Published:Updated:

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

பிச்சாவரம்
பிரீமியம் ஸ்டோரி
பிச்சாவரம்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: வால்வோ V90

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: வால்வோ V90

Published:Updated:
பிச்சாவரம்
பிரீமியம் ஸ்டோரி
பிச்சாவரம்

ஓர் அதிர்ச்சி – ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கெயிலும் அடிக்கவில்லை; சென்னையில் வெயிலும் பொளக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான் பீச்சுக்குப் போகலாமே என்று திட்டம் போட்டோம். சென்னைக்கு மிக அருகில் மகாபலிபுரம்… அப்படியே போனால் பாண்டிச்சேரி… அதையும் தாண்டினால் பிச்சாவரம். ‘பிச்சாவரத்தில் ஏது பீச்; அது பேக்வாட்டர்தானே… அலையாத்திக் காடுகள்தானே ஸ்பெஷல்’ என்று மண்டையைச் சொறிந்தால், ‘நான் ஒரு பீச்சுக்குக் கூட்டிட்டுப் போறேன்.. வாங்க’ என்று இன்வைட் செய்தார், பிச்சாவரத்தில் ‘நெய்தல்’ என்றொரு மண்பானை உணவகம் வைத்திருக்கும் நீதி. ‘‘அப்போ என் வால்வோவில் போகலாம்!’’ என்று முன்வந்தார், சென்னையின் மிகப் பெரிய ப்ரீமியம் யூஸ்டு கார் ஷோரூம் ஓனரும், சட்டக் கல்லூரி மாணவருமான உமர். நண்பர்கள் புடை சூழக் கிளம்பியதால், எக்ஸ்ட்ராவாக ஒரு ஹூண்டாய் காரும் கிளம்பியது.

எம்ஜிஆர் திட்டு எனும் அந்த இடம், ‘சிட்டிசன்’ ஸ்டைலில் சொல்லப் போனால், காணாமல் போன அத்திப்பட்டு கிராமம் என்றே சொல்லலாம். 2005–ல் வந்த சுனாமிக்குப் பிறகு இங்கிருந்த 400 குடும்பங்களில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்து, மீதமுள்ள மக்கள் அப்படியே முழுக்குத்துறை தாண்டிக் குடிபெயர்ந்த பிறகு… எம்ஜிஆர் திட்டு வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது.

இனி ஓவர் டு எம்ஜிஆர் திட்டு பீச்!

* சென்னையில் இருந்துதான் பயணம். காலை உணவை முடித்துவிட்டு, வண்டலூர் பைபாஸ் தாண்டி புகைப்பட நிபுணரை ஏற்றிக் கொண்டு… 99 கிமீ காபிக் கடையில் ஃபில்டர் காபி உறிஞ்சிவிட்டு… என்று வழக்கம்போல் ஹைவேஸ் பயணம் தெறியாகவே இருந்தது.

பாண்டிச்சேரி – பிச்சாவரம் – முழுக்குத்துறை என்பதுதான் ரூட். பாண்டிச்சேரிக்கு வழக்கம்போல் எந்தப் பக்கம் போவது என்று விவாதம். திண்டிவனம் ரூட்டுக்கு அடித்தது அதிர்ஷ்டம். இ–பாஸ் கேட்பார்களோ என்று நினைத்துப் பயந்தோம். நல்லவேளையாக செக்கிங்கூடப் பண்ணவில்லை.

* வால்வோவுக்கு ஹைவேஸ், சிட்டி எதுவென்றாலும், மிகவும் பிடிக்கும்போல! எந்த இடத்தில் ஆக்ஸிலரேட்டர் மிதித்தாலும்… பவர் கொப்புளிக்கிறது. வால்வோ மாதிரி ஒரு காரில் ஹைவேஸில் பறப்பதற்குக் கொடுத்து வைக்க வேண்டும். பொசுக்கென பாண்டிச்சேரி வந்திருந்தது வால்வோ V90. ஹூண்டாயும் ஈடு கொடுத்துப் பார்த்தது.

