Published:Updated:

``முதல்வர் பினராயி விஜயன் என் காலைப் பிடிச்சதும்...?!’’ - கேரளா `லெக்ஃபீ’ வைரல் பிரணவ் #VikatanExclusive

Pranav with Kerala Chief Minister
Pranav with Kerala Chief Minister

`கைகள் இல்லாத எனக்கு ஊக்கம் கொடுக்க, என் காலைத் தொட்டுக் குலுக்கி வாழ்த்து சொன்னார். கொஞ்சம்கூட எதிர்பார்க்காத அந்த நிகழ்வு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.’

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரைச் சேர்ந்த பிரணவ், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் நேற்று எடுத்துக்கொண்ட `லெக்ஃபீ', இந்தியா முழுக்க வைரலானது. (கைகள் எடுக்கப்படுவதை செல்ஃபி எனும்போது, பிரனவ் தன் காலால் எத்தது லெக்ஃபீதானே) பிரபலங்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை பலரும், `இந்தியாவில் மிகச் சிறந்த லெக்ஃபீ இதுதான்!' என்று அந்தப் புகைப்படத்தைக் கொண்டாடினார்கள். பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த பிரணவ், வலது காலால் தன் தேவையைப் பூர்த்திசெய்துகொள்கிறார். மேலும், ஓவியமும் வரைகிறார்.

Pranav taking selfie with Sachin Tendulkar
Pranav taking selfie with Sachin Tendulkar

கடந்த ஆண்டு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற பிரணவ், கேரளா முழுக்கப் பிரபலமானார். தனது 21-வது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாட முடிவெடுத்த பிரணவ், முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து தன்னால் இயன்ற ஐந்தாயிரம் ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

சில மாதங்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்தபோதும் பிரபலமானார். கேரள மக்களின் இதயங்களில் இடம்பிடித்திருக்கும் பிரணவ், வாழ்நாளில் நேற்றுதான் தன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருக்கிறார். பிறந்த நாள் மற்றும் தன்னம்பிக்கை வாழ்க்கை பயணத்துக்கு வாழ்த்துக்கூறி பிரணவிடம் பேசினோம். உற்சாகமாகப் பேசினார்.

Pranav Meets Pinarayi Vijayan
Pranav Meets Pinarayi Vijayan

``எனக்குப் பிறப்பிலேயே ரெண்டு கைகளும் இல்லை. கால்களால் என்னோட தேவைகளைப் பூர்த்திசெய்துக்கப் பழகிட்டேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு ஓவியத்துல அதிக ஈடுபாடு உண்டு. வலது காலால் பெயின்டிங் பண்ணுவேன். போன வருஷம் ஒரு டிவி ரியாலிட்டி ஷோவுல கலந்துக்கிட்டேன். அது நல்ல பேர் கிடைச்சுச்சு. இப்போ தன்னம்பிக்கைப் பேச்சாளரா பல நிகழ்ச்சிகளுக்குப் போய்க்கிட்டிருக்கேன்.

கேரளாவில், ஒவ்வொரு ஓணம் பண்டிகையின்போதும் மாநில அளவிலான படகுப் போட்டி நடக்கும். கடந்த ஓணம் பண்டிகையின்போது நடைபெற்ற படகுப் போட்டியில், கிரிக்கெட் வீரர் சச்சின் கலந்துகிட்டார். அப்போ அவரைச் சந்திச்சுப் பேசினேன். நான் வரைந்த அவரோட ஓவியத்தைப் பரிசாக் கொடுத்தேன். ரொம்பவே சந்தோஷப்பட்டவர், `நீ ஸ்பெஷல் சாதனையாளர். இன்னும் பெரிய அளவில் புகழ்பெறணும்'னு மனதாரப் பாராட்டினார். மேலும், ட்விட்டர்லயும் என்னைப் பாராட்டி எழுதினார்" என்கிற பிரணவ், முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த நிகழ்வு குறித்துப் பேசுகிறார்.

Pranav with Kerala Chief Minister
Pranav with Kerala Chief Minister

``என்னுடையது மிக ஏழ்மையான குடும்பம். நினைவு தெரிஞ்சு என் வாழ்நாளில் பிறந்த நாளை கொண்டாடினதே இல்லை. இந்த வருட பிறந்த நாளை பயனுள்ள வகையில் கொண்டாடணும்னு ஆசைப்பட்டேன். என் சேமிப்புப் பணத்துல ஐந்தாயிரம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுக்க முடிவெடுத்தேன். மாநில நிதி அமைச்சரின் உதவியாளர் மூலமாக முதல்வரைச் சந்திக்க அனுமதி வாங்கினோம்.

நேற்று காலை தலைமைச் செயலகத்துல, முதல்வரை சந்திச்சேன். அவர் அன்புடன் என்னை வரவேற்று அவர் பக்கத்துலயே என்னை உட்காரவெச்சுப் பேசினார். `சார், நான் கொடுக்கிற பணம் ரொம்பவே சின்னத் தொகைதான். இதன் மூலம் பெரிசா எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. ஆனாலும், என்னால் இயன்றது இந்தத் தொகைதான்'னு முதல்வர்கிட்ட சொன்னேன். `அப்படியில்லை பிரணவ்! இந்தத் தொகைகூட நல்ல காரியத்துக்கு நிச்சயம் உதவும். நீங்க கொடுத்த தொகையும், உங்க உதவும் எண்ணமும் நிச்சயம் பெரியது'னு பாராட்டினார். 

Pranav
Pranav

என் காலைப் பிடிச்சுக் குலுக்கி வாழ்த்து சொன்னார். கொஞ்சம்கூட எதிர்பார்க்கலே. என் காலால் முதல்வருடன் 'லெக்ஃபீ' எடுத்துகிட்டேன். `காலால் அழகா போட்டோ எடுக்கிறீங்களே பிரணவ்'னு சொல்லி முதல்வர் சிரிச்சார்.

பத்து நிமிடங்கள் மட்டும்தான்னாலும் முதல்வர் என்கிட்ட பாசமாகப் பழகினார். நேற்று நடந்த நிகழ்வை, தன் சமூகவலைதளப் பக்கத்துல முதல்வர் பதிவிட்டிருக்கிறார். அதனால, முதல்வருடன் நான் எடுத்துக்கிட்ட லெக்ஃபீ, கேரளா மட்டுமல்லாம இந்தியா முழுக்க வைரலாகிடுச்சு. 

கேரள அரசுப் பணி வேலைக்குப் படிச்சுகிட்டிருக்கேன். அரசு அதிகாரியாகி என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்யணும்னு ஆசைப்படறேன். அதற்காகத் தொடர்ந்து முயற்சிகள் செய்வேன்.
பிரணவ்

ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் பிறந்த நாளை மறக்க முடியாத தினமாக மாற்றிய கேரள முதல்வர் ஐயாவுக்கு நன்றி. கடந்த மார்ச் மாதம்தான், பி.காம் படிப்பை முடிச்சேன். இப்போ கேரள அரசுப் பணி வேலைக்குப் படிச்சுகிட்டிருக்கேன்.

Pranav
Pranav

அரசு அதிகாரியாகி, என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்யணும்னு ஆசைப்படறேன். அதற்காகத் தொடர்ந்து முயற்சிகள் செய்வேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார், பிரணவ்.

`கால் விரல்களைப் பிடித்து கைகுலுக்கிய பினராயி விஜயன்!’- கேரள மக்களை நெகிழவைத்த செல்ஃபி
அடுத்த கட்டுரைக்கு