Published:Updated:

மதுரையிலிருந்து பேனா விற்று விழுப்புரத்தில் படித்து TNPSCக்கு தயாராகும் பாபு! - ரயில் பெட்டிக்கதைகள்

ரயில் பயணம்
News
ரயில் பயணம்

காலையில 7 மணிக்கு வியாபாரத்துக்காக மதுரையில் ஏறினா, 11 மணிக்கு விழுப்புரத்தில் இறங்குவேன். 5 மணி நேரம் விழுப்புரத்துல உட்கார்ந்து படிச்சுட்டு திரும்பி சாயங்காலம் 4 மணிக்கு ரயில் ஏறினா 9 மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். வழக்கத்தைவிட வெயில் அதிகமான ஒரு நற்பகல். ரயிலைப் பிடிக்க பரபரப்பாகப் பலர் ஓடிக்கொண்டிருக்க... ``மத்தவங்க மாதிரி அவசர அவசரமா ரயிலைப் பிடிச்சு, சரியான நேரத்துக்கு வேலைக்குப் போகணும்னு பதற்றம் எனக்கு இல்லே. என்னோட வேலையே ரயில்லதான். இந்த ரயிலை விட்டா அடுத்தது' என மனதுக்குள் சொல்லிக்கொண்டே, நிதானமாக நடக்கத் தொடங்கினான் பாபு.

ரயில் பயணம்
ரயில் பயணம்
பா.காளிமுத்து

பாபுவின் தோளில் ஜோல்னா பை. வைகை எக்ஸ்பிரஸை நெருங்கி ஏறினான். ரயில் கிளம்பியதும், பைக்குள்ளிலிருந்து எடுத்த அந்தக் கரடி பொம்மைக்கு கீ கொடுத்தான். அது, `டப... டப... டப...' என்று மேளம் அடித்தவாறு, மக்களின் பல்வேறு சத்தங்களுக்கு மத்தியில் தன் இருப்பை அறிவித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரயில் பயணம்
ரயில் பயணம்
சி.பால சுப்ரமணியன்

``என்ன பாபு, பேனாவும் பொம்மையும் கம்மியா இருக்கு... இன்னிக்கு செமத்தியான வியாபாரமா? அப்படின்னா, சீக்கிரம் வீட்டுக்குப் போயிருவே'' - பழங்களின் வாசத்துடன் நெருங்கினாள் சுந்தரி.

``காலையில் 7 மணிக்கே வியாபாரத்தை ஆரம்பிச்சுட்டேன்க்கா. இது ஆறாவது ரயில். போஸ்ட் ஆபீஸ் செந்தில் சாரு, தாம்பரம் வர்றதா சொன்னாரு. அவரைப் பார்த்துப் பேசிட்டு வீட்டுக்குப் போகணும். என்னக்கா, உங்க பொண்ணுக்கு வரன் அமைஞ்சுதா?'' என்று கேட்டான் பாபு.

``என்னத்த சொல்ல பாபு, பார்க்க வர்றவங்க எல்லாம், `பொண்ணுக்கு எத்தனை பவுன் போடுவீங்க... வண்டி வாங்கித் தருவீங்களா, அதுல பெட்ரோல் ஊத்தி தருவீங்களா'னு கேட்கறாங்க. வீட்டுக்காரர் போனதுக்கு அப்புறம், அவளைப் படிக்க வெக்கவே ராப்பகலுமா பழம் வித்து, படாத பாடுபட்டாச்சு. பவுனுக்கு எங்கே போறது? சரி சரி... தாம்பரம் வரப்போகுது. பாத்து சூதானமா போ" என்று சொல்லிவிட்டு வியாபாரத்தில் மும்முரமானார் சுந்தரி அக்கா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``பேசும்போது கீச்சுக்குரலா இருந்தாலும், வியாபாரத்துல இறங்கினதும் உன் குரலு எட்டு ஊருக்கு கேட்குதுக்கோய். நான் வர்றேன்'' என்றான் பாபு.

தாம்பரத்தில் வண்டியைவிட்டு இறங்கும்போதே, ``பாபு எப்படி இருக்க? உன்னைப் பார்த்து எத்தினி நாளு ஆச்சுப்பா?" என்று கைகளை இறுகப்பற்றிக் கொண்டார் செந்தில் சார்.

``நல்லா இருக்கேன் சார், வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? உங்க மகனுக்கு வேலை கிடைச்சுருச்சா?''