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு
பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

*மதியம் பாண்டிச்சேரியில் ‘காமாட்சி மெஸ்’ என்றொரு உணவகத்தில், நான்–வெஜ் சாப்பாடை ஒரு பிடி பிடித்துவிட்டு மறுபடியும் பிச்சாவரம் ரூட். வெறும் 70 கிமீதான் சொல்லியது கூகுள். பரங்கிப்பேட்டை, முட்லூர் என இரண்டு வழி உண்டு. எதுவாக இருந்தாலும், சிதம்பரத்துக்கு 10 கிமீ முன்பே திரும்ப வேண்டும். ‘வால்வோ இருக்கே… ஒரு மணி நேரத்தில் பறந்துடலாம்’ என்கிற எங்கள் நினைப்பில் மண் அள்ளிப் போட்டது பாதை. குலுங்கிக் குலுங்கி பிச்சாவரம் போய்ச் சேர.. மாலை மங்கிவிட்டது.

* போகும் வழியில் வெள்ளாறு எனும் ஆற்றில் மாலை வெயிலுக்கு இதமாய்க் குளித்துக் கொண்டிருந்தார்கள் சிலர். பிச்சாவரம் வழியெங்கும் வெரைட்டியாக இருந்தது. ஒரு பக்கம் கடலில் பேக்வாட்டர்… அதில் மிதக்கும் படகுகள்… வலதுபக்கம் பச்சைப் பசேல் நெல்வயல்கள்…கரும்புத் தோட்டங்கள்… கடலைக் காடுகள் என்று கலந்துகட்டி மயக்கியது பாதை. ஓரிடத்தில் சுத்தமான… அதாவது மண் அப்பிய வேர்க்கடலையை விளைச்சல் செய்து கொண்டிருந்தார்கள். இங்கு படிக்கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது மல்லாட்டை எனும் வேர்க்கடலை. பசுமை விகடனுக்கு ஒரு மல்லாட்டைக் கட்டுரை பார்சேல்..!

*பிச்சாவரத்தை நெருங்கும் வழியில் கிள்ளை என்றோர் இடத்தில் வரும் இயற்கை உணவகத்தை மிஸ் செய்யாதீர்கள். பனங்கருப்பட்டி வேர்க்கடலை உருண்டை, சுக்குமல்லிக் காபி, நாட்டுச் சர்க்கரைப் பச்சரிசிப் புட்டு, வாழைப்பூ வடை என்று ஸ்நாக்ஸ்களை அள்ளிக் கொண்டு போகலாம். கொஞ்ச தூரம் தள்ளி ஒரு மெரைன் கல்லூரி இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய தேடல் உள்ளவர்களுக்கு நல்ல ஆப்ஷன்.

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு
பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

*ஒரு வழியாக பிச்சாவரம் வந்தால்… ‘நெய்தல்’ உணவகத்தில் காத்துக் கொண்டிருந்தார் நீதி. பிச்சாவரத்துக்கு ட்ரிப் அடிப்பவர்கள், ‘நெய்தல்’ உணவகத்தை மிஸ் செய்யவே முடியாது. காரணம், புன்னைமரக் காட்டுக்குள் போட்டிங் செல்பவர்கள், நெய்தலைத் தாண்டித்தான் போக வேண்டும். இங்குள்ள ‘ஒண்ணே ஒண்ணு; கண்ணே கண்ணு’ உணவகமும் இதுதான். செலிபிரிட்டிகளின் சாய்ஸும் நெய்தல்தானாம். போர்டிலேயே இயக்குநர் மிஸ்கின்தான் ஏதோ ஒரு மீன் முள்ளை எடுத்துக் கொண்டிருந்தார். ‘‘நான் ஒரு ஊர் சுத்திங்க. ஊர் சுத்துறதுல முக்கியமான பங்கு சாப்பாட்டுக்குத்தான். சாப்பாடு நல்லா இல்லைன்னா அந்த ட்ரிப்பே நல்லா இல்லாமப் போயிடும்! அதனால்தான் பிச்சாவரத்தில் நான் மரபுசார் மண் சட்டிச் சமையல் பண்ணித் தர்றேன்’’ என்றார் நீதி.

* மடவை/பாறை மீன் வறுவல், மத்தி மீன் குழம்பு, நண்டு பிரட்டல், இறால் தொக்கு, கணவாய் ஃப்ரை என்று மத்தியான உணவை செமத்தியான உணவாக்குகிறது நெய்தல். ஆனால், நமது திட்டமே வேறு. தேவையான கடல் வஸ்த்துக்கள் அனைத்தையும் Raw–ஆக பர்ச்சேஸ் செய்து, எம்ஜிஆர் திட்டு பீச்சில் கடலுக்குப் பக்கத்தில் சமைத்துச் சாப்பிடுவதுதான் திட்டமே!

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

* எம்ஜிஆர் திட்டு, தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லை. மின்சாரம் கிடையாது; போன் நெட்வொர்க் இருக்காது; குடிக்கத் தண்ணீர் கிடைக்காது; ஆனால், ஊர்க்காரர்களின் உதவியுடன் டென்ட் அடித்துத் தங்கினால்.. வேற லெவலில் இருக்கும். நாம் சிதம்பரத்தில் தங்கிவிட்டு, காலை 5 மணிக்குள் முழுக்குத்துறையில் படகேறி எம்ஜிஆர் திட்டில் சன்ரைஸ் பார்ப்பது என்று முடிவானது.

* நள்ளிரவு 4 மணிக்கெல்லாம் எழுந்து சிதம்பரத்தில் இருந்து முழுக்குத்துறைக்கு வண்டியை விட்டோம். கிண்ணென்ற பாறை மீன், ஃப்ரெஷ்ஷாகப் பிடிக்கப்பட்ட இறால், நண்டு, கணவா… அவற்றைச் சமைப்பதற்கு கேஸ் அடுப்பு, பாத்திரங்கள் என்று தேவையான அனைத்தையும் படகில் ஏற்றினோம். முழுக்குத்துறை கிராமத்துக்கு பிச்சாவரத்தில் இருந்து ஒரே ஒரு பஸ் வந்து போகிறது. ஆனால், எம்ஜிஆர் திட்டுக்குப் போவதற்குப் படகுப் பயணம்தான் ஒரே ஆப்ஷன்.

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு
பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

* அதிகாலையில் படகில் போவது வித்தியாசமாக இருந்தது. பிச்சாவரத்தில் உள்ள அதே பேக்வாட்டரின் மிச்சம் மீதி மாதிரிதான் இருந்தது. ஆழமே இல்லாத பாதுகாப்பான பயணம் என்றாலும், நீர்ப்பூச்சிகள், நண்டுகள், சேறு சகதியோடு கொஞ்சம் அழகாகவும், கொஞ்சம் பயமாகவும்தான் இருந்தது.

* இந்த பேக்வாட்டரைப் பற்றி ஓர் அற்புதம் சொன்னார்கள். அதாவது, நேரம் ஆக ஆக இந்தத் தண்ணீரின் அளவு ஏறிக் கொண்டே இருக்குமாம். இதேபோல் தெங்குமரஹடா எனும் காட்டுப்பகுதியில் மாயாறு என்ற ஓர் ஆறு நினைவுக்கு வந்தது. மாயாறு ஆற்றுக்கும் இதே கேரக்டர்தான். சுமார் 2.5 கிமீ படகுப் பயணம் இருக்கும். எம்ஜிஆர் திட்டில் இறங்கும்போது, லேசாக விடிந்திருந்தது.

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு
பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

* கும்மிருட்டாகவும் இல்லாமல், ரொம்ப வெளிச்சமாகவும் இல்லாமல்… ஒரு மாதிரியான க்ளைமேட் அது. ஆனால், ரொம்ப லயித்துப் போனது மனசு. இறங்கியதும், மயில்கள் அகவும் சத்தம். கேட்டது. கருவை மரங்களும், பெயர் தெரியா செடிகளும், சுற்றிலும் தண்ணீரும் அடங்கிய இந்தத் தீவில் அந்தச் சத்தத்தை கேட்பது விசித்திரமாக இருந்தது.

* ‘தீவாச்சே… விலங்குகள் எதாச்சும் இருக்கா’ என்றதற்கு, ‘‘இங்க நரிங்க மட்டும்தான் எப்போவாச்சும் வந்து போகும். அதுவும் பிச்சாவரம் பக்கம் ஒதுங்கிடும்’’ என்றார் நீதி.

* ஒரு 1.5 கிமீ ட்ரெக்கிங். காட்டுக்குள் நடப்பதற்கும், தீவுக்குள் நடப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இரண்டும் வெவ்வேறு மாதிரியான உணர்வுகள். இது கலந்துகட்டி இருந்தது. தூரத்தில் ஒரு பாழடைந்த கட்டடம். அது பள்ளிக்கூடமாகவோ, ஏதாவது அரசாங்கக் கட்டடமாகவோதான் இருக்க வேண்டும். அதைத் தாண்டி மணல் மேட்டில் இறங்கினால்… வாவ்! வேறொரு உலகமாய் விரிந்து கொண்டிருந்தது எம்ஜிஆர் திட்டு தீவு.

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு
பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

* வங்காள விரிகுடாவின் ஏதோ ஒரு பகுதி… கண்ணுக்குப் பேரழகாய் இருந்தது. சூரிய உதயத்துக்காகக் காத்திருந்தால்.. மேகங்கள் சொதப்பிவிட்டன. கடற்கரையில் நண்டுகள் சலசலக்க… அதைப் பிடிக்க ஓடியபடி கரையில் கால் நனைத்து… சரியான என்டெய்ர்மென்ட் போங்கள். காலைச் சூரியனைக் கண்ணடித்தபடி, கைப்புள்ள வடிவேலு ஸ்டைலில் கண் இமைகளை மூடி சில நிமிடங்கள் இருந்தால் - ஜென்நிலை கேரண்ட்டி.

* நாம் போன நேரம் மீன் பிடிக் காலத்துக்குத் தடை போட்டிருந்த நேரம். அதனால் கண்ணுக்கெட்டிய வரை யாருமே இல்லை; வெயிலோ… மழையோ எந்த நேரத்தில், எப்படிப் பார்த்தாலும் கடல் அழகாக இருக்கும். தனிமை வேறு. இப்போது மொத்த வங்காள விரிகுடாவும் நமக்குச் சொந்தம் போல் அழகாக இருந்தது. கரைக்கு மிகவும் பக்கத்திலேயே ஏதோ ஒரு பெயர் தெரியான மீன் வகை, தன் ஃபேமிலியோடு டைவ் அடித்தபடி நீந்திக் கொண்டிருந்தது அற்புதமான வியூ. ‘‘மத்த நேரமா இருந்தா இங்க ஒரு 100 படகுங்களாச்சும் இருக்கும்’’ என்றார் நெய்தல் நீதி.

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு
பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

* சுனாமிக்கு முன்பு வரை எம்ஜிஆர் திட்டு என்பது தீவு இல்லை; மக்கள் புழங்கிய ஊர். ‘‘சுனாமிக்குப் பிறகு ஏகப்பட்ட பேர் செத்துப் போயிட்டாங்க… அந்தக் கட்டடம் மட்டும்தான் மிஞ்சியிருக்கு… சனங்க யாரும் இங்கே இருக்கப் பயந்து… பக்கத்து ஊருக்குப் போயிட்டாங்க!’’ என்றார் நமது படகோட்டி முகேஷ்.

* கொண்டு வந்த உயிரினங்களை அப்படியே கடல் நீரில் கழுவி… அந்தப் பாழடைந்த கட்டடத்துக்கு அடியில் அடுப்பைப் பற்ற வைத்து… ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சியே பண்ணலாம் அளவுக்கான ஏற்பாடு அது.

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

* காலை உணவாக இட்லி/தோசையுடன் நண்டுக் குழம்பு, மீன் குழம்பு, பாறை வறுவல், கணவாய், இறால் என்று வெரைட்டியாகச் சாப்பிட்டது, நிச்சயம் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு!

* எல்லாம் முடிந்துவிட்டு மறுபடியும் படகேறினால்… முகேஷ் சொன்னதுபோல், பேக் வாட்டரின் அளவு ஏறியிருந்தது. மறுபடியும் படகுப் பயணம்.

* ‘அடுத்த வீக் எண்டில் எம்ஜிஆர் திட்டுக்கு ஃபேமிலியோட ஒரு ட்ரிப் அடிச்சுட வேண்டியதுதான்’ என்று வீட்டில் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தபோதுதான், ‘‘ஞாயிறு முழுவதும் ஊரடங்கு’’ என்று செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

பிச்சாவரத்துக்குப் பக்கத்தில்... இப்படி ஒரு தீவு! - சென்னை to முழுக்குத்துறை எம்ஜிஆர் திட்டு

வால்வோ V90 எப்படி?

