Published:Updated:

1942-க்குப் பின் முதல்முறை! - மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணி

``அம்மன், சுவாமி கருவறைப்பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் எனக் கோயிலில் மொத்தம் 70 கல்வெட்டுகள் இருக்கின்றன. இன்னும் பல இருக்கலாம்.''

Inscription
Inscription

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் பதிப்பிப்பதற்கான பணி, திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில், மூத்த தொல்லியலாளர் சொ.சாந்தலிங்கம் தலைமையில் இன்று தொடங்கியது. சொ.சாந்தலிங்கம் கூறுகையில், ``கடந்த 1935-36 காலகட்டத்திலும், 1941-42 காலகட்டத்திலும் கோயில் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டன. மைசூரில் வைத்து படியெடுக்கப்பட்டு சென்னையில் `இந்தியக்கல்வெட்டு ஆண்டறிக்கை’யாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவையனைத்தும் ஆங்கிலக்குறிப்புகளாக மட்டுமே இருக்கின்றன.

Inscription
Inscription

அதனால், திருக்கோயில் இணை ஆணையரின் நீண்டகாலக் கோரிக்கையின்படி தற்போது முறையான அனுமதியோடு நாங்கள் `பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வுமையம்’ சார்பில் இந்தப்பணியைத் தொடங்கியிருக்கிறோம். அம்மன், சுவாமி கருவறைப்பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் எனக் கோயிலில் மொத்தம் 70 கல்வெட்டுகள் இருக்கின்றன. இன்னும் பல இருக்கலாம். எல்லாமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. எனது தலைமையில் இரண்டுபேர் இணைந்து பணி செய்யவுள்ளோம். நிலங்களைத் தானமாகக் கொடுத்தது, கோபுரங்கள் பற்றிய குறிப்புகள் ஆகியவை இந்தக் கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கலாம்” என்றார்.

இணை ஆணையர் நடராஜன் பேசியபோது, ``கோயில் வரலாறு பற்றி நிறைய காலபேதங்கள் தெரிகின்றன. மன்னர்கள் வாழ்ந்த காலம், அவர்களின் இறைத்தொண்டுகள் என எல்லாவற்றையும் தெளிவு செய்துகொள்ள இந்தக் கல்வெட்டுச் செய்திகள் உதவும். அதனால்தான் தற்போது இந்தப்பணியைத் துவங்கியுள்ளோம்” என்றார். ஒருபக்கம் கீழடி ஆய்வு நடக்கின்றதே, அதன் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இல்லையென மறுத்தனர், இருவரும்.

Inscription
Inscription

மேலும், அது அகழாய்வு. இது கல்வெட்டுப் படியெடுத்தல். இரண்டுக்கும் தொடர்பில்லை; இரண்டையும் தொடர்புபடுத்த வேண்டியதில்லை எனப் பதிலளித்தனர். மூத்த தொல்லியலாளர் சாந்தலிங்கம், படியெடுக்கும் முறை குறித்து விளக்கி, மாதிரிப் படியெடுத்துப் படித்துக்காட்டினார்.