``இல்லே பாபு, கிடைக்குற வேலைக்குப் போடானு சொன்னா, படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைச்சாதான் போவேன்னு பிடிவாதமா நிக்கிறான். பென்சன் பணத்துல சாப்பாடு போட்டுட்டு இருக்கேன். எம்.பில் வரை படிச்சுட்டு, கெளரவம் பார்க்காம ரயில்ல பேனாவும் பொம்மையும் விக்கிற உன்னைத்தான், உதாரணமாச் சொல்லிட்டுருப்பேன்.

ரயில் பயணம்
ரயில் பயணம்

சரி சரி, நீ டி.என்.பி.எஸ்.சி படிச்சுட்டிருந்தியே எக்ஸாம் எழுதிட்டியா?''

``எங்கே சார்... காலையில 7 மணிக்கு வியாபாரத்துக்காக மதுரையில் ஏறினா, 11 மணிக்கு விழுப்புரத்தில் இறங்குவேன். 5 மணி நேரம் விழுப்புரத்துல உட்கார்ந்து படிச்சுட்டு திரும்பி சாயங்காலம் 4 மணிக்கு ரயிலு ஏறினா, 9 மணிக்குத்தான் வீட்டுக்கு போறேன். சிலநாள் சென்னை வரை வந்து வியாபாரம் பண்ண வேண்டியிருக்கு. எக்ஸாம் எழுதி முடிக்க எப்படியும் இன்னும் ஒரு வருஷமாவது ஆகும் சார்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இப்படி வந்து உட்கார் பாபு... டீயா, காபியா?''

``அதெல்லாம் வேணாம் சார். உங்களுக்கு எதுக்கு சிரமம்?''

``இதுல என்னப்பா சிரமம்? என்ன வேணும்னு சொல்லு'' என்று பாபுவின் தோளில் கை போட்டு உரிமையோடு அழைத்துச் சென்றார் செந்தில்.

``காபியே சொல்லிடுங்க சார்'' என்று தயக்கத்துடன் சொன்ன பாபு, கடை பக்கம் தலையைத் திருப்பி, ``அண்ணே... பாட்டை மாத்தி, கொஞ்சநேரம் நியூஸ் போடறீங்களா?'' என்று மென்மையான குரலில் கேட்டான். உடனே தொலைக்காட்சி சேனலை மாற்றினார் கடைக்காரர்.

செய்தியைக் கேட்டுக்கொண்டே காபியைக் குடித்து முடித்தனர்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
கே.கார்த்திகேயன்

``சமீபத்துல என்ன புத்தகம் சார் படிச்சீங்க? வேலைக்குப் போகும்போது, ரயிலில் தினம் ஒரு புத்தகம் பத்தி சொல்வீங்க. நானும் நாலு விஷயம் தெரிஞ்சுக்குவேன். நீங்க ரிட்டயர் ஆனதுக்கு அப்புறம், அந்தக் கொடுப்பினையும் இல்லாமல் போச்சு. ரயில்ல வியாபாரம் இல்லாத நேரத்துல ரேடியோ கேட்டுதான் நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்கிறேன்'' என்றான் பாபு.

``இந்த ஆர்வம்தான் பாபு உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ரயில்ல வியாபாரம் பண்றவங்க எல்லாரும், ஏதாவது தகவல் வேணும்னா, பாபுகிட்ட கேட்டா தெரிஞ்சுரும்னு பேசிக்கறாங்களே.''

``சந்தோஷம் சார்... இப்படி வியாபாரம் செய்ய ஆரம்பத்துல கூச்சமாதான் இருந்துச்சு. ஆனா, கூடவே வியாபாரம் செய்யறவங்கதான் இந்த உலகத்தை எனக்குப் பழக்கப்படுத்தினாங்க. என் தயக்கத்தை உடைச்சாங்க. இவங்களுக்கு நான் ஏதாவது பண்ணணும்ல. பயணிகள்தான் எங்களை மதிக்கிறதில்லே. ஆனா, எங்க குடும்பத்துக்குச் சம்பாதிச்சு போடுற ராஜா நாங்கதானே?''

ரயில் பயணம்
ரயில் பயணம்
கே .ராஜ சேகரன்

``உன்கிட்ட ரொம்ப நாளா ஒண்ணு கேட்கணும்னு இருந்தேன் பாபு... எப்படி பாபு ஏழு மொழி பேசக் கத்துக்கிட்ட?''

``அது என்ன சார் பெரிய விஷயம், காதில் ஹெட் செட் போட்டுக்காம, சுத்தி இருக்கிற மனுஷங்கப் பேசறதை கவனிச்சு கத்துக்கிட்டதுதான். பாட்டை எங்கே வேணும்னாலும் கேட்டுக்கலாம். இத்தனை விதமான மனுஷங்களை ரயில்லதானே பார்க்க முடியும்'' என்றான் பாபு.

அதன்பிறகு செந்தில், சில வரலாற்றுக் கதைகளைச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். சிறிதுநேரம் கழித்து

``சரி பாபு உனக்கு நேரமாச்சுல்லே...'' என்றபடி, அடுத்து வந்த ரயிலில் வழியனுப்பினார்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
தே.அசோக் குமார்

ரயிலில் ஏறிய பாபு, ``என்ன ஆயா... இன்னைக்கு கொய்யாப்பழ வாடை கம்மியா இருக்கு. பழம் பழுக்கறதுக்கு முன்னாடியே வாங்கிட்டு வந்துட்டியா?' என்றான்.

``இல்லே பாபு, பழம் விலை எக்குத்தப்பா ஏறிப்போச்சு. 100 கிலோ மூட்டை வாங்கி, 5 பேரு பிரிச்சு வித்துக்கிட்டு இருக்கோம். காயா இருந்தா நாளைக்காவது வியாபாரம் ஆகும். பழமா வாங்கிட்டு வந்தா, ஒரு நாளைக்குள்ள விக்க முடியலனா நஷ்டம்தானே. பத்தாததுக்கு ரிசர்வேஷன் பெட்டியில ஏறாதீங்கனு டி.டி.ஆர் கத்துறாரு. கிடைக்கற அஞ்சு பத்து லாபத்துக்கு 1,000 பேருகிட்ட வசவு வாங்க வேண்டிருக்கு'' என்றார் பாட்டி.

``சரி ஆயா பொலம்பாத, நமக்கு இது பழகிப்போனதுதானே, எனக்கும் முன்னாடி மாதிரி இப்போ வியாபாரம் இல்லே. ரெண்டு புள்ளைங்களைப் படிக்க வைக்க சிரமமா இருக்கு. நீ வேணா அங்கே ஓரமா போய்ப்படு, நான் இறங்க இன்னும் அஞ்சு ஸ்டேஷன் இருக்கு. மீதி பழத்தை நானே வித்துத் தர்றேன்.''

``நீ நல்லா இருப்ப சாமீ'' என்று குரலில் உருகினார் பாட்டி.

ரயில் பயணம்
ரயில் பயணம்
சு.சூர்யா கோமதி

இரவுக் காற்றைக் கிழித்துக்கொண்டு ரயில் தடதடத்தது. சற்று நேரத்தில், ``ஆயா... ஆயா...'' என்று குரல் கொடுத்தவாறு வந்தான் பாபு. கழிவறை அருகே அமர்ந்திருந்த பாட்டி, ``இங்கே இருக்கேன் பாபு'' என்று கையைப் பிடித்தார்.

``திண்டுக்கல் வரப்போகுது. நான் இறங்கணும். பழக்கூடை ஓரளவு காலியாகிருச்சு.இந்தா காசைப் பிடி.''

ரயில் பயணம்
ரயில் பயணம்
தே . அசோக் குமார்

``நான் பெத்த பசங்களே என்னை நடுரோட்ல விட்டுட்டாங்க. கை கால் நல்லா இருக்குறவங்ககிட்ட, இந்தப் பழக்கூடையைக் கொஞ்சம் தூக்கிவிடுங்கனு கேட்டாலே, சொத்தை கேட்ட மாதிரி ஏற இறங்க பார்க்கறாங்க. ஆனா, பார்வை இல்லாட்டியும் அடுத்தவங்களுக்கு ஓடி ஓடி உதவி பண்ற உன்னை மாதிரி ஒரு மவனை நான் பெத்துருக்கணும் சாமீ'' என்ற பாட்டியின் குரல் உடைந்தது.

``அய்யே... மூக்கைச் சிந்தாதே ஆயா... என்னால உருவத்தைத்தான் பார்க்க முடியாது. மனசைப் பார்க்க முடியும். வுடு... நாம எல்லாம் நல்லா இருப்போம்' என்ற பாபு, கலர் கலர் பேனாக்களும் பொம்மைகளும் அடங்கிய ஜோல்னா பையை தோளில் மாட்டிக்கொண்டு, முகத்தில் கூலிங் கிளாஸ், கையில் குச்சி சகிதம் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.