வால்வோக்களில் க்ராஸ் கன்ட்ரி மாடல்தான் இந்த V90. இதை ஒரு ஸ்டேஷன் வேகன் மாடல் என்று சொல்லலாம். பழைய டாடா சஃபாரி ஸ்டைலில் பின் பக்கம் மிகவும் நீளமாக… வீல் பேஸ் அதிகமாக… என்று ஜம்மென்று பயணிக்கலாம். ‘‘நாங்க வெச்சிருக்கிறது D5 Inscription மாடல். இதோட ஆன்ரோடு விலை சுமார் 75 லட்சம் வரும். எனக்கு கார் ரைடிங்கில் செம இன்ட்ரஸ்ட். அதிலும் வால்வோ ஓட்டச் சொன்னா… நாள் முழுசும் ஓட்டிக்கிட்டே இருக்கலாம்!’’ என்கிறார் உமர். இந்த வால்வோவின் 2.0லி டீசல் இன்ஜின் சத்தம்தான் பிச்சாவரம் முழுக்க அதிர்ந்தது. ஆனால், கேபினுக்குள் எந்த வைப்ரேஷனும், சத்தமும் கேட்கவில்லை என்பது வாவ்! அந்தளவு NVH லெவலில் கலக்குகிறது வால்வோ. கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளத்தை நெருங்கும் பெரிய காராக இருந்தாலும், 7 சீட்டர் இல்லை என்பது யோசிக்க வேண்டிய விஷயம். இது ஒரு 5 சீட்டர் ஸ்டேஷன் வேகன். பார்க்கிங் பண்ண ரொம்ப இடம் பிடித்தாலும், சிட்டிக்குள்ளும் சரி – நெடுஞ்சாலையிலும் சரி – இந்த வால்வோவை ஓட்டினால்.. ஃபன் டு டிரைவ் கேரன்ட்டி!

நோட் பண்ணுங்க!

சென்னையில் இருந்து பிச்சாவரத்துக்கு ட்ரிப் அடிப்பவர்கள், எம்ஜிஆர் திட்டு பீச்சில் சும்மா ஒரு குளியல் போட்டு வரலாம். சுனாமிக்கு முன்பு வரை எம்ஜிஆர் திட்டு, பரபரப்பான ஓர் ஊராகத்தான் இருந்தது. இப்போது, தனித்து விடப்பட்ட ஒரு தீவு. இது ஒரு மிகப் பிரபலமான சுற்றுலாத் தலம் இல்லை. ஆனால், வீக் எண்டில் சென்று குளித்து வர ஓர் அற்புதமான இடம். ஊர்க்காரர்களின் அனுமதியோடுதான் இங்கே போய் வர முடியும். பிச்சாவரத்துக்கு இடதுபுறம் முழுக்குத்துறை என்றொரு ஏரியா. இதுவரை பஸ் வசதி உண்டு. அதன் பிறகு படகில்தான் எம்ஜிஆர் திட்டு தீவுக்குச் செல்ல முடியும். அதிகாலையில் இங்கே என்ட்ரி கொடுத்தால்… கன்னியாகுமரி கடற்கரைக்கு இணையாக இங்கே சூரிய உதயம் பார்க்கலாம் என்பது ஸ்பெஷல். பாண்டிச்சேரியில் இருந்து இதற்கு இரண்டு வழிகள். முட்லூர் அல்லது பரங்கிப்பேட்டை என இரண்டு வழிகள் உண்டு. பிச்சாவரம் படகுப் பயணம் வருபவர்கள், போட் ஹவுஸுக்கு முன்பே உள்ள ‘நெய்தல்’ எனும் மரபுசார் மண்சட்டி உணவகத்தின் கடல் உணவில் கை வைக்க மறக்காதீர்கள் (9600205122). எழுபது ரூபாய்க்கு அன்லிமிட்டெட் மீல்ஸோடு, மீன் – நண்டு – இறால் – கணவா – என்று வெரைட்டியான கடல் உணவுகளை ஒரு கை பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism