பெண்கள் பல்வேறு துறையிலும் முத்திரைபதித்து வரும் நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. மணமாகாத பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி இந்தச் சமூகம் பேசும் அளவுக்கு, திருமணமான பெண்ணுக்கு அவரின் கணவனால் ஏற்படும் வன்முறை பற்றிப் பேசுவதில்லை.

பொதுவெளியில் முன்வந்து தனக்கு எதிராக குற்றம்செய்தவரை கைகாட்டும் தைரியம்கூட மணமான பெண்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம். என் கணவன், நம் வாழ்க்கை என்று பொறுத்துக்கொண்டு இருந்துவிடுகிறார்கள். இந்த நிலையில், துருக்கியைச் சேர்ந்த வாஹிட் டுனா (vahit tuna) என்னும் கலைஞர், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். துருக்கியில், குடும்ப வன்முறைகளால் இறந்துபோன பெண்களை நினைவுகூரும் வகையில் வித்தியாசமான ஒரு விழிப்புணர்வு முயற்சியைச் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் அமைந்துள்ள யான்கோஸ் (yankose) என்னும் தன்னார்வ தொண்டுநிறுவனத்துக்குச் சொந்தமான கட்டட சுவரில் வாஹிட், சுமார் 440 ஹீல்ஸ் காலணிகளை வரிசையாக கீழிருந்து மேல்வரை பொருத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

440 என்பது, கடந்த ஓராண்டில் மட்டும் துருக்கியில் கணவர்களால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிகையைக் குறிப்பதாகும். துருக்கியைப் பொறுத்தவரையில் domestic violence எனப்படும் வீட்டுக்குள் நடக்கும் வன்முறைகளால் அந்நாட்டில் வசிக்கும் 40 சதவிகிதப் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். 2017-ம் ஆண்டு 409 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, 2018-ல் 440 ஆக உயர்ந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து வாஹிட் டுனா கூறுகையில், ``இன்றைய உலகில் சமூக வலைதளங்களின் அதீத பயன்பாட்டால் சமூகத்தில் நடக்கும் அனைத்துக் குற்றங்களும் நமக்கு மிக எளிதாக தெரியவருகிறது. ஆனால், எவ்வளவு எளிதாகவும், வேகமாகவும் அச்செய்திகள் நம்மை எட்டுகிறதோ அதைவிட வேகமாக மற்றொரு செய்தி வந்து அந்த இடத்தை மறைத்துவிடுகிறது. அதனால், பெண்களுக்கு எதிராக வெகுகாலமாக நடைபெறும் குடும்ப வன்முறைகள் குறித்து பொதுமக்கள் மனதில் அழுத்தமாகப் பதியச் செய்யவே இந்தச் சுவரில் ஹீல்ஸ்களை நிற்கவைக்கும் இந்த முயற்சி. இதில், நான் சாதாரண காலணிகளைப் பயன்படுத்தாமல் ஹீல்ஸ் காலணிகளைப் பயன்படுத்தியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஹை ஹீல்ஸ் (high heels) என்பவை பெண்களின் சுதந்திரத்தையும் அவர்களின் சக்தியையும் குறிப்பால் உணர்த்துவதாக எண்ணுகிறேன். நிச்சயமாக கணவர்களால் பெண்களுக்கு ஏற்படும் குற்றங்கள் பொதுவெளியில் கவனம் பெறும், குற்றங்களின் எண்ணிக்கையும் குறையும்” என்று கூறுகிறார் இந்தக் கலைஞர்.
துருக்கி நாட்டில் இறந்தவர்களின் காலணிகளை வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டு அவர்களை அடக்கம் செய்வது வழக்கம். அதை, தன் கலைத்திறமையால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு விழிப்புணர்வு செய்யும் இந்த நினைவுச்சின்னம் இன்னும் ஆறு மாத காலம் இஸ்தான்புல் சுவரில் காட்சியளிக்கும்.