமானின் வள்ளித் திருமணக் காட்சிகளைத் தொடர் காட்சிகளாக வெட்டுவித்துள்ளான். அதுவரை எங்கும் நாம் வள்ளி திருமணக் காட்சி சிற்பங்களைக் காண முடியவில்லை.

 இதன் தாக்கத்தால், இதே கோயிலில் செவ்வப்ப நாயக்கர் எடுத்த கந்தக் கோட்டத்தின் மேற்புறச் சுவரில், வள்ளி தினைப்புனம் காவல் காப்பது, கணபதி பெருமான் யானையாக வருவது, வேடுவனாகிய முருகனை வள்ளி தழுவுதல் போன்ற தொடர் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பல்லவர் கால சோமாஸ்கந்தர்
பல்லவர் கால சோமாஸ்கந்தர்
முருகனின் நாட்டியம்
முருகனின் நாட்டியம் இதே கந்தகோட்டத்து முதல் தளத்து கபோதகக் கூடுகளில் ஓர் அடி உயரத்தில் 52 வகையான முருகனின் கற்சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. வெண்பன்றி வாகனம், நரவாகனம் என வேறு எங்கும் காண முடியாத அரிய காட்சிகளை அங்கு காண முடியும். தஞ்சைப்பெரிய கோயிலில் உள்ள கந்த கோட்டத்திற்கு இணையாக ஒரு முருகன் கோயிலைக் காண்பது அரிது.

 கும்பகோணத்து சார்ங்கபாணித் திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் கிபி 15-ம் நூற்றாண்டில் திப்பதேவ மகாராய ரா ல் கட்டப் பெற்றதாகும். அதனை அவர் எடுக்கும்போது, அருகில் இருந்த பழைய சிவாலயத்தில் இடம்பெற்றிருந்த 108 நாட்டிய கரணச் சிற்பங்கள் சிதறிக் கிடந்தன. அச்சிற்பங்களை எடுத்து அந்த ராஜகோபுரத்தில் பதித்து வைத்தான். அக்கரணச்சிற்பங்களில் கரணம் காட்டி ஆடுவது முருகப்பெருமானே. இவை அனைத்தும் குகேசபரதலக்ஷ்ணம் எனும் சுவடி நூலின் அடிப்படையில் படைக்கப் பெற்றவை ஆகும். இங்ஙனம் கந்தனின் எழில் கோலங்களைப் பெற்ற தமிழகம் ஒரு சொர்க்க பூமியாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு